Friday, November 12, 2021

ஜெய்பீம் அசல் பார்வதியும் திரைப்பட செங்கேணியும்.

 


வருஷத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளி போல காலச்சுவடும் வருஷத்திற்கு ஒருமுறையாவது தந்தை பெரியார் பற்றி ஒரு கட்டுரை வெளியிடுவார்கள்..! அதுபோல தான் தமிழ் சினிமாவில் " ஜெய் பீம்" .

 எது எது எந்தெந்த காலத்தில் சந்தையில் விற்பனையாகுமோ அதை தயாரித்து வெளியிடுவது ஜனநாயக முதலாளித்துவம். அவ்வளவுதான்.

 ஜெய் பீம் அட்டைக்கத்தி அல்ல ..

 அது எம் போராயுதம்.

 ஜெய் பீம் புனைவுகளுக்குள் அடங்கும் பூமியல்ல. 

அது எங்கள் போராட்டக் களம். 

இந்தப் புரிதலுடன் தான் ஜெய் பீம் திரைப்படத்தை யாமும் கண்டோம். 

நிஜவுலகின் பார்வதிகளை நோக்கிப் பயணிப்போம். 

 இனி கீழ்க்கண்ட தோழர் Yamuna Rajendran முகநூல் பதிவை மீண்டும் வாசிக்கவும். /

ஜெய் பீம் படம் உருவாக்கம் தொடர்பான விவாதங்களில் மனத்தை மிகவும் வருத்தமுறச் செய்தவிஷயம் ஜெய்பீம் என்கிற படம் வெளியாவதற்கு முன்போ வெளியான பின்போ அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என பார்வதியம்மா சொல்லும் நேர்காணல்.

 நிஜத்தில் இன்றும் வாழும் மனிதர்களாக ஜெய்பீம் பட நாயகன் சந்துருவுக்கு உள்ள அதே முக்கியத்துவம் செங்கேணி பாத்திரத்திற்கு உரியவரான பார்வதி அம்மாவுக்கு உண்டு. ஊடக நேர்காணல்களிலும் சரி பிம்பக் கட்டமைப்பு தொடர்பான ஊடகக் கட்டுரைகளிலும் சரி சந்துரு பெற்ற முக்கியத்துவம் பார்வதி அம்மா பெறவில்லை. இது சமநிலை நோக்கு அல்ல. பன்டிட் குயின் படம் குறித்த காப்புரிமைப் பிரச்சினையை அருந்ததிராய் எழுப்பினார். நிஜத்தில் ஜெய்பீம் படக் கதையின் காப்புரிமை ஆதாரத்தில் சந்தேகமில்லாமல் பார்வதி அம்மாவினுடையது. ஜெய் பீம் படத்தின் இறுதிக்காட்சி அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட கல்கட்டிடத்தில் செங்கேணி தனது கைக் குழந்தையுடன், மகளுடன் குடியேறுவது போல இருக்கிறது. நிஜத்தில் பார்வதி அம்மா ஓலைக்குடிசையில் வாழ்கிறார்.

 இங்கு உலக சினிமாவில் நடந்த சில மாற்றங்களைச் சொல்கிறேன். சலாம் பாம்பே படம் மும்பை தெருவில் வாழும் குழந்தைகள் பற்றியது. மீரா நாயர் அப்படத்தின் பின் இவ்வாறு வாழும் குழந்தைகளுக்கு பராமறிப்பு இல்லம் ஒன்றை உருவாக்குகிறார். இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சேரிச் சிறுவனாக நடித்த சிறுவனுக்கு அதன் இயக்குனர் வீடுகட்டித்தருவதோடு அவனது கல்விச்செலவை ஏற்கிறார். கணிசமான நிதியுதவி செய்கிறார். இது தாராளவாத உதவிகள்தான். அரசே இதற்கு தீர்வு காணவேண்டும் என்பதும் உண்மைதான். என்றாலும், திரைப்படம் ஒரு வணிகம் எனும் அளவில், இவற்றிற்கு ஆதாரமான ஏதிலிகளான மனிதர்களைப் பற்றி கொஞ்சமேனும் பொறுப்பெடுக்க வேண்டியது அதனை உருவாக்குபவர்களது கடமை.

 சூர்யா அரசிடம் பங்களித்த பழங்குடி மக்கள் நிதியான இரண்டு கோடி ரூபாய்கள், முதல்வர் ஸ்டாலினிடம் வெளிப்பட்டிருக்கும் அம்மக்கள் பாலான பொறுப்புணர்வு போன்றன தன்னேரில்லாத நகர்வுகள். என்றாலும், ஜெய்பீம் படத்திற்குத் தொடர்பில்லாத ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாவுக்குச் செய்யும் உதவியை விடவும் கூடுதல் பொறுப்பு பார்வதி அம்மாவைப் பொறுத்து படத்தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் உண்டு. 

 திரைப்படம் சமூக மாற்றத்தின் கருவி என்பது அப்போதே மெய்ப்படும்.. 

 நன்றி: Yamuna Rajendran

No comments:

Post a Comment