Saturday, August 7, 2010

லேட்டஸ்ட் கணபதி புராணக்கதை


கண்பதி பப்பா மோரியா
மோரியாரே பப்பா மோரியாரே
கண்பதி பப்பா மோரியா..
புடுச்சா வருஷி லவுக்கரியா
கண்பதி பப்பா மோரியா..

எங்கள் ஊரு கணபதி திருவிழாவுக்கும் ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது.
கணபதி விழா என்பது எங்கள் ஊரு மக்களுக்கு பக்திக்கு அப்பாற்பட்ட
கொண்டாட்டங்களின் உற்சவம்.
கணபதி திருவுருவச்சிலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தொன்மங்களின் அடையாளமாய், புராணக்கதைகளின் ஊடாகப்
பயணித்து கணபதியின் வாகனமான எலி கணினியின் மவுசாகி
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நடுவில் எங்கள் கணபதி
இப்போதெல்லாம் காட்சித்தர ஆரம்பித்திருக்கிறார்.
கணபதி சிலைகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணமும்
கற்பனையும் ஒவ்வொரு வருடமும் கண்கொள்ளாக் காட்சியாக...
விரிகிறது.

இந்தக் கலைஞர்கள் உருவாக்கிய கணபதி சிலைகள் இறுதியில்
தண்ணீரில் கரைக்கப்படுகின்றன.
அவர்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய சிலை, கற்பனையை
விரித்து அவர்கள் படைத்த வண்ணங்களின் கலவை...
10 நாட்களுக்குப் பின் ... தண்ணீருடன் கலந்துவிடுகிறது.
இந்தக் காட்சி அவர்களுக்கு என்ன மாதிரியான மனநிலையைக்
கொடுக்கும்?
கணபதி சிலையைக் கரைக்கும் இடத்தில் தான் உருவாக்கிய சிலை
தண்ணீரில் கரைந்து போவதைப் பார்த்துவிட்டு வந்து கண்ணீருடன்
அந்தக் கலைஞன் படுத்திருக்கிறான்
...
வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை!

*
சொர்க்கலோகம் அவன் கனவில் காட்சியாக...
கலைஞர்கள் சோமபானம் அதிகம் பருகி.. உண்மையை
உலறிக்கொண்டிருக்கிறார்கள்..
வருகிறார் நாரதர்..
பேச்சு வார்த்தை வளர்கிறது..
உங்கள் கடவுளுக்கே மண்ணுலகில் வாழ்க்கைக் கொடுத்தது
எங்கள் கைகள்.
இந்தக் கலைஞர்கள் இல்லை என்றால்...
சிலைகள் ஏது? சிற்பங்கள் ஏது? ஓவியங்கள் ஏது?
இதெல்லாம் இல்லாமல் கோவில்கள் ஏது?
என்று கேட்கிறார்கள்.
விடுவாரா... நாரதர்.. அப்படியே பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் போய்
கலைஞர்கள் உலறியதை எல்லாம் தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம்
அதிகம் கலந்து காதில் போட்டு வைக்கிறார்.

விளைவு: கலைஞர்கள் மீண்டும் மண்ணுலகில் பிறக்கிறார்கள்!
அவர்கள் கைகள் படைக்கும் கலைப்படைப்புகள்
11 நாட்களுக்குள் தண்ணீரில் கரைக்கப்பட்டுவிடும் என்பதுதான் சாபம்!
கடவுள்களின் கூட்டணி சேர்ந்து ,
"உங்கள் கண்முன்னாலேயே உங்கள் படைப்புகள் அழியும், கரைந்துவிடும்.
ஆனால் நாங்கள் அழிவதில்லை.. கரைவதில்லை" என்று பாடம்
புகட்ட விரும்பினார்கள்!
இதில் ஒரு சிக்கல் வந்தது. யாருக்கு சிலை வடிக்கலாம் என்று?
வருடா வருடம் தண்ணீரில் கரைந்துவிட்டால் நம் கதி என்னவாகும்?
என்று மற்ற கடவுளர்கள் எல்லாம் தங்களுக்குச் சிலைகள் வேண்டாம்
என்று ஒதுங்கி விடுகிறார்கள். கண்பதி மட்டும் இந்த ரிஸ்க் எடுக்கிறார்.
அதில் ஜெயித்துவிடுகிறார். கணபதி இந்த ரிஸ்க் எடுக்கும் போது
'உன்னால் முடியும் கண்பதி... ஒவ்வொரு வருடமும் உன்னை
இந்த மண் வழியனுப்பினாலும் அடுத்த வருடமும் நீ வரவேண்டும்
என்று சொல்லித்தான் வழியனுப்புவார்கள் என்று ஊக்கம் கொடுத்த
கண்பதியின் தாயார் பார்வதிதேவிக்கும் தசராவில் இதே போல
தண்ணீரில் கரைக்கும் சடங்கு அதனால் தான் நடக்கிறது.
இதுதான் கண்பதி சிலையைக் கடலில்/நதியில்/ குளத்தில்
கரைக்கும் கதை..
*

கண்விழிக்கிறான் அந்தக் கலைஞன்.
10 நாட்களும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடிய
மக்கள் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கண்பதி சிலை நல்ல விற்பனை!
வருகிற ஆண்டில் என்ன மாதிரி புது ஐடியாவில் கணபதி சிலையை
உருவாக்கலாம் என்று யோசித்துக் கொண்டே
அவன் கால்கள் வீட்டை நோக்கி நடக்கின்றன.

பி.கு: இந்தக் கதை எந்தப் புராணத்தில் ? என்று கேட்காதீர்கள்.
இனிமேல்தான் எந்தப் புராணத்தில் சேர்க்கலாம் என்பதைப்
பற்றி நான் யோசிக்க வேண்டும்.

3 comments:

  1. கணபதி கடை இரண்டாம் பாகமா?
    இந்த சிவனின் வாழ்துக்கள்

    ReplyDelete
  2. கணபதி க தை இரண்டாம் பாகமா?
    இந்த சிவனின் வாழ்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான கதை.. நல்ல கற்பனை.. நிலைமைக்கு அப்படியே ஒத்து வருகிறது..

    ReplyDelete