“கலையின் பெயரால் எம் பெண்களை இழிவுப்படுத்துவதை இனியும்
பொறுப்பதற்கில்லை, அப்படி இழிவுப்படுத்தி கிடைக்கும் பணம் எமக்குத்
தேவையுமில்லை” – பாபாசாகிப் அம்பேத்கர்.
10 செப், 1927 .. ல் அவர் கண்முன்னாலேயே அதை அவர்கள் செய்தார்கள்.
அதுவும் அவரை அழைத்து அவருக்கு நிதி திரட்டி தருவதாக கூறி
(மகட் சத்தியாகிரகத்திற்கு நிதி திரட்டியபோது) அழைத்திருந்தார்கள்.
அழைத்தவர் ஜல்ஷா நாட்டிய நாடக கலைஞர் பட்டே பாபுராவ்.
அவர் ஆடிக்கொண்டே வருகிறார். அவரின் இரண்டு பக்கமும் மகர்
இன தமாஷா (கூத்து நடனம்) பெண்கள் ஆடிக்கொண்டு வருகிறார்கள்.
அத்தருணம் அம்பேத்கருக்கு எப்படி இருதிருக்கும்?
காரணம்… தமாஷா ஆடியவர்கள் அன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள்.
நிலவுடமை சமூகத்தை , ஆதிக்க சாதியை மகிழ்விக்க மாலையில்
தமாஷா.. இரவில் அப்பெண்கள் நிலவுடமையின் காமப்பசிக்கு
இரையாகிப்போகும் அவலம்..
அக்கர்மஷி நாவலில் சரண்குமார் லிம்பாளே தன் தாய் மகமாயி கதையை
தன் பிறப்பை விவரித்திருப்பார். இவை எதுவும் புனைவல்ல.
இந்தப் பின்புலத்தில் தான் அம்பேத்கருக்கு நிகழ்ந்த இந்த
அவமானத்தை அவருக்கு ஏற்பட்ட காயத்தை அந்த வலியை
புரிந்து கொள்கிறேன்.
நிதி தருவதாக சொல்லி தன்னை அழைத்து அவன் நடத்திக் காட்டும்
கூத்து ,
கலை என்ற பெயரில் ரசனைக்குரியதல்ல.. !
அவர் கொதித்தெழுகிறார்.
நீயாவது .. உன் நிதியாவது…
எம் பெண்களை இழிவுப்படுத்தி எனக்கு நீ கொடுக்கும் இந்தப் பணம்
தேவையில்லை என்று அந்த இடத்திலேயே அதை தூக்கி எறிந்துவிட்டு
வெளியேறுகிறார்.
இச்சம்பவத்தை எதுவுமே நடக்காதது போல மவுனமாக கடந்து செல்லவே வரலாறு விரும்புகிறது. அந்தப் பின்னணியில் எத்தனையோ கட்டுக்கதைகளை எழுதி, பரப்பி , சினிமாவாக்கி .. இருக்கிறது.
இப்படித்தான் வரலாறு எப்போதுமே விளிம்பு நிலைக்கு எதிராக
தன்னைப் புனைந்து கொள்கிறது.
மூக் நாயக் பத்திரிகை துவங்கியபோது இப்படி ஒரு மராத்தி இதழ்
வெளிவர இருக்கிறது என்பதை (செய்தியாக அல்ல,) "விளம்பரம்"
வெளியிட கூட "கேசரி" பத்திரிகை தயாராக இல்லை.
கேசரி பத்திரிகை திலகர் நடத்திய பத்திரிகை.
திலகரும் கேசரி பத்திரிகையும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில்
முக்கியமான பக்கங்கள். அப்படித்தானே வரலாறை படித்திருக்கிறோம்!
இங்கிருந்து விடுதலைப்போராட்டத்தின் இன்னொரு வரலாற்று
பக்கத்தையும் வாசித்தாக வேண்டி இருக்கிறது.
அவமானப்படும்போது
காயப்படும்போது
நிராகரிக்கப்படும்போது
வேண்டுமென்றே கள்ளமவுனத்தில்
இச்சமூகம் கடந்து செல்லும்போது..
அம்பேத்கரின் அறிவாயுதமே
போராயுதமாய்..
ஜெய்பீம்.
(14 ஏப்ரல் 2022)
No comments:
Post a Comment