“மொட்டைக் கிறுக்கி” சிறுகதை : ஒருவரின் தனித்த அடையாளத்தை அழித்து, அவரை அவரது மன நிலை அல்லது உடல் தோற்றத்தின் அடிப்படையில் பெயரிடும் சமூகத்தின் வன்முறை. இக்கதையின் தலைப்பு அதை வெளிப்படுத்துகிறது. அவளுக்கு தனிப்பட்ட குடும்பமோ வரலாறொ கடந்த காலமோ இல்லை. அவள் ஊரின் கூட்டு நினைவில் ஒரு ‘காட்சிப்பொருள்’ மட்டுமே.!
தகர டப்பாக்களை கட்டிவிடுவது, பட்டாசு வெடிப்பது, கேலி செய்வது என்று சமூகம் பாதிக்கப்பட்ட மன நலம் குன்றியவர்கள் மீது நடத்தும் அன்றாட வன்முறையின் சிறிய வடிவங்கள் என்பதை கதைப்போக்கில் வாசிப்பவருக்கு உணர்த்திவிடுகிறார். கதையின் இறுதிப்பகுதி மிகவும் நுட்பமான ‘பைத்தியம்’ என்று சமூகம் நினைக்கும் அப்பெண்ணின் சுயமரியாதையை உணர்த்திவிடுகிறது.
மொட்டைக்கிறுக்கி ஒரு subaltern வாசிப்பில் அது அப்பெண்ணின் தனிப்பட்ட கதையாக இல்லாமல் சமூகத்தில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பெண்/ வெளியேற்றப்பட்ட பெண்/ மறைக்கப்பட்ட வாழ்வின் கதையை பிரதி எடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஊர்களிலும் மொட்டைக்கிறுக்கி/ மொட்டிக்கிறுக்கன் அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
***
நகுலனின் நாலு கட்டு வீடு சிறுகதை : ஒரு நினைவோடை கதை. வெளி நாட்டில் வாழும் நகுலன் தன் பூர்வீக வீட்டிற்கு திரும்பி வருகிறான். வீடு முழுவதும் அவன் நினைவலைகளில் நனைகிறது.
இக்கதை நகுலனின் கதையல்ல, ஒரு பூர்வீக வீட்டின் கதை. வீடுதான் இக்கதையின் முக்கியமான கதைப்பாத்திரம். யாருடைய வீடு என்பதல்ல கதையின் முக்கியத்துவம். நாலு கட்டு வீடு கட்டிடங்களால் நிற்கவில்லை. அது நினைவுகளால் நின்று கொண்டிருக்கிறது.
குடும்ப வரலாறு, தலைமுறை நினைவுகள், விவசாய பொருளாதரம், உறவுமுறை , கிராமிய வாழ்க்கை இவற்றின் வாழ்விடமாக வீடு.
கதையின் அமைப்பு நோர்கோட்டில் நகரவில்லை. அது ஒரு பொருள் ஒரு நினைவு என்ற முறையில் நகர்கிறது.
ஹார்லிக்ஸ் பாட்டில் – தாய் நினைவு
பத்தாயம் – நெல் சேமிப்பு நினைவு
கிணறு – குழந்தைப் பருவ விளையாட்டு
பலாமரம் – மரமேறிய அனுபவம்
என்ற ஒவ்னொரு பொருளின் நினைவுகளை ஒவ்வொன்றாக அடுக்கி செல்கிறது.
வீடு என்பது வேர்களாகவும், மழை என்பது அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளாகவும் க்ரீட்டிங் கார்டு என்பது இழந்தப்போனதன் அடையாளமாகவும் கறிச்சக்கை மரம் வெட்டப்பட்டது காலமாற்றமாகவும் இக்கதையை ஒரு குறியீட்டு பொருளில் வாசிக்கலாம்.
இக்கதை சில இடங்களில் வடிவத்தை விட நினைவுக் குறிப்பாக நினைவுகளையும் விவரணைகளையும் அதிகம் கொண்டிருப்பதால் ஒரு ‘நினைவுக்கட்டுரை’ வடிவமாகிறது.
நகுலனின் கதையாக இதைப் பார்க்கும் போது நகுலனின் அமெரிக்க வாழ் புலம்பெயர் வாழ்க்கையில் கிட்டிய பொருளாதர வெற்றி என்பதில் அவன் உணர்வுகள் நிறைவு பெறவில்லை. இது புலம்பெயர் உருவாக்கும் வெற்றிடத்தின் கதை. வெற்றிடத்தில் தான் கடந்த காலமும் அதன் நினைவுகளும் மட்டுமே தேங்கிவிடுகின்றன.
இக்கதையின் தலைப்பு ஏன் நகுலனின் நாலு கட்டு வீடு ? ஏன் நகுலன் ? ???? தமிழ் இலக்கிய சூழலில் நகுலன் என்ற ஆளுமைக்கு ஒரு கனமான அடர்த்தியான அர்த்தங்கள் உண்டு. அந்தப் பெயர் பயன்படுத்தப்படும்போது வாசகமனம் தானாகவே எழுத்தாளர் நகுலனை நோக்கி பயணிக்கும். ஆனால் கதைக்கும் நகுலனுக்கும் துளியும் தொடர்பில்லை! இந்திய புராண மரபில் ஒரு நகுலன் உண்டு. அந்த நகுலனும் இந்தக் கதைக்கு தொடர்பில்லாத நகுலன். இந்த நகுலன் என்பது ஒரு பெயர்ச்சொல். அவ்வளவுதான். அது நகுலனாக இல்லாமல் வெறும் குலனாக இருந்தாலும் கூட கதைக்கு எந்த சேதாரமும் ஏற்படப்போவதில்லை.
திருவனந்தபுரத்தில் வாழ்ந்த எழுத்தாளர் நகுலன் கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிக்கு அன்னியமானவரும் அல்ல. சில பெயர்சொற்கள் காலப்போக்கில் தனிமனித பெயர் அடையாளமாக மட்டும் இல்லாமல் அது ஒரு வாழ்க்கையின் தனித்த அடையாளமாக மாறுகிறது. அந்த தனித்த அடையாளங்களை உடைக்கவோ சிதைக்கவோ கதைக்கு இத்தலைப்பு கொடுக்கப்படவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் கதை தலைப்பினூடாக பயணிக்கும் நகுலனை நகுலன் என்ற எழுத்து ஆளுமையை ஒரு தேர்ந்த வாசகனால் அவ்வளவு எளிதாக சாதாரண பெயர்ச்சொல் தானே என்று கடந்து செல்ல முடியாது. கதைகளுக்கும் வரலாறு அரசியல் எல்லாமும் உண்டுதானே!
குமரி உத்ராவுக்கு வாழ்த்துகள்.
****************
நூல் : நகுலனின் நாலு கட்டு வீடு
சிறுகதைகள்
எழுத்தாளர் குமரி உத்ரா
வேரல் புக்ஸ் வெளியீடு. ஜனவரி 2026.
பக். 98. விலை. ரூ: 140.

No comments:
Post a Comment