Thursday, May 9, 2024

உண்மை கலந்த புனைவு


 அவனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கொஞ்சம் பொய் கலந்த உண்மை!

சங்க இலக்கியமும் விதிவிலக்கல்ல. 

அகநானூறு 160

அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்

குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த     

கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை

பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:


தோழி சொல்கிறாள், "நிறைச்சூல் ஆமை மறைந்து நின்று புதைத்த முட்டைகளை பகுவாய் கணவன் ஆமை காத்து நின்றதாக"


இது பொய் தானே!😄

அவரு நல்லவரு வல்லவரு

நாலும் தெரிஞ்சவரு.

என்று மணமகனை எப்போதும் புகழ்ந்துப் பேசும் தோழி இவள்!


ஆமைகள் பல நூறு மைல்கள் கடந்து,  தான் பிறந்த அதே கடற்கரையில் வந்து முட்டை இட்டு செல்கின்றன! ஆமைகளின் வலசை இன்றும் ஓர் அதிசயம். ஆனால் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது பெண் ஆமை மட்டும்தான். 

மேலும் முட்டைகள் குஞ்சு பொரிக்க 60 முதல் 70 நாள்கள் வரை ஆகும். எந்த ஆமையும் முட்டையிட்ட பிறகு காத்திருப்பதில்லை. முட்டைக்கும் ஆமைக்கும் உள்ள உறவு முட்டையிட்ட பிறகு முடிந்து விடுகிறது.

முட்டை ஓட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் குஞ்சுகள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு இரவு நேரத்தில் வெளிவந்து கடல் அலையை நோக்கி பயணிக்கின்றன. ஆயிரம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்தாலும் அதில் ஒரு ஆமை தான் "ஆமை"யாக வளர்ந்து வாழ்கிறது. அதனால் தான் ஆமைகள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு புதைத்து வைக்கின்றன. 

ஆமைகளின் வயது 100 முதல் 150 வரை இருக்கும். 

ஆமை உயிரினத்தில் மிக மிகத் தொன்மையானது. 

ஆமையின் இருத்தல் கடலுக்கு மட்டுமல்ல நிலத்திற்கும் தேவையானதாக இருக்கிறது. 

இச்சங்கப் பாடலில் இடம்பெறும் " பகுவாய்க் கணவன் ஆமை"  ஒரு அற்புதமான புனைவு. 

பகுவாய் ஆமை snapping turtles.. உப்பங்கழி காயல்கள் ஏரி குளம் ஆகிய நன்னீரில் வாழும் ஆமைகள். இவை எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு வகையான "ஸ்ஸ்ஷ்'. குரல் எழுப்புகின்றன! 


இப்பாடலை எழுதிய நப்பசலையார் அந்த இயற்கை காட்சியை இப்படியாக ஒரு புனைவில் கொண்டுப் புகுத்தி அவன் ஊரின் பெருமையை கொஞ்சம் அதிகப்படுத்தி காட்டுகிறார்.

...

நாமும் ரசிக்கிறோம்.

"பொய்மையும் வாய்மை இடத்த" என்று புன்னகையுடன் கடந்து செல்கிறோம்.

No comments:

Post a Comment