Sunday, May 8, 2022

ஒரே செய்தி.. இரண்டு முகம்


 சரவணா..இதெல்லாம் செய்தியாவதே பெரிய்ய புரட்சி தான்! 


ஒரே செய்தி.. அதில் ஒவ்வொருவரும் சொல்லியிருப்பதும் உண்மைதான். கற்பனை அல்ல.ஆனால் ஒரே செய்தியை அவரவர் எப்படி பார்க்கிறார்கள்? எவ்வாறு அணுகி இருக்கிறார்கள்?

அந்த நிகழ்வை சமூகத்திற்கு எந்த வகையில் பதிவு செய்ய விரும்புகிறார்கள்?  இதெல்லாம் வெவ்வேறு வகையான உண்மைகளை செய்திகளுக்கு நடுவில் புதைத்திருக்கிறது. தினமும் இம்மாதிரி பல செய்திகளை நம் ஊடகங்கள் பரப்பிக்கொண்டிருக்கின்றன. நாமும் அதை எல்லாம் வாசித்துவிட்டு பொங்கி அல்லது பொங்காமல் உண்டு உறங்கி முக நூலில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய 09/5/2022 டைம்ஸ் ஆஃப் இந்தியா (மும்பை பதிப்பு) பக் 8  செய்தி :

UP : Dalit woman dies after being 'assulted ' by cops.

அதே குழுமத்திலிருந்து வெளிவரும் எகானிமிக்ஸ் டைம்ஸ் பக் 3  செய்தி:

Old woman in UP Dies After Alleged Assault by Police.

அதாவது டைம்ஸ் 'தலித் பெண் போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள் 'என்று சொன்ன அதே செய்தியை

 அதே நாளில் வெளிவரும் எகனாமிக்ஸ் டைம்ஸ்

'வயதான பெண்மணி போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள்' என்று எழுதுகிறது.

.( பெயரில் சராதாதேவி , ராதாதேவி ஆகிறாள். கணவர் பெயர் மாறவில்லை. போலீஸ் பெயர் மாறவில்லை!)

ஒரே செய்திதான்.. இருவரும் முன்வைக்கும் பார்வையும் கடத்தும் உண்மையும் அதற்குள் புதைந்திருக்கும் செய்தியும் வேறுவேறு.

அதன் பின் எகனாமிக்ஸ் சொல்வதையே பிற பத்திரிகைகளும் வழிமொழிகின்றன. 

தெலுங்கானா டைம்ஸ், வொயர்ஸ், அவுட்லுக், டெக்கான், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ்.. இப்படியாக. .. செய்திகளில் அவள் வயதான 60 வயதுப்பெண் என்பதுடன் மட்டும் முடிந்துவிடுகிறது.

இது பாதுகாப்பான செய்தியாகவும் இருப்பது இன்னொரு காரணம்!

சரவணா..

இரண்டு செய்தியிலும் செத்துப்போனவள்

வயதானப் பெண் ( 60 வயசெல்லாம் முதுமைன்னா அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது!)

இரண்டாவது அவள் அன்றாடங்காய்ச்சி. ஏழைப்பெண்.

மூன்றாவது அவள் இருந்தாலென்ன, செத்து தொலைத்தால்தான் என்ன? என்ன குடிமுழுகிப்போய்விடப்போகிறது!

அவள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து தொலைத்தவள்.

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு 

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்

இந்த நாட்டில் வாழ்ந்தாலென்ன!

செத்துப்போனால் தான் என்ன?

அவை செய்தியாவதே பெரிய விஷயமல்லவா!

இதை நீ புரட்சி என்று சொன்னால் ஒத்துக்கொள்கிறேன். வேற என்ன பெரிசா கிழிச்சிட முடியும்??? என்ற ஓர்மையுடன். 🙏🙏

1 comment:

  1. True Madhavi. I agree with you 100%

    ReplyDelete