Sunday, May 10, 2020

பவளக்கொடி சாட்சியாக

கனவுகள் பற்றி எரிகின்றன
கனவுத் தீ
பச்சை மரத்தில் படர்கிறது
கூடு கட்டியிருந்த பறவைகள்
உயிர்ச் சிறகுகள் விரித்து
படபடக்கும் ஓசையில்
காடுகள் உறக்கம் கலைந்து
ஓடி வருகின்றன.
மஞ்சள் முகம் கருகி விழ்வதற்குள்
கந்தர்வன் அவளைத் தூக்குகிறான்.
தூர நின்று அவளைப் பார்க்கிறது
பாதி எரிந்துப் போன பவளக்கொடி.
தென்னவன் கோவில் கதவுகள்
தீ நாக்குகளின் வெப்பம் தாளாமல்
சரிந்து விழுகின்றன.
"யானோ கள்வன்?
யானோ காதலன்!
யானே தென்திசை கூற்றுவன்!
என்னோடு முடியட்டும்
உன்னை எரித்த தீயின் நாக்குகள்
என்னை எரித்து என்னோடு முடியட்டும்."

மானை விரட்டிய சிறுத்தையின் பாய்ச்சலை
நக்கி நக்கி தீயின் நாக்குகள்
பசியாறு கின்றன.

கந்தர்வனின் மகள் கை அசைக்கிறாள்
அவள் கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக வனங்களில் விழும்
கண்ணீரின் துளிகளில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
தென்னவன் எச்சில் படாத
கனவுகளின் மிச்சம்.

No comments:

Post a Comment