Wednesday, August 24, 2011

அடா அன்னா..! இவுங்களுமா..?






அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் முதல்
இந்த ஊரு சூப்பர் ஸ்டார் வரை குரல் கொடுத்திருக்கிறார்கள்.
யார் தான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?
கொஞ்சம் ஒதுங்கி இருந்தவர்கள் கூட "நாமும் ஆதரவு
தெரிவிக்கவிட்டால்... லஞ்சம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுவிடுவோமே!'
என்று பயந்து தூக்க கலக்கம் தெளியாமல் அப்படியே ஓடி வந்து உட்கார்ந்து
இருக்கிறார்கள்.
அவர்களின் திரைப்பட உலகத்தில் புழங்கும் கருப்புபணம் எவ்வளவு?
அவர்கள் வாங்கும் சம்பளத்தில் வெள்ளையும் கருப்பும் எவ்வளவு?
வாங்குகிற வெள்ளைப்பணத்திற்கு ஒழுங்காக வருமான வரி
கட்டி இருப்பவர்கள் எத்தனைப் பேர்?
இதுவரை ஏதோ தெரியாத்தனமா வாங்கிட்டேன்!
அன்னா ஹசாரே மேல் சத்தியமா இனிமே கருப்பு பணம் வாங்கப்போவதே
இல்லை! என்று அவர்களில் எத்தனைப் பேர் சொல்லுவார்கள்?

டாட்டா, மிட்டல், அம்பானி சகோதரர்கள் அனைவரும்
நீரா ராடியாக்கள் புடைசூழ ராமலீலா மைதானத்திற்கு வந்து
அன்னா ஹசாரேவின் உண்ணாநிலை மேடையில் உட்கார்ந்தாலும்
ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!

சிறையில் இருக்கும் எனதருமை சகோதரி கனிமொழியும், சகோதரர் ராஜாவும் கூட
இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஒரு நாளாவது அடையாள
உண்ணாவிரதம் இருந்தால் நல்லது என்பது கருத்து.
யாராவது இந்தக் கருத்தை அவர்கள் காதில் போடுங்கள்!



1 comment:

  1. இலஞ்சம் மற்றும் ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

    இலஞ்சம் என்பது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி மேல்மட்டம் வரை பொதுமக்களிடம் பெறும் கையூட்டு. எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறைப்படி ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானால்கூட கையூட்டு வெட்ட வேண்டும். இல்லை என்றால் காரியம் நடக்காது. அடுத்து அதே போன்றதொரு சான்றிதழை விதிமுறைகளை மீறி பெறவேண்டுமானாலும் கையூட்டு வெட்டியாக வேண்டும். என்ன இதற்கு தொகை கூடுதலாக இருக்கும்.

    ஊழல் என்பது ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒருசாராருக்கு சலுகை காட்டுவதற்காகவோ அல்லது திட்டத்தை அறைகுறையாக நிவேற்றியோ அல்லது முழுமையாக நிறைவேற்றாமலேயோ ஒதுக்கப்பட்ட நிதியை ஒரு சிலர் கபளீகரம் செய்து கொள்வது.

    சுருக்கமாகச் சொன்னால் இலஞ்சம் என்பது பெரும்பாலும் சாமான்யர்கள் சம்பந்தப்பட்டது. ஊழல் என்பது மேன்மக்கள் சம்பந்தப்பட்டது. ஆக இரண்டிலும் மக்கள் பணம்தான் கொள்ளை போகிறது. இலஞ்சம் நேரடியாக நாமே கொடுப்பதால் கோபம் கொப்பளிக்கிறது. ஊழல் மக்கள் வரிப்பணமாக இருந்தாலும் அரசாங்கப் பணமாக இருப்பதால் மக்களுக்கு கோபம் இருந்தாலும் அது அவ்வளவாக கொள்பளிப்பதில்லை.

    லோக்பால் கொண்டுவந்தால் இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை இதுவரை ஒருவரும் விளக்கவில்லை.

    மொத்தமாக ஒழியாது என்றாலும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாக இதை ஏன் பார்க்கக்கூடாது என சிலர் வாதிடுகிறார்கள்.

    ”நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிற வள்ளுவனின் வாக்கை எல்லாவற்றிருக்கும் பொருத்த வேண்டும் என்று சொல்கிகிறவர்கள் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அன்னா அசாரே செய்வது ஒரு ஸ்டண்ட் என்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் தற்போது புரியத் தொடங்கியுள்ளது.

    ReplyDelete