Thursday, October 26, 2017

நெற்றிக்கண்ணைக் காணவில்லை



அவனுடைய நெற்றிக்கண்ணைக் காணவில்லை.
யார் திருடி இருப்பார்கள்?
என்ன நடக்குமோ 
அச்சத்தில் பனிச்சிகரங்கள் தடுமாறுகின்றன.
எங்கே போனது நெற்றிக்கண்?
சல்லடைப் போட்டு மூவுலத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தொலைந்துப் போன நெற்றிக்கண்ணை.

நக்கீரனின் விலாசம் மறந்துப்  போனதால்
கண்ணப்பனைத் தேடி பெருநகரவாசிகள்
காட்டில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அடர்ந்த வனத்தில் மின்னலைப் போல ஜொலிக்கும்
 பேய்மரங்களின் கிளைகளில்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்
 யட்சிகளுக்கும் தெரியவில்லை.
கழுத்தில் படமெடுத்து ஆடிய நாகம்
நாகமணியை வெளியில் துப்பி 
புதர்களுக்குள் தேடிக்கொண்டிருக்கிறது நெற்றிக்கண்ணை.
தற்காத்தல் அறிந்த பார்வதி தேவி 
தற்கொண்டான் பேணுவதில் தவறிவிட்டதாக
கங்காதேவி குற்றம் சுமத்துகிறாள்.

எல்லைக்காவல் படையினர் பதட்டத்தில் இருக்கிறார்கள்.
எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கிகள் வெடிக்கலாம்.
அமைதிப் புறாக்கள் அரசியல்வாதிகளின் கூடுகளில் 
அடைக்கப்பட்டுவிட்டன.
எங்குப் பார்த்தாலும் நெற்றிக்கண் பற்றிய
பர பரப்பான செய்திகள்.
நெற்றிக்கண் எப்படி இருக்கும்?
இமைகள் உண்டா , கிடையாதா?
செம்பற்சோதியான் செக்கற்மேனி
சுடர்விழி ஆழியோ நெற்றிக்கண்?
இளம்பிறைதானோ நெற்றிக்கண்!
செம்மொழிப் புலவர்கள்
சங்க இலக்கியத்தில் நெற்றிக்கண்ணைத் தேடும் 
ஆய்வுகளைத் தொடங்கிவிட்டார்கள்.
நெற்றிக்கண் ஆணாதிக்கத்தின் அடையாளமென
பெண்ணியவாதிகள்  பேசுவது சரியா தவறாவென
நவீன இலக்கியத்தின் பிதாமகன்கள் 
சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள்..
நெற்றிக்கண்ணைக் காணவில்லை.

நெற்றிக்கண் முன்  தோற்றுப்போன காமதேவன்
 கையில் கரும்புடன்
மீண்டும் களத்தில் நிற்கிறான்
இருள் வெளிச்சத்தில் ரதியின்  சிவலிங்க பூஜை
அலைகளுக்கு நடுவில் பவளப்பாறைகள் விழித்திருக்கின்றன.
மரங்கள் பூக்கின்றன.
முட்டை ஓடுகளை  உடைத்தக்  குஞ்சுகள்
இரைக்காக  சப்தமிடுகின்றன.
ஒற்றைக்கண்ணால் சரித்துப் பார்க்கும் காக்கை
வடையைத் திருடக்  காத்திருக்கிறது.
தலைவர்கள் கண்களைக்  கறுப்புக்கண்ணாடிகள்
அலங்கரிக்கின்றன.
நெற்றிக்கண்ணை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.
திரிகூட மலையில் லட்ச தீபங்கள்
செண்பகப்பூவின் மணம் அருவிகள் எங்கும்..
பஃறுளியைத் தேடி  பயணிக்கிறது தாமிரபரணி.
அவன் கண்கள் மெல்ல சிரிக்கின்றன..

2 comments:

  1. Arumai vaalthukal. kaakaiku theriumo naam vadai thirudukerom endro?

    ReplyDelete
  2. அருமை ரசித்தேன் சகோ

    ReplyDelete