Thursday, June 4, 2020

கலைஞர்.. விமர்சனங்களுடன்..

நேற்று (3/6/2020)கலைஞர் குறித்து பல்வேறுவிதமான செய்திகள் கருத்துகள் முகநூலில் நிரம்பி வழிந்தன. அவரவர் கருத்துக்கு அரசியல் உண்டு. ஆதாயங்கள் உண்டு. காரணங்கள் உண்டு. சுய விருப்ப வெறுப்புகளும் உண்டு.

கலைஞர் மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டார்  என்பதையே ஒரு குற்றமாக காட்டி வன்மம் கொண்டு நக்கல் செய்பவர்கள் உண்டு. இது கருணாநிதியின் மூட நம்பிக்கை என்று
கிண்டலுடன் பேசுவார்கள். ஏன் நாத்திகவாதி முட்டாளாக மூடநம்பிக்கை உள்ளவனாக இருக்கவே முடியாதா? வாழ்க்கை அனுபவத்தில் ஏதோ ஒன்று ஏதோ சில காரணத்தினால் வந்து ஒட்டிக்கொள்கிறது.. எனவே மஞ்சள் துண்டு எனக்குப் பிரச்சனை இல்லை!

கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது 72 மணி நேர வேலையை 24 மணி நேரத்தில் செய்வதாக ஒரு பிரமிப்பு ஏற்படும். எப்போது கோப்புகளைப் பார்க்கிறார் எப்போது பத்திரிக்கை வாசிக்கிறார் எப்போது தன்மீது பேசப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அறிக்கை எழுதுகிறார். உடன்பிறப்பே என்று முரசொலியில் கடிதம் எப்போது எழுதுகிறார்... எப்போது தூங்குகிறார் இதெல்லாம்.. யார் கணக்கிலும் அடங்காதப் புதிர். இப்படி ஒரு அசுர வேகம் கடின உழைப்பு இதெல்லாம் தான் கலைஞர்.

ஆனா இதெல்லாம் யாருக்காக எதற்காக பயன்பட்டது?
தமிழகத்தை பனகல் அரசர் ஆண்டிருக்கிறார். பக்தவச்சலம் ஆண்டிருக்கிறார். நாலு முழ வேட்டி
முக்கால் கை சட்டை மேலே ஒரு துண்டு போட்ட காமராஜர் ஆண்டிருக்கிறார். ஆட்சி அதிகாரம் அவர்களை கௌரவித்து இருக்கலாமே தவிர அதன்மூலம் அவர்கள் பொருளாதார உச்சங்களை எட்டிய தாக எவரும் சொல்ல முடியாது. திமுக தலைவர் அறிஞர் அண்ணா சொற்ப காலங்கள் ஆண்டிருக்கிறார். அவரும் அவர் குடும்பமும்அந்த அதிகாரத்தில் பெற்றது எதுவும் இல்லை. அதற்குப்பின் வந்த கலைஞர் என்னும் சாமானியரும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் தலையாய பணக்காரர்களின் பெயர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்கள்.
இதில் கலைஞரின் பங்களிப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

இவர் ஆட்சிக்காலத்தில் தான் குடிப்பழக்கம் ஒரு லாபகரமான தொழிலாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இவர் ஆட்சிக்காலத்தில்தான் மருதம் திரிந்து பாலை ஆனது. ஆறுகள் மணல் வெளியை இழந்தன. இவர் ஆட்சிக் காலத்தில் தான் முள்ளிவாய்க்கால் வரலாற்று துரோகம் நடந்தது.
இவர் ஆட்சிக்காலத்தில் தான் காமராஜர் தொடங்கி வைத்த அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் ஆங்கில வழிக் கல்விக்கு குழந்தைகள் அணிவகுத்தார்கள். இவர் ஆட்சிக்காலத்தில்தான் தலித்துகள் வன் கொடுமைக்கு ஆளானார்கள்.

அப்படியானால் கலைஞரின் ஆட்சியில் சமூக அக்கறை சார்ந்த எதுவும் நடக்கவில்லையா என்று கேட்டால்.. நடக்கவில்லை என்று எவரும் சொல்லிவிடவும் முடியாது.
பொதுவுடமை பேசிய கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில் அவர்கள் செய்ய மறந்த செயலை.. மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்தது.. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது... இப்படி சில போற்றுதலுக்குரிய தருணங்கள் உண்டு.

ஒரு மாபெரும் அரசியல் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்த தலைவர் என்று அவரைப் புகழ்ந்து விடலாம் ஆனால் அந்தப் புகழ்ச்சிக்கு தமிழக அரசியல் கொடுத்த விலை அதிகம். கழகத்தில் கேள்வி கேட்பவர்கள் நியாயம் கேட்பவர்கள் எழுந்து நிற்பவர்கள் உரக்க குரல் கொடுப்பவர்கள் இவர்களை அவர் சகித்துக் கொண்டதே இல்லை.
அவர்கள்பகைக்கப்பட்டார்கள். தூக்கி எறியப்பட்டார். பாதகர்கள் என்று பழிக்கப்பட்டார்கள் . தமிழக அரசியல் பங்காளிகளின் சண்டைக் களமாக மாறியது.. தமிழகத்தின் பொது பிரச்சனைகளை கூட ஒற்றைக் குரலில் டெல்லியில் ஒலிக்க இவர்களால் முடியவில்லை.
மாநில உரிமைகளுக்காக நலனுக்காக எழுந்த அரசியல் இயக்கம் அவர் சொந்த ரத்த உறவுகளுக்காக சுருங்கிப்போன அவலம்.. அரங்கேறியது. தமிழனாய் தன்னை அறுதியிட்டுக் கொண்டே இந்திய தேசியத்தில் அவர் கரைந்து போனது கூட காரணமாகத்தான். இந்திய தேசியம் ஆவதை அவர் அறிந்தே தான் செய்திருக்கிறார்.
குமுதம் ரிப்போர்ட்டர் (17/7/2008) ஒரு செய்தியை வெளியிட்டது. அதாவது காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்றவுடன் தங்கபாலு கலைஞரின் ஆலோசனை கேட்கிறார் அவரிடம்"ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக தேசியம் ஆகி வருகிறேன் முழுவதும் மாறிவிட வேண்டுமா?" என்று
சிரித்துக்கொண்டேன் கேட்டாராம் கலைஞர். தன் அரசியல் மாற்றங்களை அறிந்தே ஆதாயங்களுடன்.. சுய ஆதாயங்களுக்காக அரங்கேற்றியவர் கலைஞர்... இப்படியாக கலைஞர் மீதான விமர்சனங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம்...

 அனைத்தையும் தாண்டிய பிறகும்....
ஒரு புள்ளியில் அவர் என்னை வசீகரிக்கிறார். அந்த இடம் அவருக்கும் எனக்கும் ஆனது. அவரைக் கொண்டாடும் அந்த தருணம்... முக்கியமானது. கட்சியிலும் அரசியலிலும் மேலிடத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஜாதி சீழ்ப்பிடித்து நாற்றம் எடுக்கிறது. கட்சியிலும் கூட அவர் சாதி குறித்த அவரை கீழ்மைப் படுத்தும் உரையாடல்கள் கடைசிவரை தொடர்ந்தன.
"கலைஞர் தன்னை தலித் வீட்டு சம்பந்தி என்று சொல்லி பெருமிதப்பட்டுக் கொள்கிறாரே"என்று ஒருவர் வினவ
"அவர்பிறவிக்கு அதைவிட வேறென்ன பெருமை கிடைத்து விடப்போகிறது?"என்று ஏளனச் சிரிப்பு கிடையில் சொன்னவர்தான் கி. மனோகரன்.(ஆதாரம் கவிதா சரண்)இவை
எல்லாம் அறிந்தவர்தான் கலைஞர்.

மனித மாண்புகளை பேணத் தெரியாத
சாதி கழிசடை சமூகத்தில் சொல்லிக்கொள்ளும்படியான அடையாளமோ முகவரியோ பின்புலமோ குலப் பெருமையோ இல்லாத ஒரு சாமானியன் அதிலும் ஆக பிற்படுத்தப்பட்ட ஒரு அதி சூத்திரன்.. தான் வாழ்ந்த காலத்தில் புறக்கணித்துவிட முடியாத அரசியல் வரலாறாக தன்னை எடுத்து நிறுத்திக்கொள்ள முடியுமெனில் அந்த நம்பமுடியாத வரலாற்று விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர்.

திராவிட அரசியல் வரலாற்றில் கலைஞருக்கு மட்டுமே அவருடைய பிறப்பு கொடுத்த இடம் இது.
விதுரனின் அரசாட்சியில் விதுரன் மட்டும்தான் ஜாதி யால் ஒதுக்கப்பட்டவன் .. அரசும் அதிகாரமும் பணமும் செல்வாக்கும் விதுரன் வாரிசுகளுக்கு சாதியின் இழிவைச்
சுமத்தவில்லை.( அதற்கான காரணங்கள் மிகவும் வேடிக்கையானவை.)
இந்தப் புள்ளியில் கலைஞரை நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.. எல்லா விமர்சனங்களுடனும்.....

2 comments: