Tuesday, April 30, 2019

இவர்களுக்கு மே தினம் உண்டா

building contract workers in india photo க்கான பட முடிவு


மும்பை பெரு நகரின் வயிற்றைக் கீறி
ஆழமாகத் தோண்டி
இரும்புக் கம்பிகளால் சித்திரவதை செய்து
அதில் எங்கெல்லாமோ புதிது புதிதாக
அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டே
இருக்கின்றன.. ஒரு 10 வருட த்திற்கு முன்பு கூட
 நான் பார்த்த முல்லை நிலம் இப்போது இல்லை.
அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டே
இருக்கின்றன. பெரு நகரத்தின் பசி அடங்க வில்லை.

இந்த இடங்களில் எல்லாம் வேலைப் பார்க்கும்
கட்டிட த் தொழிலாளர்கள் /சித்தாளு/
இவர்களும் தொழிலாளர்கள் தான். ஆனால்
இவர்கள் நம் தொழிற்சங்க தொழிலாளர்கள் அல்ல.
இவர்கள் ஊதிய உயர்வு கேட்டோ போனஸ் கேட்டோ
போராடியதாக எந்த வரலாறும் இதுவரைக் கிடையாது.
இவர்களும் தொழிலாளர்கள் தான்.
இவர்களுக்குத் தினக்கூலி உண்டு.
10 முதல் 12 மணி நேரம் வரை உடல் உழைப்பு.
தினக்கூலி ரூ 400 முதல் 800 வரை.
அதாவது மேஸ்திரி/ டைல்ஸ் போடுபவர் /
கொத்தனார் இவர்களுக்கு கூலி அதிகம்.
மற்றபடி தலையில் சிமிண்ட் சட்டியைச் சுமந்து
கொண்டு ஏறும் தொழிலாளிக்கு சம்பளம் குறைவு.

இவர்களின் வேலைக்கு உத்திரவாதமில்லை
என்பது மட்டுமல்ல, இவர்களின் உயிருக்கும்
உத்திரவாதமில்லை. பாதுகாப்பு உபகரணங்கள்
என்று சொல்லப்படும் எதைப் பற்றியும் இவர்கள்
அறிந்த து கூட இல்லை.
பொதுவாக இவர்கள் எங்கெல்லாம் புதிது புதிதாக க்
கட்டிடங்கள் கட்டப்படுகிறதோ அந்த இட த்திற்கு
அருகில் தங்கள் குடியிருப்புகளை மாற்றிக்கொண்டே
அலைகிறார்கள். 
இவர்களுக்கு நிரந்தர முகவரி இல்லை.
எனவே இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை.
இவர்களும் ஓட்டுப்போடும் ஜன  நாயக க் கடமையை
பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

இவர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை.
எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
இவர்கள் அக்க்வுண்டில் பணம் வரவு
வைக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
இவர்கள் இந்தியா எங்கும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இந்தியர் என்ற அடையாள அட்டை
இல்லை என்பதாலேயே இவர்களை இந்தியர்கள்
இல்லை என்று எவரும் முடிவு செய்துவிட முடியாது.
இவர்கள் இருக்கிறார்கள்..
இவர்களும் நம்மோடு இருக்கிறார்கள்.
நாம் தான் இவர்களுடன் இருப்பதில்லை.

அதனால் என்ன இவர்கள் உழைப்பின் வியர்வை
 நாம் குடியிருக்கும் வீடு/ மால்/ சினிமா தியேட்டர்/
மருத்துவமனை என்று எல்லா கட்டிடங்களின்
அஸ்திவாரத்திலும்… நம் வாழ்க்கையை ஏந்திக்
கொண்டிருக்கிறது. சித்திரச் சோலைகளே…


No comments:

Post a Comment