Monday, October 6, 2014

ஜெ வும் "அம்மா " என்ற கவசமும்






எழுத்தாளர் வாசந்தி அவர்களின்
ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார்
என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன க்தைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து வாசந்தி எழுதியிருந்தது என்ன என்பதும் ஊகிக்க முடியுமே தவிர எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் வாசந்தி தன் நேர்காணலில் ஜெ பற்றி சொல்லும் போது
She wants to project herself as the Immaculate Virgin. She is Amma. 

என்று சொல்லுகிறார்.
ஜெ வுக்கு என்ன காரணம் கொண்டும் தன்னை
மாசற்ற ஒரு கன்னியாக காட்ட வேண்டிய அவசியமே இல்லை.
அவர் அப்படி காட்டியதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரின் பெண், காதலி, ரகசிய மனைவி(இந்த சொற்பிரயோகமே சரியில்லைதான்!!) சின்னவீடு ..

இப்படியான ஏதோ ஒன்றாகத்தான் அவரைத் தமிழ்நாட்டின் பெண்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  
 எம்ஜிஆரின் வாரிசாக இப்படித்தான் ஜெ , பெண்கள் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும் விருப்பமும் எம்ஜீஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது, அவர் வாழ்வில் ஏதொ ஒரு வகையில் இடம் பிடித்த ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது. அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக.



தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.
அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது. அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார். ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும் அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.

 பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய இந்த தமிழ்ச்சமூகம் ஜெவைக் கொண்டாடது என்பதை அவர் அறிவார். என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது. இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் 
 அதிகார மையத்தில் ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் "அம்மா" என்ற சொல் அவருக்கு ஒரு கவசமாக இருந்தது. அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.
ஒவ்வொரு ஆணும் தன் காலடியில் விழுந்து வண்ங்கும் போது ஜெ முகத்தை கூர்ந்து கவனியுங்கள். அதில் அந்தப் பெண் கடந்து வந்தப் பாதை தெரியும்.  ஆண் சமூகம் அவளை வஞ்சித்தது தெரியும். ஒரு சாதாரண பெண்ணுக்குரிய அபிலாஷைகளுடன் அவளை வாழவிடாமல் தங்கக்கூண்டில் சிறைவைத்தக் கதையின் பக்கங்கள் பளிச்சிடும்.


 ஜெ குறித்த இந்தப் பார்வை பேசப்பட்டிருக்க வேண்டும். அதுவும் வாசந்தி போன்ற ஒரு எழுத்தாளரால். ஆனால் அதை    விட்டுவிட்டு 

 

She wants to project herself as the Immaculate Virgin. She is Amma. 

 என்று   வாசந்தி புதுக்கதை சொல்வது தான் புதிராக இருக்கிறது.

 (ஜெ வின் வழக்கு தண்டனை செய்திகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!)



( வாசந்தியின் நேர்க்காணல்; 


http://www.thenewsminute.com/side_headlines/68)





2 comments:

  1. தன்னை வஞ்சித்த ஆணினத்தை பழிவாங்கும் உணர்வே ஜெயலலிதாவிடம் இருந்தது என்பதே உண்மை. 1991ல் ஆளும் அதிகாரம் பெற்ற சில திங்கள்களிலேயே வெளிப்படுத்தினார்.வஞ்சித்தவர் யாரோ? ஆனால், அரசியல் அடிமைகளாக ஆண்கள் அணிவகுத்து நின்றபோது அவரது உள்மனம் மகிழ்ந்திருக்கும் என்பதே உண்மையென நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. என் மனதில் என்ன மாதிரியான எண்ணம் ஜெ. பற்றி உண்டோ அதை அப்படியே நீங்களும் கொண்டிருப்பது எனக்கொரு பெரு வியப்பு. இது குறித்து இன்னும் பேசுவோம் தோழி மாதவி...

    ReplyDelete