Monday, November 22, 2021

சாதி கெட்டப்பயலே..


சாதி கெட்டப்பய..
சாதி கெட்டச் சிறுக்கி
இவை செம்மொழி தமிழ்ச்சமூகத்தின்
வசைமொழிகள்.
சாதிக் கெடுவது நல்லதுதானே.
சாதியற்று இருப்பது பெருமைதானே.
சாதி அடையாளம் தொலைப்பது
மனித மாண்புதானே!
அது எப்படி உங்கள் மொழியில்
வசைமொழியானது?!!

அப்பன் பெயர் தெரியாமல் இருப்பதைவிட
கேவலமானதும் கீழானதும்
ஒருவன்/ ஒருத்தி சாதிக் கெட்டு இருப்பது.
குடும்பமில்லாமல் வாழ்ந்துவிடலாம்.
சாதிசனமில்லாமல் வாழமுடியாது
என்பதற்கான இன்னொரு விதியாக
இவை செயல்படுகின்றன.
குடும்பம் சாதியைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறது.
சாதி , குடும்ப நிறுவனம் உடையாமல்
பாதுகாக்கும் சக்தியாக செயல்படுகிறது.
என் பிள்ளைகள் திருமணத்தின் போதுதான்
சாதி எவ்வளவு முக்கியம் என்பதை
நான் ஒத்துக்கொண்டேன்.
சாதி பெரியவினையாற்றியது.
இச்சமூகம் எதிர்ப்பார்க்கும் வெள்ளைத்தோல்
இச்சமூகம் எதிர்ப்பார்க்கும் இலட்சத்தில்
மாதவருவாய்
இச்சமுகம் எதிர்ப்பார்க்கும் நடை உடை
ஆனால் சாதி ..?
அதை எதைக்கொண்டும் கடந்துவிட முடியாது
என்பதை முகத்தில் அறைந்து
என் போன்ற முட்டாள்களுக்குப்
பாடம் கற்பித்த
தமிழ்ச்சமூகம் இது.
புரட்சி பேசிய தோழர்கள்
குடும்பம் குடும்பத்திலிருக்கும்
மனைவி அம்மா அப்பா அண்ணன்
பங்காளி…
இவர்கள் ஏற்கவில்லையே என்று
காரணம் சொன்னபோது
சாதிக்கு புதுவடிவம் இருக்கிறது
என்பதை நான் புரிந்துகொண்டேன்.
அது இப்போதெல்லாம் ரொம்பவும்
நுணுக்கமாக செயல்படுகிறது.
அது ஊமைக்காயங்களை ஏற்படுத்துகிறது.
ரத்தம் சொட்டும் காயங்களைவிட
நீங்கள் செய்யும் கொலைகளைவிட
அது இன்னும் அதிகக் கொடூரமானது.
அது எப்படி இருக்கும் என்பதை
உங்கள் புரட்சியின் எந்தப்புத்தகமும்
கற்பித்துவிட முடியாது.!
தங்களைப் புரட்சியாளர்களாக காட்டுவதற்கு
சிலர் “ நான் புதியமாதவி வீட்டிலெல்லாம்
சாப்பிட்டிருக்கிறேன்.. “ என்று சொல்லும்போது
என் விடியல்கள் விழித்துக்கொள்கின்றன.
உங்கள் நட்பை ஒரு காகிதப்புன்னகையில்
கடந்துவிட முடியாமல்
இருண்டு போகிறது எம் முகம்.
என் வாழ்நாளில் இன்றுவரை
எனக்குச் சாதிச்சான்றிதழ் இல்லை.
என் பிள்ளைகளுக்கும் இல்லை.
சாதியற்று சாதிக்கெட்டு வாழ நினைத்தேன்.
வாழ்ந்துப் பார்த்தேன்.
ஆனால்…
நீங்கள் யாரும் அப்படி என்னை
வாழவிடவில்லை.
எனக்கு மட்டுமல்ல
என் எழுத்துகளுக்கும் நீங்கள் சாதி
அடையாளத்தை நிறுவ
இன்றுவரை கடும் முயற்சி செய்கிறீர்கள்..
எம் சாதிசனம் என்று எழுதியதில்லை,
எம் மக்கள் என்று எழுதும்போதெல்லாம்
எல்லாவகையிலும் வசதியற்று ஒடுக்கப்பட்டு
உழைத்து வாழும் எம் “தாராவி” சனங்களை
என் படைப்புலகமாக்கினேன்.
தாராவி குடிசை பார்ப்பனர் தவிர
அனைத்து சாதி மதமும் வாழுமிடம்
என்பதைக்கூட அறியாதவர்கள்
நீங்கள் மட்டுமல்ல..
இந்த அறிவு ஜீவிகளும் தான்.
இல்லை என்றால்
தாராவியை அவர்கள் ஏன்
“ஆசியாவின் சேரி” என்று
அடையாளப்படுத்துகிறார்கள்??
ஒரு பெண்ணாக இருப்பது மட்டுமல்ல
சாதிகெட்டுப்போயிருப்பதன்
வலியும் வேதனையும்
என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.
எழுத்திலும் வாழ்க்கையிலும்.
வழக்கம்போல இப்பதிவையும்
நீங்கள் நின்று கொண்டிருக்கும்
சாதிப்பூமியில்
நான் யார்ப்பக்கம் நிற்கிறேன்
என்பதற்கான முன்னுரையாக
சிறுமைப்படுத்தி விடாதீர்கள்.
இதோ..
ஒரு பெண்ணாகவும்
சாதிகெட்டவளாகவும்
உங்கள் சாதிமுகத்தின் மீது
காறி உமிழும் எம்
“த்தூ”

இப்போது… முடிந்தால்
உங்கள் முகத்தை
உங்கள் மனசாட்சியின்
கைக்குட்டையை எடுத்து
துடைத்துக் கொள்ள முடிகிறதா பாருங்கள்.

1 comment:

  1. அனுபவிப்பவர்களுக்குத் தானே வலியும் வேதனையும் சாதியை விடக் கொடுமை பெண் என்பது மனிதம் தானே முதன்மை என்று உணர இன்னும் எத்தனை காலம் தேவை "உழைக்க பெண் தேவை" "உயர உயரே பேண் தேவையில்லை வாழ்த்துகள் எழுத்தாளர் கவிஞர் வி் ராணி 8248056847

    ReplyDelete