Tuesday, February 11, 2025

மக்ஃபி ..இருவேறு காலத்தின் குறியீடு

 


மக்ஃபி புதியமாதவி Puthiyamaadhavi Sankaran  எழுதிய புதுமையான நாவல்.

85 பக்கங்கள் மட்டும்தான்.

ஆனால் மூன்று வகை வாசிப்பு அனுபவங்கள்.

ஒரே நாவலில் சரித்திர அரசியல் புனைவு, சமூக அரசியல் புனைவு.

இரண்டு வெவ்வேறு காலங்களை இணைக்கும் மெல்லிய சரடாக மக்ஃபி.

வலிய சங்கிலிகளாக மதமும் அரசியலும்.

இவ்வளவு குறைவான பக்கங்களில்

எப்படி இது சாத்தியமானது.

மொழியின் கூர்மையும் மொழிதலின் 

நுட்பமும் இதை சாதித்துள்ளன.

எழுது முறைமையில் ஒரு Nano technology.


முதல் பாகத்தில் ஔரங்கசீப் என்ற

எதிர் நாயகன். பாசத்திற்குரிய மகள் சைபுன்னிஷா.

இருவரின் இணக்கமான புள்ளிகளும்

முரண்படும் கமாக்களும்.


இரண்டாவது பாகத்தில் பிரகாஷ் போஸ்லேவும் அவனது ஜனன நட்சத்திர

கட்டங்களை நிர்ணயிக்கும் அபியும்.


அங்கே இஸ்லாமிய சைபு இந்து சிவாஜி.

இங்கு இந்து பிரகாஷ் இஸ்லாமிய அபி.


அங்கே காதல்.

இங்கு பாசம் அல்லது பயம் ( ஜோதிட நம்பிக்கை) 


அங்கே தந்தையின் சிறை.

இங்கே தந்தை ஹாஸ்டலுக்கு அனுப்புகிறார்.


அங்கும் அரசியல் அச்சம்.

இங்கும் அஃதே.


அதனால்தான் புதியமாதவி இரண்டாம்

பாகத்தின் கதவில் இப்படி பொறித்து

வைத்துள்ளார்.

" சரித்திரங்கள் கல்வெட்டுகளாக மட்டுமே இருப்பதில்லை.சமகால அரசியலில் தொடர்கின்றன."


யூஜின் ஓ நீல் சொல்கிறார்.


" நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என்று 

எதுவுமில்லை.கடந்த காலமே மீண்டும் மீண்டும் கடந்து செல்கிறது எப்போதும்".


கொஞ்சமாக மெய்யியல் வாசனை அடிக்கும் மேற்சொன்ன இந்த கூற்றை இந்த நாவல் நிருபித்திருக்கிறது.


மக்ஃபி அல்லவா? 

மக்ஃபி என்பதும் மெய்யியல்தானே! 


சிவாஜியை சிலையாகவோ ஓவியமாகவோ படமாகவோ எங்கு பார்த்தாலும் எனக்கு அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் தான் நினைவுக்கு வருகிறது என்று நாவலில் ஒரு இடத்தில் வருகிறது.


அண்ணாவின் நாடகத்தில் மராட்டிய வீதியில் காட்சி ஆரம்பமாகி பின்பு காட்சிகள் அரண்மனைக்கு நகரும்.


மக்ஃபியில் இஸ்லாமிய அந்தபுரத்தில் அரண்மனையில் தொடங்குறது முதல் பாகம்.

இரண்டாவது பாகத்தில் மக்கள் குடியிருப்பு.

                

நாவல் நமது பாடத்திட்டங்களில் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட பல உண்மைகளைப் பேசுகிறது.


" இனி, மொகலாய சாம்ராஜ்யத்தில் உடன்கட்டை சட்டப்படி குற்றம்" என்று அறிவித்தார். அதனால் ஆத்திரப்பட்ட மதவாதிகள் பாதுஷா ஒரு மத வெறியன் என்று பரப்புரை செய்த அரசியல்...."


" பாவா அரியணை ஏறி இருக்காவிட்டால் நீயும் உன் கவிதையும் கொண்டாடுகிற இன்னொரு தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த தேசம் பசியிலும் பட்டினி சாவிலும் அழிந்து போயிருக்கும்."


"அவருக்கு எல்லாமே இஸ்லாமாக இருக்க வேண்டும் என்ற பேராசை".


ஆனால் சிவாஜி இந்துவாக இருந்தாலும் அத்தகைய பேராசையுடன் 

இல்லை என்ற வரலாற்று உண்மையை 

நாவல் உணர்த்தி விடுகிறது.

ஆனால் பிரகாஷ் போஸ்லே போன்ற

அரசியல்வாதிகள் சிவாஜியை இன்னொரு இந்து ஔரங்கசீப் ஆக 

மாற்றுகிறார்கள்.


அண்ணாவின் நாடகத்தை குறிப்பிடுவதால் பிரதி அதில் இல்லாத ஸ்மார்த்த ராமதாசரை , காகபட்டரை

நினைவு படுத்திவிடுகிறது.


தன் வீட்டு வாசலில் தினமும் புதிய மாலை சூடிக் கொள்ளும் சிவாஜியின் 

படத்தை வைத்திருக்கும் பிரகாஷ்போஸ்லே சிவாஜியின்

பெயரும் சிவாஜி போஸ்லே என்ற 

உண்மையை அறிந்து இருப்பான்.

ஆனால் சிவாஜி மகுடம் சூடத் தடையாக

இருந்தது அவன் பெயரின் பின்னொட்டு

ஆன ' போஸ்லே' என்பதுதான் என்ற 

வரலாற்றை அறிந்திருப்பானா? 


இதை அவனுக்கும் நமக்கும் சொல்வதாக இந்த நாவலைப் பார்க்க

முடியும்.

 


பி.கு: சிவாஜிக்கு N O C கொடுக்க 

அன்றைக்கு காகபட்டரை காசியின்

கங்கை கரையிலிருந்து அழைத்து 

வந்தார்கள்.

காசியில் நின்று ஜெயித்தவருக்கு

N O C கொடுக்க அடுத்த வாரம்

அயோத்திக்கு யாரை அழைத்து வருவார்கள்? 

இப்படிக் கேட்டால் ? 

அவர்கள் இந்த நாவலில் உள்ள ஒரு மக்ஃபி கவிதையைச் சொல்லலாம்.


" அவருக்கு பொருத்தமானவர்கள்

யாருமே இல்லை .

அது கடவுளே ஆயினும்."

- எழிலரசு.

நன்றி தோழர் Ezhil Arasu.



No comments:

Post a Comment