மகாகவி பாரதி போற்றிய திலகர் யார்?
பெண்விடுதலையை, பெண் கல்வியைப்
போற்றிப் புகழ்ந்து பெண்ணை மனசார
வாழ்த்தி பராசக்தியாக வழிபட்டவர்
பாரதி. அதில் எனக்கு ஐயப்பாடில்லை.
ஆனால் நம் பாரதி போற்றிப் புகழும்
திலகர் யார் என்பது புரியவில்லை!
பாரதி அறிந்திருக்கவில்லையா!
அறிந்தும் கடந்து செல்வது வசதியாக
இருந்திருக்கிறதா…!
கவிதைகள் புனைவுலகம் தானா?!!!
கவிதைகள் வரலாற்றை மூடி மறைத்துவிடும்
இன்னொரு அறிவுஜீவியின் ஆயுதமா..?
பாலகங்காதர திலகருக்கும்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறுக்கும்
நெருங்கிய தொடர்புண்டு.
"சுயராஜ்யம் என் பிறப்புரிமை,
அதை அடைந்தே தீருவேன்" என்
று முழக்கமிட்ட திலகரின் வரிகள்
இப்போதும் சூடேற்றுகின்றன.
ஆனால் திலகரின்சுயராஜ்யம் எது?
அவர் யாருக்கான விடுதலையை
இந்திய விடுதலையையாக முன்வைத்தார்?
திலகரின் கேசரி...
வரலாற்றில் திலகரின் சுயராஜ்யத்தை
படம் படித்துக் காட்டி இருக்கிறது.
திலகரின் 'கேசரி' இனிக்கவில்லை!
திலகர்..
பெண்கல்விக்கு எதிரானவர்.
பெண்கள் பள்ளிக்கூடம் போனால் அவர்களின்
ஒழுக்கம் கெட்டுவிடும் என்று சொன்னவர்.
பெண்களுக்கு எதற்கு கல்வி, அது இந்து தர்மத்திற்கு
எதிரானது என்று வாதிட்டவர்.
அனைவருக்கும் அடிப்படை கல்வி கட்டாயமாக்கப்பட
வேண்டும் என்று மகாத்மா புலே போராடிய போது
அவரை ‘தேசத்துரோகி’ என்று குற்றம் சாட்டியவர்.
குடியானவனின் பிள்ளைக்கும் கொல்லனின் பிள்ளைக்கும்
கணக்குப் பாடமும் சரித்திரப்பாடமும் எதற்கு?
அரசு பணத்தை வீணடிக்கிறார்கள் என்று எழுதியவர்.
அன்று அவரோடு போராடியவர்கள் ஒரு கட்டத்தில்
பொறுத்துக்கொள்ள முடியாமல் விலகிவிடுகிறார்கள்.
ஆம்..கேசரி பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அகர்கர்
கேசரியிலிருந்து விலகி ‘சீர்திருத்தவாதி’ என்ற
தனிப்பத்திரிகை ஆரம்பித்த வரலாறெல்லாம் இருக்கிறது.
அதனால் தான் எனக்கு பாரதியை ரொம்பவும்
பிடிக்கும் என்றாலும்
அதற்காக பாரதி சொல்வதைஎல்லாம் பிடிக்காது.
திலகரின் ஒரு பக்கத்தை மட்டும் கண்டு
போற்றியது மட்டுமில்லாமல்,
வாழ்க திலகன் நாம ம்
என்ற பாடலில்
/கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான் - நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
அகழி வெட்டினான்
சொல் விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக்
கொடியைத் தூக்கினான் (வாழ்க/
என்னால் பாரதியுடன் சேர்ந்து 'வாழ்க'
சொல்ல முடியாது.
பாரதி என்னை மன்னிக்க வேண்டும்.
அருமை வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி 🙏
ReplyDelete