Wednesday, June 11, 2014

தந்தையின் நிழல் மறைந்த நாள்...மும்பை வாழ் தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகமான
மும்பை மாநகர திமுக செயலாளர் த.மு. பொற்கோ அவர்கள்
நேற்று 10 ஜூன் -அதிகாலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.
இன்று - 11 ஜூன் - அவருடைய இறுதிப்பயணம்... கலந்துவிட்டு வந்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சற்றொப்ப 26 ஆண்டுகள் மும்பையின் திமுக அடையாளமாக
வாழ்ந்தவர். திமுக தலைவர் கருணாநிதி மும்பை திமுகவை
நினைத்தவுடன் முதலில் நினைவுக்கு வரும் திமுக
முகம் பொற்கோ அவர்கள்தான். . அதனால் தான் பொற்கோவுக்கு
இறுதி அஞ்சலி செலுத்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்
நேரில் வந்திருந்தார் எனலாம்.

அய்யா பொற்கோ அவர்களின் மறைவு செய்திக் கேட்டவுடன்
பற்பல நினைவுகள் வந்து என்னைக் அலைக்கழிக்கின்றன.
எந்த மேடையில் இருந்தாலும் சரி, தன் திராவிட
இயக்க கருத்துகளைச் சொல்வதில் அவர் தயக்கம் காட்டியதே
இல்லை. அது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடக்கும்
பாராட்டுவிழாவாக இருந்தாலும் சரி, திருமண வீட்டின்
வாழ்த்துரையாக இருந்தாலும் சரி.. தன் கருத்துகளில்
உறுதியாக இருந்தவர் அவர்.

தனிப்பட்ட முறையில் என் மீதும் என் எழுத்துகள் மீதும்
அளவற்ற பாசமும் பெருமையும் வைத்திருந்தவர்.

மும்பை திமுக , மாநகர திமுக, புறநகர் திமுக என்று இரண்டாகப்
பிரிந்தக் காலக்கட்டம், ஒருவருக்கொருவர் ஒரே மேடையில்
அமர்வதைக் கூட தவிர்த்திருந்த காலத்தில், புறநகர் பகுதியில்
வாழ்ந்த நான், என் முதல் நூலாக சூரியப்பயணம் கவிதை தொகுப்பை
வெளியிட்டேன். புறநகர் திமுகவிலிருந்து அனைவரும் கலந்து
கொண்டிருந்தார்கள், பொற்கோ அவர்களும் கலந்து கொள்ள
வேண்டும் என்று அழைப்புவிடுக்கும் போது "உங்கள் அரசியல்
காரணங்களுக்காக என்னைத் தவிர்க்க வேண்டாம். நீங்கள்
கட்டாயம் வருகிறீர்கள்" என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு
வைத்துவிட்டேன். அவர் பதிலுக்காக கூட காத்திருக்கவில்லை.
அவரும் வந்து கலந்துக் கொண்டு சிறப்பித்தார். மாநகர திமுகவும்
புறநகர் திமுக சேர்ந்து ஒரே மேடையில் அமர்ந்த முதல் நிகழ்வு
அந்த நிகழ்வு தான்.

பொற்கோ அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு.
நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் சங்க இலக்கிய சமூகம் என்ற
தலைப்பில் நான் பேசிய நிகழ்வு அவர் தலைமையில் நடந்தது.
அப்போது "ஓரில் நெய்தல் கறங்க... இன்னாது அம்ம இவ்வுலகம்,
இனிய காண்பர் இதன் இயல்புணர்தோரே" என்ற புறநானூற்று
பாடலைக் குறிப்பிட்டேன். பேசி முடித்து இருக்கையில் அமர்ந்தவுடன்
அந்தப் பாடலை எழுதியவர் பக்குடுக்கை நன்கணியார், தெரியுமல்லவா?
பாடலைச் சொல்லும் போது எழுதியவர் பெயரையும் சொல்லும்
பழக்கத்தை வைத்துக் கொள்" என்று மெதுவாக , கண்டிப்பான
குரலில் அறிவுரை சொன்னார்.

இன்னொரு நிகழ்வு, மும்பை சண்முகாணந்தா அரங்கில்,
லியோனி தலைமையில் பட்டிமன்றம். பட்டிமன்ற நிகழ்வுக்கு
முன் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்திய
பொற்கோ அவர்கள், லியோனி பட்டிமன்றத்தில்
பேச வந்திருந்த புதுக்கோட்டை ந.முத்துநிலவன் அவர்களை
அறிமுகப்படுத்தும் போது, "முத்துநிலவன் அவர்கள்
எங்களுக்குப் புதியவர்  அல்ல. எங்கள் எழுத்தாளர்
புதியமாதவியின் ஹேராம் கவிதை நூலுக்கு மிகச் சிறப்பான
அணிந்துரை எழுதியவர்." என்று பேசினார். ஹேராம் வெளியிட்டு
பல ஆண்டுகளுக்குப் பின் அவர் நினைவில் கொண்டு பேசியது
கூட்டத்தில் உட்கார்ந்திருந்த எனக்கு வியப்பளித்தது.

திமுக குறித்த என் விமர்சனங்களை அவர் எப்போதுமே
சீரியஸாக நினைப்பதில்லை. பல நேரங்களில் அதுவே
எனக்கு எரிச்சல் மூட்டும். அதையும் அவர் அறிந்திருந்தார்.
ஒரு புன்னகையால என் விமர்சனங்களைத் தள்ளிவிட்டு
மீண்டும் எனக்குப் பிடித்தமான அறிஞர் அண்ணாவைப்
பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்!

மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகள், மூட்டுவலியால்
அவஸ்தைப் பட்டார். மாடிகளில் ஏறவும் இறங்கவும் மிகவும்
சிரமப்பட்டார். ஆனாலும் அதை எல்லாம் காரணம் சொல்லி
அவர் பொதுநிகழ்வுகளில் கலந்துக் கொள்வதை தவிர்ததே இல்லை!
மேடையில் உட்கார்ந்திருப்பவர் எழுந்திருக்க சிரமப்படுவதைக்
கண்டு தோழர்கள் " நீங்கள் உட்கார்ந்தே பேசுங்கள் அய்யா"
என்று சொல்வார்கள். ஆனால் அவர் அவர்கள் சொல்வதைக்
கேட்க மாட்டார். சிரமத்துடன் எழுந்து நின்று மைக் முன்னால்
பேச ஆரம்பிக்கும் போது சொல்லுவார்...
" என்னை உட்கார வைத்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
அது நடக்காது, " என்பார். இறுதிவரை அவர் உட்கார்ந்து
பேசியதே இல்லை.  இயற்கை மட்டும் தான் அவரை
வணங்கி வழியனுப்பி  வைத்திருக்கிறது.

அவருடைய கறுப்பு சிவப்பு கரை வேட்டியும் என்னைப் பார்த்தவுடன்
மலரும் புன்னகையும் என்னை மற்றவர்களிடம்   அறிமுகப்படுத்தும்
போது அவரிடம் மலரும் பெருமிதமும்  .. இனி எனக்கு கிடைக்கப்
போவதில்லை. என் தந்தையின் நிழலாக நான் அவரைத் தரிசித்த
தருணங்கள் இனி, வெறும் நினைவுகளாக மட்டுமே என்னில்...

அவருடைய கடைசி ஊர்வலத்தில் கண்ணாடி பெட்டியில் மலர்
மாலைகள் மறைக்க நகர்ந்த தருணத்தில்  அந்தக் கறுப்பு சிவப்பு
கரைவேட்டி என்னை எட்டிப்பார்த்தது ... என் தந்தையின்
நிழல் என்னை விட்டு விலகியது போல ஓர் உணர்வு.
" நான் அரசியல் அனாதையாகிவிட்டதாக நினைத்தேன்"

இறுதிவரை திமுகவின் அடையாளமாகவே மும்பையில் வாழ்ந்து
மறைந்த மனிதனின் கதை .. ஒவ்வொரு காட்சியாக
என் மனக்கண்ணில்.

அவருக்கு இந்த மகளின் வீரவணக்கம்.

2 comments:

 1. பதிவை படித்தேன்.
  ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 2. 'என் தந்தையின் நிழலாக நான் அவரைத் தரிசித்த
  தருணங்கள் இனி, வெறும் நினைவுகளாக மட்டுமே என்னில்...'
  நெஞ்சை உருக்கும் ஒரு நேர்மையான நினைவேந்தல். எனக்கும் நினைவிருக்கிறது... ஆர்ப்பாட்டமில்லாத, ஆன்றவிந்து அடங்கிய மனிதர்.. நம் அனைவரின் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார். அவர்போலும் கொள்கை மறவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதுதான் அவரது மறைவால் எனக்கேற்பட்ட பெரும் குறை... பார்க்கலாம், அவர் சரியான வழிகாட்டிதான் எனில் உங்கள் எழுத்துமற்றும் இயக்கங்களில் வாழ்வார்தானே? வாழ்வார். வாழவைப்போம் நன்றி தோழி.

  ReplyDelete