Saturday, March 23, 2019

அவளும் நேருவும்

இலக்கியவேல் மாத இதழில்  " அவளும் நீங்களும்"
என்ற தொடர் எழுதுகிறேன்.
அவளைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்தப் பக்கங்கள்,'
 தெரியாதப் பக்கங்கள், நீங்கள் கண்டும் காணாமல்
புரட்டும் பக்கங்கள், நீங்கள் காண மறுக்கும் பக்கங்கள்,
நீங்கள் கண்டு கொண்டாலும் அவள் பார்வையை
புரிந்து கொள்ள மறுக்கும் பக்கங்கள்...
இப்படியாக அவளும் நீங்களும்...
 நம்பிக்கையுடன் நீங்கள் வாசிக்கலாம்..
காரணம்.
அந்த உரையாடல் அவளுக்கானதல்ல
உங்களுக்கானது தான்.

மார்ச் இதழில்
அவளும் நேருவும்

Archana Balmukund Sharma
அவளும் நேருவும்

அவள் வாழ்ந்த இட த்தையும் வாழ்ந்த
வாழ்க்கையையும் கொண்டாட முடியாதுதான்.
அவளைக் கொண்டாடுவதும் நம் நோக்கமல்ல.
அவள் அந்த இட த்தில் அவளைப் போல
வாழ்ந்தப் பெண்களுக்கு வழிகாட்டியாக
இருந்தாள் என்றும்  சொல்ல வரவில்லை.
. ஆனால் பாதுகாப்பாக இருந்தாள்.
பெண்ணுடலைப் பேசும் பெண்ணியத்தளம்
அப்பெண்களின் பாதுகாப்புகளைப் பற்றிப்
பேச வேண்டிய அவசியத்தை உணரவில்லை.
உடல் உழைப்பையும் உழைப்பாளர்களின்
உரிமையையும் முன் நிறுத்தும் தொழிற்சங்கங்களில்
அப்பெண்களுக்கான உரிமைகள் பேசப்பட்ட து இல்லை.
நுகர்ப்பொருளின் தரத்தையும் பாதுகாப்பையும்
முதன்மைப்படுத்தும் முதலாளித்துவம்
இந்த நுகர்ப்பொருட்களை ஜடப்பொருளாக க் கூட
தங்கள் சந்தை வணிகத்தில்  கணக்கு வைப்பதில்லை..
அதனால் தான் தங்களின் பாதுகாப்புக்காக
தங்களின் உரிமைகளுக் காகப் போராடிய
அவளைக் காமட்டிபுரம் தங்களின் காவல் தெய்வமாக
கொண்டாடியது.
இன்றும் காமட்டிபுரத்தின் விளக்குகள் மின்னும்
குடிசைகளில் அவள் புகைப்படம் பூஜைக்கு
உரியதாக மாட்டப்பட்டிருக்கிறது.

அவளும் அவர்களில் ஒருத்தியாகத்தான் வாழ்ந்திருக்கிறாள்.
அவளும்  நம்மைப்போல ஒரு குடும்பத்தில் (குஜராத்தில்)
பிறந்து வளர்ந்தவள். காதல், கற்பு, ஒழுக்கம் , நியாயம்
தர்மங்களைப் பேசும் குடும்பம்.. எல்லா பெண்களையும்
போல பதின்ம வயதில் அவளுக்கும் காதல் வருகிறது.
காதல் தான் எத்தனை அழகானது.
கவித்துவமானது. புனிதமானது..
அவளும் காதலித்தப் போது அப்படித்தானே
நினைத்திருப்பாள். ஆனால் அவளுடைய காதல்
அவளைக் காமட்டிபுரத்தில் தள்ளியது.
அவள் காதலனே அவளை விற்றான்.
இப்படித்தான் அவள் அந்த தொழிலுக்கு வருகிறாள்.
ஆனால் அவள் தன்னைப் போல
இத்தொழிலுக்கு தள்ளப்படும் பெண்களுக்காக
போராட முன் வருகிறாள்.
அவள் குரல் தனித்து ஒலிக்கிறது.
கங்குபாய் சொல்கிறாள்…

“ நீங்கள்  நினைக்கலாம். இதை
எல்லாம் நாங்கள் விரும்பிச் செய்வதாக.
நான் சொல்வதை நம்புங்கள்.
எங்கள் தொழில் ஒன்றும் நீங்கள்
நினைப்பது போல அவ்வளவு எளிதானதல்ல.
நம் தேசத்திற்காக எல்லையில் நின்று
தொடர்ந்துப் போராடும்  படைவீர ர்கள்
இருப்பதால் தான் நீங்கள் நிம்மதியாக
இருக்கிறீர்கள். ஒருவகையில் நாங்களும்
அவர்களைப் போலத்தான். எங்கள் உடல்
ஆண்களின் மிருக இச்சைக்கும் அதீத
காமப்பசிக்கும் தீனிப்போட்டுக்கொண்டே
இருப்பதால் தான் உங்கள் பெண்கள்
பாதுகாப்பாக இருக்கிறார்கள். நிம்மதியாக
நடக்கிறார்கள்…”

தூய்மைவாதம் பேசுபவர்களுக்கு கங்குபாயின்
சொற்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இன்றும் பெண்ணிய தளத்தில் கங்குபாய்
முன்வைத்த இக்கருத்து விவாதப் பொருளாகவே
வலம் வருகிறது.
காமட்டிபுரத்திற்கு வந்துச் செல்லும் ஆண்கள்
தங்கள் முகமூடியைக் கழட்டுவதே இல்லை!

இத்தொழிலில் இப்பெண்களுக்கு இலவசமாக
கிடைப்பது பால்வினை வியாதியாகத்தான்
இருக்கிறது. கருக்கலைப்பின் மாத்திரை
மருந்துகளைத் தாண்டியும் இப்பெண்கள்
பிரசவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம்
குறித்து யாருக்கும் கவலை இல்லை.
இப்பிரச்சனைகளை முன்வைத்து போராடிய
கங்குபாய் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற
வேண்டும் என்று
பாரதப் பிரதமர் நேருவைச் சந்திக்கிறாள்.

இத்தொழில் செய்யும் பெண்களைச் சந்திக்கும்
எல்லோரும் சொல்லும் அறிவுரைகளைத்தான்
நேருவும் அவளிடம் சொல்கிறார்.
அவளும் நேரு சொல்வதை எல்லாம்
கேட்டுக்கொள்கிறாள்.
நேருவிடம் கேட்கிறாள்..

“எனக்கும் நீங்கள் சொல்வதைப் போல
வாழ்வதற்கு ஆசை தான்.
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு
நான் தயாராகத்தான் இருக்கிறேன்.
யார் தருவார்கள் அந்த வாழ்க்கையை!
நீங்கள் என்னைத் திருமணம் செய்து
கொள்வீர்களா பண்டிட் ஜீ ?”

நேரு அவளிடம் என்ன பதில் சொல்லி இருக்க
முடியும்? !
அவர் சட்டையில் குத்தியிருந்த ரோஜாக்களின்
முட்கள் முதல் முறையாக அவரிடம் எப்போதும்
நிரம்பி இருக்கும் வசீகரமான புன்னகையை
காயப்படுத்தின.

இப்பெண்களின் வரலாறு காளியின் கோரதாண்டவத்துடனும்
தசாராவின் கொண்டாட்ட்த்துடனும் முடிந்துவிடுவதில்லை.

தசாரா பண்டிகையின் போது தீமைகளை
அழித்தொழிக்க 9 நாட்களும் பூமிக்கு வரும்
தேவியரின் (காளி, கொற்றவை) சிலைகளைச்
செய்ய இந்தப் பெண்களின் வீட்டிலிருந்து
ஒரு பிடி மண் … வேண்டும். கங்கைக் கரையிலிருந்து
மண், பசுமாட்டின் மூத்திரம், பசுவின் சாணம்,
இத்துடன் இந்தப் பெண் கொடுக்கும் அவள்
பாதம் பட்ட அவள் வீட்டு ஒரு பிடி மண்
எடுத்து தேவியின் சிலைகள் செய்யப்படுகின்றன..
கோவில் பூசாரியோ அல்லது சிலை செய்பவரோ
அப்பெண்கள் வாழும் தெருவுக்குப் போய்
அவள் வீட்டு வாசலில் காத்திருந்து
அவள் மறுத்தாலும் கெஞ்சிக் கேட்டு
பெற வேண்டும். ஏனேனில் அவள் தரும்
ஒரு பிடி மண் கிடைக்கவில்லை என்றால்
தேவியின் சிலை பூரணத்துவம் பெறாது.
இந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது.
இது ஏன்?
இதற்காக சொல்லப்படும் காரணங்கள் எத்தனை
இருந்தாலும்..
அத்தனையும் புனைவுகளின் தந்திரங்களாகவே
இருக்கின்றன.

பெண்வழிச் சமூகம் மாறி சமூகத்தின் தலைமை இடம்
ஆண் கையில் மாறும் போது பெண்ணின் விவசாய
நிலமும் உற்பத்தியும் ஆண் வசமாகிறது.
மருதம் கொடுக்கும் உற்பத்தி வளம்
சொத்து மதிப்பாக மாற்றம் பெறும் போது
அதை தனக்குப் பின் தன் வாரிசு மட்டுமே
அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.
இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை
திருமண உறவில் உறுதி செய்யப்படுகிறது.
இந்த ஏற்பாட்டை எதிர்க்கும் பெண்களை
ஆண்களின் அதிகாரம் விலக்கி வைக்கிறது.
இப்பெண்கள் ஒரு பெண்ணுக்கான சிறப்பும்
தகுதியும் அடையாளமும் திருமணம் என்று
மாற்றப்படுவதை எதிர்க்கிறார்கள்.
அப்பெண்ணுடலை இழிவுப்படுத்திய ஆண்மைய
அதிகார சமூகம்
தாய்ச்சமூகத்தின் அறிவாகவும் ஆற்றலாகவும்
வலிமையாகவும் இருந்தப் அப்பெண்களை
அவ்வளவு எளிதில் மறந்துவிடவில்லை.
அதன் எச்சமாகத்தான் அப்பெண்ணின்
ஒரு பிடி மண்ணில் தேவியின் ஊர்வலங்கள்
இன்றும் தொடர்கின்றன.
பெண்ணுடல் வரலாற்றில் நடக்கும் இந்த
முரண்பாடு.. மகிசாசுரணின் வத த்தில்
முடிவு பெற முடியாமல் தொடர்கிறது.

2 comments:

  1. மிக முக்கியமான எண்ணப் பதிவு. பெண்ணியம் பேசுபவர்கள் பதில் தரட்டும்.மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. நாமும் பெண்களை இப்படத் தானே சிறுவயதில் பார்த்தோம் என மனவருத்தம் அடைகிறேன். தலை குனிமனிய பதிவிடுகிறோம்

    ReplyDelete
  2. கங்குபாய் நேருவிடம் கேட்டது சரியான கேள்வி! பெண்கள் விருப்பப்பட்டாச் சாக்கடையைத் தேர்வு செய்கிறார்கள்? தேவி சிலைக்குப் பிடி மண் செய்தி எனக்குப் புதுசு. தாய்வழிச் சமூகம் தந்தை வழியானது எப்போது? இதைப் பற்றிய ஆய்வு முடிவுகள் தெரிந்தால் சொல்லுங்கள். சிறப்பான பதிவு. தொடர்கிறேன் நன்றி.

    ReplyDelete