Saturday, February 8, 2025

வலசை காலத்தின் கல்வெட்டு

தமிழ் வாசகர்கள் மட்டுமல்ல, உலக வாசகர்கள் வாசிக்க வேண்டிய நாவல்  'சிறகொடிந்த வலசை'

- சம்பத் ஜி



 💥💥💥

                  வலசை

             ----------------------


  புதைந்து கிடக்கும் கோடானுகோடி

 எலும்புக்கூடுகள் மீது அமைதியாக

 உறங்கியெழும் நாம் யார்?

என்ற அறிவுமதி அவர்களின் கனத்த கேள்வியினூடே புதியமாதவி அவர்களின் ‘சிறகொடுந்த வலசை’  என்ற இந்த நூலை அணுகலாம் என்றே நினைக்கிறேன். நூல் விமர்சனம் என்பதே இலக்கியத்தையும் சமூகத்தையும் வாசகர்களோடு இணைத்து ஒருசேர புரிந்து முன்னெடுக்கும் கூட்டு முயற்சிதானே.

 இடர்களால் நிரம்பியதே மனித வாழ்வு. நகுலன் அவர்கள் ஓரிடத்திலே சொல்லியிருப்பார். ‘அலைகளைச் சொல்லி பிரயோஜனமில்லை கடல் இருக்கிறவரை’ என்று . அவரே மற்றுமொரு இடத்தில் சொல்லியிருப்பார். ‘இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று வாழ்வு நிலையாமை அடிப்படையாக கொண்டதென்றாலும்கூட அந்த நிலையாமை தனக்கான எல்லையின் நிறைவோடு பறந்து கடந்து விடுவதில்தான் யாவரின் விருப்பமாக இருக்க முடியும். வலசையை துவங்கும் போதே சிறகுகள் முறிக்கப்பட்டால் அந்தக்  கொடுந்துயர் தீராதுதானே! இப்படியாக பறத்தலுக்காக காத்திருந்து வயது பேதமற்ற எத்தனையோ உயிர்களை கொத்து கொத்தாக கவ்விச் சென்றது கொரோனா . உலகம் தழுவிய கொரோனா தொற்றில் பலியான உயிர்களின் தரப்பிலிருந்து ஒற்றை சாட்சியாக எழும் கூக்குரல்தான் இந்நாவல்.

 இயற்கையின் பேரிடர்களாலோ மதக்கலவரங்களாலோ , இன்னபிற இயற்கைச் சீற்றங்களாலோ அழிபடுதல் என்பது மனித வாழ்வின் பேரவலம். மனித குலம் திட்டமிட்டு வைத்திருக்கும் அட்டவணையை திடுமென கலைத்துப் போடுவதால் மனிதகுலம் திட்டமிட்டு வைத்திருக்கும் அட்டவணையை திடுமென கலைத்துப் போடும் வாழ்வு பெருந்துயர் நிரம்பியது.  நிலத்தின் வரலாறு எங்கும் இது போன்ற ஏராளமான ரத்த சாட்சிகள் உலவிக்கொண்டேதான் இருக்கின்றன.   இது விதிவசமா, இயற்கையின் சமன்பாட்டுக் கோட்பாடா  என்று அறிய முடியவில்லை.  கிரேக்க துன்பங்கள் தொடங்கி,  இந்திய புராணங்கள் வரை ஒரு தகுந்த இடைவெளியில் ஏதேனும் ஒரு வகையில் இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இதை முற்றிய கலியின் அடையாளம் என்று வேதாந்தம் கூறுகிறது.  எதேச்சதிகாரத்தின்  திட்டமிடல் என்று சித்தாந்தம் கூறுகிறது.


  மனித குலத்தின் அறம் சார்ந்த அடுத்த நகர்வை நிர்மாணிக்க எப்போதுமே ஒரு பெரும் பாய்ச்சல் தேவையாகிறது.  அது ஒரு சிறு கலகத்தில் துவங்கி  யுத்தத்தில் முடிவடைகிறது.  ஜான்ரீடு அவர்கள்  எழுதிய உலகைக்  குலுக்கிய ‘பத்து நாட்கள் ‘ என்ற நூல் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியைக் கூறும் முக்கிய நூல். வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய முக்கிய நூலாகவே இதைப் பார்க்க முடிகிறது.  இதே அக்டோபர் புரட்சியின் காலகட்டத்தில் மக்சீம்கார்க்கி அவர்களின் ‘தாய்’ என்ற புனைவு நாவல் மிகக் காத்திரமாக  தொழிலாளர் போராட்டத்தையும்,  புரட்சியையும் கூறும் முக்கிய நூல்.  லெனின் அவர்கள் இந்நூல்  குறித்து கூறும்போது ‘பொதுவுடமை போராட்டத்தில் பாதி வேலையை இந்த நூல் ஒன்றே எளிதாக செய்த முடித்து விட்டது ‘ என்று கூறி பிரமித்து இருக்கிறார்.  வரலாற்றுப் புனைவு அவ்வளவு வல்லமை நிரம்பியது.  வயலிலே எத்தனை நெல் மகசூல் இருந்தாலும்,  விதை  நெல்லையே விவசாயி தேடிப் பாதுகாப்பது போலவே பல் சுவையில் எத்தனை புனைவுகள் வெளியானாலும் கூட இம்மாதிரியான வரலாற்றுப் புனைவுகளை வாசகர்கள் தேடித்தேடி வாசித்தும் பாதுகாத்தும் வைக்கக் கூடும் என்பதே நிஜம்.  இம்மாதிரியான நூல்கள் காலத்தின் ரத்த சாட்சியாக எப்போதுமே நம் முன் நிற்கிறது.  லியோ டால்ஸ்டாய் அவர்களின் ‘போரும் அமைதியும்’ , பிரான்சிஸ் காஃப்காவின் ‘கொள்ளை நோய்’,  சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திரதாகம் ‘ , ப. சிங்காரத்தின்  ‘புயலிலே ஒரு தோணி,’ ந. சிதம்பர சுப்பிரமணியன் அவர்களின் ‘மண்ணில் தெரியுது வானம்’, கி. ராஜ நாராயணன் அவர்களின் ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்று பல  புதினங்களைச் சொல்லமுடியும். கி.ராவின் நாவல் ஆந்திராவில் இருந்து இன வெறியர்களால் விரட்டப்பட்ட நாயக்கர்கள் தமிழ்நாட்டு காடுகளில் குடியேறி காடுகளை எரித்து கரிசல் நிலமாக்கி வாழ்விடமாக மாற்றிக் கொண்ட கரிசல் வரலாற்றை பேசுகிறது.  தவிரவும் தமிழ் ஈழப் போர்கள்  குறித்த ஏராளமான நூல்களும் முக்கியமானவை.  1947 ஆகஸ்ட் 15 தேச விடுதலையை கொண்டாடும் நாள் மட்டுமல்ல.  இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்,  பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் மதவாதிகளால் விரட்டப்பட்ட ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி சொந்த மண்ணில் இருந்தே அகதிகளாக புலம் பெயர்ந்த ஒரு கருப்பு தினமும் கூட. நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் இதை மிக காத்திரமாக பேசுகிறது.  இவைகள் எல்லாமே போர்களையும் புலம்பெயர் மனிதர்களையும் பேசுகிறது.  அந்த வரிசையில்தான் புதிய மாதவி அவர்களின் சிறகொடிந்த வலசை நாவல் ஓர் அறச்சீற்றத்தோடு கூடிய முக்கியமான நாவலாக என் அளவில் அணுக முடிகிறது.

 1945 இரண்டாம் உலகப் போரில் இடையிலேயே ஹிட்லர் இறந்த பின் ஜெர்மன் அதிகாரிகள் வேறு வழியின்றி சரண் அடைந்து விடுகின்றனர். இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருகிறது. ஆனால் ஜப்பான் அதை ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவின் விமானம் தாங்கிய கப்பல் ஒன்றின் மீது குண்டு வீசுகிறது.  இந்த குண்டு வீச்சில் 343 பேர் இறந்து போகின்றனர் . இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்த ஜப்பானை ஒடுக்குவதுதான் ஒரே வழி என்று நினைத்த அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ என்ற மிக சக்தி வாய்ந்த  அணுகுண்டு வீச்சு நிகழ்த்துகிறது ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போன்ற அச்சம்பவம் சுமார் ஒன்றரை லட்சம் பேரை பலி கொண்டது.  ஒரு புல் பூண்டை கூட விட்டு வைக்கவில்லை.  அப்போதும் ஜப்பான் சரணடையாததால் அடுத்தக் கட்டமாக நாகசாகியில் ஒரு குண்டை வீசி சுமார் 40 ஆயிரம் பேரைக் கொன்றது.  இதை எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது ‘ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது’ என்ற கட்டுரையில் மிக ஆதங்கத்தோடு பதிவு செய்திருப்பார்.  உலகையே உலுக்கி எடுத்த சம்பவத்திற்கு காரணம் என்ன? அதிகாரத்தின் நாவுகள் உலகெங்கும் ருசித்துப் பார்த்து விட வேண்டும் என்ற ஆதிக்க வெறியில்லாமல் வேறு என்ன?  குண்டுகளைப் புசிக்கிற சமூகம் நெருப்பைதானே உமிழும் என்று இந்த அதிகார வர்க்கங்களுக்கு புரியாமலே இருப்பதுதான் காரணம்.

 ஜெயமோகன் அவர்களின் ‘வெள்ளையானை’  என்ற நாவல் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சமான ராஜதானி பஞ்சம் என்றும் டெக்கான் பஞ்சம் என்றும் கூறப்பட்ட 1870 இல் நடைபெற்ற பஞ்சத்தைப் பற்றிப் பேசுகிறது . பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் ஒரு போதைக்கு உள்ளாக்கி வெகு எளிதாக அடிமையாக்கி கொள்கிற வித்தையை லாவகமாக கையாண்டு கொண்டிருந்தது.  சீனாவில் இவர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. ‘  அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி எங்களிடம் ஒரு தடித்த புத்தகத்தை கொடுத்து கண்மூடி ஜெபம் செய்யச் சொன்னார்கள்.  நாங்களும் கண்மூடி ஜெபம் செய்தோம்.  கண் திறந்து பார்க்கையில் புத்தகம் எங்களிடமிருந்தது. தேசம் அவர்கள் கையில் இருந்தது’ என்று. இப்படித்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குள் நுழைந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தக் கொடூர பஞ்சம் ஏற்பட்டது..  இந்த பஞ்சத்தினால் அன்றைய இந்திய மக்கள் தொகையில் நாளில் ஒரு பங்கு செத்து அழிந்தார்கள்  என்று வரலாற்று கணக்கெடுப்பு சொல்கிறது. பஞ்சத்திற்கு முன்பு வரை இந்திய கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்தது.  இந்த பஞ்ச காலமே கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரம் முற்றாக கலைக்கப்பட்டு விக்டோரியா அரசி தன் அதிகாரத்தின் கீழ் நாட்டை தானே எடுத்துக் கொள்கிறார்.  நன்றாக இழிவுபடுத்த தெரிந்தவனே அதிகாரியாக தகுதி உடையவர் என்பதே. பிரிட்டனின் அன்றைய கருத்தியலாக இருந்தது.  இந்தியனை பூச்சியினும் கேலியாக இழிவுப்படுத்துவதையே தனது அடிப்படை கோட்பாடாகக் கொண்டிருந்தனர்.  இந்த ராஜதானி பஞ்சம் தலைவிரித்து ஆடியது.  இந்த பஞ்சத்தின் போது எலிகள் உண்ணும் தானியம் கிடைத்திருந்தால் கூட எங்கள் பிள்ளைகளில் பாதி பேர் உயிருடன் இருந்திருப்பார்கள் என்று கதறுகிறார்கள்.  பஞ்சத்தில் சாகும் மக்களின் தானியம் இங்கிருந்து மூட்டை மூட்டையாக அவர்கள் நாட்டுக்கு கப்பலில் சென்று கொண்டிருந்தது அதற்கு பதிலாக அங்கிருந்து உறைந்த தண்ணீரான பனிக்கட்டிகளை உருகாமல் பொத்தி பொத்தி ஒரு கப்பல் நிறைய கொண்டுவரப்பட்டது. இந்தப் பனிக்கட்டியை ஆங்கிலேயர் தம் சொகுசு வாழ்விற்கும் தனது மதுவில் கலந்து குடிக்கும் ஆடம்பர தேவைக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  எட்டு கப்பல் தானியத்திற்கு ஒரு பனிக்கட்டி கப்பல் சமம்.  இப்படியாக  இந்தியர்களின் எரிந்து கொண்டிருக்கும் பிணங்களின் மீதான இவர்களின் மது சல்லாபம் கொடூரமாக நிகழ்ந்தது.  அப்போது இருந்த ஏய்டன்  என்ற கவர்னர் இந்த பஞ்சத்தை பார்வையிட சென்றபோது தனது சாரட்டின் கூண்டுகளில் தலை இடித்துக் கொள்கிறது.  அப்போது ஏய்டன்  மேடு பள்ளங்களை சரி செய்து ஓட்டு என்று சீற்றத்துடன் ஆணையிடுகிறான்.  அப்போது அந்த சாரட்டு ஓட்டி “சார் வழியெங்கும் மனித உடல்களே மலிந்து கிடக்கிறது.  மனித உடல்களின் மீதுதான் வண்டி சென்று கொண்டிருக்கிறது” என்று கூறுகிறான் .  அதிர்ச்சி அடைந்த ஏய்டன் தன் சாரட்டு கதவைத் திறந்து வெளியே பார்க்கிறான்.  ஒரு கணத்துக்கு பின் அமிலத்துளி விழுந்த புழு போல அந்தக் காட்சியை பார்த்து துடித்து விழுகிறான்.  பெரிய ஆலமரத்தின் அடியில் பிணங்கள் அள்ளிக் கொட்டியவை போல  இருக்கின்றன.  பாதிக்குமேல்  குழந்தைகள்.  நாலைந்து  நாய்கள் பிணங்களைக் கிழித்து குடலை  கவ்வி இழுத்து வெளியே எடுத்து தின்று கொண்டிருந்தன.  அவற்றின் உறுமல்களும் கடித்து சப்புக் கொட்டி இழுக்கும் முனகல்களும் உரக்கக் கேட்டன.  மரக்கிளையில் காகங்களும் பிற பறவைகளும் பெரிய சந்தை போல இரைச்சல் இட்டன.  காகங்கள் துணிந்து கீழே இறங்க நாய்கள் உறுமியபடி  அவற்றை துரத்தின என்ற கோரக்காட்சியை பதிவு செய்கிறார்.  இப்படியான மூர்க்கமான பஞ்சத்தை  இந்தியா சந்தித்திருக்கிறது.  பொதுவாக இயற்கையின் பேரிடர் கால் பாகம் என்றிருந்தால் முக்கால் பாகத்தை அதிகாரம் கையில் எடுத்து அழித்தொழித்திருக்கிறது.  இந்த கொடூரமான பஞ்சத்தைப் பற்றி விரிவாகவும் இதயங்களில் ரத்தம் வடியும் அளவுக்கு அலசி இருக்கிறது ஜெயமோகன் அவர்களின் வெள்ளையானை நாவல்.  இது இங்கு குறிப்பிட காரணம் பேரிடர்களையும் பஞ்சங்களையும் ஆவணப்படுத்துதல் என்பதே மனித குலத்திற்கு வாழ்தலின்  பொறுப்பு உணர்த்தும் கவனப்படுத்துகிற பணியாகும். இந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்த தவறுவது என்பது வாரன் ஹேஸ்டிங் என்பவர் சொன்னது போல  ‘தன் வால் தீப்பற்றி எரியும் போது  அதை அறியாமல் தூங்கும் மலைப்பாம்பை ‘ போன்றதாகும்.  யுத்தங்களையும் பேரிடர்களையும்  புலம்பெயர்தலையும் படைப்புகளாக பதிவு செய்யப்படும் போதுதான் தான் வாழும் காலத்தின் மனித மாண்புகளை உணர முடியும்.  தன் இருத்தல் எத்தனை சுகவாழ்வுக்கான ஆசீர்வாதம் என்பதை அறிந்து வீண் புலம்பல்களில் இருந்து சக மனிதனை ஆற்றுப்படுத்தும் இந்த நிலைப்பாட்டில் எழுத்தாளர் புதியமாதவி அவர்கள் தொடர்ந்து வரலாற்றில் உலவும் ஒரு துயர நிகழ்வை பதிவு செய்திருப்பது என்பது அவரின் தீராத சமூக அக்கறையை காட்டுகிறது. 

 போர்களில் விழுப்புண் பட்டு இறந்தோரின் வீர மரணம் குறித்து படித்திருக்கிறோம்.  தேச எல்லையில் ரத்த காயங்களுடன் நாள் கணக்கில் பட்டினி கிடந்து துடித்து சாய்கிற ராணுவ வீரர்களை அறிந்திருக்கிறோம்.  பஞ்சகால பட்டினியின் கொடுமை தாளாது கண் எதிரிலேயே இந்த வாழ்வை விட மரணமே மேலானது என்று இறந்தோரைக் கூட அறிந்திருக்கிறோம்.  ஆனால் அறிவியலின் உச்சத்தில் மருத்துவத்துறையின் அபரீத வளர்ச்சியில் ஓங்கி கிடக்கும் 21 ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கி எடுத்து விட்டது கொரோனா பெரும் தொற்று.  இது அறிவிக்கப்படாத மனித குலத்தை சூறையாடிய மறைமுகப் போராகவே அச்சமூட்டியது.  ஒரு ஓசையற்ற வேட்டையை நிகழ்த்தியது.  கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ரத்தம் குடிக்கும் வெளவால்களைப் போலவே  தொடர்ந்து பறந்து தூய்மை என்னும் கரு மேகத்தால் இந்த பூமியை முற்றாக இருட்டில் ஆழ்த்தியது  மனித குலம் மறக்க முடியாத ஒன்றுதானே.  வரலாற்றையே புரட்டிப் போட்ட காலம் இதுவாகத்தான் இருக்க முடியும். மனித குலத்துக்கும் மருத்துவத்திற்கும் ஆகப்பெரும் சவாலோடு சூறைக்காற்றென  சுழன்று அடித்த கோரமான பெருந்தொற்று இதுவாகவே இருக்க முடியும்.  சுவாசங்களையே விலைக்கு வாங்கிய மலிவான காலமானது இது.  கிபி மற்றும் கி.மு என்று காலத்தை பிரித்த வரலாறு மிரண்டு  நின்று கொ.மு மற்றும் கொ.பி  கொரோனாவுக்கு முன்பு மற்றும் கொரோனாவுக்கு பின்பு  என்று காலத்தையே பிளக்கிற ஆயுதமாக  மாற்றிவிட்டது.  உலகம் முழுவதிலும் சிறிதேனும் இதிலிருந்து தப்பாத  குடும்பங்களோ மனிதர்களோ இருப்பது அரிது.  எப்படி மாக்ஸின் கார்க்கி தாய் என்ற நூலில் பாவெல் என்ற பாத்திரத்தில் வாயிலாக  ஒட்டுமொத்த ரஷ்ய புரட்சியை மையப்படுத்தினாரோ அதேபோல சிறகொடிந்த வலசை என்ற இந்த நாவலின் ஊடாக எழுத்தாளர் புதியமாதவி அவர்கள் தனம் என்ற ஒற்றை பாத்திரத்தின் வாயிலாகவே உலகையே புரட்டிய கொரோனா பெருந்தொற்றின் துயர்களை நம் கண்முன் காட்சிகளாக நிறுத்துகிறார்.  இது நாவல் என ஒற்றை தகுதிக்குள் அடக்கி விட முடியாது. இதன் ஊடாக பல்வேறு துயர்களை மனித நேயத்தின் விழுமியங்களை ,நுட்பமான அரசியலை, உடனிருந்து துரோகம் நிகழ்த்தும் உறவுகளின் மூர்க்கதனத்தை,  விளிம்பு நிலை மனிதர்களின் இயலாமையை , குழந்தைகளின் மனஉலகை , பெண்ணியத்தை ,புலம்பெயர் மனிதர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி என கிளைத்து கிளைத்து  விரிந்து கொண்டே இருக்கிறது நாவல்.  சுமார் 140 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் புரட்டுகிற பக்கம் எங்கும் பெரும் துயர் கசிந்து கொண்டே இருக்கிறது.

 உலகின் ஆகப்பெரும் குடிசைவாழ்  பிராந்தியமான மும்பை தாராவியின் கொரோனா கால பெருந்தொற்றை கோரச்சித்திரமாக காட்டுகிறது இந் நாவல்.  தமிழ்நாட்டில் குக்கிராமம் ஒன்றில் இருந்து  தனம் என்ற பெண் குமார் என்பவரை காதலித்து வீட்டில் இருந்து வெளியேறி மணம் முடித்து  மும்பை தாராவிக்கு சென்று வாழ்கின்றார்.  இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு கொரோனாவில் கணவனை இழக்கிறாள் தனம்.  மீதமுள்ள உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ள சொந்த கிராமங்களுக்கே சென்று விட தாராவியிலிருந்து ஒரு தமிழர் குழுவுடன் சேர்ந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தாராவியை விட்டு  வெளியேறுகிறாள் தனம். கர்நாடக எல்லையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அந்தக் குழுவை ஒரு பாழடைந்த மண்டபத்தில் சிறைப்படுத்துகின்றனர்.  அங்கேயே தனம் இறந்து விடுகிறாள்.  குழந்தைகள் இரண்டும் அனாதையாகிறது.  தனத்தின் தோழி மைனி மூலமாக அந்த இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சொந்த ஊரில் சேர்த்து தனத்தின் தாய் வீட்டில் அடைக்கலமாக விடப்படுகிறார்கள்.  தனத்தின் அண்ணன் தாய் மாமனின் மனைவி வாயிலாக அவர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகிறது. பின்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கான அரசாங்க நிதி ரூபாய் 10 லட்சத்தை குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசிடம் இருந்து பெற்றதை தனத்தின் அண்ணனும் அண்ணியும் குழந்தைகளை ஏமாற்றி  குழந்தைகளை அனாதை ஆக்குகின்றனர்.  இதுதான் கதையின் சாரம்சம்.


 இது ஒரு சராசரி நேர்கோட்டு கதை சொல்லும் முறை நாவல்தான். இதில் நவீனத்துவ சொல்லாடலோ பின் நவீனத்துவ அடர்வோ எதுவும் இல்லை.  எளிய சொல்லாடலின் ஊடாகவே கதை நகர்கிறது.  எனினும் ஒரு அங்கதச்சுவை கூடிக் கொண்டே போகிறது.  சாதாரண வரிகளில் அசட்டையாக சில அசாதாரணங்களை கடத்தியப்படியே நகர்கிறார் புதியமாதவி.

 கதையின் ஏராளமான இடங்களில்  கொடுந்துயரின் சித்திரங்கள் காட்சிகளாக விரிந்து கொண்டே இருக்கிறது.  பறந்து விரிந்த தாராவியின் குடிசை பிராந்தியத்தை ஒரு கழுகு பார்வையோடு காட்சிப்படுத்துகிறார்.  கொரோனா காலத்தில் சுடுதண்ணீர் போடுவதற்கு ஸ்டவ் இல்லாமல் ரேஷன் அட்டையைக் கூட வீட்டு ஓனரிடம் ஐந்து மாத வாடகை பாக்கிக்கு கொடுத்துவிட்டு குழந்தைகளோடு தவிக்கிற இடங்களில் வறுமையின் உச்சத்தை காட்சிப்படுத்துகிறார்.  அதோடு மாத்திரமில்லாமல் 'எல்லாமே பூஜ்ஜியம்தான் என்றாலும் சிலர் வாழ்க்கை மட்டும் பெரிய எண்ணுக்கு பின்  வரும்  பூஜ்ஜியமாய் மதிப்பு மிக்கதாய் வாழ்ந்ததில் அடையாளமாய்தானே இருக்க செய்கிறது.  பூஜ்ஜியங்களை எங்கே போடுவது எங்கே எழுதுவது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?  காலமா? என்று பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு யார் காரணம் என்பதை ஆற்றாமையோடு பதில் அற்ற கேள்வியாக நம்முன் வைக்கிறார்.  விலகிப் போகிற உறவுகளைப் பற்றி இவர் ஓர் இடத்தில் கூறுகிறார் "  மரங்கள் வேண்டாத இலைகளை இரவு நேரத்தில் உதிர்த்துவிட்டு விடிந்தவுடன் எதுவும் தெரியாத மாதிரி இலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.  உதிர்ந்த இலைகளுக்குத் தெரியும் இனி கிளைகளில் ஓட்டுவது சாத்தியம் இல்லை என்று" என  பிரிந்த உறவுகள் குறித்து ஆழ்ந்த விசாரிப்பை நிகழ்த்துகிறார்.


 அதுபோல் இறந்த காதல் கணவனின் நினைவேறிய வலிகளை  ஆற்றாமையோடு நாவலெங்கும் பரவி நிற்கிறது.  இந்த ஏக்கங்களை ஆங்காங்கே பதிவு செய்கிறார். '  தனது பத்துக்கு 15 அடி வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு அடியிலும் தன் கணவன் குமாரின் வாசம் இருந்தது என்கிறார். தனது கணவனின் போட்டோவை அணைத்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து கண்ணாடி சில் ஏறி  ரத்தம் கசிகையில் அந்த ரத்தம் அவனது வாசனையோடு கலந்துவிட்டன என்று கூறி காதலில் பெருமூச்சு விடுகிறாள் தனம்.  இந்த வரிகள் இணை இழந்து ஆற்றாமையோடு வாழும் ஒட்டுமொத்த பெண்களுக்கான பெருமூச்சாகவே படுகிறது.

 சில இடங்களில் கவித்துவமான தத்துவார்த்த வரிகள் மிகச் சரளமாகவே வந்து விழுந்திருக்கிறது.  அவர்கள் சொந்த கிராமத்திற்கு ஒரு லாரியில் அடைந்தபடி செல்லும்போது வலியின் நிறை காட்சிகளை நாவலின் நெடி மாறாது சொல்கிறார். '  போகும் வழி எங்கும் மரணத்தின் பயம் கவிந்து அமைதியில் உறைந்து கிடந்தன ஊர்கள்"  என்றும் "  மரத்தின்  வேர்கள் மட்டும் வழக்கம் போல தியானத்தில்" என்றெல்லாம் கொரோனா கால வெறுமையை மொழியின் ஊடாக அச்சத்தை நம் கண் முன் நிறுத்துகிறார்.  இவையெல்லாம் நாவலின் ஆன்மாவை அந்நியப்படுத்தாத எளிமையான வலிமையான போற்ற வேண்டிய வரிகளாகவே பார்க்க முடிகிறது. 

 விளிம்பு நிலை மனிதர்களுக்கான மதிப்பீடுகளையும் புலம்பெயர்ந்தோரின் அவலத்தையும் வெகு காத்திரமாக பதிவிடுகிறார்.  குழுவாக சொந்த ஊருக்கு லாரியில் செல்லும் இவர்களைப் பிடித்து கர்நாடக எல்லையில் சிறை வைக்கிற போது ஆதரவற்ற அவர்களின் நிலையை இப்படியாக  பதிவிடுகிறார்." பயிரை மேய்ந்த மாடுகளை பவுண்டில்  அடைத்து வைப்பார்கள்.  மாட்டின் சொந்தக்காரர் அபராதம் கட்டி விட்டு ஓட்டிச் செல்வார்கள். மாட்டிற்கு ஒரு தேவை இருக்கிறது.  ஒரு விலையும் இருக்கிறது. மதிப்பும் இருக்கிறது. இவர்களுக்கு அப்படி எதுவுமே இல்லையே?  இவர்களை யார் வந்து கூட்டிப் போவார்கள்.  மாட்டை விட கேவலமானதா மனித உயிர்கள்?"  என்ற வரிகள் மனதை பிசையத்தான் செய்கிறது.

 தாராவிலிருந்து சொந்த ஊருக்கு லாரியில் நெருக்கியடித்தபடி  சென்று கொண்டிருக்கையில்,  லாரியின் குலுங்கலும் நெருக்கலும்  பெரும் உபாதைக்கு தள்ளி விடுகிறது.  சற்று நேரத்தில் உபாதை தாளாமல் பெண்கள் கூச்சலிட லாரியை ஒரு ஆற்றோரமாக ஓரம் கட்டுகிறான்.  எல்லோரும் குதித்தும் பிடித்தும் கீழிறங்குகிறார்கள். தனம் மட்டும் குதிக்கவும் முடியாமல் பிடித்து இறங்கவும் இல்லாமல் தடுமாறுகிறாள்.  ஓர் ஆண்  பலவாறு அவளை இறக்க முயன்று   அவள் இடுப்பை இரு கைகளாலும் இறுகப் பிடித்து இறக்கி விடுகிறான்.  உடம்பு எவ்வளவு சூடு என்று சொல்லியப்படியே இவளை இறக்கிய கைகளை ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்க வைத்து அதை கன்னத்தில் வைத்து தேய்த்துக் கொள்கிறான்.  தனத்திற்கு கங்குகள் உடலில் எரிய ஆரம்பித்து விடுகின்றன.  அணு அணுவாக  அவள் தேகம் எரிய ஆரம்பித்தது. எரிவதை எரிக்கணும்  எரிக்கணும்  என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கடந்து பெண்கள் பக்கமாக ஒதுங்குகிறாள். தன் பத்து வயது பெண் தான் பருவம் அடைந்தது தெரியாமலே வயிற்று வலியால் துடிப்பதைக் கண்டு ரகசியம் காத்தப்படியே லாரிக்கு செல்கிறாள்.  முன்போலவே  அந்த அவன் அவளது இடுப்பை பிடித்து ஏற்றி விட எத்தனிக்கையில்  அதை தவிர்த்து தானாகவே மெல்ல ஏறி கொள்கிறாள்.  இது மிக நுட்பமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடமாகவே பார்க்க முடிகிறது.  ஒரு பெண்ணுக்குள் எப்போதுமே தீராத கன்னி ஒருத்தி  இருந்து கொண்டே இருக்கிறாள்.  அதன் பொருட்டு அவளுக்குள் காமம் குறித்த வேட்கை எட்டிப் பார்க்கக்கூடும். ஆனால் தாய்மை என்பது அவளுக்குள் ஆதியில்  முளைவிட்ட சூல்.   லாரியிலிருந்து இறக்குவதற்கு அவனோடு உடன்பட்டவள் திரும்பி வரும்போது பூப்படைந்த மகள் மீதான பொறுப்பில் அதைத் தவிர்த்து விடுகிறாள்.  இவையெல்லாம். நுட்பமான பெண் மனதை காட்டுகிற இடமாகவே பார்க்க முடிகிறது.  அதேபோல் அந்த சிறுமி வயிற்றைப் பிடித்தபடி உபாதையில் நெளியும்போது கூட கூட்டத்தின் நடுவே ரகசியம் காத்து வலியோடு பயணிக்கிற இடத்தில்  அந்தப் பூப்படைந்த சிறுமியின் ரகசிய உபாதையை வாசகர்களிடமே பகிர்ந்து கொடுத்து விடுகிறார் எழுத்தாளர்.  மற்றொரு இடத்தில் தனது மாமன் வீட்டில் வளரிளம்  பெண்ணான தனத்தின் மகள் தேனோ சிறுமியின் போக்கிலேயே தன் மார்புகள் குலுங்க நடப்பதை அவளது மார்புகளைச் சுட்டிக்காட்டி அவளது அத்தை அருவருப்பாக பேசும் போது,  கூனிக்குருகி திடீரென்று  அந்தப் பெண் இரு கைகளாலும் தன் மார்பின் மீது சிலுவை விட்டு அவமானம் குன்ற மறைத்துக் கொள்கிறாள்.  இது பெண்ணுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் காலாதீத  அச்சத்தை காட்டுகிற இடமாகவே இருக்கிறது.  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் மார்புகளைப்  பற்றி  ஓரிடத்திலே  கூறியிருப்பார்"  ஒரு நிறைவேறாத காதலில்  துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர் துளிகளாக தேங்கி தளும்புகின்றன முலைகள் "என்கிறார்.

ஆம் பெண்களின் தீராத கண்ணீர் திட்டுகள்தான் அவைகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.  மேலும் அந்த அனாதை பெண்ணின் மீது அவள் மாமன் மகன் விபரீத சீண்டல்களை நிகழ்த்துகிறான்.   அதை கூறுகிற இடம் ஒரு குறியீட்டுத் தன்மையோடு நாகரிகமான மொழிகளில்,  முகம் சுளிக்க வைக்காத வரிகளை கையாண்டு இருப்பது இவரது எழுத்து மேன்மையைக் காட்டுகிறது.  

இவ்வாறாக இவர் பெண்ணின் பாதுகாவல் குறித்த காத்திரமான பதிவுகளை  நாவல் எங்கும் நிகழ்த்துகிறார். , இவர் பெண்ணியத்தின் மீது தீராத நேசமும் அக்கறையும் கொண்டவர் என்பதை நூலெங்கும் நிரூபித்தப்படியே இருக்கிறார். 


 வரலாற்றில் உலவிக்கொண்டே இருக்கும் முக்கிய பேசு பொருளான கொரோனா பெரும் தொற்றுப் பற்றி மிகக் காத்திரமான நாவலாக பொறுப்புணர்ந்து பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் புதியமாதவி அவர்கள். தமிழ் வாசகர்கள் மட்டுமல்லாமல் உலக வாசகர்களே வாசிக்க வேண்டிய நாவல் இது.  

  இந்த சிறகொடிந்த வலசை ஒருபோதும் வீழ்ந்து விடாது.  மாறாக ராஜாளியாக உருப்பெற்று எழுத்துலகில் வலம் வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 


- சம்பத் ஜி




வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

சென்னை.


#புதியமாதவி_நூல்கள்

No comments:

Post a Comment