Wednesday, June 26, 2019

கழிவறை காதல் - நினைவுக்குறிப்புகள்

கழிவறை காதல் - நினைவுக்குறிப்புகள்
இரண்டு நிமிஷத்திற்கு ஒரு இரயில்
அறிவித்தார் அமைச்சர்.
அச்சப்பட்டார்கள் – என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்துநிற்கும்
அவஷ்தையை நினைத்து..
“ அம்மாக்களின் அவஷ்தை” என்ற தலைப்பில் என்
நிழல்களைத் தேடி தொகுப்பில் ..
இன்று பார்த்த மை டியர் ப்ரைம் மினிஸ்டர் திரைப்படம் கழிவறை காதலை
அந்த நினைவுகளை அதன் வலிகளை ஓட்ட த்தை, நாற்றத்தை, அவஸ்தையை, வெளியில் சொல்ல முடியாத சங்கட த்தை..
இப்படியாக எதை எல்லமோ கிளறிவிட்ட து.
Mere Pyare Prime Minister
மை டியர் பிரைம் மினிஸ்டர்/ என் பிரியமான பிரதமர்..
இந்தப் பட த்தை திரையில் பார்க்கும் போது பலருக்க
 இக்கதையின் கழிவறை முகம் சுழிக்க வைக்கலாம்.
ஆனால் இக்கதையின் ஒவ்வொரு காட்சிகளையும்
நான் கூர்ந்து கவனித்தேன். ஆகாயத்தில் பறந்து
 கொண்டிருக்கும் விமான ங்கள்.. இந்தக் குடிசைகளைத் 
தாண்டித்தான் தரையில் இறங்கும். 
இந்தக் குடிசைகளில் டிவி உண்டு, எல்லோரிடமும் 
அம்பானி புண்ணியத்தில் கைபேசி உண்டு, 
ஏன் Wi-fi வசதி கூட உண்டு.
ஆனால் கழிவறை ???????????????????
Image result for mere pyare prime minister (2019)
50 மாடி கட்டிடம், ஒரு மாடியில் 10 வீடு. 2BHK .
 ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கழிவறை வீதம் அந்த ஒரு கட்டிட்த்தில் 
மட்டும் 1000 கழிவறைகள்!
ஆனால் பத்தாயிரத்திற்கு அதிகமாக மக்கள் வசிக்கும் 
குடிசைப் பகுதியில் ஒரு கழிவறை கூட இல்லை!!! 
அந்த குடிசைப்பகுதியின்
சிறுவர்கள் பேசிக்கொண்ட து.. முகத்தில் அறைகிற மாதிரி இருந்த து.
இலக்கியத்திற்கும் கழிவறைக்கும் கூட ரொம்பவும்
நெருக்கம் உண்டு. இலக்கியக் கூட்டங்களை நட த்துபவர்கள்
 எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். போவதில் 
பிரச்சனை இல்லை. ஆனால் மணிக்கணக்கில் மைக் கிடைத்துவிட்ட
குஷியில் தமிழ்த் தாகம் தணிய அவர்கள் தொண்டைவறள
 பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடிகிறது.
மணிக்கணக்கில் அடக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவதை..?

தமிழ்த் தாய் ஒரு பெண் என்பதால்
அவளுக்கும் இந்த அவஸ்தைப் புரியும் என்பதால்
 தமிழ்த்தாய் தமிழ் வளர்க்கும் / தமிழ் இலக்கியம்
வளர்க்கும் இடங்களில் எல்லாம் கழிவறையும் இருக்க வேண்டும்
 என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும்.

என் தனியறை கதைகளிலும் புதிய ஆரம்பங்கள்
கதை தொகுப்பிலும் இப்பிரச்சனையை மையமாக
கொண்ட கதை மாந்தர்கள் உண்டு.
இவர்கள் கற்பனை பாத்திரங்கள் அல்ல என்பதும்
இப்படியான அவஸ்தை என் வாழ்க்கையில்
 கடந்தக் காலத்தின் ஒரு மூலையில் என் அனுபவத்தின் 
வலியாகவும் இன்றும் அதன் நினைவுகள் கூட 
என் வயிற்றைக் கலக்கி .. ஓட வைக்கிறது.
எனக்குத் தெரியும்..
இப்பகுதியில் வாழும் ஒரு சிறுவன் தன் அம்மாவுக்காக
 கழிவறை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகள் அவன் டில்லி வரை பயணித்து
தன் கைப்பட எழுதிய கடித த்தை பிரதமரின் அலுவலகத்தில்
 கொடுத்துவிட்டு வரும் காட்சி…
தொண்டு நிறுவனத்தின் வெளி நாட்டுப்பெண் வசிக்கும் வீட்டு கழிவறையை அச்சிறுவன் தன் கண்கள் விரிய காணும் காட்சிகள்
எனக்கு இன்று கழிவறை நினைவுகளை எழுப்புகிறது.
வங்கியில் வேலைப் பார்க்கும் போது தாஜ் ஹோட்டலில் 
எங்களுக்கு பயிற்சி வகுப்பு. அந்த ஹோட்டலின் கழிவறையை
 பொன்னிறத்தில் மின்னிய தண்ணீர்க் குழாயை.. 
கண்ணாடியை.. விரிப்புகளை
கழிவறையில் சுகந்த மணம் சுழன்று வந்த தை…
அன்று நாங்களும் இப்படித்தான் … 
கண்கள் விரிய கொஞ்சம் அச்சத்துடன் தொட்டு தொட்டுப் பார்த்து .
. கழிவறையைப் பயன்படுத்தினோம்.!!
கழிவறையின் விலை என்ற கவிதையில்
“கழிவறை கட்டணம் இருந்தால் மட்டுமே சாப்பிட முடியும் “ என்று
கழிவறைக்கு கட்டணம் வசூலிக்கும் கொடுமையை எழுதி வைத்தேன்.
மாப்பிள்ளை வீட்டில்
வசதியானவர்கள்’ என்றார் அப்பா.
‘அப்படி என்ன கொட்டிகிடக்கிறதாம்’
அலுத்துக்கொண்டாள் அம்மா.
‘அடப் போடீ வீட்டோ ட இருக்கே கக்கூசு ‘
……..
‘நித்தமும் டப்பாவுடன் ஒடிக்கொண்ருக்கும்
அம்மாவும் அப்பாவும் எங்கள் சால்வீடுகளின்
காலைவணக்கம் கேட்டு
கண்விழிக்கிறது – கழிவறை சூரியன்.
இக்கவிதையில் “கழிவறை சூரியன்” என்ற சொல் பேசுபொருளாகி
கவிதையைத் திசைத்திருப்பிய சுவராஸ்யமான கதைகளும் உண்டு.
கழிவறை கட்ட
அடிக்கல் நாட்டியது அப்பா
கட்டியது நாங்கள்
திறந்து வைத்தவர் மகன்
தண்ணீரில்லாமல் சொறிநாய்களின்
சொர்க்கமாய் – ஒர் அரசியல் பரம்பரையின்
ஆவணமாய் – உடைந்த கதவுகளுடன்
கழிவறைகள் இன்றும் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.
பெரு நகரத்தில் நீங்கள் பார்க்க விரும்பாத/பார்க்க
மறுக்கின்ற முகமாய் .. இப்போதும்..
கழிவறைகள் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.
கவிதைகள் மட்டுமல்ல
கழிவறைகள் கூட காலத்தின் கண்ணாடி என்று 
இக்கவிதைகளை விமர்சித்த எழுத்தாளர் கே ஆர் மணி 
“கழிவறை காதல்” என்று எழுதி இருந்தார்.
இப்போதும் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்வதிலும்
 விதம் விதமாக அலங்கரிப்பதிலும் (!!!) 
எனக்கு அடிக்கடி அருள் வந்துவிடுவதாக வீட்டில் கமெண்ட்
 வரும்போது ஒரு சாமியாடி ரேஞ்சுக்கு நான் ஆடுவது..
கொஞ்சம் ஓவர்தானோ..

No comments:

Post a Comment