Tuesday, October 14, 2014

சிறகசைக்கும் ஆகாயப்பறவைகள்



(SPARROW's fourth volume If the Roof Leaks, Let it Leak... edited by Menka Shivdasani, in the series of five volumes with interviews and works of 87 writers from 23 languages, was launched by the renowned dancer Jhelum Paranjape at the Kitab Khana as a part of the 100 Thousand Poets for Change event organised by Menka Shivdasani.)

பெண்களின் படைப்புகளைப் பெண்களே தொகுத்து வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் கலை இலக்கியத் துறையில் சமூகத்தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் பெண்களின் கருவூலமாக இருக்கும் அமைப்புதான்  SPARROW.  (Sound & Picture ARchives for Research On Women)
இத்தொண்டு நிறுவனத்தின்  உயிர்நாடியாக இருந்து செயல்படுபவர் எழுத்தாளர் சி. எஸ் . லஷ்மி என்ற அம்பை.

கால்நூற்றாண்டு பயணத்தில்  ஸ்பரோ செய்திருக்கும் பணிகள் தமிழ் வட்டத்தின் பெண்ணிய தளத்தில் இன்றுவரை அதிகமாக பேசப்படவில்லையோ என்ற வருத்தம் என் போன்றவர்களுக்கு உண்டு. 79 ஆவணங்கள், 30 மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் , 25 வாய்மொழிப்பதிவுகள்  என்று விரிகிறது அதன் சிறகுகள். மொழி, இனம், நாட்டின்  எல்லைகளைக் கடந்து பெண்களை
ஒருங்கிணைக்கும் அதன் பயணத்தில் தற்போது
23 இந்திய மொழிகளின் பெண் கலைஞர்கள் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் பணி. அந்த வரிசையில் இப்போது வெளிவந்திருக்கிறது 4 வது தொகுப்பு.
IF THE ROOF LEAKS, LET IT LEAK.

இத்தொகுப்பில் இந்தி, பஞ்சாபி, சிந்தி, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழி கலைஞர்களும் எழுத்தாளர்களும் இடம் பெற்றுள்ளனர். மேன்கா சிவ்தஷானி தொகுப்பாசிரியர்

பெண்களின் கதை மற்றும் கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே வெளிவரவில்லை இத்தொகுப்பு. குறிப்பிட்ட  அந்த எழுத்தாளருடனான   உரையாடல் இத்தொகுப்பில் முக்கியத்துவம் பெறுவதுடன் இத்தொகுப்பை கனமுள்ளதாகவும் மாற்றியுள்ளது. கதை , கவிதை எழுதும் பெண்களின் வாழ்க்கையும் வாழ்க்கை குறித்த அவர்களின் பார்வையும் எப்போதுமே ஒரு பொருட்டாக இலக்கிய உலகம் எடுத்துக்கொண்டதில்லை.  பெண்களுக்கு அப்படி என்ன தனிப்பார்வை உண்டு ? என்ற  எண்ணம் தான் அதற்கு காரணம். ஆனால் பெண்களின் உலகத்தையும்  அவர்களைப் பாதிக்கும் உலகியலுடன்
அவ்ர்கள் பாதித்த உலகத்தையும் ஒருசேர கொண்டு வந்திருக்கிறது இத்தொகுப்பு.

காதல், குழந்தைப்பேறு . கல்யாணம் இதற்கு அப்பால் பெண்கள் பேசும் தளங்களும் உண்டு அவர்களின் உரையாடலி ன்   ஊடாக ஒரு கருத்தை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் நீலேஷ் ரகுவன்ஷி  (பக் 145, 146)

"ஆதிவாசிகள் எப்போஈது ந ம்   சமுகத்திற்கு வருவார்கள்? என்று  பேசும் போது மகாஸ்வேடா தேவி கோபம் கொண்டாராம். நடுத்தர வர்க்கத்தின் கெட்ட புத்தியைச் சாடினாராம்.
"ஆதிவாசிகள் ஏன்  நம்முடன் கலக்க வேண்டும்? அவர்கள் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை. அவர்கள் சமூகத்தில் பெண் வெறும் அழகுப் பதுமை அல்ல.
அங்கே டவுரி கிடையாது. ஆணும் பெண்ணும் சமமானவர்கள்"என்கிறார்.

நீலேஷ் ரகுவன்ஷி இன்னொரு முக்கியமான கருத்து குறித்தும் பேசுகிறார்.
குழந்தையைக் காரணம் காட்டி வேலையை விட வேண்டியதோ அல்லது நமக்கு மனநிறைவைத் தரும் செயலை விலக்குவதோ தேவையில்லை (பக் 147) என்கிறார்.

ஆணும் பெண்ணும் வேலைக்குப் போகும்  இன்றைய சூழலில் மகப்பேறு க்குப் பின் குழந்தை வளர்ப்பை முன்னிட்டு பல  பெண்கள் வேலையை விட்டுவிடுகிறார்கள்.இப்பிரச்சனை வளரும் நாடுகளில் மட்டுமல்ல,
வளர்ந்த நாடுகளிலும் பெண்களின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கிறது.


குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்பதை இன்றைய சமூகம் ஏற்றுக்கொண்டாலும் அதைக் கடமையாக
பெண்ணுக்கு மட்டுமே விதித்திருக்கிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும்
குழந்தை தொடர்பான வேறு சிறு சிறு வேலைகளுக்கும் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஒரு பெண்ணுக்கே ஏற்படுகிறது. அதனால்தான்
அலுவலகங்களில் பொறுப்புகள் அதிகம் உள்ள உயர்பதவிகளை எட்டுவது
என்பது பெண்ணுக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால்; பெண்களே கூட அக்கூடுதல் பொறுப்புகளை விலக்கி
வைக்கின்ற நிலையைக் காணலாம். ஏனேனில் வேலை பறிபோனாலோ அல்லது வேலையை விட்டுவிட்டாலோ ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும்
பெண்ணுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

The Centre for reproductive rights என்ற அமைப்பு ஐ. நா. சபையின் மனித உரிமை
குழுவிடம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் அமெரிக்க அரசு பெண்களின் உடல்நலம் மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம்,
குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் அமெரிக்க அரசு கடுமையான விதிகளை விதிப்பதாக
குற்றம் சாட்டியுள்ளது. . இந்த அறிக்கை பெண்ணியவாதிகளிடம்
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பெண்களின் நிலை கவலை அளிப்பதாக இருப்பதற்கு இன்னொரு ஆதாரம், London school of Economics நிறுவனம் தாக்கல் செய்திருக்கும்
Centre for Economics Performance என்ற அறிக்கைதான்.  ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. பெரும்பாலும்
குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும் கூட இந்த சம்பள பாகுபாட்டிற்கு காரணம் என்கிறது
அந்த அறிக்கை. கடந்த முப்பது வருடங்களில் இந்த சம்பள இடைவெளி
குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது அந்த அறிக்கை. ஒரு கட்டத்தில் தன் குடும்பத்திற்க்காக, குறிப்பாக தன் குழந்தைக்காக வேலையைத் தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது என்கிறார் இந்த அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.

இந்த நிதர்சனங்களின் பின்புலத்தில் தான் நீலேஷ் ரகுவன்ஷியின்
பதிவு கவனத்தைப் பெறுகிறது.



ஓர் ஆண் வேலைப் பார்த்துக்கொண்டு, தன மனைவி குழந்தையிடம் அன்பு காட்டி தன பெற்றோர்களையும் கவனித்துக் கொள்கிறான் என்றால் அவனிடமிருந்து நான் இதைக் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார்.  (பக் 147)
 தன சுய அனுபவத்தில்லிருந்து இப்பெண்கள் வைக்கும் பார்வைகள் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளை நோக்கி இட்டுச்செல்லும்  பெரும் பணியையும் ஓசையின்றி செய்துவிடுகின்றன.


தன் அம்மாவும் எழுத்தாளர் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும்
மிருனாள்பாண்டே "தன் அம்மா வாழும் காலத்தில் ஏன்   கொண்டாடப்படவில்லை" என்று இலக்கிய உலகின் இன்னொரு முகத்தைப் பற்றி பேசுகிறார்.
தொகுப்பாசிரியர் மேனகா  , விமர்சகர்கள் அவர் எழுத்துகளை "எதிர்மறை எண்ணங்களின் கலைவடிவம் " என்று விமர்சிக்கப்பட்டதை  அணுகும் முறை ஆரோக்கியமாக இருக்கிறது. "விமர்சனம் என்பது அந்த  விமர்சகரின் அனுபவம், ரசனை சார்ந்தது" என்கிறார்.மேன்கா .

புயல் வீசிய அந்த இரவுகளில்
நான் எழுதிய கடிதங்கள் எங்கே போயிருக்கும்?

என்று காதலைத் தேடும் பெண்கள். (நிருபமா தத் - கவிதை .. பக் 223)

வாழ்க்கைப் புத்தகத்திற்கு
 மேலட்டையைப் போல ஓர் அங்கியைப்
போட்டுவிடாலாமென
அடிக்கடி நினைக்கிறேன் நான்.

அதில் சிலபக்கங்கள்
தங்களுக்கு எதிராகவே கலகம் செய்கின்றன

சில பக்கங்கள்
கண்ணீர்த்தடாகத்தில் குளித்து
தற்கொலை செய்து கொள்கின்றன.

சில பக்கங்கள்
தத்துவ விசாரணைகளின் ஊடாக நீந்திச் சென்று
தங்களையே கடந்து செல்கின்றன

சிலபக்கங்கள்
நான் எதுவுமே எழுத விரும்பாத பக்கங்கள்
தன்னிடமிருந்தே விவாகரத்துப் பெற்று
எப்போதும் தனித்தே இருக்கின்றன

(மஞ்சித் திவானா கவிதை பக் 193)

என்று திருமணம் என்ற நிறுவனம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்கிறது


பெண்கள் என்ன இடம் அற்றவர்களா? அவர்களுக்கு என்று சொந்த
இடமில்லையா?  நகத்தைப் போல தலையிலிருந்து  விழுந்துவிட்ட முடியைப் போல அவர்கள் தூர எறியப்பட வேண்டியவர்கள் தானா? என்ற கேள்விகளை முன்வைத்து விசாரணை செய்கிறது அனாமிகாவின் கவிதை. (பக் 37)

இத்தொகுப்பில் நான் மிகவும் விரும்பி வாசித்ததும் தன கருத்துகளில் துணிவும் தெளிவும் கொண்டதாக என் வாசிப்பில் வசப்பட்டதும் ஆதிவாசிப் பெண் எழுத்தாளரான நிர்மலா புடுல் .

ஆண்களின் ஆதிக்க மனபாவம் ஆதிவாசி ஆணிடமும் இருக்கிறது. ஆனால் அவன் தன்  சமூகத்து பெண்ணை அணுகுவதும் இன்னொரு ஆண் ஆதிவாசி இனப் பெண்ணை அணுகுவதிலும் வேறுபாடு  இருக்கிறது. மற்ற ஆண்களிடம் ஆதிவாசிப் பெண் எப்போதும் எளிதில் அடையக் கூடியவள்" என்ற ஒரு  தவறான  எண்ணம் இருக்கிறது ' என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆதிவாசிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்று, அவர்கள
தங்கள் பெண்களை நிலத்தை உழவோ ஒழுகும் கூரையைச செப்பனிடவோ
அனுமதிப்பதில்லை. In adivasai society WOMEN CANNOT PLOUGH THE FIELD OR MEND THE ROOF EVEN IF IT LEAKS" இதிலிருந்து தான் இத்தொகுப்பின் தலைப்பே
if the roof leaks lET IT LEAKS   - சமூகத்தில் தங்களின் உரிமைகளும் இடமும் மறுக்கப்பட்டதற்கு எதிரான பெண்களின் கூட்டுக்குரலாக ஒலிக்கிறது
இத்தொகுப்பு.

இந்தியப் பிரிவினையின் பாதிப்புகளை அதிகமாக தங்கள் படைப்புகளில் எழுதி இருக்கும் படைப்பாளர்களில் சிந்தி மொழி படைப்புகள் முன்னிலை வகிக்கின்றன. இத்தொகுப்பிலும் பூபதி ஹிரானந்தானியின் கதை "என் பாட்டி" அக்கருப்பொருளை மிகவும் அருமையாகக் கையாண்டிருக்கிறது.

 நிர்மலா புடுல் (சந்தாலி மொழிக் கவிதை. பக் 379)



தொலைதூரத்தில் திருமணம் செய்து கொடுக்காதே:

------------------------------------------------------------------------------------------;


தந்தையே..
என்னைத் தொலைதூரத்தில்
திருமணம் செய்து கொடுக்காதே.
உன் ஆடுகளை விற்று
என்னைப் பார்க்க வர வேண்டியிருக்கும்.

அங்கே வசிப்பது கடவுள்கள் மட்டும்தான்
மனிதர்கள் இல்லை என்றால்
அந்த இடத்தில்
என்னைத் திருமணம் செய்து கொடுத்துவிடாதே.

எண்ண அலைகளை முந்திக்கொண்டு
பறக்கும் கார்கள்
வானுயர்ந்த அடுக்குமாடி வீடுகள்
பெரிய அங்காடிகள்
இருக்கும் இடத்தில் நிச்சயமாக
என்னைத் திருமணம் செய்து கொடுத்துவிடாதே..

தோட்டங்களில்லாத வீட்டில்
எனக்கு வரன் பார்க்காதே
அங்கே விடியலை வரவேற்கும்
சேவல்கள் கூவுவதில்லை.
புழக்கடையிலிருந்து
மலையடிவாரத்தில் சூரியன் அஸ்தமிப்பதை
என்னால் பார்க்க முடியாது.

எதற்கும் உருப்படாதவன்
எப்போதும் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பவன்
திருவிழாவுக்கும் வரும் பெண்டுகளைப்பார்த்து'
விசில் அடிக்கும் மைனர்
இப்படி ஒருவனை
மணமகனாக பார்த்துவிடாதே.

கணவன் என்பவன்
குடமோ தட்டோ அல்ல.
எப்போது வேண்டுமானாலும்
என் விருப்பப்படி மாற்றிக்கொள்ள.

எப்போதும் அடிதடிகள் (பிரம்பு) குறித்து
பேசிக்கொண்டிருப்பவன்
கோடாரியையும் வில்லையும்
எடுத்துச் செல்பவன்
வங்கம், அசாம், காஷ்மீர் என்று
வெளியில் சுற்றுபவன்
இம்மாதிரி கணவனால்
எந்தப் பலனும் இல்லை எனக்கு.

ஒரு மரம் நடாதவன்
விதை விதைக்காதவன்
அல்லது
'அ' என்றால் அன்பு என்று
எழுதத் தெரியாதவன் சுமக்கும் பாரத்தை
இறக்கி வைக்க உதவாதவன்
கைகளில் பிடித்து
என்னைக் கொடுத்துவிடாதே.

எனக்கு நீ திருமணம் செய்தே ஆகவேண்டுமென்றால்
செய்து கொடு,
காலையில் வந்துவிட்டு
சூரியன் மறைவதற்குள்
வந்து செல்லும் தூரத்தில்.

நதிக்கரை ஓரத்தில்
ஒருவேளை நான் அழுதுக்கொண்டிருந்தால்
என் விசும்பல் கேட்டு
மறுகரையிலிருக்கும் நீ
வந்துவிடும் தூரத்தில்.

இங்கிருந்து வந்துப்போகும் ஆட்களிடம்
முறுக்கும் அதிரசமும்
பதிநீரும்  கொடுத்துவிடவேண்டும்.
அத்துடன்
இங்கு விளையும்
முருங்கைக்காய் பூசணிக்காய்
வெள்ளரிக்காய் வெண்டைக்காய்
அனுப்பமுடியும்..

சந்தைக்கோ திருவிழாவுக்கோ
வந்துப்போகும்
நம்ம ஊரு சனங்களைப்
பார்க்க முடியும்.
அவர்கள்
பசுமாடு கன்று போட்டுவிட்டதா?
என்று நம்வீட்டு செய்திகளைச் சொல்லுவார்கள்.

அந்த மாதிரி இடத்தில்
என் திருமணம் நடக்கட்டும்.

கடவுள்கள் அல்ல
எங்கே மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கே
எங்கே புலியும் ஆட்டுக்குட்டியும்
ஒரே நீரோடையில் தண்ணீர் அருந்துகிறதோ அங்கே
என்னைத் திருமணம் செய்து கொடு.

பகலில் வயலில்
வேலைப்பார்க்கும் போதும்
இரவில் படுக்கையில்
துயரங்களையும் சந்தோஷங்களையும்
பகிர்ந்து கொள்ளும் போதும்
புறாக்களைப் போல
இணைப்பிரியாமல் இருக்கும் ஒருவனுக்கு
என்னை ,மணமுடித்துக் கொடு.

கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்தவனாய்
பறை அடிக்கத் தெரிந்தவனாய்
டிரம் இசைக்க அறிந்தவனாய்
இருக்கட்டும் அவன்.
அப்படி ஒருவனை எனக்கு
மணவாளனாக தேர்ந்தெடு.

அவன் -
வசந்தக் காலத்தில்
என் கூந்தலை அலங்கரிக்க
வாசமுள்ள மலர்களைக் கொண்டுவர வேண்டும்.
நான் சாப்பிடவில்லை என்றால்
அவன் கோபித்துக் கொண்டு போக வேண்டும்.
அப்படி ஒருவனை
எனக்கு மணவாளனாக்க தேடு.


நம் ஆதிதாயின் குரலாய் நம் வேர்களைத் தேடி பயணித்திருக்கிறது
இக்கவிதை.

இனம், மொழி , வர்க்க வேறுபாடுகளைக் கடந்து எழுத வரும் அனைத்து பெண் படைப்பாளர்களுக்கும் எழுத்து என்பது பொழுதுபோக்கிற்கோ
புகழ் ஏணியில் ஏறுவதற்கான படிககட்டாவோ இல்லை.
அவர்களின் இருத்தலைக் காட்டும் அடையாளமாக
அவர்களின் தேடலை நோக்கிய பயணமாகவே இருக்கிறது.
அந்தப் பயணத்தில் ஆகாயமே ஓட்டை விழுந்த கூரையாக..
கொட்டும் மழை , வெயிலில் அவர்களும் அவர்களின் எழுத்துப்பயணமும்.
சிறகசைக்கின்றன.  .


.





No comments:

Post a Comment