Saturday, September 3, 2011

இந்தியாவை உண்மையில் ஆட்சி செய்வது யார்?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்களாட்சியின் மகத்துவத்தை இந்த மண்ணில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் பாரத பூமி. மக்கள் தீர்ப்பே இங்கே மகேசன் தீர்ப்பு. இப்படியாக இந்திய மக்களாட்சியை பற்றி ஊதித் தள்ளி, அதையே உண்மை என்ற பிம்பத்தைக் கட்டமைத்ததில் நம் ஊடகங்களின் பங்கு பெரும்பங்கு. வாழ்க நம் ஊடகங்கள்!இதை எல்லாம் அப்படியே நம்பிக்கொண்டிருப்பதால்தான் நடுத்தர வர்க்கம் இங்கே அன்னா ஹசராவேயின் ஜன்லோக்பால் மசோதா நிறைவேறிவிட்டால், அப்படியே பாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாராளுமன்றத்தைவிட வலிமையானது கார்ப்பரேட் ராஜ்யம். பண முதலைகளின் பன்னாட்டு கருப்புப்பணப் பேரரசு. இந்தக் கார்ப்பரேட் ராஜ்யம் பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்திலேயே இலைவிட்டது என்று சொல்லலாம். உண்மையில் இதன் வளர்ச்சி இன்னொரு ராஜ்யமாகி இந்திய அரசுக்கே ஆப்பு வைக்கும் என்கிற கலக்கம் நேருவுக்கு இருந்தது என்றே சொல்லலாம். அதனால்தான் நேரு இங்கிலாந்தின் பொருளாதர நிபுணர் நிக்கலோஸ் கால்டரின் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை ஏற்படுத்தினார். பெரும்பணக்காரர்களின் ஆண்டு உயர் வருமானத்தில் 75 விழுக்காடு நேரடியாக வருமானவரியாக வசூலிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஏற்றது. 1956-ஆம் ஆண்டில் செல்வவரி, நன்கொடை வரி, இறப்பு வரி, செலவு வரி, மூலதன இலாப வரி (Wealth tax, gift tax, expenditure tax, capital gains tax) என்ற துணைவரிகளை விதித்து வரி ஏய்ப்பைத் தடுக்கலாம் என்று கால்டர் குழு வலியுறுத்தியது.


ஆனால் காலப்போக்கில் இந்த வரிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல் என்று இந்தியாவின் பாதை திரும்பிய காலக்கட்டத்தில் நடுவண் அரசு பல்வேறு வரிச்சலுகைகளை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது. மத்திய அரசின் தணிக்கை அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் மட்டும் நிறுவன வரிக்கு வழங்கபட்ட சலுகையால் அரசிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு ரூபாய் 35,000 கோடி. 1990 முதல் 2010 வரை மத்திய அரசு வழங்கியுள்ள வரிச்சலுகை 100 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மேற்கண்ட அபரிதமான வரிச்சலுகைகளைப் பெற்றவர்களுக்கும் அதாவது தனியார்மய ஜாம்பவான்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே எந்த சக்திகளாலும் உடைக்க முடியாத பிரிக்க முடியாத ஓர் உறவு இருக்கிறது. அதாவது கள்ளத்தனமான உறவு வலுவாக இருக்கிறது. இந்த secretive society தான் இந்தியாவை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆண்டு கொண்டிருக்கிறது. அரசின் கோட்பாடுகளை, விதிகளைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவர்களாக பெருமுதலாளியக் குழுமங்கள் இருக்கின்றன. எந்தக் கட்சியும் இங்கே விதிவிலக்கல்ல! விகிதாச்சாரங்கள் மட்டுமே வேறுபடலாம்.

திரைப்படம், ஊடகம், மத நிறுவனங்கள், இங்கெல்லாம் இவர்களின் பெரும்பணம் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. தேன் வழியும்போது புறங்கையை நக்குவது மாதிரிதான்
இந்தக் காரியங்களில் அரசு அதிகாரிகளின் நிலை. வெளிப்படையாகத் தெரிவதெல்லாம் இந்த புறங்கைகளை மட்டும்தான். இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கம் இன்றைக்கு பல ஆயிரங்களில் மாத ஊதியம் பெறுகின்ற பெரும் பேற்றை அடைந்திருப்பதும் இந்த தேனடையிலிருந்து சொட்டும் சிறுதுளி தேன்தான். இந்தியாவை இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கும் இந்த secretive society யின் ஆணிவேரைப் பிடித்து அசைக்கின்ற நோக்கமும் வலிமையும் ஏற்படாதவரை போராட்டங்களும் ஊர்வலங்களும் ஊடகங்களுக்கு மட்டுமே பெருந்தீனியாக இருக்க முடியும்.

3 comments:

  1. உங்கள் வலைப்பதிவை விகடன் வரவேற்பறையில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு முதலில் வாழ்த்துக்கள். கடந்த வாரம் விகடன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete