40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம்.
காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப்
பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர் என்று அறிவித்துக்கொண்ட
பொதுவுடமைவாதி. எப்போதும் கதர் ஆடை, எளிமையான வாழ்க்கை,
எப்போதும் பேருந்து பயணம், குடிசை வாழ்க்கை
காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா-என் தோழனே
பசையற்று போனோ மடா
கொச்சைப் பிழைப்பறி யோம்
கொலை திருட்டும் அறியோம்
இச்சகப் பேச்சறி யோம் - என் தோழனே
எத்தும் புரட்டறி யோம்
என்று தான் எழுதியபடியே கடைசிவரை வாழ்ந்த மனிதன்.
குடிசை வீட்டில் வாழ்ந்துக் கொண்டிருந்த ஜீவாவைப் பார்த்து
மனம் வருந்திய அன்றைய முதல்வர் காமராஜர் "அரசு சார்பில்
வீடு கொடுக்கிறேன், அங்கே சென்றுவிடு" என்று கூறியபோது
"எல்லோருக்கும் வீடு கொடுங்கள், அப்போது எனக்கும் ஒன்று
கொடுங்கள். அதுதான் உண்மையான சோசலிஷம்" என்று
காமராசருக்கே பாடம் சொன்னவர்.
1945ல் க்டலூர் சட்டமன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த
சட்டமன்ர உறுப்பினர் குலசேகரதாசின் மகள் கண்ணம்மாவை
திருமணம் செய்து கொண்டார். அத்திருமணத்தில் தன் தோழர்கள்
10பேரை அழைத்திருந்தார். பத்து ரூபாய் கொடுத்து இரு மல்லிகைப் பூமாலையும் மீதமுள்ள பணத்தில் சாக்லேட் மிட்டாய்களும் வாங்கி வரச் சொன்னார். தோழர்களுக்கு அவர் செயல் எதுவும் புரியவில்லை.
மாலை மாற்றிக்கொண்டு அனைவருக்கும் சாக்லேட் கொடுத்து
திருமணம் முடிந்தது என்று அறிவித்தார். ஓராண்டில் ஒரு பெண்மகவைப்
பெற்றெடுத்த கண்ணம்மா கண்ணை மூடிவிட்டார்.
அக்குழந்தை தாய்வழி தாத்தாவின் வீட்டில் வளர்ந்தது.
1948, ஜனவரி 21 ல் N K கிருஷ்ணன் தலைமையில் பத்மாவதி
அம்மையாரை மறுமணம் செய்து கொண்ட போதும் நெருங்கிய
நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார். அவர்களுக்கு தேநீர் மட்டும்
வழங்கப்பட்டது.
முதல் மனைவி மூலம் தனக்குப் பிறந்த தன் மகளை 17 ஆண்டுகள்
கழித்து 1963ல் சென்னையில் ஜனசக்தி அலுவலகத்தில் சந்திக்கிறார்.
அச்சந்திப்பு இப்படித்தான் நடந்தது.
"ஜீவா இருக்கிறாரா.."இரு பெண்கள் பரிவான குரலில் கேட்கிறார்கள்
"என்னம்மா வேண்டும்..?
-உங்களைத் தான் பார்க்க வந்தோம்-
"நீ யாரம்மா?
அந்தப் பெண்கள் பதில் சொல்லவில்லை.
ஒரு துண்டுக்காகிதத்தில் அவர்களில் ஒருத்தி எழுதுகிறாள்
"என் தாத்தா பெயர் குலசேகரதாஸ்,. என் அம்மா பெயர் கண்ணம்மா"
ஜீவா அத்துண்டு காகிதத்தை வாசிக்கிறார்.
'என் மகள்" என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்...
இப்படித்தான்.. ஜீவா என்ற மனிதன் பற்றறு வாழ்ந்திருக்கிறார்.
1960 செப்டம்பர் 19, இரவு மதுரையில் இராஜாஜி விளையாட்டுத்திடலில்
நடைபெற்ற கூட்டத்தில்" ஆட்சி மொழியும் கம்யூனிஸ்ட் கட்சியும்"
என்ற தலைப்பில் ஜீவா உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் துண்டுப் பிரசுரத்தில்
"புரட்சியாளர், புதுமை எழுத்தாளர், அரசியல் அறிஞர் ப. ஜீவானந்தம்
பேசுவார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேடையில் பேச வந்த ஜீவா அத்துண்டு பிரசுரத்தில் இருந்த அடைமொழிகளைக் குறிப்பிட்டு "
" என் மீது கொண்ட அன்பின் காரணமாக இத்தகைய
அடைமொழிகளைத் தந்துள்ள தோழர்களே! தயவு செய்து இனி இம்மாதிரி
செய்யாதீர்கள். "தோழர் ஜீவா" என்ற வார்த்தையை விட எனக்கு
கவுரவம் தரக்கூடிய வார்த்தைகள் வேறு இல்லை" என்று வேண்டுகோள்
வைத்தார்...
அடைமொழிகளின் அடையாள அரசியலில் ஊறிப்போன இன்றைய
தமிழ்ச் சமூகத்திற்கு தோழர் ஜீவா ஒரு கடந்தக் காலமாகி...
தோழர் ஜீவாவின் இயற்பெயர் சொரிமுத்து ஐயனார்.
பெற்றோர்: பட்டம்பிள்ளை & உமையம்மாள்.
நாகர்கோவில் அடுத்த பூதப்பாண்டி ஊரில் 1907 ஆக 21 ல் பிறந்தார்.
1963 ஜனவரி 18, தன் 56 ஆவது வய்தில் மறைந்தார்.
தோழர் ஜீவாவின் நினைவினைப் போற்றுவோம்
ReplyDelete