Tuesday, January 10, 2017

திமுக..செயல்தலைவர் ..ஏன்?

Image result for words


செயல் தலைவர் ?
தலைவர் என்றால் செயல்படுபவர். முன்னோடி.
இயக்கம், கட்சி, நிறுவனம் என்று அமைப்பு ரீதியாக
அனைத்து தளங்களிலும் தலைவர் என்றால் வழிநடத்துபவர்,
செயல்களுக்கு பொறுப்புள்ளவர் இத்தியாதி பல்வேறு
பொருட்கள் உண்டு.  ACTING CM, ACTING PRESIDENT
என்ற சொற்கள் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக கீழ்க்கண்ட
பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

when someone is said to be acting in a position it can mean one of three things.
*The position has not yet been formally created.
*The person is only occupying the position temporarily, to ensure continuity.
*The person does not have a mandate.

இதன் அடிப்படையில் தான் தமிழில் இடைக்கால முதல்வர்,
இடைக்கால பிரதமர், இடைக்கால தலைவர் என்ற மிகச்சரியான சொற்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
திமுக என்ற மாபெரும் அரசியல் கட்சியில்  திரு. ஸ்டாலின்
அவர்களுக்காகவே செயல் தலைவர் என்ற ஒரு பொறுப்பான
புதிய பதவி உருவாக்கப்பட்டது. தமிழக அரசியலில் கலைஞர் அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு
அக்கட்சி இப்பதவியை உருவாக்கியது காலத்தின் கட்டாயம்.
ஆனால் அது என்ன "செயல் தலைவர்  ...? "
தொலைக்காட்சியில் ஒவ்வொரு செய்தியையும் வாசிக்கும் போது முன்பெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் என்று அறிவித்தவர்கள் இப்போதெல்லாம் செயல் தலைவர் ஸ்டாலின் என்றே அறிவிக்கிறார்கள். செயல் தலைவர் என்ற
சொல் செயல் தலைவரை மட்டும் குறிப்பிடாமல் செயல்படா
தலைவரும் இருக்கிறாரா... என்ற இன்னொரு பக்கத்தையும்
சேர்த்தே வாசிக்கிறது. அந்தப் பக்கத்தில் அவர்களையும் 
அறியாமல் கட்சியின் மாபெரும் தலைவராக இருக்கும்
அவர்கள் போற்றும் கலைஞர் அவர்களே காட்சி அளிக்கிறார்.
இது எந்த வகையில் நியாயம்? யாருக்கோ பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு இன்னொரு அநியாயத்தையும் அல்லவா சேர்த்தே செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை?
துணைத் தலைவர் என்ற் சொல் தலைவருக்குத் துணையாக இருப்பவர்
என்பதைக் குறிக்கும். நிர்வாகத்தலைவர் என்ற சொல் என்னவோ
நிர்வாகம் அதாவது  administration சம்ப்ந்தப்பட்டது என்பதால் ஓர்
அரசியல் கட்சியின் நிர்வாகத்தை முழுவதும் குறிப்பதில்
குறைபாடு வரும். அத்துடன் துணைத் தலைவர், நிர்வாகத் தலைவர்
என்ற சொற்கள் தலைவர் என்ற பதவியின் இரண்டாம் நிலையையும்
சேர்த்தே குறிப்பதால் அச்சொற்கள் விலக்கப்பட்டிருக்கலாம். ஆனால்

"இணைத் தலைவர் " என்ற சொல் தலைவருக்கு இணையானவர் என்ற மிகச்சரியான பொருளைக் கொடுக்கும். அப்படியான ஒரு சொல் தமிழருக்கோ தமிழக அரசியலுக்கோ புதியதும் அல்ல.. ACTING  என்ற சொல்லை நேரடியாக  செயல், செயல்படுவது என்று பொருள் கொண்டு இப்படியான" செயல் தலைவர் " என்ற புதிய அரசியலை ஆரம்பித்திருக்கிறார்களோ என்னவோ!

இக்கருத்து குறித்து இயக்கத்தோழர்களிடன் பேசியபோது
தமிழில் அவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை.,
அதெல்லாம் அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
என்று சொல்கிறார்கள்.
எல்லா சொற்களும் பொருள் குறித்தனவே..! சொற்கள் வெறும் சொற்கள் மட்டுமல்ல., சொற்கள் வரலாற்றின் அடையாளங்கள். சொற்கள் வெளிப்படையாக சொல்லுவது
கொஞ்சம், சொல்லாமல் உணர்த்துவது அதைவிட அதிகம்.
எல்லா சொற்களும் பொருள் குறித்தனவே.
பொருள் குறித்தனவே.


2 comments: