Tuesday, December 27, 2011

தமிழ்த்தேசியமும் திராவிட அரசியலும்
இந்தியக்குடியரசின் ஓர் அங்கமாக ஒரு மாநிலமாக ஓரினமாக ஒரு மொழியாக
இருக்கும் தமிழன் இந்தியக் குடியரசின் ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி,
ஓர் இனம், ஒரு மதம் என்ற ஒருமைத்தன்மையில் ஆதிகாலம் தொட்டு
கலந்து விடாமல் தனித்தே நிற்கிறான்.

சிலம்புக் காவியம் படைத்த இளங்கோவடிகளின் தமிழ் மண்ணில்
இன்று தமிழனுக்கு அவன் தமிழன் என்ற அடையாளம் இருப்பதாலேயே
இடமில்லை, அடித்து விரட்டப்படுகிறான், சொந்த மண்ணிலேயே
அகதிகளாகிவிடும் அவலம் இன்று உச்சநிலையை எட்டியுள்ளது.

அதாவது திராவிட இன மக்கள் அதாவது திராவிட மண்ணின் பங்காளிகள்
இன்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எதிரெதிர் அணியில்
நிற்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாவதில் மூன்றாவது
அணிக்குப் பெரும் வெற்றியும் கொள்ளை இலாபமும் இருக்கிறது என்பதையும்
நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

திராவிட மொழிக்குடும்பம், திராவிட இனம் ஆகிய கருத்துகள்
திராவிட மொழிகளின் தாயாக இருக்கும் தமிழ்மொழி பேசிய மக்களிடம்
மட்டும் தான் இருந்ததா? என்ற கேள்வியை முன்வைத்து கடந்தக் காலத்தை
அறிவுப்பூர்வமாக நாம் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய மதராஸ் ஸ்டேட்டில் தமிழர்களை விடவும் அதிகமாக தெலுங்கு
கன்னடம் பேசியவர்கள் வாழ்ந்தார்கள் என்பதுடன் அவர்கள் செல்வாக்கு
மிக்கவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் நினைவு கூர வேண்டியிருக்கிறது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம்
என்ற பெயர்கள் எல்லாம் இந்த உண்மையை இலைமறைக் காயாக
உணர்த்தும் சான்றுகள். அந்தச் சூழலும் கால்டுவெல் எழுதிய திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் மூலம் கிடைத்த திராவிட மொழி
இன எழுச்சியும் அரசியல் களத்தில் மிகக் கூர்மையான ஆயுதங்களாக
திராவிட இயக்கத்தாரால் முன் எடுத்துச் செல்லப்பட்டன.

அக்காலக் கட்டத்தில் தமிழன் தொடுத்த முதல் போர் என்றழைக்கப்படும்
இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் இந்த ஆயுதங்கள் மிகவும்
சக்தி வாய்ந்தவைகளாக இந்திய அரசுக்கு ஒரு நம்ப முடியாத
கலகக்குரலாக இருந்தது. மொழி என்ற கருத்துருவாக்கத்தில்
தமிழன் இந்தளவுக்கு களத்தில் இறங்கிப் போரிடுவான் என்பது
நடுவண் அரசு அறிந்துக் கொண்ட முதல் பாடமாக இருந்தது.

இந்தி எதிர்ப்பு போரில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் தமிழர் படை
திருச்சி தாண்டி, செங்கல்பட்டு தாண்டி 42 நாட்கள், 577 மைல்கள் நடந்து
சென்னை வந்தடைந்தது. காந்தியடிகளின் தண்டியாத்திரையை விடவும்,
ராஜாஜியின் வேதாரண்ய உப்பளப்படையை விடவும் 4 மடங்குப் பெரிய
படையை தன் மொழிப் போர் வரலாற்றில் நடத்திச் சென்றவன் தமிழன்.

அன்றைக்கும் தமிழன் தொடுத்த முதல் போரை அடக்கவந்த
இந்திய இராணுவம் தன் மொழிக்காக துப்பாக்கி குண்டுகளை
எதிர்நோக்கிய ஒரு சமூகத்தைக் கண்டு அஞ்சி ஓடியது.
அப்போதெல்லாம் தமிழ்நாடு, தமிழ் மொழி தமிழ் மண் என்ற
உணர்ச்சிப் பொங்கி இருந்தக் காலம். அந்த உணர்ச்சியை அப்படியே
திராவிட அரசியல் தனக்கானதாக கபளீகரம் செய்துவிட்டதோ
என்ற கேள்வி நம் முன் எழுகிறது.

.

இன்று ஆட்சியில் இருக்கும் அதிமுக, நேற்றுவரை ஆட்சியில்
இருந்த திமுக, நாளைய ஆட்சிக்கனவில் இருக்கும் மதிமுக,
இந்த திராவிடச் சாரலில் அதன் ஈரமே அறியாமல் தன்னைத் தேசிய திமுக
என்றழைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தின் திமுக...
இன்னும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம்,
ஆனைமுத்து, சுப.வீ, கொளத்தூர் மணி என்று ஆள் ஆளுக்கு
தனித்தனியாக நடத்திக் கொண்டிருக்கும் திராவிட பட்டறைகள்..
அலுவலகங்கள்... இத்தியாதி சகலமானவர்களிடமும்
காலம் வைக்கும் ஒரே ஒரு கேள்வி இதுதான்.
இன்றைய சூழலில்,
உங்கள் அடையாளங்களில் இருக்கும் "திராவிடம்" என்பது என்ன?

வரலாற்று ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும்
நில ரீதியாகவும் எதெல்லாம் திராவிடம் என்று அழைக்கப்பட்டதோ
அதற்கும் நீங்கள் காட்டும் திராவிடத்திற்குமான வேறுபாடுகள் என்ன?

திராவிடம் என்ற சொல் அதற்கான பொருள் வீச்சு, வரலாற்றுப் பின்னணி
எல்லாம் உச்சக்கட்டத்தில் பேசப்பட்ட காலத்திலும் சரி, திராவிடம் என்ற
சொல் பொதுமக்களிடமும் அரசியல் சமூக தளத்திலும் அறிமுகமான
காலக்கட்டத்திலும் கூட இந்தச் சொல் மீதான புரிதல்கள் குறித்த
ஐயப்பாடுகள் எழுந்தன. ஆனால் பெரும்பான்மையானோர் கருத்து
என்ற பெயரிலும் இயக்கத்தில் இருந்துக்கொண்டே இயக்கத்தை விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன் கள்ளமவுனம் சாதித்து
அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்வதும் நிகழ்ந்துதானிருக்கின்றன.

சேலம் நீதிக்கட்சி மாநாடு. தலைவர் தந்தை பெரியார். மாநாட்டைத் திறந்து வைத்து பேசியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். அந்த மாநாட்டில் தான் பெரும்பான்மையோர் கருத்துக்கிணங்க நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.
ஆனால் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிய கி.ஆ.பெ. தன் பேச்சில் தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தை தமிழ்நாட்டு நீதிக்கட்சி என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டும் என்ற தன் கருத்தைத் தெரிவிக்கிறார். கி.ஆ.பெ. வரலாறு குறித்த நூலில் மா.சு. சம்பந்தன் அவர்கள் இன்னொரு கருத்தையும் பதிவு செய்துள்ளார். (திருச்சி விசுவநாதம் - வரலாறு, பாரி நிலையம் வெளியீடு)
அதில் " கி.ஆ.பெ . திராவிட இனம் என்பதிலோ திராவிட நாடு என்பதிலோ
கருத்து வேற்றுமை கொண்டவர் அல்லர். திட்டமிட்டு மலையாளம், கன்னடம்,
தெலுங்கு முதலிய இடங்களில் பிரசாரம் செய்து திராவிட நாடுகளின் கூட்டாச்சிக்கு ஆதரவு தேடுவது தான் முறை, தமிழ்நாட்டில் மட்டும் திராவிடநாடு பேசுவது சரியல்ல"
என்ற கருத்தைக் கொண்டிருந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கருத்து முன்வைக்கப்படும் போதெல்லாம் திராவிடம் என்பது
இன அடையாளம், அந்த அடையாளத்தை விடுத்து தமிழன் என்று
மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டால் தமிழ்மொழி பேசுபவர்கள்
என்ற காரணத்தாலேயே அவாள்கள் இவாள்கள் எல்லாம் வந்துவிடுவார்கள்!
என்ற காரணங்களை எல்லாம் அதிமுக, அதிமுக அரசு, அதிமுக தலைமை
என்ற நிகழ்கால நிஜங்களின் ஊடாக பேசுவது எத்துணைப் போலித்தனமாக
இருக்கிறது !

திராவிடன் என்ற அடையாளமும் ராகுல் திராவிட் என்ற கிரிக்கெட் வீரரின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் திராவிட் என்பதும் திராவிட இன அடையாளத்தின் இன்னொரு பக்கத்தை ஒரு சில ஆய்வாளர்கள் நடுவில் எழுப்பியிருந்தாலும் ஊடகமும் தமிழக அரசியலும் இம்மாதிரியான கருத்துகளை இருட்டடிப்பு செய்கின்றன,


தமிழன் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த
என்ன தயக்கம்? தமிழன் என்ற அடையாளம் யாருக்கு, ஏன்
ஒவ்வாமையாக இருக்கிறது? எவருக்கெல்லாம் இன்றைக்கு திராவிட
அடையாளம் பாதுகாப்பாய் தமிழ் மண்ணில் வெற்றிகரமான அரசியல்
கதாகாலட்சேபம் நடத்த உதவியாக இருக்கிறது?
காவிரி நதிநீர் பங்கீட்டில் கன்னடம் பேசும் திராவிடன் தமிழனின் எதிரியாக இருக்கிறான்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மலையாளம் பேசும் திராவிடன்
தமிழனின் எதிரியாக இருக்கிறான். கன்னடத்திலோ மலையாளத்திலோ
திராவிடன் இல்லவே இல்லை. கன்னட கேரள ஏன் ஆந்திராவிலும் கூட
திராவிட அரசியல் இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் திராவிட
அரசியல்.. திராவிட அரசியல் தொடர்கிறது. திராவிடம், திராவிடன் என்ற
அடையாளங்கள் தமிழ்த்தேசியம் என்ற மையப்புள்ளியை விட்டு தமிழனைத்
திசைமாற்றி இருக்கிறதா? தடம் புரள வைத்திருக்கிறதா?

முல்லைப் பெரியாறு மவுனமாக இந்தக் கேள்விகளையும் சேர்த்தே நம் முன்
வைத்திருக்கிறது. வழக்கம் போல நாம் கள்ளமவுனம் சாதித்து அல்லது
இருட்டடிப்பு செய்து அரசியல் தலைவர்களின் சுய லாபங்களுக்காக தேர்தல் வெற்றிக்காக
இலவசங்களுக்காக நம் வாழ்வாதரங்களை இழந்துவிட்டு ...
வரப்போகிற கூடன் குளம் அபாயங்களுக்கு நடுவில் நம் அடுத்த
தலைமுறைக்கு, நம் குழந்தைகளுக்கு எந்த தமிழ் நிலத்தைக்
கொடுக்கப் போகிறோம்?10 comments:

 1. 2011/12/27 Elangovan N
  >> >
  >> >> //
  >> >> வழக்கம் போல நாம் கள்ளமவுனம் சாதித்து அல்லது
  >> >> இருட்டடிப்பு செய்து அரசியல் தலைவர்களின் சுய லாபங்களுக்காக தேர்தல்
  >> >> வெற்றிக்காக
  >> >> இலவசங்களுக்காக நம் வாழ்வாதரங்களை இழந்துவிட்டு ...
  >> >> வரப்போகிற கூடன் குளம் அபாயங்களுக்கு நடுவில் நம் அடுத்த
  >> >> தலைமுறைக்கு, நம் குழந்தைகளுக்கு எந்த தமிழ் நிலத்தைக்
  >> >> கொடுக்கப் போகிறோம்?
  >> >> //
  >> >>
  >> >> அன்பின் கவிஞர் புதியமாதவி,
  >> >> அருமையான கட்டுரை. ம்னமார்ந்த பாராட்டுகள்.
  >> >>
  >> >> தாங்கள் கேட்டிருக்கும் வினாக்களில் எந்த ஒன்றிற்கும் திராவிடத்திடம்
  >> >> விடை கிடைக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.
  >> >>
  >> >> காலம் மாறும். தடம் புரண்ட தமிழர்களை அது மாற்றட்டும்.
  >> >>
  >> >> அன்புடன்
  >> >> நாக.இளங்கோவன்

  ReplyDelete
 2. ௨௭-௧௨-௧௧ அன்று, Thevan எழுதியது:
  >> > திருமதி புதியமாதவி அவர்களே,
  >> >
  >> > திராவிடம் என்பது சாயம் வெளுத்துப்போன ஒன்று அது இனிமேலும் எடுபடாது. தமிழ்
  >> > தேசியம் வெல்லும்.

  ReplyDelete
 3. 2011/12/28 Govindasamy Thirunavukkarasu
  >
  >> அன்புமிகு தேவன் அவர்களுக்கு
  >> திராவிடம் அவ்வளவு எளிமையான சக்தி அலல்.
  >> ஆரியம்,சாதி,மனு நீதி,தமிழ், பார்ப்பனன் என்று பலவாறாக பேசிக்கொண்டு
  >> தமிழர்களின் முதுகில் ஏறியுஅ இவர்கள் மத்திய அரசுக்கு சேவைபுரிந்து
  >> பன்னாட்டு மூலதனத்தை தமிழகத்தில் பரவலாக்கவும் ,அதில் தங்களுக்கு
  >> கிடைக்கும் பெரும்பொருள் ஒன்றே பெரிதாகக்கொண்டவர்கள் இவர்கள்.
  >> மக்கள் மீது இவர்களுக்கு பெரிய பிடிப்பு உளளது.
  >> அன்புடன்
  >> அரசு

  ReplyDelete
 4. ௨௮-௧௨-௧௧ அன்று, Thevan எழுதியது:

  > அன்புக்குரிய திரு அரசு அவர்களே,
  >
  > திராவிடம் என்பது எளிமையான சக்தி இல்லைதான். ஆனால் மக்கள் ஒன்றிணையும் எந்த
  > சக்தியாலும் முன்னே நிற்க இயலாது.
  >

  ReplyDelete
 5. 2011/12/28 Govindasamy Thirunavukkarasu

  உண்மைதான்.
  முலைபெரியாறு போராட்டகாட்சி தொலைகாட்சியில் ஒலிபரப்பப் பட்டது.
  மிகப்பெரிய அளவில் தட்டிகளை வைத்துக்கொண்டு காவலர்கள் சாலையை மறிக்கிறார்கள்.
  ஊர்மக்கள் எங்கிருந்து கொண்டுவந்தார்களோ ஒரு பசுக்கூட்டத்தை அந்த
  காவலர்களை நோக்கி விரட்டுகிறார்கள்.தடுப்பு முறிகிறது.ஒரு பெரிய
  கூட்டமாக மக்கள் தடுப்பை உடைத்து முன் செல்கிரார்கள்.

  எப்படி இந்த மக்கள் ஒரு பெருங்கடல் அலையென திரண்டார்கள் என்ற்தான்
  மகிழ்வோடு எண்ணிப்பார்க்க முடிகிறது.கொடிகள் எதுவும் அங்கே
  தாங்கப்படவில்லை.

  தங்களுடைய வலுவான நம்பிக்கைகள் எனது நம்பிக்கையை மேலும்வலுப்படுத்துகின்றது.
  அன்புடன்
  அரசு

  ReplyDelete
 6. 2011/12/28 Thevan

  இந்திய - திராவிட அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழிந்த பின்னர் இது போன்ற போராட்டங்கள் அதிகரிக்கும்.

  ReplyDelete
 7. 2011/12/28 Saravana Rajendran

  திராவிட கழகம் என்று துவங்கியவர்கள் ஏதோ ஒரு நல்ல நினைப்பில் தான் துவங்கி இருக்கிறார்கள் ஆனால் அதன் பின் நின்ற சில அப்போதே இதை தன் வசமாக்கி தங்களது கூட்டல் கழித்தலுக்காக எப்படி மாற்றலாம் என்று உத்தேசித்து மக்களை நீண்ட வருடமாக இருட்டடித்ததன் விளைவு இன்று நாம் காண்கிறோம், திராவிடம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இன்று வட இந்திய ஆர்ய முடிச்சின் ஆரம்பமாகவே இருக்கின்றனர். அது கலைஞராக இருந்தாலும் சரி தற்போதைய முதல்வராக இருந்தாலும் சரி கட்சிக்கு எம் பி பதிவி யார்தந்தாலும் அவர்கள் பின் செல்ல தயாராக இருக்கும் மருத்துவரானலும் சரி, இதில் மருத்துவ திராவிட என்ற மாயையை தாண்டி தமிழ் தேசியம் பேச ஆரம்பிக்கிறார். அதாவது அன்று தமிழ் தேசியம் திராவிடமாக மாறியதோ அதே போல் ஆனால் இவர்களது கொள்கைகள் எல்லாம் சுயநலமே,
  கடந்த 60 வருடங்களாக திராவிடம் என்ற பெயரில் கருப்பு இருளை தமிழர்கள் மேல் புகுத்தி விட்டார்களோ என்றும் நினைக்க தோன்றுகிறது. மொழிப்போர் என்ற ஒன்றை பயன்படுத்தி இடைவெளி ஒன்றை உருவாக்கினார்கள். அது இன்றளவும் வெளிப்படு கிறது, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத்தை இரவு பகலாக தனியாக ரிப்போட்டர் குழு அமைத்து காண்பிக்கும் செய்தி சேனல்கள் கூடங்குளத்தையும், முல்லைபெரியார் போராட்டத்தையும், பெட்டி செய்தியாக காண்பிக்கின்றன.

  ReplyDelete
 8. There you go my dear friend Saravanan. This is exactly the point. You are 100% right.
  Dravidian politics is the black/dark period like Kalapirars dark years.


  Regards
  Naga Elangovan
  p.s: pardon my language pl.

  ReplyDelete
 9. 2011/12/28 Elangovan N

  // கடந்த 60 வருடங்களாக திராவிடம் என்ற பெயரில் கருப்பு இருளை தமிழர்கள் மேல் புகுத்தி விட்டார்களோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

  ReplyDelete
 10. திரு நாக. இளங்கோவன் அவர்களே,


  திராவிடத்தின் திருட்டுத்தனத்தை தமிழர்கள் புரிந்துகொண்டதே தமிழகத்திற்கு விடுதலை கிடைத்ததற்கு சமம்.

  ReplyDelete