Wednesday, June 10, 2020

கவிதையல்ல நான்...

எழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான்.
உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல.
மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள்.
எப்போதும் என்னை ஓரமாக புறம்தள்ளும் உலகத்தில்
தனித்த பாதையில் பயணிப்பவள்.
கடிதங்கள் மின்னஞ்சல்கள் அழகானப் பரிசுகளை அனுப்பும் நீ
நாளை நான் தெருவில் நடக்கும் போது
அடையாளம் கண்டு கொள்ள இயலுமா? கவிதையல்ல.. நான்
களைத்துப்போய்விட்டேன்.
கிழிந்து தொங்குகிறேன்.
நீ பார்க்கும் என் கண்களை
ஓவியமாக தீட்டமுடியாது.
உன்னை வசீகரிக்காது.
சோர்வான வெற்றுபார்வையுடன் நான்.
எல்லா நேரங்களிலும்
குடித்து கும்மாளமிட என்னால் முடியாது.
பாட்டுப் பாடி
புகழ்மிக்க சொற்களைப் பேச
உன் விருந்துகளின் ரசமல்ல நான்.
நான் அதிகமாகப் பேசுவதில்லையே.
ஆரோக்கியமற்ற தூக்கமில்லாத
வாழ்க்கையிலிருந்து வரும்
என் சொற்கள் தட்டையானவை. நிலையற்றவை.
நான் பாடும் போது வந்துவிடுகின்றன என் சொற்கள்.
நான் சில நேரங்களில் அதிகமாகப் பாடுகிறேன்.
சில நேரங்களில் பாடுவதே இல்லை.
அதிலும் என்னைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது
நான் பாடுவதே இல்லை.
ஏன் என்றால் அவர்கள்
கவிதைகளை எதிர்ப்பார்க்கிறார்கள்.
நல்லதொரு இசையை எதிர்ப்பார்க்கிறார்கள்.
நானோ கவிதையல்ல.
ஒப்பாரியாக இருக்கவாவது முயற்சிக்கிறேன்.
திருத்தப்படாத கூர்த்தீட்டப்படாத என்னுடன்
சேர்ந்திருக்க பெரும்பாலோர் விரும்புவதில்லை.
இணைப்புகள் மீள்பதிவு செய்தல் தொழில் நுட்பங்கள்
என்று ஒலிப்பதிவில் செய்வதற்கு நிறைய இருக்கிறது.
ஆனால் நான் பிறவியிலேயே
சிதைந்துப்போனவள். கோளாறானவள்.
எனக்கு அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை.
ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இல்லையே.!
(― Charlotte Eriksson, )
#கவிதை_மொழியாக்கம்.

2 comments:

  1. நல்ல மொழிப்பெயர்ப்பு. நெகிழச் செய்த கவிதை.

    ReplyDelete
  2. மனதை உருக்கும் கவிதை. நல்ல மொழிப்பெயர்ப்பு. அனைத்து வரிகளும் மிக அருமை..

    ReplyDelete