Monday, April 3, 2017

சோ தர்மனின் சூல்..வெற்றிலைகள்

Image result for சோ தர்மனின் சூல்


சூல் கொண்ட கண்மாய் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன.
அந்த கறுத்த பனைமரத்தின் அரசியல் என்னைப் பயமுறுத்துகிறது. 
தொட்டில் கட்டவும் கிளைகள் இல்லாத பனைமர நிழலில் 
என் பிள்ளைகள் காற்றில் தொட்டில் கட்டி
 வெயிலில் உறங்குகிறார்கள்.


ஒரு வாரமாக சூல் கதைப் பாத்திரங்களுடன் நான்.. 
என் நினைவுகள் வாழும் வரை கொப்புளாயி என்னுடன் இருப்பாள் .. 
வெற்றிலையைப் பார்க்கும் போதெல்லாம்
உருளைக்கொடி மகாலிங்கம் பிள்ளையும் தாமிரபரணி நாடாரும் வெற்றிலைக்கொடிக்கருகில் என்னுடன் உரையாடுவார்கள். 
அந்தக் கண்மாயும் நீர்ப்பாய்ச்சியும்
வரலாற்றின் சுவடுகளாய் என் மண்ணின் பெருமையை 
மண்ணை நம்பி வாழ்ந்த எம் மக்களின் மகத்துவத்தை
எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும் .. 
குஞ்ஞான் அரண்மனை சிறையில் அடைக்கப்பட்டு 
சித்தரவதைக்குள்ளாகும் போது சொல்லும் அருள்வாக்குடன்
 சூல் என்னளவில் முடிந்துவிடுகிறது.
அதாவது 406 வது பக்கத்துடன் முடிந்துவிடுகிறது.
 பக் 407 முதல் 500 வரை...? 
சூல் ... .
விமர்சனங்களுக்குரிய பல்வேறு அரசியல் நிகழ்வுகள்
நடைபெற்ற காலக்கட்டத்தில் ஒரே ஒரு தலைவரை மட்டும்
 கதைப் பாத்திரத்துடன் இணைத்து வைத்து
சொல்லப்படும் கிண்டல் -- பக் 459 - இதை வெறும்
உரையாடலாக மட்டும் எண்ணி என்னால்
 கடந்து செல்ல முடியவில்லை. தருமன்...

சூல் கதைமாந்தர்கள் நிஜமானவர்கள். சந்தேகமில்லை.
கொண்டாடப்பட வேண்டிய சம்சாரிகள்.
 ஆனால் இதெல்லாம் சமூகத்தின் ஒரு பக்கம் மட்டும் தான்.
இதையும் தாண்டிய தீண்டாமையும் பெண் அடிமைத்தனமும் 
சாதியமுகமும்
இதே சூல் பிரசவித்த சமூகத்தின் இன்னொரு பக்கம்.
நீர்ப்பாய்ச்சியின் திறமையைக் கொண்டாடும் போது
அதுவே அவனுக்கான தந்தைவழி சொத்தாக அறிவாக
மாற்றம் பெறும் அரசியல் என்னைப் பயமுறுத்துகிறது.

... எல்லோரையும் போல நானும்
 இந்த அரசியல் பார்வைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு..
வாசிக்கப் பழக வேண்டும். 

சூல்... சூல்.. சூல் ..
பனிக்குடம் உடைந்து கண்மாய் எங்கும் தண்ணீர்..
மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.
கரையோரத்தில் பனைமரங்கள்.
தாமிரபரணி என் கனவில் மட்டும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
என் ஆச்சி வெற்றிலை இடிக்கும் சத்தம்..
சூல்.. கதைமாந்தர்களையும் தாண்டி என்னை
எனக்குள் என் வெற்றிலைகளைத் தேடி பயணிக்க வைத்தது.
 எப்போதாவது தான் வாசிப்பில் இப்படியான அனுபவங்கள் ஏற்படும்.

4 comments:

  1. சோ.தர்மன் மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது 'சூல்' இன்னும் படிக்கவில்லை. 500 பக்கம் படிப்பதென்றால் அதுவே வாசகனுக்குக் கொடுக்கப்படும் பெரிய தண்டனை என்று நினைப்பவன்ஆ நான். ஆனால்தர்மன் நியாமாகத் தான் எழுதிய்ருப்பார். அந்தக் கதைக்கு அவ்வளவு நீளம் தேவைப்பட்டிருக்கவேண்டும்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. மிகச் சிறந்த படைப்பிலக்கியம்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்லதொரு அறிமுகம். படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது உங்கள் பதிவு மூலம். நன்றி.

    ReplyDelete