Thursday, April 24, 2008

பாரதிதாசன் - பாரதி சந்திப்பு



பாரதியைத் தமது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கர் மணவிழாவில் சந்தித்தாக
பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு 1908லேயே நேர்ந்துவிட்டதாக பாரதிதாசன் ஆர்வலர்கள்
சொல்கிறார்கள். மன்னர்மன்னன், ச்.சு.இளங்கோ போன்றோர் இக்கருத்தை ஏற்கின்றனர்..
பாரதி-பாரதிதாசன் உறவைச் சுட்டும் 'பாரதியோடு பத்தாண்டுகள்' என்ற தொடர் பாரதியின்
புதுவை வாழ்க்கையினையே (1908-1918) கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது..
இரா.இளவரசு பிற சுழ்நிலைச் செய்திகளைக் கொண்டு 1910ல் இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்
எனத் துணிந்துள்ளார்.
இப்பெரும் கவிஞர்களின் சந்திப்பைப் பற்றி பாரதி ஆய்வாளர்கள் அதிகம் பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை. பாரதி ரமணரைச் சந்தித்தாரா இல்லையா என்பது போன்ற முதன்மையற்ற
செய்திகளே அவர்களை ஆட்கொண்டுள்ளன.

பாரதி பாரதிதாசனைச் சந்தித்ததை சுதேசமித்ரனில் தராசு என்ற தலைப்பில் எழுதிய தொடர்
கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தராசு கட்டுரை: பாரதி
-----------------------

"எழுக! நீ புலவன்! "

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார். கைக்கோள ஜாதி. ஒட்டக்கூத்தப் புலவர் கூட
அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலிஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார்.
ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது."இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும்
வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே,எ ன்ன விஷயம் கேட்க
வந்தீர்?" என்று தராசு கேட்டது.

"எனக்கு கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை.
அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன்." என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின
பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம்.
அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

"மாதிரி சொல்லும்" என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

" காளை யொருவன் கவிச்சுவையைக் -கரை
காண நினைத்த முழு நினைப்பில் -அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள்_ இவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான்.
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா!-தம்பி
ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம்- எங்கள்
தாயின் கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம்-அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை, இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்"

தராசு" சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்கதியும்
அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்".

இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார்.

கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸமாஷணைக்கு நடுவிலே கொஞ்சம்
இடையூறுண்டாயிற்று" என்றார்.

தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை, நெசவிலே நாட்டு நெசவு
மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல், பணம் நல்லது,
ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு
நெய்ய வேண்டும் அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போலே
நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது.மஸ்லில் நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை,
தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேல் நல்ல
வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்".

அப்போது புலவர் தராசை நோக்கி, "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு : "எழுக ! நீ புலவன் !" என்றது.

-------------

பாரதியைப் பற்றிப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் பொழிவுகளையும் இயற்றிய
பாரதிதாசன் தராசுவில் இடம் பெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்பது
புலப்படவில்லை.
பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதற்காகப் பாரதிதாசன் எழுதிய திரைக்கதையிலும்
நாடகத் தன்மையுடன் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற இந்நிகழ்ச்சி இடம் பெறாதது ஏன் என்பதும்
தெரியவில்லை. பாரதிதாசன் ஒரு பெரும் கவிஞராக மலரவிருக்கிறார் என்பதைப் பாரதி
முன்னுணர்ந்ததாகக் கொள்ள தராசு இடம் தரவில்லை.

(நன்றி : காலச்சுவடு டிசம்பர் 2006 பாரதி 125 ஆ. இர.வேங்கடாசலபதி எழுதிய
பாரதியின் தராசு அல்லது பாரதி- பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது?
கட்டுரையிலிருந்து )

No comments:

Post a Comment