Monday, May 11, 2020

ஆண்டாளும் அன்னையர் தினமும்



ஆண்டாளும் அன்னையர் தினமும்
-----------------------------------------------------
ஆண்டாளுக்கு அன்னையர் தின வாழ்த்து
சொல்லமுடியாமல் தடுப்பது எது? யார்?: ஏன்?
ஒரு கவிதையின் பயணமிது...
ஆண்டாளுக்கு வளைகாப்பு
வெண்சங்குகள் சிரித்தன..
ஆண்டாள் தன் புருஷனின் காதில்
கிசு கிசுத்தாள்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு
நீ யே தகப்பன் என்று
ஊரார் அறிய .. வளைகாப்பு..
பாற்கடல் விழித்துக்கொண்ட து.
அதானாலென்ன?
எல்லா பெண்களின் கருவறை விந்துகளிலும்
நானே இருக்கிறேன்.. அதிலென்ன சந்தேகம்?
மயிலிறகால் அவள் சூல் வயிற்தைத்
தடவிக்கொடுத்தான்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்
வைக்கலாம்..?
சொல்லுங்கள் நாதா…
ஹரியின் பிள்ளை தானே அவன்.
ஹரிஜன் என்று பெயர் வை..
அவள் வயிற்றிலிருந்த குழந்தை
காலால் உதைத்த து.
அந்த வலியில்…
அவள் கருவறை வெடித்து
அவன் பிறந்தான் ..
ஆண்டாள் தேசத்தில்
தொட்டில் குழந்தைகள்
திட்டம் அறிமுகமானது.
வெண்சங்குகள் ஒலித்தன.
…………………….



இக்கவிதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு
வெளியானது எனக்கே மறந்துவிட்ட து.
வாட்ஸ் அப்பில் சுற்றி சுற்றி இதே கவிதை
இன்று எனக்கு வந்து சேர்ந்த து தனிக்கதை!
இன்று அன்னையர் தினமாமே!
அதனாலோ என்னவோ.. இக்கவிதைக்கு
வரையப்பட்டிருக்கும் கோட்டோவியம்
இக்கவிதையின் வரிகளில் சொல்ல முடியாத
ஆண்டாளின் இன்னொரு கதையை
பனிக்குடம் உடைத்து பிரசவித்த வேதனையை
அவள் கதறலை .. ஓங்கி ஒலித்த து.
அன்னையர் தினத்தில்.., அவள் கருவறை
மட்டும் ஏன் திறக்காமலேயே இருளில்
மூழ்கிக்கிடந்த து?
அவள் காதல் ஏன்
அவளை வாழவைக்க வில்லை!
தோற்றுப்போன காதலியர் தான்
பூஜிக்கப்படும் தேவியர்களாக
கோவிலை அலங்கரிக்கும் சிலைகளாக
உங்கள் பூஜையில்…
யுகம் யுகமாக ஏமாற்றும்
காதல்வலையில் அவள் விழுவதும்
அழுவதும் ..அவள் சுமக்காத
பிரசவ வலியின் கதறலாய்..
பிரபஞ்சம் எங்கும்.. பிரவாகமெடுத்து
ஒடுகிறது.
அவள் முலைப்பால் அருந்தாத
தாலாட்டுப் பாடல்கள்
அனாதைகளாகி இப்போதும்
அலைகின்றன.
அவதாரங்களால் நிரம்பி வழியும்
உன் கதைகளில்
அவள் மறுபிறவி எடுப்பதில்லை.
****
அவளுக்காக கதறும் துளசிமாட த்தின்
கதறல்…
துளசிமாட த்தின் கதறல்
அடீயே.. அம்மா ஆண்டாளு
உருகி உருகி கரைஞ்சிப் போனியே
உன்மத்தம் கொண்டு எரிஞ்சிப் போனியே
ஆத்தா உனக்கு வாய்க்கலையே
அடியே நீயும்
அப்பன் சொல்ல கேட்கலையே
அடீயே ஆண்டாளூ..
கனவில் வந்தவன் நிஜம்தானா
கைப்பிடித்ததும் உனைத்தானா- அடியே
கனவுக்காதல் பலிச்சிடுமா
கண்மணி உன்னுயிர் பிழைச்சிடுமா..
அடீயே ஆண்டாளு..
மார்கழிக் கோலம் அழியவில்லை
சூடிய பூக்கள் வாடவில்லை
மாடும் கன்றும் திரும்பவில்லை
மணமாலை ஏனோ இரங்கவில்லை.
அடீயே ஆண்டாளு
துளசிமாடம் துடிக்குதடீ.
துயரக்கேணியில் புலம்புதடி.
தத்துவப் படகுகள் மிதக்குதடி
தமிழே உனைத்தேடி நடிக்குதடி
ஆழிச்சங்குகள் நடுங்குதடி - உன்
ஆத்தா கண்ணீரு பெருகுதடி.
அடியே ஆண்டாளு..
பாற்கடலின் பள்ளிகொண்டபுரம்
ஆழிப்பேரலையாய் உனை
ஆட்கொண்ட மர்மம் என்ன?
மவளே மவராசி..
கைத்தலம் பற்றிய கார்மேகம்
வெண்சங்கு முத்தங்கள்
கருக்கலின் கனவுகளம்மா
வா.. விடியலுக்கு வா..
விடிவதற்குள் வா.
நடுங்கும் குளிரில் வெதுவெதுப்பான
நீரில் நீராட அழைக்கிறேன்.
தோழிகள் வாசலில் காத்திருக்கிறார்கள்.
உன் கதைகளைச் சொல்லி
ஆயர்குல பெண்டிரை ஏமாற்றாதே.
கனவுகள் கனவுகளாகவே முடிந்துப் போன
அந்தக் கதையை
இந்த மார்கழித் திங்களிளாவது
சொல்லடி கிளியே.. சொல்லடி.
அடியே ஆண்டாளு.. போதுமடி..
உன்னை ஏமாற்றி
என்னை ஏமாற்றி
ஊரை ஏமாற்றி
உறவை ஏமாற்றி
காதலின் பெயரால்
கனவாகிப் போனவளே..
அடியே ஆண்டாளு
பெத்தமனசு துடிக்குதடி..
கருவறை நெருப்பில் எரியுதடி
துளசிமாடம் எரியுதடி.
ஆண்டாளு.. அடியே ஆண்டாளு..
------------------------------

#ஆண்டாள்_அன்னையர்_தினம்



4 comments:

  1. வணக்கம் சகோ கவிதை அருமை மலையாளத்திலும் படத்தை பெரிதாக்கி படித்தேன் மன்னிக்கவும் நான் மலையாள புலமை பெற்றவன் அல்ல! വെൺശംഖുകൾ இது சரியா ? வெண்சம்குகல் വെൺശങ്കുകൾ இதுதானே சரி... வெண்சங்குகள். பெரும்பாலும் மலையாளப் பத்திரிக்கைகளில் பிழைகள் வராது அல்லது இதுதான் சரியா ? ஆகவே கேட்டேன் நன்றி கில்லர்ஜி on ஆண்டாளும் அன்னையர் தினமும்

    ReplyDelete
  2. dear Killerge, by mistake my above page was deleted. hence i cut paster your comment for u to clarify the translation .

    ReplyDelete
  3. [11:40 AM, 5/11/2020] Meera: ஷம்கு..என்றுதான் மலையாள உச்சரிப்பு
    [11:40 AM, 5/11/2020] Meera: அது சமஸ்கிருத உச்சரிப்பை பின்பற்றுதல்

    ReplyDelete
  4. https://trivandrum.nic.in/ml/tourist-place/%e0%b4%b6%e0%b4%99%e0%b5%8d%e0%b4%95%e0%b5%81%e0%b4%ae%e0%b5%81%e0%b4%96%e0%b4%82-%e0%b4%ac%e0%b5%80%e0%b4%9a%e0%b5%8d/

    ReplyDelete