இனறு, இந்த இரவு
அவன் வரப்போகும் இரவு.
உங்க்ள் ஊரும் நகரமும்
விலக்கி வைத்தவன்
இன்று வரப்போகிறான்.
நீங்கள் நயவஞ்சகமாக நஞ்சூட்டிக்
கொல்ல நினைத்தவன்
இன்று வரப்போகிறான்..
இடுகாட்டில் குடிசைப்போட்டவன்
இன்று வரப்போகிறான்
..
ஆதிரைகள் என் கடற்கரையில்
தூங்குகிறார்கள்
குடிசைகள் எங்கும்
மார்கழி மாத முழுநிலவு காய்கிறது.
தோழியர் திருவாதிரை களியுண்டு
கடற்கரையில் ஆடுகின்றார்கள்.
தெற்கும் வடக்கும் தடுமாறும் தருணத்தில்
ஒற்றைக்காலூன்றி
உயிர்க்காத்த என் தலைவன் வருகின்றான்.
அவன் அடி முடி அறிவது
உங்களுக்கு சாத்தியமில்லை.
போராளிகளுக்கு மட்டுமே
அவன் மூன்றாவது கண்ணின்
முகவரி தெரியும்
நட்சத்திரங்களே.. இந்த இரவு
நீங்கள் அறிந்திராத நீண்ட இரவு.
காத்திருக்கிறேன்...
அரூபமாய் என்னருகில்
அவன் ஆடும் தருணத்தில்
இந்த நீண்ட இரவில்
அது நடக்கும்...
பராசக்தி.. சிவ காமியாய் ...
விடிவதற்குள் இன்னொரு பிறப்பெடுப்பாள்.
பூமி எங்கும் அவள் பனிக்குடம் உடைந்து
மீண்டும் மீண்டும் ஜீவனின் தொட்டில்
சிவன் சிவ காமி..சிவகாமி
ஓம் நம சிவாய.
(மார்கழி மாதம் முழுநிலவு நாள், திருவாதிரை அன்று இரவுப்பொழுது
பிறநாட்களைவிட நீண்ட இரவு.)
No comments:
Post a Comment