Wednesday, December 18, 2019

சூல் தர்மனுக்கு வாழ்த்துகள்




கொப்புளாயி.. குடும்பத்தின் சார்பாகவும்
கண்மாய் உயிரினங்கள் சார்பாகவும்
சூல் - சோ தர்மனுக்கு
வாழ்த்துகள்...
எப்படியோ உங்களைப் போனில் ப்டிச்சி வாழ்த்து
சொல்லும் போது.. என் ஆதித்தாய் கொப்புளாயி
கை அசைத்து வாழ்த்தினாள்.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா.. ..
-----
உருளைக்குடியின் கண்மாய்..
சூல் கொண்ட கண்மாய்
அப்படியே நம்மை தனக்குள் இழுத்து மூழ்கடித்து
ஜீவராசிகளின் உயிர்ப்பை உரையாடல்களின் ஊடாக
நம்முன் விரித்து .. சூல்.. தன் பனிக்குடம் உடைத்துப்
பிரசவத்ததில் பரவசப்பட்டவர்கள் என் போன்றோர்.
பிச்சையாசாரி,எலியன்,கோனக்கண்ணன்,
சப்பான்,மூக்கன்,மொன்னையன்,
கொப்புளாயி, மடைக்குடும்பன், நீர்ப்பாய்ச்சி,
குப்பாண்டி.லாடம் கட்டும் ஆசாரி..
இத்துடன் பிச்சையாசாரி, எலியன், கோணக்கண்ணன்
நடத்தும் புதையல் கதையும் அவர்களின் நம்பிக்கையும்
அதில் வெளிப்படும் அவர்களின் வெகுளித்தனமும்..
இப்படியாக சூலின் மாந்தர்கள் புனைவுகளைத்
தாண்டிய கிராமத்தின் வாழ்வியலாக ..
அன்றைய வாழ்க்கையின் ஆவணமாகவும்..
பாத்திரப்படைப்புகளில் என் கண்முன் சூல்கொண்டு
நிற்பவள்.. சூல் அறியாத என் தாய் .. எம் ஆதித்தாய்
கொப்புளாயி தான்.
கொப்புளாயி வைத்த மரத்தின் அடியில்
நிழலின் வாழ்ந்திருக்கும் கொடுப்பினையும்
இல்லாத வாழ்க்கை என்னுடையது.
கொப்புளாயி எனக்கு வெறும் கதைப்பாத்திரமல்ல.
எம் அம்மம்மா, அவளுக்கு அம்மா, ஆச்சி,
ஆச்சியைப் பெத்த புண்ணியவதி..
இப்படி எம் மண்ணில் வாழ்ந்த ஆதித்தாய்களின்
எச்சம் தான் .. சாயல் தான் சோ. தர்மன்
படைத்த சூல் கதையின் கொப்புளாயி.
கொப்புளாயீ..ய்யீ..
இத்தனைப் பிரமிப்புகளையும் தாண்டி தான்
இதே சூல் நாவலின் சமூக அரசியலும்
பின்னணி இசை போல கதையுடன் ஒட்டியும்
ஒட்டாமலும் எனக்குள் ஓடியது.
இது என் அரசியல் சார்ந்த சரியானப் பார்வையா?
முதல் வாசிப்பில் ஏற்பட்ட இதே அனுபவத்தை
இரண்டு திங்கள் கழித்து என் மீள்வாசிப்பிலும்
உணர்ந்தேன். அதுவே என் இரண்டாம் பகுதி
விமர்சனமாக விரிந்தது.
இத்தருணத்தில் நான் மிகவும் மதித்து கொண்டாடும்
எழுத்தாளர் அருந்ததிராய் சொன்ன வரிகள் தான்
நினைவுக்கு வருகின்றன.
For me, my fiction and my nonfiction
are both political. The fiction is a universe,
the nonfiction is an argument.
பொதுவாக ஒரு பிரபலமானவரின் படைப்புகளை
விமர்சனம் செய்யும்போது அவர்கள் விமர்சனங்களை
எதிர்கொண்ட விதம் அவர்களின் பிம்பங்களை
உடைத்து என்னைக் காயப்படுத்தியதுண்டு.
ஆனால்…
என் சூல் நாவலின் சமூக அரசியல் பார்வையை
வாசித்துவிட்டு…
அவருக்கே உரிய தொனியில்..
“கட்சி நாயக்கர் அல்ல, சுட்சி நாயக்கர் “ என்று
படைப்பாளர் சோ. தர்மன் அவர்களே வந்து
பின்னூட்டமிடுகிறார்.
அவருடைய அந்த மிடுக்கு, பெருந்தன்மை, ஆகிருதியில்
இன்று நான் கரைந்துப் போனேன்.
அவர் வாழும் திசை நோக்கி என் இரு கைகளைக் கூப்பி
வணங்குகிறேன்.. ஒரு வாசகனாக மட்டுமல்ல..
அவர் நிழலில் ஒதுங்கும்
கொப்புளாயியின் வாசனையாகவும்.
(13 செப்டம்பர் 2018  முக நூல் மீள்பதிவு)

No comments:

Post a Comment