Monday, May 24, 2021

பரவசமும் பரிதவிப்பும்




புரட்சிக்கவியில் புரட்சிக்கவி சொன்ன சொக்கவெள்ளிப் பால்குடம் எப்படி இருக்கும்? காலை விடியலில் கடலில் மூழ்கி சிவப்பு மங்கி மஞ்சளாகி வெளிச்சமாகும் அக்கணம்.. காதலுக்குப் பூரண பொற்குடம் வைத்து இரவுக்கு நன்றி சொல்லும் பொழுதாக இருக்குமோ…?

பொற்குடமாம்.. அதிலும் பூரண பொற்குடமாம்.. அள்ள அள்ள குறையாத ஓளி மங்காதப் பொற்குடம். பொற்குடம் நிரம்பி பூமி எங்கும் மரங்களாக பூக்களாக பறவைகளாக அவனுக்குள் அவள் பொற்குடமாகும்போது காதல் மட்டுமல்ல வாழ்க்கையும் பூரணத்துவம் பெறுகின்றது. அதனால் தான் மனித இனம் தேச இன மொழி எல்லைகளைக் கடந்து எப்போதும் காதலைக் கொண்டாடுகிறது, . 

வாழ்தல் என்பது உண்டு உறங்கி காமப்பசி தீர்க்க தின்று முடிவதல்ல. காதலிருக்கும் வாழ்க்கை மட்டுமே பூரணத்துவம் பெறும். . அவள் பூரண பொற்குடமாய், அவன் வாழ்வில் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை..

 அவள் யார் என்பதைச் சொல்லவரும்போது அவன் சொற்களின் வனத்தில் மாட்டிக்கொண்ட திசையறியாத பயணியைப் போல அலைகிறான்.

சொற்களிலிருந்து தப்பிக்கவும் ஒருசொல் தான் தேவை உன் பெயரைப் போல (பக் 57) என்று அறிந்து கொள்ளும் போது அவள் பறவையாகிவிடுகிறாள். 

என்ன இது… அவன் உள்ளங்கை நீல வானமாகிவிடுகிறதே.. 

ஒரு பறவையைப் போல உனை விடுவித்தேன். என் அகங்கை முழுவதும் ஆகாய நீலம். (பக் 40) அவன் உள்ளங்கையே ஆகாயமாக்கியவள் எங்கு சென்றாள்..! 

சிறகுகளால் திசைகளை உதறிவிட்டு நீலவெளியில் ஏன் கரையவேண்டும்?” (பக் 18) அசைவின்மையை முகர்ந்தபடி இருக்கிறது தும்பி. அவள் விரல்பிடித்து சாலையைக் கடக்கிறது நத்தை. அவனோ கவிஞன்…

வானும் இல்லை 

பூமியும் இல்லை 

அந்தரத்தில் ஒன்றாகப் பயணிக்கின்றன 

பரவசமும் பரிதவிப்பும்.” (பக் 76)

 அவன் என்ன செய்வான்? மரத்தில் காற்றில் பனித்துளியில் சிறகுகளின் படபடப்பில் அவன் அவளுடனேயே பயணிக்கிறான். தூரிகை, எழுதுகோல், மயிலிறகு, மலர்ப்படுக்கை எதைக்கொண்டு அவளை அலங்கரிப்பது? “பொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது..” 


இரைை தேட சென்ற அவன் திரும்பவில்லை என்றால் அவள் இறந்துவிடுவாள்… அவனின்றி அவள் இல்லை. இருவாச்சி பறவைகளின் வாழ்க்கையை அறிந்தவள் அவள்… அதனால் தான் அவள்

 “ பறந்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட வேண்டும்” என்று துடிக்கிறாள். .

 “இரத்தம் வழிய கைகளில் ஏந்துவதைத் தவிர கண்ணாடிக்கோப்பைகள் உடையும் போது அவனால் என்ன செய்ய முடியும்? 

அவன்் கவிஞன். சொற்களற்ற பாடலை அவனில் எழுதிக் கொண்டிருப்பவள் அவள் தான் .. அவன் கவிதை இன்னும் முடியவில்லை. “

வந்து சேராத ஒருசொல் காத்திருக்க வைத்திருக்கிறது எல்லாச் சொற்களையும். (பக் 64) … 

இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அவன் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை மையமாக அவளே இருக்கிறாள்

இரு கண்களாலும் 

காணண இயலாத 

நெற்றியின் மத்தியில்

 நின்றெரிகிறாள் “ 

எரியட்டும். ….

 கவிஞர்பழநிபாரதிக்கு வாழ்த்துகள் 

கவிதைை நூல்: பூரண பொற்குடம்

 கவிஞர் பழநிபாரதி.. 

கொன்றை வெளியீடு:

 விற்பனை உரிமை: தமிழ்வெளி 

கைபேசி: 9094005600

1 comment:

  1. நூலினை வாங்கி வாசிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி சகோதரி

    ReplyDelete