நீ டீச்சராகப் போகிறாயா?
டாக்டராகப் போகிறாயா?
நீதிபதி ஆகப்போகிறாயா?
பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் கேட்கிறார்.
அதில் ஒரு குழந்தை மட்டும்
“ நான் ஜோன் அஃப் ஆர்க் ஆகப்போகிறேன்”
என்று சொல்கிறது,
அந்த குழந்தை வேறு யாருமல்ல,
இந்திராகாந்தி தான். !
மகாத்மா காந்தியின் மடியில் தலைவைத்து
உயிர்விட்ட கஸ்தூரிபா காந்தி இந்தியச் சமூகத்தின்
ஆதர்ச மனைவி, இலட்சிய மனைவி, அவர்கள்
இருவரும் இலட்சிய தம்பதியர்.
ஆனால் தன் காதல் மனைவி இந்திராவின் கைகளைப்
பிடித்துக்கொண்டு உயிர்விட்டார் இந்திராவின் கணவர்
பெரோஸ் காந்தி.
நமக்கென்னவோ இந்திராவும் பெரோஸூம்
இலட்சிய தம்பதியர் இல்லை!
அந்த அடையாளத்திற்குள் அவர்கள் ஏன் வரவில்லை?
ஏன் அவர்களை அப்படி அணுக முடியவில்லை?
எது தடையாக இருக்கிறது??????!!!
இவள் உடல் பலகீனமானவள்,
இவளால் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாது
என்று மருத்துவர் எழுத்து மூலமாக
எழுதியதை இரண்டு ஆண் மக்களைப் பெற்று
பொய்யாக்கியவர் இந்திரா.
இந்திராவின் தந்தை இந்த நாட்டின் பிரதமராக இருந்ததும்
நேருவுக்குத் துணையாக அவர் மனைவி இல்லாத வீட்டில்
வீட்டு நிர்வாகத்தையும் தந்தையைக் கவனிக்கும்
பொறுப்பையும் எல்லா இந்தியக் குடும்பங்களையும்
போலவே இந்திராவும் எடுத்துக்
கொண்டார். இது இந்திய சமூகத்திற்கு புதியதல்ல.
தான் காதலித்ததும் கைப்பிடித்ததும் இந்த நாட்டின்
பிரதமரின் மகளைத்தான் என்பதை அறிந்தவர் தான் பெரோஸ்காந்தி.
ஆனாலும், ஆளுமைகள் மோதுகின்றன.
அவர்களுக்குள் நடுவில் மகள் என்றும்
மனைவி என்றும் இரண்டுமாக இருந்தும்
இரண்டுமாக இருக்க நினைத்ததால்
சொல்ல முடியாத மன அழுத்தங்களையும்
அனுபவித்த பெண் இந்திரா.
தாய்மை, தாய்ப்பாசம்.. இந்திராவுக்கு பலமாக அமையவில்லை.
அவர் ஆளுமைக்கு அதுவும் ஒரு சவாலாகவே அமைந்துவிட்டது.
இந்திராவின் ஆளுமைக்கு ஒரு கம்பீரம் கொடுத்த
அவர் நரையும் மூப்பும் மகன் சஞ்சய் மரணத்திற்குப் பின்
ஒரே நாளில் அவர் மூப்படைந்து தளர்ந்து ரொம்பவும்
சாதாரண நிலையிலிருந்து கீழிறங்கி…
அதைப் பார்த்த எங்களைப் போன்றவர்கள்
துடிதுடித்துப் போனோம். ஆம்.. அதுவும் நடந்தது.
அவர் இறுதியாக பயணித்த ஆப்ரிக்க டூனிஷய நாட்டு
இந்தியத்தூதுவர் சொல்கிறார்…
“அமைதியைத் தேடி தான் இந்த இரு நாட்கள்
அரசு பயணத்தை அவர் மேற்கொண்டார்.
மாறுதலான சூழல், ரம்மியமான காட்சிகள்
எதையும் அவரால் அனுபவிக்க முடியவில்லை.
அவர் எப்போதும் ஆழ்ந்த மெளனத்தில் மூழ்கி இருந்தார்”
என்று பதிவு செய்திருக்கிறார்.
ஒரு பெண்ணின் ஆழ்ந்த மெளனம் என்பது
அவள் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்ல,
அவள் மீது இந்த சமூகம் சுமத்திய
சொல்லமுடியாத சுமைகளின் வலியும் தான்.
இன்று அவள் மறைந்த நாள். (31 அக்டோபர்)
ஆம்.. அவள் மறைவு கூட ஒரு
துன்பியல் நாடகத்தின் காட்சிகள் போல
கண்முன் விரிகிறது..
ப்ரியதர்சினி… எனக்குள் என்றும்.
ஆயிரமாயிரம் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி
அந்தப் பெண்ணின் பெருமூச்சும் மெளனவெளியும்
பேசிக்கொண்டே...
No comments:
Post a Comment