Monday, May 9, 2016

ஜனநாயகத்தில் நாய்கள்



நாய்கள் ஆபத்தானவை.
ஆதிகாலம் தொட்டு மனிதன் காலடியில் வாலாட்டும்
நாய்களை வெறுப்பது உசிதமல்ல
என்கிறார்கள் நாய்க்காவலர்கள்.
நன்றியுள்ள ஜிவன் நாய்கள் தான்
என்கிறார்கள் நாய்ப்பிரியர்கள்.
ஆமாம்.. இந்த நாய்கள்
யாருக்கு காவல் இருக்கின்றன?
இந்த நாய்கள்
யாருக்கு நன்றி காட்டுகின்றன.?
எதற்கு நன்றி காட்டுகின்றன.?

வாலை ஆட்டும் நாயகள்
சில மானுடப்பிறவிகளின் அடையாளம்.
எச்சில் எலும்பு கடிக்க
ஏங்கும் பரிதாபம்.
குரைக்கும் நாய்கள்
அரசியல்வாதிகளின் வாத்தியார்கள்.
கூட்டம் கூட்டமாக
பிச்சைக்காரனைத் துரத்தும் நாய்கள்
காவல்துறையில் .
வேட்டை நாய்களும் உண்டு
நம் நாட்டில்.
அதுகளை நினைத்தால் தான்
என் உடல் நடுங்குகிறது.
உடம்பெல்லாம் கண்ணாக
இந்திரனின் வெறிப்பிடித்த கண்கள்
எம்மை வெருட்டுகின்றன.

வாயில்லாத ஜீவன் நாய்கள் என்று
வக்காலத்து வாங்காதீர்கள்.
ஊரெங்க்கும் வீதியெங்க்கும்
நாய்கள் விரட்டுகின்றன..
நாய்க்கடித்தால் தொப்புளைச்சுற்றி நாற்பது ஊசி
பயமுறுத்துகிறதா உங்கள் அறிவு...
நாய்களைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்துவிட்டு
நாய்கள் ஜாக்கிரதை யை
கழுத்தில் தொங்க்விட்டு
காலம் தள்ள முடிவு செய்துவிட்டீர்களா..?
ச்சே.. நாயும் பொழைக்கும் இந்தப் பொழைப்பு!
நாய்கள் ஆபத்தானவை.
நாய்களை வளர்ப்பவன் எஜமான்
நாய்கள் என்றும் அடிமைகள்.
ஜனநாயகத்தில்  நாய்களும் அடிமைகளும்
ஆபத்தானவர்கள்.

No comments:

Post a Comment