Saturday, October 17, 2020

தமிழில் முனைவர் பட்ட ஆய்வுகள்

 நேற்று( 17/10/2020)கல்லூரி ஒன்றில் முனைவர் பட்ட ஆய்வுகள்

மீள்வாசிப்பும் அதைப்பற்றிய மதிப்புரை நிகழ்வும்
..
5வது நாளில் மதிப்புரை வழங்க என்னை அழைத்திருந்தார்கள்.
மீள்வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரு ஆய்வுகளையும்
முழுமையாக வாசிக்கும் அனுபவமும் கிடைத்த து.
பொத்தம் பொதுவாக இன்றைய ஆய்வுகள் மீது
எனக்கிருந்த அபிப்பிராயம் மேலும் உறுதியானதில்
எனக்கு வருத்தம் தான்,
படைப்பிலக்கியத்தில் செய்யப்படும் ஆய்வுகளுடன்
நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்.
அது கருத்தியல் ரீதியானது.
படைப்பிலக்கிய வனத்தில் பல்லாயிரம் மரம் செடி
கொடிகள் முளைக்கும் வளரும் கிளைப்பரப்பும்
பறவைகள் கூடுகட்டும் குஞ்சுகள் பொறிக்கும்.
அக்னிக்குஞ்சு அவதரிக்கும்..
மழையும் வெயிலும் வனத்தை வளப்படுத்தும்.
ஆய்வுகளுக்கு நிதி உதவிகள்..
ஒரு பேராசிரியர் எத்தனை ஆய்வு மாணவர்களைக்
கொண்டு வந்திருக்கிறார் என்பது அவருடைய பதவி உயர்வுக்கான தகுதியாகிவிடுகிறது..
ஆய்வுகள் தரமாக வெளிவர பல்வேறு விதிகளும்
பேராசிரியர்களின் பார்வைகளைக் கடந்து
பயணிக்க வேண்டி இருப்பதும்….
இப்படியாக எத்தனையோ இருந்தும்
எப்படி இந்த ஆய்வேடுகள் வெளிவருகின்றன!
எதைப்பற்றி ஆய்வு செய்தாலும்
அதில் தொல்காப்பியம் + சங்க இலக்கியம் மேற்கோள்
இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமா என்ன?
சரி… அது கூட பரவாயில்லை.
ஆனால் கொடுக்கின்ற மேற்கோள்கள்
பொருத்தமாக இருக்கிறதா?
இந்த மேற்கோளை இந்த இட த்தில்
எடுத்தாளுவது சரிதானா என்ற அடிப்படை
புரிதல் கூட இல்லாமல் எப்படி
ஆய்வு செய்ய வருகின்றார்கள்?!
கோட்பாடுகளைப் பற்றிய மேற்கோள்கள் கூட
ரொம்பவும் மேம்போக்காகவே இருக்கின்றன.
தரவுகளின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படவே
இல்லையே!
சில ஆய்வுகள் ஆய்வுக்கான கருப்பொருளை விட
முன்னுரைகள் அதிகமாக வந்திருக்கிறதே!
இதன் தேவை என்ன?


ஆய்வுகள் எல்லாமே தொகுப்புரைகளாக ,
கதைச் சுருக்கங்களாகவே இருக்கின்றன.
ஒரு சிறிய மதிப்பீட்டைக் கூட கொடுக்காமல்
நழுவிச் செல்வது ஏன்?
இதுவரை எத்தனை ஒப்பீட்டு ஆய்வுகள்
வெளிவந்திருக்கின்றன?
ஆய்வு முறைகளும் ஆய்வேடுகளின் முறையும் (pattern)
கடைசியாக எப்போது திருத்தப்பட்டிருக்கிறது?
இன்றைக்கும் மிகச்சிறந்த இலக்கிய ஆய்வுகள்
என்று குறிப்பிடும் போது இம்மாதிரியான
முனைவர் பட்ட ஆய்வேடுகளைக் குறிப்பிடாமல்
அல்லது குறிப்பிட முடியாமல் கல்வித்துறைக்கு
வெளியிலிருந்து எழுதி இருப்பவர்களின்
ஆய்வுகளை மட்டுமே எடுத்தாளுகின்றோம்.
இதைப் பற்றிய ஓர்மை கல்வித்துறைக்கு ஏன் இல்லை?
ஆய்வுகள் எப்படி இருக்கின்றன என்பதற்கு
ஒரு உதாரணத்திற்கு :
எல்லோருக்கும் தெரிந்த வரிகள்..
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில்முழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!
……….
புரட்சிக்கவி காப்பியத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால்
இந்த வரிகளை வைத்துக்கொண்டு..
பாரதிதாசனும் இயற்கையும்
பாரதிதாசன் கண்ட நிலவு
வான், நிலா, பூ, பாற்குடம், அமுதம் இத்தியாதி
சொற்களை வைத்துக்கொண்டு
சங்க இலக்கியத்தில் வான், நிலா பூ என்ற சொற்கள்
வருகின்ற மேற்கோள்களை அப்படியே எடுத்துப்போட்டு துணைத்தலைப்புகளில் புரட்சிக்கவிதையை ஆய்வு
செய்திருப்பார்கள். அதைவிட கொடுமை…
பாரதிதாசன் புரட்சிக்கவி
பாரதிதாசனின் சமுதாயப்பார்வை
அப்படின்னு ஒரு தலைப்பு கொடுத்து அந்த தலைப்பில்
“தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”
என்று சொல்லி விடுவார்கள்.
நிலவின் அழகை பசித்தவனின் பசியறும் உணர்வு நிலையுடன்
ஒன்றாக்கிய இப்பார்வை
அழகியலின் தனித்துவமான பார்வை.
இதை ஆய்வு செய்பவர் இம்மாதிரியான பார்வை
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறதா
என்று தேடக்கூட மாட்டார்.
இக்காவியம் வடமொழி பில் ஹணியத்தின்
மொழியாக்கம் என்பதால் மூல நூலில் இக்கதை
நிகழ்வு எவ்வாறு வருகிறது என்பதை தேடிக்
கண்டடைவதும் இல்லை.
ஒரு வாசகனோ ஏன் ஒரு விமர்சனமோ
கண்டடைய முடியாத புள்ளியை கண்டடைவதும்
அதை அடையாளம் காட்டுவதும் ஆய்வாளின் பணி அல்லவா ?
அதை ஆய்வாளர்களிடம் எதிர்ப்பார்ப்பது
ஒரு வாசகனின் நியாயமான கோரிக்கை.
இதைக் கவனிக்க வேண்டியது
முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மட்டுமல்ல,
அவர்களுக்கு வழிகாட்டும் நெறியாளர்களும் தான்…

Sarawanan Komathi Nadarasa

1 comment:

  1. வணக்கம
    நான் எழுதியதோ ......
    ஒரு நிமிடம்

    உண்மை தான்
    நன்றி

    ReplyDelete