Wednesday, November 1, 2023

புரட்சிக்கவியும் இந்திய தேசமும்

 


     பாரதியார் நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகளில் முக்கியமானவற்றைக் குறிப்பிட்டால்   ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் , கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்என்று எழுதுகிறார் புதுமைப்பித்தன். புரட்சிக்கவி பாரதிதாசனைப் பற்றிய இந்த வரிகள்

முக்கியமானது. ஏனேனில்  அவர் படைப்புலகின் மீதான நுண் அரசியலைப் புரிந்து கொள்வதற்கும் இன்றைய நவீன இலக்கிய தீண்டாமைகளை அடையாளம் காண்பதற்கும் உதவியாக இருக்கிறது.

      நவீன இலக்கியவாதிகளின் பிதாமகன் புதுமைப்பித்தன். என கொண்டாடப்படுவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவை புதுமைப்பித்தனின் சிறுகதை உலகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

நவீன இலக்கியவாதிகளின் இலக்கிய ஏடுமணிக்கொடிஎன்பதும் இலக்கிய வரலாற்று உண்மை. இந்த இரண்டையும் தொடாமல் நவீன இலக்கியதை அணுகிவிட முடியாது. கவிஞர் பாரதிதாசன் மணிக்கொடி இதழில் கவிதை எழுதி இருக்கிறார். புதுமைப்பித்தன் தன் வாழ் நாளில் கடைசிவரை பாரதிதாசனைக் கொண்டாடி இருக்கிறார். எனினும், மறந்தும் கூட இதை எல்லாம் ஒரு தகவல்களாக கூட நவீன இலக்கியவாதிகள் உச்சரிப்பதில்லை.     ஒரு தமிழ்க்கவிஞனுக்குப் பின் அக்கவிஞனின் பெயர் சொல்லி ஒரு கவிப்பரம்பரை உருவாகியது என்றால் அந்தளவு தான் வாழும் காலத்திலேயே ஓரிளைஞர் பட்டாளத்தை உருவாக்கியவர் பாரதிதாசன். பாரதிதாசன் மீது கொண்ட அதே ஒவ்வாமை பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லிக்கொண்டு எழுத வந்தவர்களுக்கும் மிகத்தீவிரமானஇலக்கியத் தீண்டாமையாக கடைப்பிடிக்கப்பட்ட து. இன்றும் இந்த நவீன தீண்டாமைகள் வெவ்வேறு வடிவத்தில் தொடர்கின்றன.

     பாரதிதாசனுக்கு தன் புரட்சிக்கருத்துகளைச் சொல்வதற்கு பில்ஹணன் தேவையா என்று யோசித்தால்  நிச்சயமாகஇல்லை.” அன்றைய நவீன இலக்கியவாதிகளையும் மணிக்கொடி பக்கங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்தவர் பாரதிதாசன். ஒவ்வொரு படைப்பாளனும் காலத்தின் முன்னால் அவன் வாழும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படியான சவால்களில் ஒன்றாகத்தான் பில்ஹணியத்தை பாரதிதாசன்

தன் பார்வையில் எழுதிக் காட்டி இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. காரணம் பில்ஹணன் கதையைச் சொல்லித்தான் பாரதிதாசனுக்கோ பாரதிதாசன் படைப்புகளுக்கோபுர்ட்சிக்கவிஅடையாளம் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

     1937ல் புரட்சிக்கவி காவியம் முதல் பதிப்பு புதுச்சேரியிலிருந்து வெளிவந்திருக்கிறது. அக்காலத்தில் இந்திய தேசத்தின் விடுதலைப் போராட்டம், பாரதிதாசன் தன் குருவாக ஏற்றுக்கொண்ட பாரதியின் பாரத தேசம், பாரதத் தாய், பாஞ்சாலியையும் பாரதமாதாவாக உருவகிக்கும் பாஞ்சாலி சபதம்  இத்துடன் தமிழ்ச் சமூக வழக்கில் இருந்த அம்பிகாவதி-அமராவதி காதலுக்கு நிகரான ஒரு காதல் கதையை காஷ்மீரின் பில்ஹணன் கதையில் கண்டார். மேலும் பில்ஹணன் காதல் இந்திய மொழிகளில் காதல் காவியமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தது.

     நமக்கு கிடைத்திருக்கும் சரித்திர ஆதரங்களின்வழி, 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காஷ்மீர் பண்டிதர், கவிஞர் பில்ஹணன். பில்ஹணன் காஷ்மீர் மன்னர் மதனபிராமாவின் மகள் இளவரசி யாமினி பூர்ண திலகத்துடன் காதல் கொண்டான். இக்காதல் அரசன் அறிய வருகிறபோது வழக்கம் போல அதை எதிர்க்கிறான். இளவரசியைக் காதலித்த குற்றத்திற்காக தேசக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். தீர்ப்பில் பில்ஹணனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா அல்லது

 நாடு கட்த்தப்பட்டாரா என்று தெளிவாக்கப்படவில்லை. இரண்டுவிடுதமான

கதைகளும் இருக்கின்றன. பில்ஹணர் நாடுகட்த்தப்பட்டார் என்பதற்கு ஆதரமாக பில்ஹணர் எழுதியதாக சொல்லப்படும்  விக்கிரமாங்க தேவ சரிதம்நூலைக் குறிப்பிடுகிறார்கள். பில்ஹணர் நாடுகடத்தப்பட்டு,

மதுரா,  கன்னோசி, பிரயாகை, வாரணாசி, சோம நாதபுரம், துவாரகை, கல்யாண் , இராமேஸ்வரம் பகுதிகளில் பயணித்தார் என்றும் இறுதியில் இன்றைய கர்நாடகப் பகுதியில் ஆட்சி செய்த சாளுக்கிய அரசன் பில் ஹணரை அரசவைப் புலவராக ஏற்றுக்கொண்டார் என்றும் ஒர் ஆதாரம் உண்டு. ஆனாலும் சாளுக்கிய அரசனைப் பாடிய அதே பில்ஹணன் தான்

காஷ்மீர் இளவரசியைக் காதலித்து நாடு கடத்தப்பட்ட கவிஞன் பில்ஹணன் என்பது உறுதி செய்வது எளிதல்ல. இருவரும் வேறு வேறானவர்களாகவும் இருக்கலாம்.

     காதல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்தக் காலத்தில் பில்ஹணர் எழுதிய ஐம்பது காதல் கவிதைகள்செளரபாஞ்ச சிகாஎன்று அறியப்படுகிறது. செளரபஞ்ச சிகா என்றால்

கள்வனின் காதல்என்று பொருள். இக்காதல் கவிதைகளை பில்ஹணன் காஷ்மீரி மொழியில் எழுதினாரா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதினாரா என்றால் பலரும் பில்ஹணர் சமஸ்கிருத மொழியில் எழுதியது என்பதையை ஒத்துக்கொள்கிறார்கள்.

     செளரபஞ்ச சிகா கவிதைகள் 1848ல் பிரஞ்சு மொழியில் மொழியாக்கம் பெறுகிறது. அதன் பின் 1919ல் பிரஞ்சிலிருந்து எட்வர்ட் பெளஸ் மேதாஸ் (Edward Powys Mathers) அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துப்ளாக் மெரிகோல்ட்- BLACK MARIGOLD – என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடுகிறார்.. 16 ஆம் நூற்றாண்டில் குஜராத்தி மொழியில்சசிகலா விரஹ பிரதாப்’ (sashikala viraha pratap)  என்றும் மராத்தி மொழியில் கவி விட்டல் அவர்கள்காவ்ய இதிகாச சங்கிரஹ ‘ (kavyaithas sangraha) என்றும் அதே காலக்கட்டத்தில் இந்தி மொழியிலும் மொழியாக்கம் பெற்றது.

காளிதாசனின்மேகதூதம்காவியத்திற்கு ஈடாக இந்திய மொழிகளில் பிரபலமான காதல் கவிதை பில்ஹணன் எழுதியசெளரபஞ்ச சிகா

என்றே அறியப்படுகிறது. இத்துடன் ராஜஸ்தானில்ல் இக்காதல் கவிதைக்கு

தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் இன்றும் N C MEHTA COLLECTION OF ARTS ஆக

அகமதாபாத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் Mewar

School of Rajasthanai Paintings என்று கலை உலகம் போற்றுகிறது. இந்த ஓவியங்களில் பில்ஹணன் கவிதைகளும் ஒவ்வொரு கவிதைகளுக்கும்

ஓவியங்களும் தீட்டப்பட்டிருக்கின்றன. ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும் ஆண் பெண் இருவரின் பெயர்களும் பில்ஹணன் , சம்பாவதி என்று தீட்டப்பட்டிருக்கின்றன.



     திராவிட நாடு இதழ் 19 டிசம்பர் 1943 ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அதில் பில்ஹணன் நாடகத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 முத்தழிழ்கலா வித்வரத்தின TKS சகோதர்ர்கள் 1944 ஆரம்பத்தில்  வீர சிவாஜி, காளமேகம், பில்ஹணன் ஆகிய 3 புதிய நாடகங்களை அரங்கேற்றப் போகிறார்கள். M K T பாகவதர் நடித்த ரேடியோ பில்ஹணனை A S A சாமி அவர்களைக் கொண்டு விரிவாக எழுதி இருக்கிறார்கள். மேற்கண்ட 3 நாடகத்தையுன் நட்த்திவிட்டுத்தான் இவர்கள் ஈரோட்டை விட்டு கிளம்புகிறார்கள் போலிருக்கிறது

இவர்களே இக்கதையை 1948ல் பில் ஹணன் என்ற சினிமாவாக எடுத்திருக்கிறார்கள்.

      தமிழ்ச் சமூகத்தில் நாடகமாகவும் சினிமாவாகவும் காவியமாகவும் படைக்கப்பட்ட பில்ஹணன் பற்றி புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார்.

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; சமஸ்கிருதத்திலே பில்ஹணீயம் என்பதாக ஒரு காவியம் இருக்கிறதாகக் கேள்வி ஞானம். தவிரவும் சமஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்துகிறவர்கள் தமிழ்நாட்டின் தவப்பயனாக, தமிழ்பாஷை தெரிந்தவர்கள் ஏளனம் பண்ணக்கூடிய வகையில் சேவைசெய்துவருகிறதினாலே, எனக்கு சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்ப்பு என்றாலே சற்று பயம். வெறுப்பும் கூட வுண்டு. இந்த நிலையில் ஸ்ரீ ஏ.எஸ்.ஏ. சாமியின் பில்ஹணன்மூலத்தினின்றும் வேறுபட்டதா, சொந்த மனோதர்மமா, அப்படியானால் மூலத்தைவிட உயர்வான கனவா என்று சொல்லக்கூடாத வகையிலிருக்கிறேன். நான் பில்ஹணன் கதை பற்றி அறிந்ததெல்லாம், அதனுடன் ஒட்டி, கம்பனுக்குப் பிள்ளை கற்பிக்கும் முயற்சியில் எழுந்த அந்த அம்பிகாபதியின் கனவுதான்... அதன் பிறகு நந்தலால் வசுவின் கோட்டுச் சித்திரங்களை நினைவூட்டுவது போலெழுந்த, என் நண்பர் ஸ்ரீ ந. பிச்சமூர்த்தியின் பில்ஹணன், அமரர் கு.ப.ரா. எழுதிய 'திரைக்குப் பின்' என்ற பில்ஹண்ய கதை. பிறகு படிக்கும் ஒவ்வொரு வரியும் பாரதீய பண்பை இன்றும் நினைவூட்டிவரும் கவிஞர் பாரதிதாஸனுடைய 'புரட்சிக்கவி'.... ‘பில்ஹணீயம்' பாரத சமுதாயத்தின் பொதுச் சொத்து. கம்பன், வான்மீகனது கனவை எடுத்தாண்டது போல, கவிஞனுக்குரிய பூர்ண உரிமையுடன் பாரதிதாஸன் அதை மீண்டும் வனைந்திருக்கிறார். –                                                                                                 புதுமைப்பித்தன்

 

 மேற்சொல்லப்பட்டவை அனைத்தும் பில்ஹணன் பற்றிய தகவல்களாக மட்டுமே அறியப்படுகின்றன. இலக்கிய படைப்புலகில் பாரதிதாசனின் புரட்சிக்கவி மட்டுமே இன்றும் நிலைத்து  நின்று அதை எழுதிய பாரதிதாசனுக்கேபுரட்சிக்கவிஎன்ற சிறப்பினைக் கொடுத்திருக்கிறது.

     பில்ஹணன் எழுதிய அந்த ஐம்பது கவிதைகளின் தமிழாக்கம் அல்ல

பாரதிதாசனின் புரட்சிக்கவி காப்பியம். பாரதிதாசன் எழுதியது பில்ஹணன் என்ற காஷ்மீர் கவிஞனின் காதல் கதை. பாரதிதாசனின் படைப்புலகில்

பில்ண் ட்ப்வ்  ர்ட்ன்ப்க்ஃபியோஜ்                ஹணன் புரட்சிக்கவியாக பாரதிதாசனையே பிரதி எடுத்துக்கொள்கிறான்.

     1937ல் வெளிவந்த தன் புரட்சிக்கவி காப்பியத்தின் ஆசிரியர் பக்கத்தில்

ஆசிரியர் உரையாக  பில்கணியம் என்ற நூல் சமஸ்கிருதம் முதலிய பல பாஷைகளில் காணப்படுகிறது. தமிழிலும் அதைத்  தழுவி தற்கால இந்தியாவுக்கு ஏற்ற முறையில் எழுதினேன்என்று அறிவித்திருக்கிறார்.

     பாரதிதாசன் தன் புரட்சிக்கவிக்கு எழுதி இருக்கும் இந்த அறிமுக

ஆக்கியோன் குறிப்புகள்முக்கியமானது. அவர் குறிப்பிட்டதற்கால இந்தியாஅதாவது பாரதிதாசன் காலத்துஅக்கால இந்தியாஎன்னவாக இருந்தது? என்பதைக் கூர்ந்து கவனிக்கும்போது நமக்கு அன்றைய இந்தியா பல்வேறு அரசியல் செய்திகளையும் புரட்சிக்கவிக்கான சில அரசியல் அர்த்தப்பாடுகளையும் உள்ளடக்கி இருப்பது தெளிவாகிறது. 1937ல் வெளிவந்திருக்கும் புரட்சிக்கவி காவியத்தின் காலக்கட்ட இந்தியாவில் அப்போதுதான் இந்தியா முழுமைக்குமான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. 1934ல் பிரிட்டிஷ் இந்திய தேர்தல் நடைபெற்ற போது இந்தியா தேச வரைபடம் என்னவாக  இருந்திருக்கிறது என்றால்

இன்றைய பாகிஸ்தான் வங்கதேசம். பலுசிஸ்தான், பர்மா, பிரிட்டிஷ் இந்தியா, மற்றும் இந்தியாவிலிருந்த மன்னராட்சிக்குட்பட்ட சுதேச தேசங்கள்.



( இந்திய வரைபடம் 1934 இணைப்பு)

இந்த நடந்து முடிந்த 1934 தேர்தல் மன்னராட்சிக்குட்பட்ட தேசங்களில் நடக்கவில்லை! அதாவது இந்திய நிலப்பரப்பு 40% மன்னராட்சியில் தான் இருந்திருக்கிறது. இந்திய 1947ல் சுதந்திரம் பெற்றபோது 565 சுதேச தேசங்கள்,  அதன் குறு நில மன்னர்கள், பேரரசுகள் இந்திய மண்ணில் இருந்திருக்கிறார்கள். அத்தேசங்கள் அனைத்தையும் இந்தியக்குடியரசின் பகுதியாக இரும்புக்கரம் கொண்டு சாதித்தவர் என்பதால்தான் இந்திய வரலாற்றில் சர்தார் வல்லபாய் பட்டேல்இரும்பு மனிதர்’” என்று அழைக்கப்பட்டார். அந்த இரும்பு மனிதரின் கனவுகளை பத்து ஆண்டுகளுக்கு

முன்பே தன் படைப்புலகில் படைத்தவர் , இந்தியாவின் தென்கோடியில்  புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு தமிழ்க்கவி. புரட்சிக்கவி காப்பியம் பாரதிதாசனின் படைப்புலகில் இப்படியாகத்தான் தன்னைப் பிரதி எடுத்துக்கொள்கிறது.

மன்னராட்சி நடந்த காஷ்மீரின் காதல் கதைக்கு மக்களாட்சியை தன் கதை முடிவாகவும் உச்சக்கட்டமாகவும் வைத்திருக்கிறார் பாரதிதாசன்.

காஷ்மீரின் பில்ஹணன் கதையில் அவன் நாடு கடத்தப்படுகிறானா? அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டதா ? இந்த இரண்டு கதைகள்தான்

எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் பாரதிதாசனின் புரட்சிக்கவி மூலக்கதையில்

சொல்லப்பட்டசெளரபஞ்சசிகாகவிதைகளைப் பாடவில்லை. காஷ்மீரின் பில்ஹணன் தன் காதலைப் பேசுகிறான். தான் சிறையிலிருந்தக் காலத்தில் எழுதிய தன் ஐம்பது காதல் கவிதைகளை தன் தீர்ப்பு  நாளில், கொலைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்கொலைக்களத்தில் பாடவில்லை.

புரட்சிக்கவி காதலைப் பேசுகிறான். ஆனால் அக்காதலை தனிப்பட்ட ஆண் பெண் உறவாக மட்டும் பேசவில்லை. ஆண் பெண் உறவில் இருக்கும் சமூகம் , சமூகத்தின் கட்டுப்பாடுகள், அக்கட்டுப்பாடுகளுக்கான காரணங்கள்,

 நோக்கங்கள், அக்கட்டுப்பாடுகள் நம் சமூகத்தில் எதைப் பாதுக்காப்பதற்கான

விதிமுறைகளாக மரபுகளாக தொடர்கின்றன என்பதை மிகவும் தெளிவாக

முன்வைக்கிறார்.  வாசிப்பவர் ஏற்றுக்கொள்ளும் வகையில் பண்டைய மரபுகளைத் தொன்மம் என்ற காரணத்தால் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஒரு தொன்மக்கதையைக் கொண்டே படைத்திருப்பது இப்படைப்பின் சிறப்பு.

     மூலக்கதையில் இல்லாத கதை முடிவு. வேறு எந்த மொழி

பில்ஹணனும் பேசாத மக்களாட்சி அரசியல் பாரதிதாசனின் தமிழ் பில்ஹணன்  உதாரன் பேசுகிறான். இக்கதை முடிவுதான் இக்காப்பியத்தின் உச்சக்கட்டம், க்ளைமாக்ஸ் காட்சி. இந்த உச்சக்கட்டம் பாரதிதாசனை அவர் எழுதியிருக்கும் மேற்கண்ட ஆசிரியர் உரையுடன் சேர்த்து வாசிக்கிறபோது , அவர் படைப்புலகம் தொட்டிருக்கும் உயரம் காஷ்மீரின் பனிமலை மூடிய இமயத்தை சிறியதாக்கிவிட்டது.

பாரதிதாசனின் படைப்புலகத்தை காலவரிசைப்படி ஆய்வு செய்த பேரா. சி. கனகசபாபதி அவர்கள்  1930 – 40 வரையான காலக்கட்டத்தை 

சுயமரியாதை இயக்கத்தினால் தாக்கம் அடைந்து பகுத்தறிவு சார்ந்த கவிதைகளைப் பாடி, தந்தை பெரியாரை சமுதாய குருவாக உள்வாங்கி நடப்பியல் முறையில் கவிதை காட்சியில் மனித சக்தி உருவெடுத்த தேசியக்கூட்டணி செயல்பட்ட காலக்கட்டம்என்று தெளிவுறுத்துகிறார்.

     ஒரு படைப்பை ஆராயும்போது அது தோன்றிய காலம் பற்றியும் அக்காலத்தில் முரண்படும் சமுதாய சக்திகள் பற்றியும் அவற்றுக்கு: படைப்பாளி எதன் சார்பாக நின்று படைக்கிறான் என்பதையும் கவனிக்க வேண்டும். அக்காலக்கண்ணாடி படைப்பை படைப்பாளனின் உள்ளத்திற்கு நெருக்கமாக கொண்டுவந்து நிறுத்தும்.

     காதலுக்கு அதிகார வர்க்கம் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஆண் பெண் உறவுநிலையின் கட்டுப்பாடுகள், குடும்பம் என்ற நிறுவனம், வாரிசுகள், சொத்துரிமை  ஆகிய கருத்தாக்கங்கள்தான் அதிகார வர்க்கத்தை நிலை நிறுத்தி இருப்பதில் பெரும் பங்காற்றி இருக்கின்றன. இன்றுவரை சாதிச்சமூகம் அகமண முறையைப் பாதுகாப்பதும் அவை சாதி ஆணவக்கொலைக்கான காரணமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

     பில்ஹணன் வடமொழிக் கதையில் அவர்கள் காதலுக்கு எது தடையாக இருந்தது?  மன்னராட்சியின் சட்டத்திட்டங்களும் மரபுகளும்,

அரசப்பரம்பரைப் பெண்கள் ஒரு சாதாரணக் குடிமகனைக் காதலிப்பதோ திருமணம் செய்து கொள்வதோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

THE PURE ROYAL BLOOD கலப்படமின்றி அரசப்பரம்பரை காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தாக்கம் இன்றைக்கும் அரண்மனைகளில் உண்டு.

எனவே பில்ஹணன் இளவரசியைக் காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் அரச மரபுக்கு எதிரானது. தேசக்குற்றமாகிவிடுகிறது பொதுவாக காதலைக் கருப்பொருளாக கொண்ட படைப்புகள் காதலைக் கொண்டாடி புனிதமாக்கி காதலைத் தெய்வீகமாக்கி, காதலியை வர்ணித்து காதல் சுவையில் மூழ்கி திளைத்து இன்புற்று தேவை ஏற்படின் காதல் தோல்விக்கு அழுதுக் கண்ணீர்விட்டு புலம்பித் திரிந்து ஒரு துன்பவியல் காட்சியை உருவாக்கி அதில் கழிவிரக்கம் தேடி முடிந்துவிடுகின்றன. ஆனால் பாரதிதாசனின் பில்ஹணிய காதல் கதை

புரட்சிக்கவியாக எழுதப்படுகிறபோது அது காதலையும் தாண்டி இச்சமூகத்தில் காதலுக்கு இருக்கும் தடைக்கற்களை உடைக்கிறது, அதற்கான காரணிகளை அடையாளம் காட்டுகிறது. இச்சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதியத்திற்கு எதிரான புரட்சியாக வெடிக்கிறது. சாதி ஆணவக்கொலைக்கு எதிரான முதல் குரல் பாரதிதாசனின் புரட்சிக்கவி எனலாம். புரட்சிக்கவி காவியத்தின் ஆசிரியர் உரைப் பகுதி இக்கருத்தை உறுதி செய்கிறது.

தன்னுரையில் பாரதிதாசன் அவர்கள் , “ கவிதை பயிற்றுவிக்க வந்த கவிஞனை அரசன் மகள் காதலித்தாள். இருவர் உள்ளமும் கலந்தது. மட்ட ஜாதி ஆள், தன் மகளிடம் உறவானது பற்றி அரசன் அவனுக்கு கொலைத்தண்டனை இடுகிறான். இந்த உயர்வு தாழ்வு மனப்பான்மை தீரவேண்டும் என்றுதான் பாரத நாடு தவம் கிடக்கிறது.” என்று எழுதி இருக்கிறார். இன்றுவரை பாரத நாட்டின் தவம் கலையவில்லை. இக்கருத்து

பிற்காலத்தில் பாரதிதாசன் தமிழ்த்தேசியக் கவியாக வளர்ச்சி அடையும்போது

இதை தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக  முழங்குகிறார்..

சாதி ஒழிந்திடல் ஒன்றுநல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று.

பாதியை நாடு மறந்தால்- மற்ற

பாதி துலங்குவதில்லை.

என்று வெளிப்படுகிறது.

     வட நாட்டு பில்ஹணன் கொலைக்களத்தில் தன் காதலை மட்டும்

பேசியவன், ஆனால் பாரதிதாசனின் பில்ஹணன் அரசியல் கோட்பாடுகளைப் பேசுகிறான். இதெல்லாம் வடமொழி பில்ஹணன் அறியாத அரசியல் அர்த்த சாஸ்திரம்.

ஒருவனும் ஒருத்தியுமாய் - மனம்
உவந்திடில் பிழை என உரைப்பது உண்டோ?
அரசு என ஒரு சாதி - அதற்கு
அயல் என வேறு ஒரு சாதி உண்டோ?

-------

ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டு என்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்

தேசம் என்பது அரசோ அதிகாரமோ அல்ல. தேசம் என்பது அரண்மனை அல்ல, அரசன் அல்ல, ஆளும் வர்க்கம் அல்ல தேசம் என்பது அதன் மக்கள். இதுதான் ஜன நாயகத்தின் அரிச்சுவடி. இதைப் புரட்சிக்கவியில் பேசுகிறான்

     பாரதிதாசனின் புரட்சிக்கவியில் தான் இந்திய ஒன்றியத்தின் துணைதேசிய அரசியலின் தாரக மந்திரம் காதல் கதையின் இரண்டாவது திருப்புமுனையாக உச்சக்கட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய இந்திய ஒன்றியத்திற்கும் துணை தேசியங்களின் இறையாண்மையை பாரதிதாசனின் புரட்சிக்கவி பேசுகிறது. பாரதிதாசனின் பில்ஹணிய கவிஞன் தன் கொலைக்களத்தில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட போது இதைப் பேசுகிறான். இக்கேள்வி இக்கதையுடனும் பின்னிப்பிணைந்திருக்கிறது.

தமிழறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான்
     தமிழ்க்கவி என்று எனை அவளும் காதலித்தாள்!
அமுது என்று சொல்லும் இந்தத் தமிழ் என் ஆவி
     அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று
சமுதாயம் நினைத்திடுமோ
? ஐயகோ! என்
     தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ?

       பாரதிதாசனின் காவியப்படைப்புகளில்சஞ்சீவிப்பர்வதத்தின் சாரல்’ 1930ல் வெளிவந்தது. மற்ற அனைத்து காவியங்களும் புரட்சிக்கவி காப்பியத்திற்குப் பின் வெளிவந்திருக்கின்றன. இக்கால வரிசையில் புரட்சிக்கவி காப்பியத்தில் முளைவிட்ட ஒவ்வொரு கருத்துகளும் பிற்கால அவர் அரசியல் கோட்பாடுகளாக விரிவடைந்திருப்பதைக் காணலாம். இன்னும் ஒருவகையில் சொல்லப்போனால்,

புரட்சிக்கவியின் தாக்கமாக அவர் எழுதிய  பக்கங்களின் வரிவாக்கமாக அவர் கவிதைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானது புரட்சிக்கவியில் இடம்பெறும்  நிலவுக்காட்சி.

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ..

இதுவே 1944ல் வெளிவந்த  அழகின் சிரிப்பு .

       புரட்சிக்கவி முன்வைக்கும் அரசு அதிகாரம் அரசியல் கோட்பாடுகள்

 1962ல் வெளிவந்தகண்ணகி புரட்சிக் காப்பியத்தில்முழுமை அடைகிறது.

சிலப்பதிகாரத்தின் மீள்வாசிப்பு கண்ணகி புரட்சிக்காப்பியம் என்ற அறிமுகத்திற்கு அப்பால் கண்ணகி புரட்சிக்காப்பியம் பேசப்படாமல் கடந்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த  மீள்வாசிப்பின் ஊடாகவே பாரதிதாசன் சிலப்பதிகார இளங்கோவடிகளும் அறியாத அரசியலைப் பேசுகிறார். பாரதிதாசனின் கண்ணகி வைக்கும் அரசியல் கேள்வியை இளங்கோவடிகளின் கண்ணகி வைத்தாளில்லை. அவள் பேசியது அறம், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றானது. ஆனால் பாரதிதாசனின் கண்ணகி அந்த அரசியலுக்கும் எது அறம் என பேசுகிறாள்.

       அரசனவன் பொதுச்சொத்தை இழக்கவில்லை

       அரசனவன் தன்பொருளை இழந்திருந்தான்.

       அரசனவன் அந்நிலையில் அரசன் அல்லன்

       அரசனவன் வழக்காளி, தனியாள்! என்றாள்.

ஒரு தனியாள் தன் வழக்கிற்கு தானே எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்?

அது முறையோ! என்று அரச நீதி சொல்லும் அதிகாரம் யாருக்கு உண்டு

என்று புதிய அர்த்தசாஸ்திரம் பேசுகிறாள்.

இந்த அரச நீதி கருத்து புரட்சிக்கவியில் ஆரம்பமாகிறது.

       அரசனுக்குப் பின்னிந்த தூய நாட்டை

       ஆளுதற்கு பிறந்த ஒரு பெண்ணைக் கொல்ல

       அரசனுக்கோ அதிகாரம்! உங்களுக்கோ?

       அவ்வரசன் சட்டத்தை அவமதித்தான்.

பில்ஹணிய காதல் கதையில் இளவரசியைக் காதலிக்க தயக்கம் காட்டும்

பில்ஹணன் புரட்சிக்கவியிலும் அதே தயக்கம் காட்டுகிறான் என்பதை மட்டும்

பாரதிதாசன் அப்படியே எடுத்துக்கொண்டார் எனலாம். இளவரசிதான் தன் துணிச்சலை வெளிப்படுத்துகிறாள். கடைசிவரை துணைவருவேன் என்றும்

தேவை ஏற்படின் அரசிளங்குமாரி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என்றும் உறுதி அளிக்கிறாள். பாரதிதாசனின் பெண் கதைப்பாத்திரங்கள் அனைத்துமே புரட்சிக்கவி அமுதவல்லியில் சாயல் கொண்டவை.

       பாரதிதாசன் குறித்து பேரா. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

He is immersed in ancient Tamil lIterature and he brings back that rich tradition to enrich new poetry, the new rhythm of democracy. He is a master in weaving words into charming and enchanting verses. But he represents another trend in modern poetry, a revolt against the recent past from the social point of view’.

       இயற்கையைப் பாடியதில் ஷெல்லியும் கீட்ஸும்.

       காதலைப்பாடியதில் பைரனும் காளிதாசனும்.

புற உலக அரசியலையும் அக உலக உணர்வுகளையும் கவித்துவம் ததும்ப எழுதியதில் பாப்லோ நெருடா

யு டூ புருட்டஸ் என்ற நாடக காட்சிக்கு நிகரான உச்சக்கட்ட காட்சி,

மூலக்கதையிலிருந்த காதலை மட்டும் எடுத்துக் கொண்டு தன் படைப்புத்திறனால் பில் ஹணனை புரட்சிக்கவியாக்கியவர் பாரதிதாசன் மட்டும்தான். பாரதிதாசன் புரட்சிக்கவியில் காஷ்மீரி கவிஞனை எழுதவில்லை.

தன்னையே பிரதி எடுத்துக் கொள்கிறார். புதுவை கனக சுப்புரத்தினம்புரட்சிக்கவிஆகிறார்.

 

துணை நூல்கள்:

1)   Chaurapancashika  - Bilhana’s lyrical masterpiece chaurapancashika and its pictorial illustrations- by Geeta Kaw Kher. Artcicle published in Prazath, Vol 1, Issue 3 Oct _Dec 2010.

 

2)   தமிழில் பில்கணியம்மணிக்கொடி எழுத்தாளர்கள்பாரதிதாசன்.

தொகுப்பும் பதிப்பும் ய. மணிகண்டன், வெளியீடு சந்தியா பதிப்பகம், 2014.

 

3)   திராவிடநாடு  இதழ் 19 டிசம்பர் 1943.

4)   கூகுள் வரைபடம்பிரிட்டிஷ் இந்தியா 1934  

நன்றி : மணற்கேணி  இதழ் 64 2023.


 

n

ந்





 

 

    

2 comments:

  1. "பாரதிதாசனை அவர் எழுதியிருக்கும் மேற்கண்ட ஆசிரியர் உரையுடன் சேர்த்து வாசிக்கிறபோது , அவர் படைப்புலகம் தொட்டிருக்கும் உயரம் காஷ்மீரின் பனிமலை மூடிய இமயத்தை சிறியதாக்கிவிட்டது." மிக அருமையான ,ஆழமான உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவு .வாழ்த்துகளும் நன்றியும் தோழர்.வா.நேரு

    ReplyDelete
  2. ஆய்வுப் போக்கு மிக அருமை. சாதி ஆணவக் கொலைக்கு எதிராக முதலில் பாடிய கவிஞர் என்று பாரதிதாசனைக் குறிப்பிட்டதும் பெருமை கொள்ளச் செய்கிறது. அதிகமான தரவுகளுடன் கூடிய சிறப்பான ஆய்வுக் கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete