Thursday, December 1, 2016

ஜன கண மன --- திரைப்பட விமர்சனம்

திரைப்படம்... ஜன கண மன

திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் கட்டாயம்
தேசியகீதம் திரையில் ஓடும். அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும்
தம்தம் தேசாபிமானத்தைக் காட்டும் வகையில் கட்டாயம் எழுந்து
நின்றாக வேண்டும் . நம் தேசத்தின் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. ஜெய்ஹிந்த்.




1960களில் இந்திய சீன எல்லையில் போர் நடந்தக் காலக்கட்டம்.
அப்போதுதான் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தப்பிறகு
தேசியகீதம் ஒலிக்கும். எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் அப்படி
தேசியகீதம் ஒலிக்க அப்படியே அட்டென்ஸன் பொசிசனின் நின்று
என் தேசப்பக்தியைக் காட்டியதற்காக... கூட வந்தவர்களிடம்
வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன். பெரிசா வந்துட்டா...
இவளாலே நமக்குத்தான் லேட்டாகும் என்று அலுத்துக் கொள்வார்கள்.
ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் 52 வினாடிகள் அப்படியே நிற்கும்போது டூரிங் தியேட்டரே என்னை மாதிரி
பள்ளிக்கூடப் பிள்ளைகளை ஏதோ அதிசயப்பிராணியைப் பார்க்கிறமாதிர் பார்ப்பார்கள்! அது ஒரு காலம்.
அதன் பின் தேசியகீதம் முடிவதற்குள் தியேட்டரே காலியாகிவிடும்
நிலையைக் கண்டு சினிமா தியேட்டர்களில் தேசியகீதத்தை எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நிறுத்திவிட்டார்கள்.

... 52 வினாடிகள் எழுந்து நிற்பதோ தேசியகீதத்தை
மதிக்க வேண்டும் என்பதோ பிரச்சனை இல்லை. ஆனால் அதைக் கட்டாயமாக்குவதை எந்த வகையில் நியாயப்படுத்தமுடியும்?
பன்னாட்டு விளையாட்டு அரங்கத்திலோ கருத்தரங்கத்திலோ
அரசு விழாக்களிலோ பிரதமர், கவர்னர் , ஜனாதிபதி கலந்து கொள்ளும் அரசு நிகழ்வுகளிலோ தேசியகீதத்தை கட்டாயமாக்குவதில் அர்த்தமிருக்கிறது.  எதற்காக சினிமா பார்ப்பதற்கு முன்?!!
அதற்கு சொல்லப்படும் காரணமும் கத்தரிக்காயும்.!!

மும்பையில் - மராத்திய மாநிலத்தில்  2003 ஜனவரி 26 முதல் திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிக்கும் மும் தேசியகீதம் ஒலிப்பதை சட்டமாக்கினார்கள்.. இன்றுவரை அது தொடர்கிறது
இப்போதெல்லாம் மும்பையில் தேசியகீதம் முடிந்தப்பிறகு தான் நிறையபேர் இருட்டில் டார்ச் அடித்துக்கொண்டு
தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள்
அனைவரும் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள்!
மற்றபடி பல ஆண்டுகளாக மும்பையில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன் தேசியகீதம் ஒலிக்கிறது. நாங்கள் எல்லோரும் எழுந்து நிற்கிறோம்... அதனால் அறியவேண்டியது என்னவென்றால்
இந்தியாவில் மற்றவர்களை விட மும்பைவாசிகளுக்கு
முக்கால் (3/4) கிலோ தேசப்பக்தி அதிகம் தான்.  

No comments:

Post a Comment