Wednesday, August 2, 2017

ஆடிப்பெருக்கு பழங்கதையாய்


நாளை ஆடிப்பெருக்கு..ஆக 3.
பிஸ்லரி பாட்டில் தண்ணீரை ஒரு சொம்பில் நிறைத்து
அதில் மலரிதழ்களைத் தூவி .. கற்பூரம் காட்டி
தேங்காய் உடைத்து.. தமிழர் மரபை எப்படியும்
காப்பாற்றிவிடலாம்.
அடியே .. பைத்தியக்காரிகளா..
மழைப் பொய்த்ததோ நம் மன்னவன் பொய்த்தானோ
புதுவெள்ளம் கனவாகி நீ வெறும் மணலாகி
மணல்கொள்ளையில் எல்லாம் இழந்துநிற்கிறாய்.
உன் பிச்சைப்பாத்திரத்தில் அன்னமிட
ஆபுத்திரன் மீண்டு வரட்டும்.
மஞ்சள் கயிறு கட்டாத மணிமேகலைகள் காத்திருக்கிறார்கள்.
உன் பெருமூச்சு தாங்காத நிலமெல்லாம்
பாளம் பாளமாக வெடித்து கிடக்கிறது.
புதுமணத்தம்பதியர் திரைப்படம் பார்க்க
கிளம்பிவிட்டார்கள்.வசதியான வீட்டுப்பிள்ளைகளுக்கு
கட்டணவசதி கொண்ட் நீச்சல் குளங்கள் காத்திருக்கின்றன.
மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை.
வாழாவெட்டி தங்கைக்கு சீர்வரிசை கேட்டு
வெட்கங்கெட்ட ரங்கநாதர் படித்துறைக்கு வரலாம்.
டில்லிக்கு கடிதம் எழுதியிருப்பதாக சொல்லி
எப்படியும் சமாளித்துவிடுவார்கள் நம் மந்திரிமார்கள்.
பாட்டியின் பழங்கதைகளில் வரும்
எட்டுத்தலை நாகம், ஒன்றரைக்கண் அரக்கன்,
பச்சைக்கிளி, இளவரசி, பறக்கும் போர்வை
இந்த வரிசையில் நீ ஆடிப்பெருக்கு கதைகளையும்
சேர்த்துக் கொள்.
நதியாம்.. வெள்ளப்பெருக்காம்..
வழிபாடாம்.. அதுவும் இந்த ஊரில் இதெல்லாம்
நடந்துச்சாம்... ஆஹ்ஹா..
அவர்கள் உன் கதையை நம்பமறுக்கலாம்.
ஆனால் கூகுள் குலதெய்வத்தில் அருளால்
ஆடிப்பெருக்கு காட்சிகளைக் காட்டி
இதெல்லாம் எங்கள் வாழ்க்கை, எங்கள் நதிக்கரை
நாகரிகம்., எங்கள் மண், எங்கள் இயற்கை வழிபாடு,
எங்கள் விவசாயம்னு... சொல்லிட்டே இரு..
செய்தி:
நிலத்தடி நீரை விற்று காசு பார்க்கும் தொழில் தமிழகத்தில் கனஜோராக நடக்கிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1200 குடிநீர் விற்கும் நிறுவனங்களில் சரிபாதி 600க்கும் அதிகமான நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.தமிழகத்தில் 800 குடிநீர் நிறுவனங்கள் சட்ட விரோதமானவை என பசுமைத் தீர்ப்பாயம் முன்பு பொதுப்பணித்துறையே ஏற்றுக்கொண்டது.
அடப்பாவிகளா... எல்லாத்தையும் மொத்தமா கடந்தகால வாழ்க்கையாக்கிடாதீங்கடா..

9 comments:

  1. பெரும்பாலான மினரல்வாட்டர் கம்பெனிகள் அரசியல்வாதிகள் கையில்தான் உள்ளன.

    ReplyDelete
  2. என்னைப்பொருத்தவரை இவங்கே இந்தியாவை மொத்தமாக நம்மையும் சேர்த்து வித்துட்டாங்கேனா.... நமக்கு விடிவு காலம் பிறக்கும் அல்லது முடிவு காலமாவது பிறக்கும்.

    ReplyDelete
  3. ஆடிப்பெருக்கு...? நோ... லாரி பெருக்கு...!

    ReplyDelete
  4. அட.....கொடுமையடா

    ReplyDelete
  5. ஆடிப் பெருக்கு என்பதெல்லாம் சும்மா பேருக்கு :)

    ReplyDelete
  6. ஆடிச் சுருக்குச் சிந்தனை அருமை

    ReplyDelete
  7. நெத்தியடி..... உண்மையை கழுவி உற்றுவதுதான் மிச்சமாய் ... எச்சமாய் .....ஏக்கமாய்

    ReplyDelete
  8. அனைத்தையுமே வியாபாரமாக்கி மக்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.

    ReplyDelete