Wednesday, February 13, 2019

நொண்டிச்சிந்து காதலன்





உன்னைப் பலர் காதலித்திருக்கலாம்
நீயும் சிலரைக் காதலித்தாய்.
உன் கண்ணம்மாவுக்காக
உருகி உருகி கவிதைகள் எழுதினாய்
பலரைப் பைத்தியமாக்கினாய்
தாசனுமாக்கினாய்.
ஆனாலும் என்னை மட்டும் தான்
எவரும் அறியாமல்  காதலித்தாய்..
உன்  காதலின்  வாசனையை
அந்தியில் மலரும் பூக்களிடம்
ரகசியமாக மறைத்து வைத்திருந்தாய்
உன் நடை உடை மீசை முண்டாசு..
அட ஏதோ ஒன்று
இப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறது.
என்னைக் காதலித்தப் பலரும்
நான் காதலித்த சிலரும்
மழைக்காலத்தின் ஈரமாய்
வருகிறார்கள் .. நனைகிறார்கள்
போய்விடுகிறார்கள்..
நீ மட்டும் ஏன்
வெயிலைப் போல  நிரந்தரமாய்
என் காதல் பூமியின்
நிழலாகத் தொடர்கிறாய்?
பாடிக் கலந்திட துடிக்கிறாய்
தவம் பண்ணியது இல்லையடி
என்று அழைக்கிறாய்
என் செய்வேன்..?
எமகாதகா.. என் காதலா..
உன் முண்டாசு அவிழட்டும்.
என் முந்தாணியாய் விரியட்டும்..
வா..
காணி  நிலம் , முழு நிலவு
பத்தினிப் பெண் கேட்ட உன் காதலை
என்னைச் சந்திக்க வரும்போது
எடுத்து வராதே.
மலைத்தேனும் திணைமாவும்
உனக்காக காத்திருக்கிறது.
இதுவரை நீ அறியாத சுவை
உன் கவிதைக்குள் அடங்காத அருவி
என் காதல் வனம்..
வாபாரதி.. வா
நொண்டி சிந்து பாடுவோம். வா.

Monday, February 11, 2019

கறுப்பி நான்..

நான் கறுப்பு பெண்
இந்தப் ‘பெண்” - நான் பெண் என்று சொல்வதிலிருந்து
வித்தியாசமானது.
நான் “கறுப்பு” என்று சொல்வதிலிருந்தும்
வித்தியாசமானது.
‘கறுப்பி’ என்று சொன்னால்
என் சருமத்தின் நிறத்தைச் சொல்வதல்ல அது.
நான் கறுப்பி.
கறுப்பு நான் என்பதால்
அணுகுவதற்கு கடினமானவள் என்பதல்ல.
கறுப்பு நான் என்பதால்
காதுவளையத்தைப் பிடித்து திருக தயாராக வேண்டும் என்பதல்ல.
நான் கறுப்பு என்பதால்
கற்பித்தல் கடினம் என்பதல்ல.
நான் கறுப்பு என்றால் என்ன பொருள்
தெரியுமா?
எல்லாவகையிலும் தனித்துவமானவள்
என்னால் முடியாத து எதுவுமில்லை
நீங்கள் அறியாத தையும் அறிந்து கொள்ளும்
தகுதிப்படைத்தவள்.
நான் தனித்துவமானவள்.
நான் கறுப்பு பெண்.
‘கறுப்பு” என்ற சொல்லை அழுத்தமாகச் சொல்லும்போது
அது வெறும் இனக்குறியீடு மட்டுமல்ல.
அது நான் வாழும் எங்கள் வாழ்க்கையின் அர்த்தம்.
எதைச் செய்து பழக வேண்டும்
எதைச் செய்யக்கூடாது
என்ற எதிர்ப்பார்ப்புகளில்
கறுப்பு என்றால் என்னவென்று
இந்த உலகத்திற்கு பாடம் புகட்ட
நாங்கள் தயாராகிறோம்.
எப்படி என்றால்…
சில கடைவீதிகளில் நீங்கள்
ஓரக்கண்ணால் பார்க்கும் பார்வை,
மின் தூக்கியில் அவளைக் கண்டவுடன்
உங்கள் பணப்பையை இறுகப்பிடித்துக் கொள்ளும் தருணம்..
இலக்கணப்பிழையின்றி பேசினால்
‘வெள்ளையர்களைப் போல நடிப்பதாக’
உங்கள் விமர்சனம்.
மிடுக்கான உடையில் அறைக்குள் நுழைந்தவுடன்
ஆச்சரியமாகப் பார்க்கும் உங்கள் முகங்கள்
மூன்றாம் வகுப்பு சரித்திரப்பாட த்தில்
‘அடிமைகள்’ அத்தியாயம் வந்தவுடன்
திரும்பிப் பார்க்கும் உங்கள் பார்வை…
கறுப்பு பெண் நான்.
நான் கறுப்பி என்பதால்
உங்கள் தகுதிப்படி நிலையில் என்னைப் பொருத்திக்கொள்ள
கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.
பரந்த உலகத்தில் எனக்கான இட த்தைக்
கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.
இனிப்பு க் குச்சி மீது பரவிய
ஒரே ஒரு கறுப்பு சாக்லெட்டாய் நான்.
இந்தக் கறுப்பு இனத்தின் ஒரே அடையாளம்
நான் மட்டுமா?
புரிந்து கொள்ள முடியாத இந்தக் குழப்பத்திலிருந்து
வெளியில் வந்துவிட்டேன்.
சிலரால் இன்னும் வரமுடியவில்லை.
எனக்கு கிடைத்த ஆதரவு
அவர்களுக்கு இல்லாமல் போய்விட்ட தே!
எல்லோரும் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும்
கறுப்பு ஆளுமையாய் இருப்பது
சாத்தியமில்லை தான்.
எல்லோருக்கும் வரப்போகும் ஆபத்துகளிலிருந்து
பாதுகாக்கும் பெற்றோரின் கரங்கள் கிடைப்பதில்லை.
வளர்ச்சியைச் செதுக்கும் வளர்ப்பு
வளரும் பருவத்தில்
வாய்ப்பதில்லை எல்லோருக்கும்.
வாய்த்துவிடுவதில்லை எல்லோருக்கும்
என்னைப் போல வாய்ப்புகளும்
நான் கறுப்பு பெண்.
ஆம்…
கடைவீதியிலோ மால்களிலோ
கேட்கிறது அவர்களின் குரல்.
எனக்குப் புரிகிறது
என்னிடம் இருக்கும் எதோ ஒன்றை
அவர்கள் விரும்புகிறார்கள் என்பது.
அது என்னிடம் இருக்கிறது என்பதால்
அதை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள
வேண்டுமா என்ன?
எனக்கு வயது 16… என்பதும்
இன்னும் இந்த வயதுக்கான அது நடக்கவில்லை
என்பதும்
அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எனக்குத் தெரியும்
நான் மற்றவர்களைப் போல இல்லை.
ஆனால் எனக்குப் புரியவில்லை
இதற்காக ஏன் வருத்தப்படுகிறேன் என்று.
நான் கறுப்பு பெண்..
ஆதலால்
கடந்த காலத்தை வெளியிலிருந்து பார்க்க
கடினமாக இருக்கிறது.
ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால்
குழப்பம் தெளிகிறது.
“இந்த உலகம் என் வரவுக்காக காத்திருக்கிறது”
பணம் சம்பாதிக்க கடவுள் என்ன கொடுத்திருக்கிறார்?
நான் வேலிகளைத் தாண்டுவேனா?
உலக மேன்மைக்காக அமையுமா என் வாழ்க்கை?
இப்படியாக நான் என்னவாகப் போகிறேன்
என்று அறிந்துகொள்ள
இந்த உலகமே ஆர்வமாக இருக்கிறது.
நான் கறுப்பு பெண்.
என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு
நானே வழிகாட்டி.
மாதா பிதாவுக்கு
அவர்களின் இலட்சிய வடிவம்.
வயதுக்கு மீறிய அறிவானவள் நான்.
இருண்ட அறையில் வெளிச்சம் நான்
உங்கள் விழிகளின் மகிழ்ச்சி நான்.
உள்ளத்தில் எரியும் அணையா நெருப்பு நான்.
என் குடும்பத்தின் விடுதலை கீதம் நான்.
எனக்கு முன் வாழ்ந்தவர்களின் உழைப்பு நான்.
கடினமான காலமும் நான்.
மகிழ்ச்சியான நேரமும் நான்.
தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் நான்.
ஏனேனில்…
நான் வலிமையானவள்
சுதந்திரமானவள்
கறுப்பி.
நான்…
இதுதான் நான்.
இந்தக் கவிதையின் நான்..
என்னைப் பற்றியது தான்.
( நன்றி.. POWER POETRY.ORG.
 .. IAM A BLACK GIRL)
இந்த மாதம் - பிப்ரவரி - கறுப்பு இனத்தின் சிறப்பு மாதம்.
அப்பெண்ணின் இனத்தின் கறுப்பு கவிதையை
 மொழியாக்கம் செய்திருக்கிறேன்..அவள் முகம்
 என்னுடன் பயணிக்கும் இருள் சூழந்த
 இரவு நேரம் 12.24... நாளை விடியும் தானே.
. நம்பிக்கையுடன் அவளுடன் நானும் ...

Saturday, February 9, 2019

சுதா மூர்த்தி

சுதா மூர்த்தி
Image result for sudha murthy

இந்தப் பெண் எனக்கு மிகவும் நெருக்கமானவள்.
இன்றுவரை இப்பெண்ணை நான் சந்திக்கவில்லை.
சந்திக்க வேண்டும் என்றெல்லாம் பெரிதாக
எதுவும் முயற்சிக்கவும் இல்லை!
சுதா எழுதியதை எல்லாம் கொண்டாடுகின்றேனா
என்று கேட்டால்… இல்லை என்பது தான் என் பதிலாக
இருக்கும். ஆனால் சுதாவை நான் கவனிக்கிறேன்.
கவனித்துக் கொண்டே இருக்கிறேன்…
பொதுவாக விலை உயர்ந்த ஆடை அணிகலன் கள்
நான் விரும்புவதில்லை.
சுதாவும் அப்படித்தான் என்று அறிந்தப்பின்
சுதாவை ரொம்பவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேனா
தெரியவில்லை!
எனக்குள் சுதாவைக் கண்டேனா என்பதும்
இன்னும் புரியாத புள்ளி தான்.
சுதாவின் வாழ்க்கையில் அந்த ஆரம்பம் 
எனக்குப் பிடித்திருக்கலாம்..
டாடா மோட்டார்ஸ் வேலைக்கான தகுதியில்
 “ஆண்கள் மட்டும்”என்று விளம்பரம் வருகிறது. 
( LADY CANDITATE NEED NOT APPLY )
சுதா அதை வாசிக்கிறார். ஓர் அஞ்சல்
அட்டையில் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 
டாடாவிடமும் அக்கடிதம் போய் சேர்ந்துவிடுகிறது.. 
டாடா சுதாவை அழைக்கிறார்.
அவருக்கான நேர்காணல்.. 
டாடா மோட்டார்ஸ்சில் சுதா என்ற பெண்ணும்
 நியமிக்கப்படுகிறாள்…
இப்படியாக ஆரம்பிக்கும் சுதாவின் வாழ்க்கையில்
மூர்த்தியுடனான அவர் காதல்…
மூர்த்தி யின் இன்றைய இன்போஷிஸ் 
அன்று புனாவில் தொடங்கப்பட்ட போது
 சுதாவின் உழைப்பு
சுதா…
எனக்கு இப்போது ஆண் பெண் உறவு நிலையில்
பெண்ணின் சமபங்கினை எப்படி கொடுக்க வேண்டும்
 என்று சொல்லாமல் சொல்கிறார்.
அதே சுதா … கண்வன் மனைவி இருவரும் 
ஒரே நிறுவனத்தில் இருப்பதா என்ற நிலையில்
 மூர்த்திக்காக மூர்த்தியின் கனவுலக
இன்போஷிசை விட்டு வெளியில் வருகிறார்.
இன்போஷிஸ் மூர்த்திக்கு மட்டும் தான் கனவா?
சுதாவுக்கு…?
இதை அறிய வரும் போது துடித்துப் போகிறேன் நான்..
பெண்களுக்கு சுதாவின் இந்த முடிவு
ஒரு தவறான முன் உதாரணமாகிவிட்ட்தே
என்று கவலைப்பட்டிருக்கிறேன்…
..
ஆனால்.. சுதா தன்னை இழந்துவிடவில்லை.

“மூர்த்தியின் விசுவரூபத்திற்கு முன்னால்
 நான் தொலைந்துப் போய்விட்டேனா?
ந் நோ. நான் மூர்த்தியின் மனைவியாக இருக்கலாம்,
 என் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கலாம், 
இன்போஷிஸ் பவுண்டேசன் டிரஸ்டியாக இருக்கலாம்.
ஆனால் நான் சுதா..
எல்லா பெண்களையும் போலவே 
எனக்கும் பல கடமைகள் பல முகங்கள்..
அதனாலேயே நான் என் சுயத்தை
என் அடையாளத்தை
இழந்துவிட்டேன் என்று அர்த்தமல்ல…
சரியான தேர்வுகளைச் சரியான
நேரத்த்தில் செய்யும் போது நாம்
 நம் சுதந்திரத்தை இழப்பதில்லை
(OUR CHOICE DICTATED BY US, NOT BY THE WORLD)
இன்று நம் பெண்கள் மிகவும் அதிகமாக
சுதாமூர்த்தி போன்றவர்கள்
ஆரம்பித்து வைத்த ஐடி நிறுவன ங்களில்
 வேலைப் பார்க்கிறார்கள்.
ஆனால் அவர்களில் யாருமே
ஏன் சுதாவைப் போல இல்லை!..
சுதா ஒன்றும் கடந்த காலமல்ல.
சுதாமூர்த்தி கற்பனையும் அல்ல.
இப்போதும் எனக்கு சுதா என்ற பெண்ணை
ரொம்ப ரொம்ப பிடிக்கும்…
I LOVE YOU SUDHA.

SUI DHAGA - HINDI MOVIE

காதறுந்த ஊசி... காணாமல் போன நூல்..
SUI DHAGA .. திரைப்படத்தை முன்வைத்து..
. வருண் தவானும் அனுஷ்க சர்மாவும் நடித்திருக்கிறார்கள்.
இயல்பான அவர்களின் நடிப்பு சில காட்சிகளில் ஒரு கவிதையைப்போல விரிகிறது. எங்கே போனார்கள் நம் தையல்கார ர்கள்?
தையல் என்பது வெறும் தொழில் அல்ல.
தையல் என்பது கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு தொழிலாக இந்தியாவில் இருந்த து. அதை எல்லாம் இன்று கார்ப்பரேட் முதலைகள்
விழுங்கிவிட்டன. ஆடைகளைத் தயாரிக்கும் எந்திரங்களாக தையல்கார ர்களை
மாற்றிவிட்டோம்.
தையல்கார ர்களை விலைக்கு வாங்கி இன்று ஆடைகளின் உலகத்தில்
ஒரு பெரும் புரட்சி நடந்துவிட்ட தான
ஒரு மாயையில் இருக்கிறோம்..
(SMALL, MEDIUM, LARGE, EXTRA LARGE , EXTRA EXTRA LARGE, TRIPLE EXTRA LARGE,
FREE SIZE…) S , M, L, XL, XXL, XXXl இப்படியாக அவர்கள் தயாரிக்கும் ஆடைகளின்
அளவுக்குள் நம் உடலைத் திணிக்கப் பெரும்பாடு
படுகிறோம். ஆடைகளை யாருக்குத் தயாரிக்கிறோம், அவர் உடல்
அளவு என்ன எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை
தையல்கார ர்களுக்கு. யாரோ ஒருவர்
கட் செய்வார்… ஒரே அளவில்
ஆயிரக்கணக்கான ஆடைகளை.
சில நூறுபேர்கள் வரிசையாக
உட்கார்ந்து மெசினின் தைப்பார்கள்…
அந்த ஆடைகள் உள் நாட்டிலும்
வெளி நாட்டிலும் பெரிய கம்பேனிகளின் முத்திரையுடன் சந்தையில் விறபனைக்கு வரும்… இங்கே தையல் என்ற
கலைத்தொழில் வெறும் உடல் உழைப்பு
சார்ந்த இன்னொரு தொழிலாகி இருக்கிறது.
தையல் காரனின் தொழில் நுட்பமும்
டிசைனும் புதிது புதிதாக
படைக்கும் படைப்பாற்றாலும்
அவனுக்குத் தெரியாமல்
களவாடப்பட்டிருக்கின்றன.
FAB INDIA டிசைன் ஆடைகளைப் பார்க்கும் போதெல்லாம்
எந்த ஆதிவாசிகளின் ஆடையிலிருந்து இந்த டிசைனைத் திருடி இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
அதாவது ஒரு டிசைனை உருவாக்கியவனிடன் அதை அடிமாட்டுக்கு விலைக்கு வாங்கியோ/
திருடியோ உலகப் பணக்கார ர்களாகி விடுகிறார்கள்.
இம்மாதிரியான கனமான செய்திகளை ஒரு திரைப்பட த்தில்
காட்டியதில் இத்திரைப்படம் தனித்து நிற்கிறது.
பெண்களின் பளவுஸ் கொஞ்சம் லூசா இருந்தால் கூட
அவர்களின் ஆடை அலங்காரத்தில் குறையாகிவிடும்.
அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னைப் போல
லூசா ப்ளவுஸ் போட்டுக்கொண்டு அலைபவர்களை
இன்றும் கொஞ்சல் லூசு இந்தப் பொம்பள என்று
பார்க்கும் மன நிலை இருப்பதால் தான் ஒன்றிரண்டு
தையல்கார ர்களின் தையல் மிசின் தனித்துவத்துடன்
ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிலும் கூட ரெடிமேட் ப்ளவுஸ் வந்துவிட்ட து…
என்னவோ போங்கள்…

Thursday, February 7, 2019

திட்டியின் விஷமோ தவக்கோலம்?


காமத்தை நீ சூடிய மலர்களின்
வாசனையாய் தெளித்து வைத்திருந்தாய்
காமத்தை உன் ஆடலின் அசைவுகளில்
மறைத்து வைத்திருந்தாய்.
காமத்தை உன் இசையின் பெருவெள்ளமாய்
நதிகளில் நிரப்பினாய்
காமத்தை ஆடிப் பாடி
அலைகளில் நீராடி
மூழ்கி முத்தெடுத்து
பயணித்தவள் நீ..
உன் மகளை
மாபெரும் பத்தினி மகள்
என்று உன்னிடமிருந்து விலக்கியவள் நீ
அருந்தவப் படுத்தும் அதிகாரத்தை மட்டும்
திருந்தாச் செய்கை என தெளியாத து ஏன்?
இராகுலன் அவன்..
இலக்குமி நான்.
திட்டியின் விஷமோ
என் தவக்கோலம் தாயே?
பிச்சைப் பாத்திரங்கள்
நிரம்பி வழிகின்றன.
உதயக்குமரனின் தேரோசை
அமுத சுரபி அறியாத பிச்சைப்பாத்திரம்
கருவறை பிளக்கும் பெருவலி
பளிக்கறை கதவுகள் திறக்கின்றன..
பெரும்பசி என்னை எரிக்கிறது.
இதுவோ இதுவோ அது..
காம ம் அறியாமல்
காமத்தைக் கடந்துவிட்ட தாக
நானும்
கடந்துவிடுவாள் என்று நீயும்
நடித்துக் கொண்டிருக்கிறோம் தாயே.
பிச்சைப்பாத்திரத்துடன்
நானும் சபிக்கப்பட்டிருக்கிறேன்.
என் முலைப்பால் அருந்தும்
திட்டியின் குஞ்சுகளை
காயச்சண்டிகையின் கணவன்
என் செய்வான்?
சித்தார்த்தனின் தாகம் தீர்க்க
போதிமரத்தின் வேர்கள்
நீர்த்துளிகளைத் தேடி பயணிக்கின்றன.
கந்திற்பாவைகளை அனுப்பி
என்னை அழைக்காதே…
”காம ம் கடந்த வாய்மையள் “
என்று சுதமதி சொன்னது போதும்.
மதுரையில் கூல வணிகனின் கடைவீதிகள்
இரவுகளில் விழித்திருக்கின்றன.
இதுவே ஆயின் கெடுக அதன் திறன்
என அங்கிருந்து புறப்படுகிறேன்.
அதுவரை…
உதயக்குமரனின் அமுதசுரபியாய்..
(திட்டி.. இராகுலனை தீண்டிய விஷப்பாம்பு)

Wednesday, February 6, 2019

நன்றி ஓ ஹென்றி


 நன்றி.. ஓ ..ஹென்றி..
ஹென்றி பழைய பக்கம் தான் என்றாலும்
புத்தகமாக கையில் கிடைக்கும் போது
ஒரு தனி சந்தோஷம் வரத்தான் செய்கிறது.
நன்றி ஓ ஹென்றி..

பெண்ணியம் பேசுகிறேன் பேர்வழி என்று
சொல்லிக்கொண்டு சொற்களை மட்டுமே
திருடி தின்று அதுவும் செரிக்காமல் வாந்தி
எடுக்கும் எல்லாமும் இப்போதெல்லாம்
மிகுந்த ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
  நல்லவேளை ஓ ஹென்றி அப்படியல்ல.
தீபாவளிக்கு பஜாரில் புதுசு புதுசாக
கடைகள் முளைத்துவிடுகின்றன.
இந்தக் காட்சி ஒவ்வொரு ஆண்டும்
எல்லோருக்கும் இன்றுவரை காணக்கிடைக்கும்
காட்சி தான். நம்ம ஹென்றிக்கு மட்டும்
“அகலமான பஜார் தெருவே கோமண
சைசுக்கு ஆகிவிட்ட து” என்று  சொல்லத்
தெரிகிறது. கோமணத்தை அறியாதவர்
யார்?!! ஆனாலும் பஜார் கோமண சைசுக்கு
ஆவதைக் கவனிப்பவர் யார்! இதை ஒரு
பெண் எழுத முடியாது. அவளுக்கு கோமணம்
எல்லாம் நினைவுக்கு வருமா ..? எனக்கு
சந்தேகமா தான் இருக்கு. அவளுக்கு வேறு
எதாவது நினைவுக்கு வந்து தொலைக்கலாம்.
ஆனாலும் ஹென்றி.. தன் பார்வையில்
தனித்து நிற்கும் இடம் இது தான்.
நல்லாவே இருக்கு ஹென்றி..

இனி…
ஹென்றியைப் பற்றி நான் எப்போதும்
சொல்ல வேண்டும் என்று  நினைத்து
சொல்லாமல் இருக்கும் இன்னொரு கதை..
ஹென்றியின் கதைகளை விட ரொம்பவும்
சுவராஸ்யமானது…
ஹென்றி அவர் வீட்டு உறவினர் திருமணத்தில்
கலந்து கொள்ள மும்பை வந்திருந்தார்..
எங்களை அழைத்தார். 
(என்னுடன் கே ஆர் மணி மற்றும் மதி)
 ஓ ஹென்றி.. நாங்கள்
எப்படி வரமுடியும் உங்கள் உறவினர் வீட்டு
திருமணத்திற்கு? என்று நாங்களும் கேட்கவில்லை!
அப்படியான எதுவும் இல்லாமல் (சொல்லப்போனால்
வெட்கமில்லாமல்..!) நாங்கள் ஹென்றியைச்
சந்திக்கப் புறப்பட்டு விட்டோம். எங்களைப்
பார்த்த தில் ஹென்றிக்கும் ஏக க் கொண்டாட்டம்!
மாடியில் திருமண வீட்டாரின் சடங்குகள்
நடந்து கொண்டிருந்தன. நாங்கள் ஹாலில்
அதாவது டைனிங்க்  ஹாலில்.. ஒதுக்குப்புறமாக
இட த்தைப் பிடித்து உட்கார்ந்துவிட்டோம்.
ஹென்றி பெண் வீட்டுக்கார ரா?
மாப்பிள்ளை வீட்டுக்கார ரா?
எங்களுக்குத் தெரியாது.
ஆனால் சென்னையிலிருந்து திருமணத்திற்கு
குடும்பத்துடன் வந்திருக்கும் முக்கியமானவர்
என்பது மட்டும் புரிந்த து.
டைனிங்க் ஹாலில் பரிமாறுபவர்கள் எங்களுக்குச்
சூடான காஃபி, பஜ்ஜி, கேசரி, வடை என்று
பரிமாறிக்கொண்டே இருந்தார்கள்…
பஜ்ஜி கேசரிக்கு ஏற்ற மாதிரி எங்கள்
இலக்கியமும் தன் வாசலைத் திறந்து கொண்டு
வெள்ளமென பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த து.
ஹென்றி… ரொம்பவும் மூடில் இருந்தார்.
அப்போது… ரொம்பவும் வெள்ளந்தியாக
அவரிடம் கேட்டு வைத்தேன்..
ஓ ஹென்றி… இதெல்லாம் இருக்கட்டும்..
நம்ம பாட்டிகளுக்கும் இப்படியான
நிறைய காதல் இருந்திருக்குமா?!!! “ என்று.
ஹென்றிக்கு இன்னும் உற்சாகம் அதிகமாகி
விட்ட து. பாட்டியிடம் இதை எல்லாம் நாம்
பேசுவதில்லை. பேசிப் பாருங்கள்.. இன்றைய
பெண்ணியத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு
விடுவார்கள் நம் பாட்டிகள் “ என்றார்.
ஹென்றி இப்படி சொன்னாலும் சொன்னார்..
எனக்கு அப்போதே எந்தப் பாட்டியிடம்
எதைக் கேட்கலாம் என்ற எண்ணம் வந்த து.
ஸ்கூல் , கல்லூரி, ஏன் ஆபிஸ் போகும் போது கூட
அடிக்கடி பாட்டிகளை சாவடித்து லீவு கேட்ட
 நான் என் பாட்டிகளின் மறைவுக்காக முதன்
முதலாக உண்மையாகவே வருத்தப்பட்டேன்
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

இப்படியாக நான் பாட்டிகளைத் தேட
ஆரம்பித் த்தில் ஹென்றி தான் எனக்கு
 குருவாக இருந்தார்…
அப்படி ஒரு பாட்டியை.. அதுவும் என்
மகளின் திருமணத்தில் சந்தித்தேன்.
அந்தப் பாட்டியிடம் போய் கதை எல்லாம்
கேட்கவில்லை. ஆனாலும் அந்தப் பாட்டி
செய்த சில விளையாட்டுகள் பாட்டியின்
கதையை என் புனைவுகளுக்குள் கொண்டுவந்த து.
இப்படியாகத் தான்
“பாட்டி என்ன சொல்லி விட்டாள்?!”
என்ற சிறுகதையை எழுதினேன்.
இந்தக் கதையை ஹென்றியிடம் சொல்ல
வேண்டும் என்று  நினைத்தேன்.
நன்றி ஓ ஹென்றி..

டியர்.. ஹென்றி..
மும்பையில் இருக்கும் உறவினர் வீட்டு
விசேஷங்களுக்கு .. இப்போதெல்லாம்
வருவதில்லையா என்ன..
ஹென்றியுடன் கதைப் பேசுவதும்
கதைக் கேட்பதும் சுவராஸ்யமான அனுபவம்.
  நன்றி.. ஓ.. ஹென்றி..
(எழுத்தாளர் எஸ். சங்கர நாராயணன் அவர்களுக்கு
நன்றியுடன்.. )




Sunday, February 3, 2019

கலாச்சார இந்துவும் இன்றைய அரசியலும்


"கலாச்சார இந்து"
இந்த அடையாளம் நேருவுக்கு தேவைப்படவில்லை.
ஆனால் ராகுல்காந்திக்கு தேவைப்படுகிறது.
ராகுல் ஜி தன்னை கலாச்சார இந்து என்று
சொல்லிக்கொள்ளலாம்.. நன்றி ஜெ.மோ.
I am English by education, Muslim by culture
 and Hindu merely by accident,”
(JUST BORN AS A HINDU BY ACCIDENT)

நேரு தன்னைப் பற்றி இப்படி 
சொல்லிக்கொண்ட தாக பிஜேபியின்
ஐ.டி. துறை அமித் மாளவியா 2015ல்
தன் டுவிட்டரில் டுவிட்டினார்!
இந்த டுவிட்டல் வைரஸாக பரவியது.
அதன் பின் 2018 செப்டம்பரில் பிஜேபி
சார்பாக பேசியவரும் - ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியில் 
இதே வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
ஆனால் நேரு எங்கே இதைப் பேசினார்,
எந்த இட த்தில் என்றெல்லாம் இவர்கள்
சொல்லவில்லை. அது அவர்களின்
நோக்கமும் அல்ல. 

நேரு குடும்பத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம்

பி ஆர் ந ந்தா எழுதியது. மோதிலால் & ஜவஹர்லால்,
அப்புத்தகத்தில் இந்து மகாசபை தலைவர்
என் பி காரே நேருவைப் பற்றி சொன்ன விமர்சன
வரிகள் தான் மேற்கண்ட வரிகள். நேரு எவ்விட த்தும்
தன்னைப் பற்றி இப்படிசொல்லிக்கொள்ள வில்லை!!

இனி, அண்மையில் வாசித்த இன்னொரு புத்தகம்

ஜெயமோகன் எழுதிய “கலாச்சார இந்து”.
அப்புத்தகத்திலும் பக் 28 & 29 ல் நேருவைப் பற்றிய
இன்னொரு கருத்து வைக்கப்படுகிறது.

“ என் நினைவு சரி என்றால் கலாச்சார இந்து

என்ற சொல்லாட்சியை நான் நேருவின் எழுத்துகளில்
வாசித்திருக்கிறேன்” என் கிறார் ஜெ.மோ.
அவரும் அதற்கான எந்த தரவுகளையும் கொடுக்கவில்லை.
மேலும், ஜெ.மோ அவர்கள் 
“நேரு தன்னை நாத்திகர் என்று உணர்ந்தவர்.
அவர் நாத்திகம் என்பது ஐரோப்பிய தாராளவாதச்
சிந்தனகளில் பின்புலம் கொண்ட து……..
ஆனால் இந்தியப் பண்பாட்டின் துளியாகவே
நேரு எப்போதும் தன்னை உணர்ந்தார். இந்தியப்
பண்பாட்டின் த த்துவச் சிந்தனைகள். அழகியல்,
உணர்வு நிலைகள் ஆகியவற்றுடன் அவர் பின்னிப்
பிணைந்திருந்தார். அவை அடிப்படையில் இந்துப்
பாரம்பரியம் சார்ந்தவை என்றும் அவர் அறிந்திருந்தார்.
அவற்றை நிராகரிக்க தன்னால் முடியாது என அவர்
உணர்ந்தார்.
அதன் பொருட்டு அவர் கண்ட டைந்த அடையாளமே
கலாச்சார இந்து என்பது…”

என்று ஜெ.மோ நேருவை
 ஒரு கலாச்சார இந்துவாக வடிவமைக்கிறார்.
நேரு எவ்விட த்திலும் தன்னை ஒரு கலாச்சார
இந்து என்று பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை.
( அப்படி சொல்லி இருந்தால் தெரியப்படுத்துங்கள்
தோழர்களே.. ) 
ஆனால் இந்துமத த்தின் எந்த ஆசாரங்களையும் 
பின்பற்றாதவன் ஒரு கலாச்சார இந்து
 என்ற முடிவுக்கு வருவோம் என்றால் 
நேரு கலாச்சார இந்து தான்..!
அதில் ஐயமில்லை.
மேலும்
இந்திரகாந்தியின் இளைய ம ருமகள், அவர்
கணவர் சஞ்சய்காந்தியின் அகால மரணத்திற்குப்
பின் (சொத்து வழக்கு என்று நினைக்கிறேன்) 
நீதிமன்றத்தில் இந்திராகாந்தி இந்துவல்ல
 என்று வழக்குத் தொடுத்தார்.
ஆனால் அதை விசாரித்த நீதிபதி 
1942ல் இந்திரா-பெரோஸ் திருமணப் புகைப்பட த்தை
 ஆதாரமாக கொண்டு இந்திராவின் திருமணம் 
இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் 
என்று முடிவு செய்தார். அப்படியானால்
நேரு தன் மகளுக்கு இந்து முறைப்படி தான்
 திருமணம் செய்தார் என்பதும் உறுதி ஆகிறது.
இப்படியாக நேரு கலாச்சார இந்து என்று தன்னை
அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும்
கலாச்சார இந்துவாகவே இருந்தார் என்ற முடிவுக்கு
வரலாம். …
எனவே… இதனால் சொல்ல வருவது என்னவென்றால்…
காங்கிரசுக்கார ர்கள் அதிலும் குறிப்பாக
ராகுல் ஜி இனிமேல் சட்டையைத் தூக்கிக்
காட்ட வேண்டாம். நான் ஒரு கலாச்சார இந்து
என்று உரக்கச் சொல்லிக்கொள்ளலாம்.
சொல்ல வேண்டும். 

ஜெ.மோ.. ராகுல் ஜிக்காக இதை எழுதவில்லை
என்றாலும் ராகுல் ஜிக்கு “கலாச்சார இந்து”
என்ற அடையாளம் ஓட்டு அரசியலுக்கு
ரொம்பவும் வசதியாக இருக்கும்.

#cultural_hindu
#Rahul_gandhi


Friday, February 1, 2019

ஜெயமோகனின் "கலாச்சார இந்து"




ஜெயமோகனின் கலாச்சார இந்து
விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வுக்கு
சென்றிருந்தப் போது வாங்கிவந்தப்
புத்தகங்களில் ஒன்று ஜெ.மோவின்
கலாச்சார இந்து. ஜெ.மோ என்ன சொல்லியிருப்பார்
என்பதை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவதற்கு
முன்பே நம்மால் ஊகிக்க முடிகிறது.
ஜெ.மோ வின் இந்துமதம் குறித்தப் புரிதல்களும்
கோர்வையாக அதன் மாற்றங்களை அல்லது
கலவைகளை தொகுத்திருக்கும் விதமும்
பாராட்டுதலுக்குரியது
வாசகரின் இந்துமதம்
சார்ந்தக் கேள்விகளுக்கான அவருடைய
விளக்க உரை தான் இக்கட்டுரைகள்.
தனக்குத் தோதான இந்துமதக் கருத்துகளைச்
சொல்ல அதற்கேற்ற வினாக்களை முன்வைத்து
எழுதப்பட்டிருக்கிறது. அந்த வினாக்கள் பொதுஜனப்
புத்தியிலிருந்து எழுகின்றன.
கலாச்சார இந்து பற்றிய கட்டுரைகளில் ஜெ.மோ
சிலாகிக்கும் சில விடயங்கள்..

*இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மத த்துடன்
உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்து
கொண்டே இருக்கும். இப்படி இணைவதன் மூலமே
இந்துமதம் உருவாகி முன் செல்கிறது. (பக்18)
*எந்த சிறுதெய்வமும் இந்துப் பொதுமரபில்
எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக
முற்றிலும் வெளியே இருக்காது. தலித்துகளின்
தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள் கூட இதுவே
உண்மை. (பக் 21)

*பிரம்ம ம் என்ற பிரமாண்டமான தரிசனத்திலிருந்து
கைக்குச் சிக்கும்படி அள்ளப்பட்ட சிறிய தரிசன ங்களே
சிவன் விஷ்ணு முருகன்  போன்ற நம் தெய்வ உருவகங்கள்.
ஞ்சானிகள் தேடுவது கடவுள் என்ற நம்பிக்கையை
அல்ல, கடவுள் என்ற சுய அறிதலை, சுய அனுபவத்தை.
(பக் 68)

*கோயில்களை சடங்குகளை விழாக்களை மதங்களை
இலக்கியங்களை த த்துவங்களை கலைகளை
இசையை குழந்தைகளுக்கு அளியுங்கள். அவற்றின்
மீது உங்களுக்கிருக்கும் நம்பிக்கைகள் மறுப்புகள்
ஐயங்களுடனேயே அளியுங்கள். அவர்களை மரபின்
வளமான மண்ணில் ஊன்றி வையுங்கள்.
அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளரட்டும். (பக்90)
*எந்தப் பழங்குடி தெய்வத்தின் கதையும் இயல்பாகவே
சைவத்தில் வந்து முட்டும். இந்து மதம் என்பதே இத்தகைய
பல ஆயிரம் வழிபாடுகளின் தொகை என்பதே
இதற்கு காரணம். (பக்112)

*இந்து மத த்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான்.
கீழே நாட்டார் தெய்வங்களும் குல தெயவங்களும் அடங்கிய
வழிபாடு. மேலே பெரிந்தெய்வ வழிபாடு. அதற்குமேல்
த த்துவ தெய்வ உருவகம். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று
பிரிக்கமுடியாத படி கலந்திருக்கும். த த்துவம் பழங்குடி
வழிபாட்டை நோக்கி வரும். பழங்குடி வழிபாடு த த்துவம்
நோக்கிச் செல்லும். பழங்குடி தெய்வ பிரதிஷ்டை இல்லாத
எந்தப் பெருங்கோவிலும் தமிழ் நாட்டில் கிடையாது. (பக் 113)

ஜெ.மோ வின் இக்கருத்துகளின் தொகுப்பு
அவ்வப்போது வாசித்த கருத்துகளாக இருந்தாலும்
அவற்றை ஒரு புள்ளியில் தொகுத்து வழங்கி இருக்கும்
போது மரபு சார்ந்த ஒரு புரிதலும் கூடவே
பயணிக்கிறது. ஜெ.மோ கட்டுரைகளின் ஒரு
பக்கத்தில் இந்தப் பீடங்கள் தானே எழும்பி
நிற்கின்றன
அடுத்த நொடியில் ஜெ.மோ
எந்த இட த்திலிருந்து இதை எல்லாம் எழுதுகிறார் என்ற
எண்ணம் எழுகிறது. திரும்பிப் பார்க்கிறேன்.
ஜெ.மோ மிகச் சிறப்பாக பெருமித உணர்வுகளுடன்
சொல்லும் இந்து மத மரபில்
 ஜெ.மோ உட்கார்ந்திருக்கும்
இடம் வசதியான இருக்கை. அவருடைய இடம்
அவருக்கு அவர் வாசிப்பிலோ எழுத்திலோ கிடைத்த
இடமல்ல. அது அவருக்கு அவர் பிறப்பின் வழி
வாய்க்கப்பெற்ற பெரும்பேறு.
வசதியாக அமர்ந்திருக்கிறார்.
அவருடைய இடம் இருக்கை காற்றோட்டமாக
இருக்கிறது. வாசிப்புகளும் தேடலும் கூடுதல்
அனுபவமாகி கலாச்சார இந்துவாக அவர்
எம்முடன் உரையாடுகிறார்.
வாழ்க்கைபயணம்..
இரயில் ஓடும் தண்டவாளத்தில்  கூட மாற்றமில்லை.
ஆனால் அவர் முதல் வகுப்பிலும்
எம்மைப் போன்றவர்கள் மூன்றாம் வகுப்பிலும்
பயணிக்கிறோம்.
இந்த இரயில் பயணம் அருமையானது,
அழகானது , என்று அவர் சொல்வதை
அப்படியே சொல்ல வேண்டும் என்றுதான்
நானும் விரும்புகிறேன். மூன்றாம் வகுப்பில்
மூச்சு முட்டுகிறது.
 என் கைகளையும் கால்களையும் நீட்ட முடியாது.
என் பிள்ளைகளுக்கும் அதே அதே.
இப்படித்தான் இருக்கும் இரயில் பயணம்
என்று சொல்லுகிறேன்.
அவரும் சொல்லுகிறார்..
இது நம் தொன்ம ம், இது நம் பெருமை,
இது மூன்றடுக்கு , இதுவே பிரமாண்டம்
என்று. நானும் சொல்கிறேன்
இது நம் பயணம்.. எப்படியும் போகும்
இட த்திற்குப் பத்திரமாகப் போய்விட வேண்டும்
என்று. அவர்களை அந்தக் கூட்ட நெரிசலில்
என்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்கிறேன்.
அவர்கள் மெதுவாக என் அணைப்பிலிருந்து
தங்களை விலக்கிக் கொள்கிறார்கள்.
ஜெ. மோ பயணிக்கும் முதல் வகுப்பு
ஜெ.மோ.. கதவுகளைத் திறக்க முயற்சி
செய்கிறார். அவருக்கும் தெரியும்..
அந்தக் கதவுகளைத் திறக்கும் சாவி
அவர் வசமில்லை என்பது.
அவர் குருவின் மன நிலைக்குப் போய்
நடிக்க முயற்சிக்கலாம்.. அத்தருணத்தில்
அது தேவையாகவும் இருக்கிறது
கதவுகள் மூடியே இருக்கின்றன.
இரயில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நான்  தவிப்புடன்
எம் பிள்ளைகள் இறங்கிவிட்டார்கள்..
அல்லது முதல் வகுப்பிலிருந்து தள்ளிவிடப்
பட்டார்கள்..! இரயில் ஓடுகிறது
மரம் செடி கொடி தண்டவாளங்கள்
எங்களுடன் ஓடுகின்றன.
அவர்களும் ஓடுகிறார்கள்,
நாளைஅவர்கள் நடைப்பயணமாகவே
வர வேண்டிய இட த்திற்கு வந்துச் சேரலாம்.
அல்லது யாருக்குத் தெரியும்..
இரயிலை விட வேகமாகப் பயணிக்கும்
விமானத்தில் ஏறி வந்துவிடலாம்.
வரட்டும்..
கலாச்சார இந்துவுடன் கை குலுக்குகிறேன்..
ஓம் நம சிவாய.

#கலாச்சார_இந்து