Friday, November 2, 2012

மானுடம் போற்றுதும்






மானுடம் போற்றுதும்
மானுடம் போற்றுதும்
இருக்கின்றார் இவர்களெல்லாம்
இவ்வுலகில் என்பதினால்
மானுடம் போற்றுதும்  எம்
மானுடம் போற்றுதும்.

இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும்
இப்படித்தான் வாழ வேண்டும்
என்றெல்லாம் அடையாளம் காட்ட நம்முடன் யார் இருக்கிறார்கள்:?
அரசியலாகட்டும் சமூக வாழ்வியலாகட்டும்
ஆன்மிகமாகட்டும்\
ஊடகங்களாகட்டும்
கல்வி துறையாகட்டும்
எங்கேயும் எவருமி;ல்லாமல் இருக்கின்ற வெற்றிடம் நம்மைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.

சரியானவர்களுக்கு/தகுதியானவர்களுக்கு அங்கீகாரம்
கிடைக்காமல் இருப்பதை விட ஆபத்தானது
தவறானவர்களுக்கு/ தகுதியில்லாதவர்களுக்கு
 கிடைக்கும் அங்கீகாரம் என்பது என் கருத்து.
நாம் நல்லவர்களை சந்திக்கவே இல்லையா?
யோசிக்கும் போது முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர்
நினைவுக்கு வருகிறார்கள்!
அவர்களைப் பற்றியும் அவர்களின் மிகச்சிறந்த அற விழுமியம் பற்றியும்
போற்றவும் கொண்டாடவும் நாம் ( முக்கியமாக நான்) தவறிவிட்டோம்

பத்திரிகைகளில் எப்போதாவது ஒர் ஓரத்தில் எவ்விதமான பரபரப்புகளும் இன்றி இம்மாதிரி செய்திகள் வெளிவருவது உண்டு. ஆனால் அந்தச் செய்திகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நாம் அனைவரும்
தயாராக இல்லை என்பது தான் உண்மை. ஏனேனில் அந்தச் செய்திகளில்
இடம் பெறுபவர்கள் அனைவரும் மிக மிக சாதாரண மனிதர்கள்.
ஆனால் அவர்களிடம் தான் நாம் போற்ற வேண்டிய கொண்டாட வேண்டிய
வாழ்க்கையின் விழுமியங்கள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
அவர்கள் தான் மனித நேயத்தையும் மானுட மாண்பையும் தலைமுறை
தலைமுறையாக இந்த மண்ணில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
தொடர்ந்து இம்மாதிரியான உண்மைச் செய்திகளை ஊடகங்கள் வெளிச்சம்
காட்ட முன்வாராத செய்திகளை  நாம் பகிர்ந்து கொள்வோம்.

மானுடம் போற்றுதும் :

செய்தி எண் : 1

இது கேரளாவில் கொச்சியில் நடந்த சம்பவம். பீட்டர் பெட்டிக்கடையில்-
பத்தி-ரிகைகள் விற்பவர். அவருடைய கடை வுட்லண்ட்ஸ் ஜங்ஷனில்
எம். ஜி ரோட் பகுதியில் இருக்கிறது. பத்திரிகை விற்பனையுடன்
சேர்ந்து லாட்டரி டிக்கெட் விற்பனையும் செய்பவர்.
 பீட்டரின் வாடிக்கையாளர் முருகன், தமிழ்-நாட்டிலிருந்து
கொச்சி நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்திருப்பவர். பீட்டரின்
லாட்டரி டிக்கெட் வாடிக்கையாளர்களில் ஒருவர். எப்போதும்
முருகன் காலையில் கடைக்கு வந்து குறிப்பிட்ட லாட்டரி டிக்கெட்டுகளை
எடுத்து வைத்துவிட்டு மாலையில் காசு வந்தவுடன் பீட்டரிடம்
கொடுத்து தான் எடுத்து வைத்திருக்கும் லாட்டரி டிக்கெட்டுகளை
வாங்கிக்கொள்கின்ற பழக்கம் உள்ளவர். முருகன் துணிகளை இஸ்திரி
போட்டு கொடுக்கும் தொழிலாளி என்பதால் மாலையில் தான் அவர்
கையில் காசு கிடைக்கும்.

அப்படித்தான் அந்த வெள்ளிக்கிழமையும் காலையில் முருகன் கடைக்கு வந்து
ஐந்து லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைத்துவிட்டுப் போனார். வழக்கம் போல மாலையில் வந்து லாட்டரி டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்துக்
கொள்ளலாம் என்ற எண்ணத்தில். ஆனால் அந்தக் குலுக்கலில்
மாலையில் முருகன் எடுத்திருந்த இரண்டு டிக்கெட்டுகளுக்குப் பரிசு
விழுந்திருந்தது.
ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 40 லட்சத்துடன் ஒரு இன்னோவா கார் பரிசு.
இன்னொரு டிக்கெட்டுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு.

பரிசு விழுந்த டிக்கெட்டுக்கான பணத்தை இன்னும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த பீட்டர் வாங்கவில்லை. பீட்டர் நினைத்திருந்தால்
முருகன் எடுத்து வைத்திருந்த டிக்கெட்டுக்குத் தான் இந்தப் பரிசு
விழுந்திருக்கிறது என்பதை வெளியில் தெரியாமல் மறைத்திருக்க
முடியும். ஏனேனில் எடுத்து வைத்திருக்கும் லாட்டரி டிக்கெட்டின்
எண் பற்றிய எந்த விவரமும் முருகனிடமும் இல்லை.
ஆனால் பரிசு விழுந்திருப்பது என்னவோ முருகன் எடுத்து
வைத்திருந்த டிக்கெட்டுக்குத்தான்.

ரூபாய் 40 லட்சம் என்பதும் இன்னோவா காரும் பீட்டருக்கும்
பெரிய தொகைதான். எந்த மனிதனுக்கும் கொஞ்சம்
ஆசையைத் தூண்டும் சூழல் தான் . அதற்கான நியாயங்களை
பீட்டர் சொன்னால் முழுவதும் நிராகரிக்க முடியாது.
ஆனால் பீட்டர் மனசில் சலனமே எழவில்லை.
முருகனைத் தேடி பரிசு விழுந்ததைச் சொன்னபோது
முருகனும் தான் லாட்டரிக்கான பணத்தைக் கொடுக்காததால்
பீட்டருக்கு பரிசுத் தொகையை எடுத்துக் கொள்ளும் உரிமை
இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். பீட்டர் மறுத்துவிட்டார்.
மீண்டும் முருகன் பாதி பாதி"50 "  "50" எடுத்துக் கொள்ளலாம் என்று
பகிர்ந்து கொள்ள முன்வந்ததையும் பீட்டர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பீட்டரும் முருகனும் நம்முடன் நாம் வாழும் காலத்தில் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செய்தி 2:
-------------------------------------------

பகவந்தாஸ் என்ற ரயில்வே கடைநிலை ஊழியர் வழக்கம்போல அன்று
டிரெயினில் வேலை செய்துக் கொண்டிருந்தப் போது பயணி ஒருவர்
தன் கைப்பையை மறந்து விட்டுவிட்டு சென்றிருப்பதைக் கண்டெடுக்கிறார்.
அந்தக் கைப்பையில் இருந்தது ரூபாய் 15 லட்சம். கைப்பைக்குச் சொந்தக்காரர்
டில்லியின் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன். இந்தச் செய்தி ஊடகங்களுக்குப் பரவி புகைப்படக்காரர்கள் பகவன் தாஸைப் புகைப்படம் எடுக்க வந்தப் போது
புகைப்படக்காரர்களிடன் போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.
என்ன பெரிய சாதனை என்று படம் எடுக்க வந்துவிட்டீர்கள்?
எப்போதும் செய்வது போலவே இப்போதும் இதைச் செய்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
இப்படியும் சிலர் நம் காலத்தில் நம்முடன்.



செய்தி 3
-----------------


செப்டம்பர் 24, 2012 ஜீதேந்திர வாக் தன் விலை உயர்ந்த கைபேசியை
தான் பயணம் செய்த ரிக்‌ஷாவில் மறதியாக விட்டுவிட்டு இறங்கிவிட்டார்.
தொடர்பு கொண்ட போதெல்லாம் தொலைபேசி ஒலித்துக் கொண்டே
இருந்தது. வீட்டிற்குப் போய் மனைவியிடம் சொன்னார். மனைவியும்
வீட்டு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் அவருக்கு
தொலைபேசி வந்தது. ரிக்‌ஷா டிரைவர் தன்னுடைய ரிக்ஷாவில் பயணம் செய்தவர் மறதியாக விட்டுச் சென்றதையும் கைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
விலை உயர்ந்த அந்தக் கைபேசியில் எப்படி அழைப்பை எடுத்துப் பேசுவது
என்பது தெரியாமல் தான் அவதிப்பட்டதையும் நேரில் சந்திக்கும் போது
சொல்லி இருக்கிறார். டிரைவரின் கைபேசியிலிருந்து அழைத்தவருக்குப் போன்
செய்ய போதிய அ:ளவு இருப்பு இல்லாமல் இருந்ததால் 10 ரூபாய்க்கு
தன் கைபேசியில் கையிருப்பை அதிகரித்துக் கொண்டு அதன் பின்
தொடர்பு கொண்டதையும் சொல்லி இருக்கிறார்.


செய்தி 4
-----------------

இச்செய்தி எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. நானும் வாசித்து அறிந்த செய்தியல்ல!
1987 ஜூன் முதல் வாரத்தில் மும்பையில் முதல் மழைக் கொட்டிய ஒரு
நாளிரவு 9 மணிக்கு, மருத்துவமனைக்குப் போய்விட்டு தன் வீட்டுக்குத் திரும்பிய கணவனும் மனைவியும். கொஞ்சம் டென்ஷனாக இருந்த நிலையில்
அந்த நிறைமாதக் கர்ப்பினிப் பெண் தன் கைப்பையை டாக்சியில் விட்டுவிட்டு இறங்கிவிட்டாள். வீட்டுக்குப் போன பிறகுதான் கைப்பை நினைவு வந்தது.
கைப்பையில் ரூபாய் 25000. + கொஞ்சம் சில்லறை. சயானில் அன்றைக்குப் புகழ்பெற்ற டாக்டர் மெர்ச்சண்ட் சிசரியன் செய்துதான் ஆகவேண்டும் என்று
உறுதியாக சொல்லிவிட்டதால் டாக்டரிடம் போய்விட்டு வீட்டில் எப்போதும் வரப்போகும் மருத்துவச்செலவுக்கு எந்த நேரத்திலும் தேவைப்படலாம் என்று
எடுத்த வந்தப் பணம் .

அந்த தொகை அன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு பெரிய தொகைதான்.
பணத்தை தொலைத்தாகிவிட்டது, கணவனும் மனைவியும் அதைப்பற்றி
எதுவுமே பேசிக்கொள்ளவில்லை, எப்போதும் போல "யு ஆர் கேர்லஸ்"
என்று கணவன் திட்டி இருந்தால் கூட அந்தப் பெண்ணுக்கு நிம்மதியாக
இருந்திருக்கும். ஆனால் அவருடைய அந்த மவுனம் அவள்
தூக்கத்தை தின்று துப்பிக்கொண்டிருந்தது. மறுநாள் பகல் 11 மணியளவில்
அவள்  வீட்டுக்கு அருகில் இருக்கும் டாக்டர் குரேஷியின் கிளினிக்கில்
வேலைப்பார்க்கும் ஒருவர் வந்து கைப்பையை ஒரு டாக்சி டிரைவர்
டாக்டரிடம் வந்து கொடுத்துவிட்டு சென்றிருப்பதாகச் சொன்னார்.
குரேஷி டாக்டரின் க்ளினிக் இப்போதும் தாராவியில் இருக்கிறது.
தன் முதல் குழந்தைக்கு அந்தப் பெண் எப்போதும் அருகில் இருக்கும்-
டாக்டர் குரேஷியிடம் தான் போய்வருவது வழக்கம். அந்தப் பெண்ணின்
கைப்பையில் குரேஷி டாக்டரின் மருந்து எழுதிக் கொடுத்த ரசீது
இருந்ததால் பாந்திரா கலாநகரில் வாழ்ந்த டாக்சி டிரைவர்
முதல் நாளிரவு வீட்டுக்குத் திரும்பும் வழியில் பாந்திரா தாராவி
ரோட்டில் இறக்கிவிட்ட பயணியின் கைப்பை என்று சொல்லி
பையிலிருந்த ரசீதைக் காட்டவும் குரேஷி டாக்டரும் அடையாளம் கண்டு
வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கிறார். அந்த டாக்சி டிரைவரும்
கலாநகரிலிருந்து குரெஷி டாக்டர் க்ளினிக் வரை எவ்வளவு
மீட்டர் சார்ஜ் உண்டோ அதற்கு மேல் வாங்க மறுத்துவிட்டார்.
அந்தப் பெண்ணின் உறவினர் கைப்பையை வாங்கிவந்து கொடுத்தப் பின்
அந்தப் பெண்ணால் நம்பவே முடியவில்லை. பேங்க் கவரில் இருந்தப்
பணம் அப்படியே இருந்தது. இன்றுவரை அந்த டாக்சி டிரைவரின்
முகத்தை தன் நினைவில் கொண்டு வர பிரயத்தனம் செய்தும்
அவரால் அந்த மனிதனின் முகத்தை நினைவுக்கு கொண்டுவர
முடியவில்லை. ஒவ்வொரு நாளும் காக்கி யுனிபார்ம் அணிந்து
கற்பனையில் முகம் காட்டும் அந்த மானுடன் வாழ்க என்று
கண்ணில் நீர் மல்க... அந்த மானுடன் வாழ்ந்த திசைநோக்கி..
இன்றும்.. இதோ உங்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டும்.


மானுடம் போற்றுதும்
மானுடம் போற்றுதும்.


===================================================----------------===






Wednesday, October 3, 2012

இந்திய தேசத்தின் தலைகுனிவு




இங்கே யாருக்கும் வெட்கமில்லை
சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட
இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.

2012, ஏப்ரல் மாதம் டி.பி சத்திரம் என்ற ஊரில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான
செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய
எவ்விதமான சொரணையும் இல்லை. இறந்துப் போன அண்ணனின் வேலையை கார்ப்பரேஷனிலோ பஞ்சாயத்திலோ வாங்கிய தம்பி சின்னமுனியும் ஜூலை மாதத்தில் அதே போன்றதொரு முடிவில்
மரணமடைந்திருக்கிறார். இறந்துப் போனவர்களுக்கு அரசு நிவாரணம்
எதுவும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.


சுதந்திர இந்தியாவில் 1993ல் மனிதக் கழிவை சக மனிதன் கையால்
சுத்தம் செய்யும் கொடுமையைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை மீறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்
வலுவான அதிகாரத்தை இந்தியாவின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாளருக்கும்
கொடுத்திருந்தாலும் இன்றுவரை ஒரு மாவட்ட ஆட்சியர் கூட
இச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இதை விட வேடிக்கையும் கொடுமையும் என்னவென்றால் இந்திய
அரசு நிறுவனமான இந்திய ரயில்வேயில் தான் இன்றுவரை
இத்தொழிலைச் செய்வதற்கு என்றே பணியாட்கள் வேலைக்கு
அமர்த்தப்படுகிறார்கள் நேரடியாகவோ ஏஜன்ஸி மூலமாகவோ.

இக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் இந்திய உச்சநீதி மன்றத்திற்கு வெகு அருகில் உலர் கழிவறைகள் இன்றும் இருப்பதாக
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மட்டும் 13 இலட்சம் உலர் கழிவறைகள் இருப்பதையும் அதைச் சுத்தம் செய்வதில் மனிதர்களும் மிருகங்களும் (பன்றிகள் & நாய்கள் ) சமபங்கு வகிக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது

இதோ சில புள்ளிவிவரங்கள்

   மிருகங்களால்       
                                 மனிதர்களால்                               
டில்லி       633                            583                                                      

.பி      80291                           3.26 இலட்சம்                                          

வங்காளம் 72289                           1.3 இலட்சம்                                          

ஒரிசா     24222                         26496                                                  

பீகார்      35009                           13487                                                  

அசாம்     35394                           22139                                                  

குஜராத்     4890                           2566                                                    

மகாராஷ்டிரா 45429                         9622                                                    

ஆந்திரா      52767                        10357                                                  

கர்நாடகா     28995                         7740                                                    

தமிழ்நாடு     26020                       27659                                                  



இந்தியாவில் உள்ள 24.6 கோடி கழிவறைகளில் 26 இலட்சம் கழிவறைகளின்
மனிதக் கழிவு திறந்தவெளி சாக்கடையில் கலக்கிறது. இச்சாக்கடையை
துப்பரவு தொழிலாளிக்குரிய எவ்விதமான காலணியோ உடைகளோ
கண்ணாடியோ பிராணவாயு சிலிண்டர்களொ இத்தியாதி எதுவுமின்றி
மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்பவன் உங்களையும் என்னையும் போல
நம் சகமனிதன்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காணச்சொன்ன எவருக்கும்
இந்தியாவின் இந்தக் கொடுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏன் தெரியுமா
அவர்களின் சிறுகுடல் பெருங்குடல்கள் மலம் சுமப்பதில்லை அவர்கள்
மலம் கழிப்பதுமில்லை. இந்தி தொலைகாட்சியில் ஒரு நகைச்சுவை
நடிகர் ஓர் உண்மை சம்பவத்தை கொஞ்சம் நகைச்சுவையுடன்
சொன்னது நினைவுக்கு வருகிறது.

அவருடைய கிராமத்திற்கு அவர் மும்பையிலிருந்து தொலைக்காட்சி
தொடர்கள் மூலம் பிரபலமான பின் சென்றிருந்தப் போது அங்கிருந்த
அப்பாவி கிராமத்து மக்கள் கேட்டார்களாம்,
மும்பையில் தானே பேரழகி ஐஸ்வரியராய் இருக்கிறார் என்று.
இவரும் 'ஆமாம் ' என்றாராம். அதில் ஒருவர் ரகசியமாக வந்து
மெல்லிய குரலில் கேட்டாராம்... ' முன்னா, அவுங்களும் நம்மளைப் போல
காலையில் எழுந்து நம்பர் டூ இருக்கத்தானே செய்வாங்கனு!!!"

எதற்கு எடுத்தாலும் அமெரிக்கா அமெரிக்கா என்றும் மேலை நாடுகள் என்றும் பறந்து கொண்டிருக்கும் நம் இளம் அறிவுக் கொழுந்துகளுக்கு ஏன் அந்தந்த நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கழிவுகளை எடுத்துச் செல்லும் வாகனம்,  சுத்திகரிப்பு தொழிலாளிக்கு அரசு செய்து கொடுத்திருக்கும் வசதிகள்,
அவர்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், எந்திரமயமான
சுத்திகரிப்பு வேலை... இத்தியாதி
எதையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று எண்ணமே வரவில்லை? ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் நவீன
ஐபேட் இந்திய சந்தையில் வரும் முன்பே டில்லியில் விற்பனை
ஆகும் அளவுக்கு நுகர்வோர் சந்தையைக் கொண்ட இந்திய
சமூகம் இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை?
வால்மார்ட் இந்திய மண்ணில் கால்பதித்தே ஆகவேண்டும் என்று
பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதேஅமெரிக்க நாட்டிலிருந்து
இந்த வசதிகளையும் கொண்டு வர ஏன் முயற்சிப்பதில்லை?

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள
தொழிலாளர்கள் 19 பேர் சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கும் போது
மரணம் அடைந்திருக்கிறார்கள், அவர்களைப் பற்றி பேசவோ
எழுதவோ சாதிப்படிநிலையைத் தாண்டி ஒருவரும் வரவில்லையே! ஏன்?
செத்துப் அந்த 19 பேரும் தமிழர்கள் இல்லையா? அவர்கள் சாவுக்கு
யார் காரணம்? தமிழ் தேசியம், ஈழப்போராட்டங்கள் , மொழி போராட்டங்கள்
மார்க்சிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள்  இப்படி சமத்துவத்திற்காக போராடும் எத்தனையோ
கூடாரங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோமோ... இதில் எந்த ஒரு
பாசறையிலிருந்தும் இவர்களுக்காக இவர்களையும் தன் சகமனிதனாக
நினைத்து குரல் கொடுத்தவர் எத்தனைப் பேர்?


ஏன் எனில் இத்தொழில் இந்திய சமூகத்தில் ஒரு சாதியம் சார்ந்த தொழில்.
இத்தொழிலை செய்வது இவன் தலைவிதி என்று விதிக்கப்பட்டிருப்பதை
காலம் காலமாய் சுமந்து சுமந்து செல்லரித்து போய்
செப்பனிட முடியாத அளவுக்கு சிதைந்து கிடக்கிறது நம் சமூகம்.
இந்தியாவில் மட்டுமே இக்கொடுமை நிலவுவதற்காக
ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும்.
இக்கொடுமை இந்திய தேசத்தின் அவமானம்.


பி.குறிப்பு:

மேலதிக விவரங்களுக்கு :  ref: Safai Karamchari Andolan




Thursday, August 23, 2012

யார் கொடுத்தார் இந்த அரியாசனம்...!!??








போர்ஃபஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் WOMEN IN POWER என்று
100 அதிகார மிக்க பெண்களை பட்டியலிட்டு வரிசைப் படுத்துகிறது.
 இந்த ஆண்டில்
இந்தியாவின் சோனியா காந்தி அந்த வரிசையில் ஆறாவது
இடத்தில் இருக்கிறாராம்.

யார் கொடுத்தார் இந்த அரியாசனம்??!!

Monday, August 20, 2012

இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை





தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியா? அல்லது மக்கள் எவ்வழி தலைவனும் அவ்வழி என்று முடிவு செய்வது சரியா? எது சரி?
நம் வளரும் குழந்தைகளுக்கு தலைவர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட மறைந்த தலைவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது நம் தலைமுறைக்கான சோகம், அவலம். ஏன்?

காலையில் குடிக்கும் காஃபியிலிருந்து தண்ணீர், பால், பத்திரிகை, படம், பள்ளிக்கூடம் … எங்கும் நிறைந்திருக்கிறதே இந்த அரசியல்.. இதை இப்படியே விட்டுவிட்டு … இருந்தால்  நம் வாரிசுகளுக்கு நாம் எந்த தேசத்தை அவர்களுடையதாகக் கொடுக்கப் போகிறோம்? இந்த எண்ண ஓட்டங்களில் படித்தவர்கள் பட்டதாரிகள் சிந்தனையாளர்கள்  என்று பலர் எடுத்த அரசியல் முயற்சிகள் ஏன் செயல்பட முடியாமல் முடங்கிப் போனது?

உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் மக்களாட்சியைக் கொண்டாடுவதாக அடிக்கடி சொல்லப்படுகிறதே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் இந்திய நாடு என்று பெருமிதம் கொள்கின்றோமே இந்தப் பெருமிதம் பன்னாட்டு அரங்குகளில் நாம் போட்டிருக்கும் வெளிவேஷமா?
அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கும் போது  இந்திய சட்டப்படி அறிவிக்கப்பட்டிருக்கும் எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இருக்க கூடாது என்கிற விதி இருக்கிறது நம் படிவங்களில்.  ஆனால் பொதுமக்களுக்கு அந்த விதிகளை உருவாக்கும் நம் நாடாளுமன்றத்தில் இருப்பவர்களின் தகுதி என்னவாக இருக்கிறது?


543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 153 பேர் சட்டப்படி குற்றவாளிகள். Association of democratic reforms  (ADR) அமைப்பு நம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது. 2002ல் நம் உச்சநீதிமன்றம் தேர்தலில் நிற்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் கல்வி தகுதி, பொருளாதர நிலை மற்றும் சட்டப்படி அவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதைப் பற்றிய விவரங்களைக் விண்ணப்பத்தில் பதிவு செய்தாக வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்திய பிறகும்  நம் நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.


2 ஜி, 3 ஜி , இஸ்ரோ என்று என்னவெல்லாமோ செய்திகள் வருகின்றன. கண்துடைப்பு கைது காட்சிகளுடன் முடிந்து விடுகின்றன. ஊழல் என்பதும் அதில் சொல்லப்படும் தொகையும் ஓட்டுப்போடும் மக்களின்  கற்பனைக்கு எட்டாத எண்ணாக இருப்பதும் ஒன்றை மிஞ்சம் வகையில் இன்னொரு ஊழல், அதற்குப் போட்டியாக இன்னொரு ஊழல்.. இப்படியாக வந்து கொண்டே இருப்பதால் பொதுமக்களுக்கு அரசியல் என்றால் ஊழல் அதில் ஓர் அங்கம் என்ற மனநிலை உருவாகிவிட்டது.
இங்கே தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எவரும் பெற்ற வெற்றிகள் அவர்களுக்கானவையாக இருப்பதில்லை. ஆளும்கட்சியின் மீது கொண்ட அதிருப்தி அதாவது எதிர்மறை வாக்குகள் எதிர்கட்சிக்கு சாதகமாக அமைவதால் மட்டுமே ஆட்சி அதிகாரம் கை மாறுகிறதே தவிர வேறு எவ்விதமான மன மாற்றங்களோ அல்லது ஆட்சியில் மிகப்பெரிய மாற்றங்களோ இருப்பதில்லை.  .

.இரண்டு திருடன், அல்லது கூட்டமாக திருடன்களும் கொலைகாரர்களும். இவர்களில் யாரைத் தேர்ந்த்தெடுப்பது என்று வருகிற போது அந்தக் காலக்கட்டத்தில் இவனை விட அவன் செய்தது அவ்வளவு பெரிய  குற்றமோ ஊழலோ அல்ல என்கிற எண்ணம், மக்களின் ஓட்டுப்போடும் மனப்பான்மையில் இருக்கிறது. அரசியல் என்பது ஆள்பலம், ரவுடியிசம், பணபலம், பணபலத்திற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் துணியும் தலைவர்களை நாம் உருவாக்கி விட்டோமா? என்ற அச்சம் சமூக அக்கறைக் கொண்டவர்கள் நடுவில் ஏற்பட்டிருப்பதும் எதுவும் செய்ய முடியாத ஒரு கையறு நிலையில் விரக்தி அடைந்திருப்பதும் தெரிகிறது.\

இக்கேள்விகளின் ஊடாகவே நம் தேர்தல் முறை குறித்து நாம் யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.

நம் தேர்தல் முறை அதிக வாக்குப் பெற்றவர் வெற்றி பெற்றவர் என்ற (majoritarian electoral system) முறையைச் சார்ந்தது.  நம்மை ஆண்ட ஆங்கிலேயரின் தேர்தல் முறையை நாமும் அப்படியே ஏற்றுக்கொண்டோம் என்று தான் சொல்லலாம். இந்திய சட்ட வரைவு குறித்த விவாதங்கள் நடந்தப் போது இத்தேர்தல் முறை குறித்த விவாதங்களும் நடந்தன. ஆனால் நம் இன்றைய தேர்தல் முறைக்கு எதிராக விவாதம் செய்தவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களாக இருந்ததாலோ என்னவோ விவாதம் திசை மாறிப்போனது. உள்நோக்கம் இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் மிகக்கடுமையாக மாற்று யோசனைகள் முறியடிக்கப்பட்டன. மேலும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் proportionate electoral system அப்போது 15% மட்டுமே படித்தவர்கள் வாழ்ந்த இந்திய சமூக வாக்களர்களுக்கு ஏற்றதல்ல என்று முடிவு செய்யப்பட்டது.
அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வது சரிதானே என்று மேம்போக்காக வெற்றி/தோல்வி குறித்த கருத்துகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்தியாவின் மக்களாட்சி மகத்துவமானதாகத் தெரியும். தெரிகிறது! ஆனால் இந்த வெற்றி/தோல்வியின் உள்ளீடுகளைப் பார்த்தால் இந்திய மக்களாட்சியின் சாயம் வெளுத்துப் போகும்.
உதாரணமாக ஒரு தொகுதியில் ஒரு இலட்சம் வாக்களர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ன் அதிகமாக வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக கற்பனைச் செய்து கொண்டு 70% ஓட்டுப் பதிவு என்று கணக்கில் வைத்துக் கொண்டாலும்
காங்கிரசு + திமுக கூட்டணி – 20,000 பி.ஜே.பி கூட்டணி – 15,000 அதிமுக கூட்டணி – 18,000 தேதிமுக +இதரக்கட்சி – 12,000 சுயேட்சை + செல்லாத ஓட்டுகள் – 5,000
மொத்தம் பதிவான ஓட்டுகள் – 70,000
ஒரு இலட்சம் வாக்குகள் உள்ள தொகுதியில் ஓட்டுப்போடாத 30,000 தவிர்த்து ஓட்டுப் போட்டவர்களில் வெறும் 20,000 பேர் தேர்ந்தெடுத்த வேட்பாளர் மீதி 50,000 வாக்காளர்களின் ஒப்புதலின்றி அந்தத் தொகுதியின் வேட்பாளராக நாடாளுமன்றமோ/சட்டசபையோ செல்லுகிறார். இந்த 50000 வாக்காளர்களும் இந்த வெற்றி பெற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது அவர் தகுதியானவரல்ல என்று தீர்மானித்தார்கள்.

பெரும்பான்மையால் தகுதியற்றவராக தீர்மானிக்கப்பட்ட ஒருவர் வெற்றி பெற்று தகுதியானவராக ஆக்கப்படுகிறார் என்றால் இந்த தேர்தல் முறை எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?

இவரும் இவரைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும்தான் இந்தியாவை ஆளும் மக்களாட்சி. இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியாளர்கள். இது எவ்வளவு கேலிக்கூத்து? இது மக்களாட்சிதானா? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! என்றெல்லாம் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோமே.. இதெல்லாம் எவ்வளவு மேசமான ஏமாற்றுவித்தை!. மேலே சொல்லியிருக்கும் எடுத்துக்காட்டு ஒரு கற்பனை அல்ல., இதோ சில உண்மையான புள்ளிவிவரங்கள்:

*இன்றைக்கு ஆளும் காங்கிரசு பெற்ற மொத்த வாக்குகள் 28.6% . இது 2004ல் காங்கிரசு பெற்ற வாக்குகளை விட 2% அதிகம். அவ்வளவுதான்.

* பீகாரில் நாவ்டா பார்லிமெண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற பி.ஜே.பி வேட்பாளார் போலாசிங் பெற்ற வாக்குகள் வெறும் 10% தான்
.
*முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தாண்டன், குக்கும்தேவ் நாராயண் சல்மான் குர்ஷித், பரூக் அப்துல்லா ஆகியோர் வெற்றி பெற்றது 1/8 வாக்குகள் மூலம்தான்.

* மீராகுமார் பெற்ற வாக்குகள் 1/8

* 50% வாக்குகள் பெற்று நாடளுமன்றம் வந்திருப்பவர்கள் மொத்தமே 5 பேர்தான் நாகாலந்து, சிக்கிம், வங்காளம் தாலா ஒருவரும் திரிபுராவிலிருந்து 2 பேரும்
.
* 145/573 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20%க்கும் குறைவாக ஓட்டுகள் பெற்று நாடாளுமன்றம் வந்தவர்கள்.

அப்படியானால் 20 அல்லது 30 விழுக்காடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதி 80 அல்லது 70 விழுக்காடு மக்களையும் சேர்த்தே ஆட்சி செய்கிறார்கள் மக்களாட்சி என்ற பெயரால்!.

* அடிக்கடி தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் நம் அரசியல் தலைவர்கள் சில உண்மைகளை உதிர்ப்பார்கள்… “நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்காதீர்கள். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகள் அதிகம் என்ற உண்மை மக்களிடம் எங்களுக்கிருக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது” இத்தியாதி வசனங்கள் எழுதப்படும்.

நம் அரசியல் தலைவர்கள் சொல்வதில் எதில் உண்மையிருக்கிறதோ இல்லையோ இது மட்டும் உண்மைதான்!! அதுமட்டுமல்ல, நம் நாட்டில் தேர்தல் வெற்றி என்பது ஒரு எந்த ஓர் அரசியல் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் தேர்தல் அறிக்கைகள் இவைகளின் அடிப்படையில் அமைவதாக நாம் நினைப்பதும் தவறு. (நம் அரசியல் கட்சிகளுக்கு கொள்கை கோட்பாடுகள் இருக்கிறதா என்பது அடுத்தக் கட்ட கேள்வி.) கூட்டணியில் சேரும் அரசியல் கட்சிகள் அல்லது அக்கட்சிகளின் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் தாக்கம் இத்துடன்  தொகுதி வாரியாக இருக்கும் சாதிகளின் கணக்கெடுப்பு இப்படியாக பல்வேறு புள்ளிவிவரங்களைச் சேகரித்து எந்தக் கூட்டணி சரியாக கணக்கைப் போடுகிறதோ அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதையும் கடந்த தேர்தல் புள்ளிவிவரங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக , 2006 மற்றும் 2011  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளையோ அல்லது தேர்தல் கமிஷன் வெளியிட்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவரங்கள், அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டுகளின் விகிதாச்சாரம் இவற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் நாம் மக்களாட்சி என்ற பெயரால் என்ன நடத்திக் கொண்டிருக்கிறொம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

நம் தேர்தல் முறையே நமக்குப் போதுமானது. மிகவும் கடுமையாக நம் விதிகளைப் பின்பற்றினால் போதும் என்று சிலர் சொல்வதுண்டு. எழுத்தாளர் திரு ஞானியின் “ஓ” போடு ஓரியக்கமாகவே வளர்தெடுக்கப்பட்ட காலத்தில் நான் அவருடன் பேசி இருக்கிறேன். 49  ஓ என்பது தேர்தலில் போட்டியிடும் எந்த உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்வது.  ஆனால் ஓட்டுரிமையில் இருக்கும் ரகசிய வாக்களிப்பு என்ற தனிமனித உரிமை இங்கே பறிக்கப்படுகிறது. 49 ஓ படிவத்தை நிரப்பும் வாக்களர் தன்னைப் பற்றிய முழுவிவரத்தையும் இன்னொரு படிவத்தில் நிரப்ப வேண்டும். மேலும் கொந்தளிப்பு நிறைந்த தொகுதியில் துணிந்து “ஓ” போட யார் தான் முன்வருவார்கள்? அப்படியே “ஓ” போட்டாலும் அது வாக்களர்களின் அதிருப்தியை மட்டுமே காட்டும் அடையாளம் மட்டும்தாம். அது வெற்றி தோல்வியைப் பாதிக்காது என்று தேர்தல் ஆணையம் தெளிவு படுத்திவிட்டது.. மேலும் இன்றைய நம் வாக்குப்பதிவுகள் அனைத்தும் எந்திரமயமான நிலையில் நம் ஓட்டுப்பதிவு மிஷினில் “யாருக்கும் ஓட்டுப் போடவில்லை” என்று வாக்காளர் தெரிவு செய்யும் வசதி இல்லை. 

   நம் அரசியல் தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை நாம் மிகவும் சாதாரணமாகவே பார்த்து பழகிவிட்டோம். எப்படியும் நாடாளுமன்றம் சென்றுவிட வேண்டும் என்ற நிலையில் தற்காப்புக்காக இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுவிடுவார். அதன் பின் ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கோ நாடாளுமன்றத்திற்கோ போவார், இன்னொரு தொகுதியில் மீண்டும் தேர்தல் வரும். இந்த ஒரு குறிப்பிட்ட தலைவரின் தற்காப்புக்காக இன்னொரு தேர்தல், அந்த தேர்தலுக்கு ஆகும் செலவு? யார் தலையில்!

அரசியல் கட்சிகள் அனைத்திலுமே அடிமட்டத் தொண்டர்களும் ஒரு சில விதிவிலக்கான ஊழல் படியாத நபர்களும் இல்லையா என்று கேட்டால் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் தேர்தலில் நிற்கவே முடியாது. தேர்தலில் நிற்க செலவு செய்யும் தகுதி இருக்க வேண்டும். இதுவும் ஒரு காரணம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் கூட  தகுதியற்றவர்கள் பதவிகளை எட்டிப்பிடிப்பது எளிதாக இருக்கிறது. இதற்கும் இன்றைய தேர்தல் முறையே காரணம். இக்கருத்தை முன்வைப்பவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும்  இரண்டு ஓட்டு முறையை அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள். முதல் வாக்குச்சீட்டு இன்றைய தேர்தல் முறையாகவும் இன்னொரு வாக்குச்சீட்டு தான் விரும்பும் அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுப்பதாகவும் அமையும். அதன்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முன்பே அவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். இப்பட்டியல் அதன் பின் மாற்றத்திற்குட்பட்டதல்ல. இந்த இரண்டாவது வாக்குச்சீட்டின் மூலம் விகிதாச்சார அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவரவர் பட்டியலிலிருந்து வரிசைப்படி உறுப்பினர்களை அனுப்பலாம். இடைத்தேர்தல் என்பதே இல்லை. இடைத்தேர்தலுக்கான சூழல் ஏற்படும் போது அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பட்டியலிருந்து உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.   இந்திய தேர்தல் முறையின் மாற்றங்கள்/ சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மக்களாட்சி தேர்தல் முறைகளில் 80க்கும் அதிகமான நாடுகள் இன்று விகிதாச்சார தேர்தல்  வாக்கு முறைக்கு மாறிவிட்டன.

1930களில் பண்டித ஜவஹர்லால் நேரு இந்திய சமூகத்திற்கு விகிதாச்சார தேர்தல் வாக்குமுறை ஏற்றது என்பதை வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டிருக்கிறார். 1999 களில் நேஷனல் லா கமிஷன் விகிதாச்சார தேர்தல் வாக்குமுறையை இந்திய அரசுக்கு  பரிந்துரை செய்தது. ராஜ்யசபாவில் பொதுவுடமை கட்சியைச் சார்ந்த தோழர் டி. ராஜா அவர்கள் லஞ்ச ஒழிப்பு குறித்துப் பேசும் போது தேர்தல் முறையில் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் விகிதாச்சார தேர்தல் வாக்குமுறைக்கு மாறுவதைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

இந்திய தேர்தல் முறை சீர்திருத்தங்கள் குறித்து அண்மையில் வெளிவந்திருக்கும் செய்திகள் சில:

தேர்தல்முறை சீர்திருத்தங்கள் குறித்து டில்லியில் நடந்த கருத்தரங்கில் விகிதாச்சார தேர்தல் முறை குறித்த கையேட்டை வெளியிட்டு பேசிய இந்திய தேர்தல் தலைமை ஆணையர் Dr. S Y Quraishi விகிதாச்சார தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி நிறுவப்படும் என்று உறுதி அளித்திருக்கின்றார். பொதுவுடமை கட்சிகள் ஏற்கனவே இம்முறையை சிபாரிசு செய்கின்றன. நாடாளுமன்றத்தின் எதிரணி தலைவராக இருக்கும் திருமிகு. சுஷ்மா சுவராஜ் அவர்கள் விகிதாச்சார தேர்தல் முறையை பிஜேபி கட்சியின் பாலிஸி கமிட்டி ஏற்றுக்கொள்ளும் என்று 17 மே 2012 ல் அவருடனான சந்திப்பின் போது உறுதி அளித்திருக்கிறார்.

தேர்தல் முறையில் மாற்றங்கள் மட்டுமே தீர்வாகிவிட முடியாது, இங்கே அரசியல் கட்சிகளில் மாற்றங்கள் ஏற்படாதவரை. அரசியல் கட்சிகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகளின் நிதிநிலையைக் கண்காணிக்கும் அதிகாரம் தேவை என்ற கருத்தை மிகவும் தெளிவாக முன்வைத்து
Association of Democratic reforms (ADR) அமைப்பு National Election watch டன் இணைந்து நம் தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் அறிக்கையை கடந்த ஏப்ரல் 2011ல் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல்முறை சீர்திருத்தங்கள் குறித்து ஏற்கனவே வெளிவந்த 7 கமிஷன்களின் அறிக்கையையும் கணக்கில் கொண்டு சற்றொப்ப 11 வருட கள ஆய்வுகளின் பின்னணியில் இந்த அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மிகச்சிறந்த கள ஆய்வும் அறிக்கையும். தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து நம்பிக்கையுடன் பார்ப்போம்.
 .
மக்களாட்சி என்ற பெயரால் – யாரை நாம் ஏமாற்றுகிறோம்? நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா? நம் தேர்தல் முறையை நாம் உண்மையாகவே மக்களாட்சிக்கு மிகவும் நெருக்கமான முடிவுகளைத் தரும் தேர்தல் முறையாக மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

Saturday, July 28, 2012

பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?. ==





இந்தியா ஜனநாயகநாடு
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை.
இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா?
இல்லை.
தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா?
தெரியும்.
சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா?
முடியாது!
!பிறகு என்னய்யா வெங்காயம்!!
நீங்களும் உங்கள் சட்டங்களும்.

****


எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக
எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக
அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார்
என்று உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்து உடனே சிலர்
வழக்குத் தொடுத்தார்கள். அதன் பின் என்னவோ அவர்கள் வழக்கு தொடுத்தக் காரணத்தாலேயே இந்த ஜாம்பவான்கள்
நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வரமுடியாமல் போய்விட்ட மாதிரியும் ஒரு காட்சி உருவாக்கப்பட்டது!

இதில் வாதியும் பிரதிவாதியும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக்கொண்டு இந்த மாதிரி ஸ்டண்ட் அடிக்கிறார்களோ என்னவோ.. வேறு எப்படித்தான் இவர்கள் அடிக்கிற இந்த லூட்டிகளை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களோ தெரியவில்லை.
நான் சட்டம் போடற மாதிரி போடறேன், எனக்கு
அது தேவையாக இருக்கிறது, நீங்கள் அதை எதிர்த்து
கோர்ட்டுக்கு போயீடுங்க, மறந்திடாதீங்க,
எனக்குத் தெரியும், கோர்ட்டுக்குப் போனா என் சட்டத்தின்
கதி என்ன என்பது!
இந்திய சட்டப்படி அய்யா மலர்மன்னன் அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. (துப்பாக்கி நாயுடு: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர் என்ற அய்யா மலர்மன்னன் கட்டுரையின் பின்னூட்டங்களில் இக்கருத்து போகிற போக்கில் விவாதமாகி இருக்கிறது.) திண்ணையில் தன் கட்டுரைக்குப் பின்னூட்டமாக
திரு பரமசிவம் அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும்
அய்யா மலர்மன்னன் :
>. File a counter at the SC if the case regarding archakas is pending there. You can argue no discrimination is permissible under the Constitution. The SC will summarily reject your counter stating it is purely a religious matter, as it is related to temple formalities of a particular religion and that it is not a social issue.>

ஏன் முடியாது என்பதை எல்லாம் அய்யா மலர்மன்னன் கட்டாயம் விவரமாக சொல்லித்தான் ஆகவேண்டும் என்று
நாம் பிடிவாதம் பிடித்தால் அது "அபத்தம்".
தேடினால் தெரியும், திருடன் நம் வீட்டு குதிருக்குள் தான்
இருக்கிறான் என்கிற உண்மை.

உச்ச நீதிமன்றத்தால் ஏன்  செய்ய முடியாது என்று நம் அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்தானே.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் போது அச்சட்டத்தின் சொல்லப்பட்டவை மட்டுமே சட்டமாகவில்லை, அதற்கு முன்பிருந்த சட்டங்களும் வால் போல ஒட்டிக் கொண்டே வந்தன. அந்த வால் வலிமையானது என்பதை உணர்ந்த பாபாசாகிப் அம்பேத்கர்
 சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம்,
சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.
(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first
draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional
customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the
"Hindu code bill " in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution
will stand abolished)
ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைய யார் யார் காரணமாக இருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது தலைவர்கள், மதங்கள் , புரட்சிக் காரர்கள் எல்லோர் மீதும்
ஓர் அவநம்பிக்கை தான் ஏற்படுகிறது.




இதெல்லாம் என்னவோ பரம ரகசியம் இல்லை.
இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பாதிபேருக்கு
வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சிலருக்குத் தெரிந்தும்
தெரியாமல் இருப்பது போலவே இருப்பதில் அதிக பாதுகாப்பு இருக்கிறது. இதைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.
இலவசங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் பேசவோ
அல்லது சிந்திக்கவோ நேரமில்லை. தங்களை அறிவுஜீவிகள்
என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் எம் தோழர்களும்
அவர்களின் இடது வலது சார்புகளும் இதில் விதிவிலக்கல்ல.

***

தமிழ்நாட்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து என்னவோ சிலர்  உச்சநீதிமன்றத்தில் எதிர்வழக்காடுவதால்
மட்டுமே பிரச்சனை என்று மேம்போக்காக போகிற போக்கில்
சொல்லிச் செல்வது சரியா?

அந்த சிலர் உச்சநீதிமன்றம் வரை போயிருக்காவிட்டாலும்
இச்சட்டம் அமுலுக்கு வந்திருக்க முடியுமா?

சரி, அந்தச் சிலர் யார்?
இச்சட்டத்தின் மூலம் அவர்களுக்கு என்ன இழப்பு?
இக்கோவில்கள் குறித்து பேசும் போதெல்லாம் ஆகமவிதி என்றும்
ஸ்மிருதி விதி என்று இரண்டு விதிகள் பற்றிய பேச்சு அடிபடுகிறதே!
எது ஆகமவிதி?
எது ஸ்மிருதி விதி?
ஆகமவிதி என்ன சொல்கிறது?
ஸ்மிருதி விதி என்ன சொல்கிறது?
பிராமணர்கள் கர்ப்ப கிரஹத்துள் நுழைவதாலும் அர்ச்சனை செய்வதாலும் அரசனுக்கும் பொதுமக்களுக்கும் கேடு விளையும் என்று திருமூலரின் திருமந்திரம் பதிவு செய்திருக்கிறதே,
அப்படியானால் எப்போது இந்த ஆகமவிதி மறைந்து போனது.
இன்றைக்கும் நிறுவனமயமான கோவில்களில் அர்ச்சகராக
மட்டுமே இந்தக் கோர்ட், வழக்கு வாய்தா எல்லாம்!
ஆனால் நம்ம ஊரு முனியாண்டி,
மாடசாமி, இசக்கி அம்மன் கோவில்களில் சூத்திர பஞ்சம பூசாரிகள் தான்.  இது ஏன்?

**
இந்த நாட்டில் கடவுள்களுக்கும் சாதிகள் உண்டு.
திருப்பதி பாலாஜி
திருச்செந்தூர் முருகன்
திருநெல்வேலி மாடசாமி
சாதிப்படிநிலையின்  அடையாளங்கள்.

நன்றி: திண்ணை இணைய இதழ்.

இக்கட்டுரை குறித்த அனைவரின் பின்னூட்டங்கள் திண்ணை இணைய இதழில்.

http://puthu.thinnai.com/?p=13363

Tuesday, July 17, 2012

கள்ளக்காதல்






காதலன் இல்லாமல்
வாழ்ந்துவிட முடிகிறது
கவிதை இல்லாமல்
வாழ்வது ?


கட்டில் மெத்தையில்
காமம் கூட
அந்த மூன்று நாட்கள்
முகம் சுழித்து
விலகிக்கொள்கிறது.
கவிதை மட்டும்தான்
அப்போதும்
காற்றாய் 
சிவப்புக்கொடி ஏந்திய
தோழனாய்
துணைநிற்கிறது.

சுவடிகளில்
சிறைவைக்கப்பட்டிருந்த
கவிதைமொழியை
விடுதலையாக்கிய
பாட்டனின்
பாடல் வரிகள்
எல்லைகள் தாண்டி
எப்போதும் 
என் வசம்.

ஆளரவமில்லாத காட்டுப்பாதையில்
பூத்திருக்கும் செடிகளின்
இலைகளின் அசைவில்
கவிதைமொழி
கண்சிமிட்டி
கண்ணீர்விட்டு
கட்டி அணைக்கிறது.


காதல் தேசத்தில்
கவிதையே
யார் குற்றவாளி?
கவிதை எழுதும் மனைவி
கணவனுக்குத் தலைவலியாம்

கவிதை எழுதும் அம்மா
பிள்ளைகளுக்கு
பெருந்தொல்லையாம்.

கவிதையே
எத்தனைப் பிறவிகள்
அடுத்தவன் மனைவியை
பித்தனாய் வந்து
பேதலிக்க வைக்கிறாய்?

கவிதையுடன்
கொண்ட காதல்
கல்லறைக்கதவுகளைத்
திறந்து
கடப்பாறையால்
தோண்டி எடுத்து
மரணித்தப் பின்னும்
வேர்களாய் வந்து
கருந்துளை உதடுகளில்
ஈரம் ததும்ப
முத்தமிடுகிறது.
இருந்தும் என்ன செய்ய?
கவிதையே..

துரோகம் செய்தேனோ
நம் காதலுக்கு?
மன்னிப்பாயா
இல்லை
தண்டிப்பாயா
கவிதையே
நீ வாசம் செய்யும்
எந்த மொழியிலாவது
எந்த தேசத்திலாவது
நம் காதல் தேசத்தின் கொடி
பறக்கும் அனுமதி இருந்தால்
ஓடி வந்து சொல்
வருகிறேன் உன்னோடு
அதுவரை
கவிதையே
உன்னுடன் நான் கொண்ட
காதல்
கள்ளக்காதலாய்
தலைகுனிந்து
.....







Friday, July 13, 2012

இப்படியும் ஓர் உண்ணாவிரதம்!

உண்ணாநிலையில் வடக்கிருந்து உயிர்விட்டது ஒரு காலம்.
காந்தியின் மிக வலிமையான ஆயுதம் உண்ணாவிரதம் என்று
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு  எழுதப்பட்டிருக்கிறது.
பெண்டிர் மடலேறுவது இல்லை என்று தொல்காப்பியம் சொல்வதை 
அதெல்லாம் அந்தக்காலமய்யா என்று சொல்லியிருக்கிறது சில நிகழ்கால
செய்திகள்.
காதலித்தவன் ஏமாற்றி விட்டால் "விட்டேனா பார்" என்று அவன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்து திருமணம் செய்துக்கொண்ட சில
வீரக்காதலியரை அண்மைக்கால பத்திரிகை செய்திகள் மூலம்
அறிந்து பெருமிதம் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த உண்ணாவிரதங்கள் அனைத்தையும் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது...
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இராஜஸ்தானைச் சார்ந்த ஓம் சாந்தி சர்மா என்ற பெண்மணியின் உண்ணாவிரதம்.


செய்தி இதுதான்:


ஓம் சாந்தி சர்மா, புதன்கிழமை, 11 ஜூலை 2012 முதல் புதுடில்லி , ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய கோரிக்கை, இந்தியாவின் (இளவரசர் )ராகுல்காந்தி அவருக்கு மருமகனாக
வரவேண்டுமாம். அதற்காக 15 கோடி வரதட்சனை கொடுக்கவும் தயாராக
இருக்கிறாராம். தன் மகளுக்கு ராகுல்காந்தியை விட மிகச்சிறந்த வரன்
வேறு எவரும் இருக்க முடியாது என்று நினைக்கிறாராம்.
இதைப் பற்றி காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று
தெரியவில்லை. டிசிபி  கே சி திரிவேதி "பாவம், இந்தப் பிரச்சனை காரணமாக
 மவுனவிரதம் இருப்பதாக கேள்வி.


பாவம்..இந்தியத்தாய்.. 

Monday, June 25, 2012

மைக்கல் ஜாக்சன்

இன்று 25 ஜூன் , மைக்கல் ஜாக்சனின் மூன்றாமாண்டு நினைவுதினம்.
மைக்கல் ஜாக்சனின் கல்லறைக்கு 11000 சிவப்பு ரோஜா மலர்களை
அனுப்பி இருக்கிறார்கள் அவன் ரசிகர்கள்.

23 ஜூன் (2012) சனிக்கிழமை நான் ஹாலிவுட் சாலையில் நடந்து கொண்டிருந்தப்போது புகழ்பெற்றவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட
அந்த நட்சத்திர நடைபாதை எங்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்.
ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தமான நட்சத்திரங்களின் பெயர்
பொறிக்கப்பட்ட நட்சத்திரத்தின் அருகிலிருந்து புகைப்படம் எடுத்துக்
கொண்டிருக்கும் காட்சி.. 

அப்படிப் பார்த்த காட்சியில் மைக்கல் ஜாக்சனின் நட்சத்திரம் மட்டும்
வித்தியாசமாக ... 
மைக்கல் ஜாக்‌ஷனின் பெயர் பொறித்த அந்த நட்சத்திரத்தைச் சுற்றி நான்கு
பெண்கள், அந்தப் பெயருக்கு முன்னால் எரியும் மெழுகுவர்த்தி.







மைக்கல் ஜாக்‌ஷனின் பாடல் வரிகள்:


Another day has gone
Iam still all alone
How could this be
You are not here with me
you never said goodbye
someone tell  me why
 
but you are not alone
for Iam here with you
Though we're far apart
you are always in my heart
but you are not alone

***

They don't care about us
Beat me hate me
you can never break me
will me thrill me
you can never kill me
.....
All I wanna say is that
They don't really care about us





Sunday, June 24, 2012

நிலவுப் பெண்ணும் யோனிபீடமும் =




நிலவு ஒரு பெண்ணாக என்று கற்பனையில் இப்போதும் எழுதுவதில்
ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. நிலவுக்கும் பெண்ணுக்கும் எப்ப்போதும்
ஓர் ஈர்ப்பு. நிலவைப் பெண்ணாக உருவகிப்பது அழகின் ஆராதனை மட்டுமல்ல.
நிலவே அவள். அவளே நிலவு.
நிலவின் ஒவ்வொரு நாளும் அவளுக்கானவை. அவளைப் போலவே நிலவும் வளர்வதும் தேய்வதும் மறைவதும் பூரணமாய் மலர்வதும் மீண்டும் இதே தொடர்வதும் அவள் கண்டறிந்த ரகசியங்கள். அவளுக்கும் நிலவுக்குமான அந்த அந்தரங்க உறவு நிலை அவள் பூரணமாக அறிந்து கொள்ள எத்தனையோ பருவங்களைத் தாண்டி வழிவழியாய் தன் அடுத்த தலைமுறைகள் அறிந்து கொள்ளவும் அதற்கு அடுத்த நிலையில் அவள் கடந்து வந்த பாதையில் முன்னேறி செல்லவும் அவள் எத்தனையோ மவுன யுத்தங்கள் நடத்தி இருப்பாள்.
இயற்கை அவள் விட்டுச்சென்ற தடயங்களை அழித்திருக்க கூடும். அந்த அழிபாடுகளுக்கு நடுவில் அவள் கண்டறிந்த நிலவின் ரகசியங்கள்
பெண்ணுடலின் பிம்பமாய் அவளைத் தொடர்ந்திருக்கும்.
நிலவுக்கும் அவளுக்குமான அந்த ரகசியங்களே உணவில், உடையில்,
களவில், காமத்தில், இரவில் பகலில் எத்தனை எத்தனையோ மாற்றங்களை உருவாக்கின. நாள் கிழமை திங்கள் என அவள் நாட்காட்டி எங்கும் அவள்
கோடுகளின் குறியீடுகள். மனித வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

ரத்தம் சிந்தும் போதெல்லாம் உயிரினங்கள் மாண்டுபோவதை மட்டுமே அறிந்த ஆதிகால இனக்குழு சமூகத்தில் மாதந்தோறும் அவளிடமிருந்து வெளிப்படும் ரத்தப்போக்கு அவளை எதுவும் செய்யாமலிருப்பது அன்றைக்கு அவனுக்குப் புரியாதப் புதிராக மட்டுமே இருந்திருக்கும். அந்தப் புதிருக்கு விடைக் கிடைக்கும் முன்னே ரத்தப்போக்கினூடாகவே புதியதொரு ஜீவனின் ஜனனம்,
புரிந்தும்  புரியாத புதிராக அவள் , அவனை மருட்டி இருப்பாள். அவளைக்
காணும் போதெல்லாம் ரத்தச்சிவப்பு அவன் நினைவில் வந்து கனவில் வந்து
அவனை விரட்டி இருக்கும்.
மனிதன் எதைக்கண்டெல்லாம் அச்சம் கொண்டானோ அதெல்லாம் அவன் வழிபாட்டுக்குரியதாக மாறியது போலவெ அவளும் அந்த நாட்களில் அவன் வழிபாட்டுக்குரியவளாக தெய்வமாக அவனிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டாள்.
எல்லா மதங்களிலும் இனங்களிலும் சடங்குகளின் போது ரத்தச் சிவப்பு நிறமே
இன்றுவரை எச்சமாய் தொடர்வதன் காரணம் ஆகும்.. பெண்தான் ஆரம்பத்தில் தெய்வீக அம்சமாய் , சக்தியின் அடையாளமாய் மந்திரவாதியாய் மனித குல வாழ்க்கையில் தோற்றமளித்தாள்.

அவளை அவனிடமிருந்து முற்றிலுமாக வேறுபடுத்திய இந்நிகழ்வு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான விளைவுகளைப் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுத்தின. அந்தப் பாதையில் அவள் இறங்குமுகமாக இருந்ததும் அவள் அதனாலேயே அந்த நாட்களில் தீட்டாகிப் போனதும்
இறங்குமுகத்தின் இறுதிக்கட்டம் எனலாம்.
ஆரம்பகாலங்களில் அன்னையே இனக்குழுக்களின் தலைமை பொறுப்பில் இருந்தாள் என்கிற மனித இன வரலாற்றை நாம் அறிவோம்.
மாதவிடாயும் குழந்தைப்பேறும் பெண்ணை தலைமைப் பொறுப்பிலிருந்து இறக்கியது உண்மை. ஆனால்,.
பெண்ணுடலின் இந்த இயற்கையான நிகழ்வே அவளை பல கண்டுபிடிப்புகளின்
அன்னையாக்கியது.

அவள் உடலின் மர்மம் அந்த நாட்களில் அவளைத் தனித்திருக்க செய்த காலத்தில் அவளுடன் இருந்த ஒரே உறவாக இருந்தது நிலவு மட்டுமே.
நிலவை ஒவ்வொரு நாளும் அவள் கவனிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கும் நிலவுக்குமான ஒற்றுமை..
நிலவும் மூன்று நாட்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவளும் அந்த மூன்று நாட்கள் தனித்திருக்கிறாள். 28 நாட்கள் கழிந்தப் பின் மீண்டும் நிலவு மறைகிறது. அவள் உடலும் இதே 28 நாட்கள் சுழற்சியில் மீண்டும் ரத்தப்போக்கைக் காட்டுகிறது. சமூகம் அவளை தனிமைப்படுத்துகிறது.
அவள் நிலவைப் பார்க்கிறாள். இதை எழுதும் போது நாட்கள், 28 நாட்கள்
என்றெல்லாம் எழுதுகிறேன். நாள், கிழமை, திங்கள், இந்த நாள் கணக்கு  கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அவளின் அந்த நாட்களின் குறியீட்டு கோடுகளே
முதல் காரணமாக இருந்திருக்கின்றன.

தெற்கு பிரான்சில் , கி.மு. 15000 வருட பழமையான கருடப்பறவையில் எலும்புகளில் காணப்படும் குறியீடுகளை வாசித்த அலெக்ஷாண்டர் மார்ஷக்
அந்தக்  கோடுகள் நிலவை அடிப்படையாகக் கொண்ட காலக்கணக்காக (based on lunar month)  இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
3000 வருட பழமையான சீனக்காலண்டர் கணக்கும் 28 நாட்களின் அடிப்படையில் இருப்பது இதனால் தான்.
இன்றும் காடுகளில் மனித அறிவியலின் தாக்கத்திலிருந்து விலகி தனித்து வாழும் ஆதிவாசிகளின் கணக்குகளில் பெரிய எண்கள் கிடையாது. சில
ஆதிவாசிகள் ஆயிரம் என்ற எண் எழுத்தை அறியாதவர்கள் தான்.
மரக்குச்சியாலும் உலோகத்தாலும் பெண்தான் முதலில் வரைய ஆரம்பித்தாள்.
நிலவு வந்தவுடன் ஒரு கோடு போட்டாள். மறுநாள் நிலவு வந்தவுடன் இன்னொரு கோடு போட்டாள். இப்படி ஒவ்வொரு நாளும் நிலவு வந்தவுடன்
அவள் கோடு கோடாக போட்டுக் கொண்டே வந்தாள். காலம் செல்ல செல்ல
அவளுக்குப் புரிந்தது. நிலவின் கணக்கும் அவளின் அந்த நாட்கள் கணக்கும்.
இப்படித்தான் அவளிடமிருந்து வானவியலறிவு வளர்ந்தது.
நாட்காட்டியும் பருவங்களும் அவள் வைத்தப் புள்ளியிலிருந்து வரையப்பட்ட கோடுகள் தான்.
ஆதிவாசிகளின் ஓவியங்கள் கோடுகளாகவும் கோடுகளை அடிப்படையாகக் கொண்ட முக்கோணம், செவ்வகம், வட்டம் என்று ஜியாமெண்ட்ரி வடிவங்களாக இருக்க இதுவே காரணம்.



தனித்திருந்த பெண் அந்த நாட்களில் அவள் எப்போதும் செய்யும் சில வேலைகள் செய்யக் கூடாது என்று தடை செய்யப்பட்டாள். அந்த தடைகளை
எல்லாம் தன் புதிய புதிய கண்டுபிடிப்புகளின் ஊடாகவே அவள் கடந்து வந்தாள். மகப்பேறின் போது அவள் கைகள் அழுக்கானது. அவள்
இறைச்சியை, காய்கறியை தீயில் சுடும் வேலையை, உணவைப் பகிர்ந்து அளிக்கும் வேலையையோ செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவள் தன் கைகளைப் பயன்படுத்தாமல் அதே நேரத்தில் இந்த வேலைகளை எல்லாம் செய்யக் கூடிய பொருட்களை உருவாக்கினாள். அன்றாடம் அவள் வாழ்க்கையில் அவள் அருகே இருக்கும் காய்ந்த கொட்டை, சிரட்டை, மரக்குச்சி, இவைகளைக் கொண்டு தான் அவள் கரண்டி, சூப் கரண்டி, சாப் ஸ்டிக் இத்தியாதிகளின்
கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டாள். இலைகளில் சாப்பிடவும் அவளே சொல்லிக்கொடுத்தாள்.

தண்ணீரை அந்த நாட்களில் அவள் தொட்டுவிட்டாள் தண்ணீருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று மனிதன் பயந்தக் காலத்தில் தண்ணீரைத் தொடாமல்
சேமித்து வைக்கவும் எடுத்து வரவுமான சுரைக் குடுக்கைகள், மரக்குடுவைகள்
என்று அவள் கண்டு பிடிப்புகள் தொடர்ந்தன.

அந்த நாட்களில் அவள் காலடி நிலத்தில் பதிந்தால் நிலத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்த காலத்தில் அவள் தன் பாதங்கள் நிலத்தில்
பதியாமல் நடக்கும் இரும்பு காலணிகள்,., தோல் காலணிகளைக் உருவாக்கினாள். நிலத்தில் சாய்ந்து தூங்கக்கூடாது என்ற நிலையில்
நிலத்திலிருந்து ஓரடி இரண்டடி உயரத்தில் படுத்திருக்கும் சொகுசுக் கட்டிலின்
ஆரம்ப சொந்தக்காரி அவளானாள்.
மண்ணைக் குழைத்து பாண்டம் செய்யும் போது அவள் செய்தக் குடுவை
டிசைன் அவள் கர்ப்பினி காலத்தின் மாடலிங் காட்சிதான்

தாந்திரிகம் பெண்ணை நான்கு வகையாகப் பிரிக்கிறது. குமரி அதாவது கன்னிப்பெண். பூப்படைவதற்கு முந்திய நிலை.
பூப்படையும்நிலை அவள் அழகின் சிரிப்பு. அதை வெள்ளைத் தாமரையிலிருக்கும் சரசுவதி தேவியாக உருவகிப்பது, அதற்கு அடுத்த நிலை
அல்லது மாதவிடாய் முடிந்த அடுத்த வாரம், கருமுட்டை உருவாகும் காலம்,
ஆண் பெண் புணர்ச்சிக்கு ஏற்ற காலம் என்று தொல்காப்பியமும் சங்ககால இலக்கியமும் சொல்லும் காலம், பெண்ணின் பூரணத்துவம். அதுவே
இலட்சுமியின் உருவகம். கருமுட்டை அழிந்து மீண்டும் மாதவிடாய்
ரத்தப்போக்கிற்கான காலம், அல்லது நிலவு கண்ணுக்குத் தெரியாத அந்த மூன்று நாட்கள். காளி தேவியின் உருவகம். காளியின் முகம் கறுப்பாக காட்டப்படுவதன் காரணம் இதுதான்.

குமரி - கன்னிப்பெண்
சரசுவதி - பிறை நிலவு
இலட்சுமி - முழு நிலவு
காளி - அமாவாசை

இன்னொரு வகையில்

குமரி  - சிறுமி
பிறைநிலவு  --- இளம்பெண்
முழுநிலவு  ---- தாய்மை
அமாவாசை - மூதாட்டி, எல்லாம் அறிந்த சக்தியின் வடிவம்.
என்று பெண் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி காட்டுவதும் உண்டு.

நிலவும் பெண் தெய்வ வழிபாடும் இப்படியாக தனக்குள் பல்வேறு உருவகங்களைக் கொண்டிருக்கின்றன.-

இந்த உருவகங்களின் எச்சங்களாக இன்றைக்கும் உலகம் எங்கும் பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான அடையாளங்களில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருக்கின்றன.

கி.மு. 25000 வருட பழமையான மனிதன் செய்த கல்வேலைப்பாடு உட்கார்ந்த நிலையிலிருக்கும் பெண்ணின் உடல்.
ஆஸ்திர்யா பைர்நஸ் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கால்களையும் மடக்கி குத்தவச்ச மாதிரி பெண் உட்கார்ந்திருக்கும் காட்சி.

அங்கெல்லாம் அதெல்லாம் வரலாறாக மனிதன் கடந்து வந்தப் பாதையை திருப்பிப் பார்க்கும் ஏடுகளாக மட்டுமே இருக்கின்றன. இங்கே, நம் இந்தியாவில்.?????????!!!!!!!

அசாம் மாநிலத்தில் கெளகத்தி ரயில்வே நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்  துர்க்கா காமக்யா கோவில் யோனி வழிபாட்டு ஸ்தலம்
"யோனிபீடம் " என்றழைக்கப்படுகிறது. இதற்கு சொல்லப்படும் புராணக்கதை.
கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்‌ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள்
அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்
அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனிவழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்! சரி கதையை விட்டுத்தள்ளுங்கள்.
இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள்.
அந்த மூன்று நாட்களும் அக்கோவில் குளத்து நீர் சிவப்பாக மாறிவிடும் அதிசயம் நடக்கும்.! அந்த புண்ணிய நீரை பக்தர்களுக்கு புனித நீராக
கொடுப்பார்கள். (கோவில் குளத்தில் கலர்ப்பொடி தூவுகிறார்கள். அதனால் தான்
குளத்து நீர் சிவப்பாக மாறுகிறது என்பது தான் உறுதி செய்யப்பட்ட செய்தி)
அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும்.

அசாமில் தான் அப்படி என்றால் தமிழ்நாட்டிலும் இதெல்லாம் உண்டு.
இன்றைய கேரளாவில் இருக்கும் செங்கனூர் பகவதி அம்மன் கோவில்
கேரளாவில் இருக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தமிழருக்கானவைதான்.
கேரளா என்றவுடன் இன்றைய முல்லைப்பெரியாறு கேரளாவை நினைக்கவேண்டாம். சிலப்பதிகாரம் செங்குட்டுவன் காலத்து மலையாள
பூமி. இந்தப் பகவதி அம்மன் கோவில் தீட்டுத்துணி ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இந்த தீட்டுத்துணி எவரிடமிருக்கிறதோ அவருக்கு அதிர்ஷ்டம்
கொட்டோ கொட்டு என்று கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்.
அதனால் தான் முதலமைச்சர் முதல் நீதிபதிகள் வரை இந்த தீட்டுத்துணியை வாங்கிச் செல்ல போட்டி. பலவருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இக்கோவில்களின் தொடரும் இச்சடங்குகள் இனக்குழு வழிபாட்டின்
பெண் வழிபாட்டின் எச்சங்கள் தானே தவிர வேறல்ல,
மருத நில வாழ்க்கையில் கேரளாவில் இன்றும் "உக்காரல்" என்ற சடங்கு மிகவும் புகழ்பெற்றது. பெண் பூப்படைவதை கிராமப்புறங்களின் பெண் உட்கார்ந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள்.
தை மாதத்தில் அறுவடைக்குப் பின் அந்தக் கோடையில் மண் தக தகவென
சிவப்பாக காட்சி அளிக்கும். அந்த நாட்களை பூமாதேவி உட்கார்ந்துவிட்டாள்
என்கிறார்கள். அந்த மூன்று நாட்களும் விவசாயம் சார்ந்த எந்த வேலைகளும் நடக்காது. அதிலும் குறிப்பாக விவசாய நிலத்தில் வேலை செய்யும் மக்களே
இச்சடங்கை நம்புகிறார்கள். நிலம் அவர்களுக்கான உடமையாக இல்லாத இக்காலத்திலும் இந்த மூன்று நாட்களும் நிலவுடமையாளர்கள் அவர்களை
ஒன்றும் சொல்வதில்லை.

இக்கோவில்களில் தொடரும் வழிபாட்டின் எச்சங்களும் சில சடங்குகளும்
மனித இன வரலாற்றில் பெண் வழிபாட்டின் மிச்சங்களே தவிர வேறல்ல.

 







Monday, June 11, 2012

இதுவேறு நந்தன் கதா..





தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த போது அந்த புருனோவாக நடித்தப் பையனின் முகமும் அந்த யூதர் பையனின் முகமும் இப்போதும் மனசில் நிற்கிறது.
அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட முடியவில்லை. கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் அறிந்த பாடத்திட்டங்களில் இடம் பெறாத எத்தனையோ
வரலாற்று நிகழ்வுகளை அறிந்துக் கொள்ளும் ஒரு தேடலில் ஹோலோகொஸ்ட் என்ற சொல்லை அந்தச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும்
பயங்கரமான அதிர்ச்சி தரும் உண்மைகளை மனித இன வரலாற்றில் நடந்த
மிக மோசமான வன்முறையை அறிந்து கொண்டேன்.

நான் பார்த்திருந்த மேற்கண்ட திரைப்படத்தில் புருனோ ஒரு இராணுவ அதிகாரியின் மகன். யூதர்களை அடைத்து வைக்கும் ஒரு கேம்ப்
அந்த இடத்திற்கு பணிமாற்றலாகி வரும் குடும்பம். புருனோவுக்கு வந்த இடத்தில் விளையாட அவனை ஒத்த நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
தனியாக விளையாடும் அவன் ஒரு நாள் யூதர்களின் முகாம் எல்லைவரை
வந்துவிடுவான். அவன் விளையாடும் பந்து அந்த எல்லையிம் முள்வேலியைத்
தாண்டி விழும். முகாமில் இருக்கும் அவனைப் போல இன்னொரு யூதர் சிறுவன் அந்தப் பந்தை எடுத்துக் கொடுப்பான். சிநேகம் வளர்க்கும் புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள். நட்பு வளரும். யூதர்களின் முகாமில்
நடக்கும் எந்த ஒரு செயலும் புருனோவுக்குத் தெரியாது. நண்பன் சொல்ல சொல்ல ஆச்சரியத்தில் விரியும் அவன் விழிகள். அதைப் பார்க்கும் ஆர்வத்தில்
ஒரு நாள் முள்வேலி தாண்டி அந்த நண்பனின் அகதிகள் பைஜாமாவை அணிந்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் ஹோலோகொஸ்ட் ஆர்டர் வரும்.
முகாமில் இருக்கும் அனைவரும் வரிசையாக நடப்பார்கள். ஒரிடத்தில் அடைக்கப்படுவார்கள். அப்போதுதான் வீட்டில் ப்ருனோவைக் காணவில்லை என்று அவன் தாய் தேடுவாள். தன் கணவன் , இராணுவ அதிகாரியுடன் சேர்ந்து தேடும்போது முள்வெளி தாண்டி அவன் சென்றிருக்கும் அடையாளம் தெரியவரும். முகாமிலோ ஹோலோகொஸ்ட் ஆர்டர் ... அதிகாரி ஓடிப் போவதற்குள் எல்லாம் முடிந்திருக்கும். ஆம் கூட்டமாக அனைவரும் ஓரிடத்தில் அடைக்கப்பட்டு விஷவாயு செலுத்தி பஸ்பமாக்கப்பட்டிருப்பார்கள்.
இதுதான் அந்தக் கதை. மனித உயிர்களை இப்படி கொன்று குவித்த நிகழ்வுக்குப் பெயர்தான் ஹோலொகொஸ்ட்.

இந்த ஹோலோகொஸ்ட் கொடூரத்தைக் கண்டு பிடித்த சர்வாதிகாரி இட்லர்.
யூதர்களை இப்படித்தான் அவன் கூட்டம் கூட்டமாக, பெண்கள், குழந்தைகள் என்று எல்லோருமாக சேர்த்து கொன்று குவித்தான்.
1933 முத. 1945 வரை நாசிகளின் ஆட்சியில் நடந்த மனித இன வரலாற்றின் கொடூரம் இது. சற்றொப்ப 11 மில்லியன் மக்களை இப்படிக் கொன்றிருப்பதாக
வரலாரு பதிவு செய்திருக்கிறது. இதில் 6 மில்லியன் யூதர்கள். 1.1 மில்லியன்
குழந்தைகள்.


ஹோலோகொஸ்ட் என்பது கிரேக்கச் சொல். அதன் பொருள் தீயில் பலியிடல், sacrifice by fire.

நாசிப்படை ஆட்சியில் 01 ஏப்ரல் 1933ல் யூதர்களின் வியாபாரத் தளங்களைப் புறக்கணிக்கும் திட்டத்தில்தான் முதலில் ஆரம்பித்தது.
1935ல் யூதர்களுக்கு அரசு உத்தியோகத்தில் இடமில்லை என்றார்கள்.
அதன் பின் பொதுப்பணித்துறையில் இருந்த யூதர்களை பணி நீக்கம்
செய்தார்கள். யூத மருத்துவர்கள் யூதர் இனத்து நோயாளிகளுக்கு மட்டுமே
வைத்தியம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்கள்.
யூதர்களின் கடைகளை அடித்து உடை என்று அரசாணைப் பிறப்பித்தார்கள்.
1939ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த உடன், டேவிட் மஞ்சள் நிற நட்சத்திர அடையாளத்தை தங்கள் ஆடைகளில் வெளியில் தெரியும் படி
அணிந்திருக்க வேண்டும் என்று ஆணையிட்டார்கள்.

போரில் சிறைப்பிடித்த அரசியல் கைதிகளையும் யூதர்களையும் அடைத்து வைக்க விதம் விதமான முகாம்கள் அமைத்தார்கள். கடினமான வேலைகளைச் செய்வதற்கும் சிறைப்படிக்கப்பட்ட மருத்துவர்களும் விஞ்ஞானிகளும்
முகாமிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளையே தங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் எலிகளாக்கினார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மனிதக்கொல்லி மருந்துகளை இந்த முகாம்களில்
கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

கூட்டம் கூட்டமாக சிறைப்பிடித்தவர்களை புகைவண்டியில் ஏற்றி பல்வேறு முகாம்களுக்கு கொண்டு சென்று தங்கள் வேலைகளைச் செய்ய வைத்தார்கள்.
இந்த முகாம்களில் கதவுகளே இல்லாத கழிவறையும் குளியலறையும். அதைவிடக் கொடுமை தணணீரே இல்லாத கழிவறை.
ஆடைகளைக் களையச் சொல்லி வரிசையாக நிறுத்தி வைக்கும் கொடுமை.
நிர்வாணமாகவே அடைத்து வைக்கும் கொட்டிலாக இருந்த முகாம்கள்.
குளிப்பதற்காக நிர்வாணமான கூட்டத்தில் தண்ணீருக்குப் பதில் விஷவாயுவைத் திறந்துவிட்டு மூச்சுத்திணற வைத்துக் கொன்ற பரிதாபம்.
ஹோலோகொஸ்ட்க்கு என்றே அமைக்கப்பட்ட கைதிகளின் முகாம்கள்.


ஜெர்மனியில் தோழி தேவா ஹெராள்டுடன் 2006, அக்டோபரில் ஒரு கருக்கல் பொழுதில் நடந்து கொண்டிருந்தேன். தோழி தேவா கேட்டார்... உங்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை உண்டா, பயமா? என்று. " பயமா, எனக்கா...
ந்நோ... " என்று சொல்லிக்கொண்டே அந்த நீண்ட பாதையைக் கடக்கும்போது
சொன்னார்,... இந்த இடத்தில் தான் ஆயிரக்கணக்கான யூதர்களை உலகப்போரின் போது கொன்றார்கள் என்று. அந்தக் குளிரில் கை நடுங்கியது
கோட் பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு நடப்பது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது என்று விளக்கெண்ணெய்த்தனமாக ஒரு ஜோக் அடித்துக் கொண்டே நடந்த நினைவு. அப்போதும் சரி, இப்போதும் சரி...
அது பயமா, இல்லை குளிரில் வந்த நடுக்கமா... புரியவில்லை.

ஹோலோகொஸ்ட் பற்றிய உண்மைக்கதைகள் பல்லாயிரம். புதினங்கள் நிறைய உண்டு. புகழ்பெற்ற திரைப்படங்கள் 100க்கு மேலானவை ஹோலோகொஸ்ட் பற்றி வெளிவந்திருக்கின்றன. இந்த முகாமிலிருந்து
உலகப்போர் முடிந்தவுடன், இட்லரின் முடிவுக்குப் பின் விடுவிக்கப்பட்டவர்கள்,
அவர்களின் மன உளைச்சல், வீட்டுக்குத் திரும்பியப்பின் யாருமே உயிர்ப்பிழைத்திருக்கவில்லை என்பதை உணரும் தருணம், அதையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தவர்கள் சிலர். தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். அதிர்ச்சியில் மாண்டவர்கள் பலர்.

வரலாற்றில் இது வேறு நந்தன்களின் கதை.