Tuesday, January 12, 2016

MONOPOLY ராஜ்யங்கள்


அரசியலில் எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாவிடாலும் திமுக தான்
ப்ரதான எதிர்கட்சி போல ஒரு தோற்றம். அவர்களிடன் ஊடக எதேச்சதிகார
வல்லமை இருப்பதால் தான் இத்தோற்றத்தை தொடர்ந்து தக்கவைத்துக்
கொள்வது சாத்தியமாகிறது. இதை எந்த புதிய ஊடகக் கொம்பனும்
கண்டுகொள்வதில்லை! என்ற உண்மை குறிப்பிட்ட அக்கட்சியின்
அதிகார எல்லையின் சாம்ராஜ்ய வலிமை.
அரசியல் எதேச்சதிகாரம் இந்தியாவின் பிறமாநிலங்களில் இல்லையா என்று
கேட்டால் 'இருக்கிறது' இன்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தகுதி நிர்ணயித்ததன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களை எப்போதுமே ஆளப்படும் வர்க்கமாக வைத்திருக்கும் அரியானா
போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர்கள்,
ஆதிக்கச்சாதி எதேச்சதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால்,
தமிழகத்தில் மட்டும் தான், எட்டுக் கைகளுடன் அவதாரம் எடுத்து
எட்டுத் திசைகளிலும் தன் அதிகாரத்தை நிறுவி அதன் மூலம் ஒரு
மோனோபோலி ராஜ்யத்தை உருவாக்கி அரசாண்டு கொண்டிருக்கிறது.

கலை, இலக்கியம், சினிமா, தொலைக்காட்சி , கருத்தரங்கம் என்று
தமிழ்நாட்டின் அறிவுஜீவிகள் சங்கமிக்கும் தளத்தில் ' தமிழ், தமிழினக்
காவலர்" என்ற அடையாளங்களை வலிமையாக முன்னிறுத்தியும்
இந்த அடையாளங்களை எப்போதும் கூவிக்கொண்டிருக்கும்
பைங்கிளிகளை வளர்த்து பறப்பது போல நூல் கட்டி பறக்க
விட்டிருப்பதும் இந்த ராஜாங்கத்தின் வெற்றி.
சமூக விடுதலை என்று பேசும் போதெல்லாம் "பெரியாரின் வாரிசுகள்"
என்ற பொய்யான முகம்.. எப்போதாவது அந்த வேஷமும் இவர்களின்
நாடக மேடைகளில். அப்போதெல்லாம் கோமாளி கள் போல
இவர்கள் காட்சி அளிக்கிறார்கள். இருந்தாலும் 'நிறுத்துடா உன்
கோமாளித்தனத்தை' என்று நெஞ்சுத்திராணியுடன் சொல்ல
ஒரு அசல் கருப்புச்சட்டைக்காரன்  தமிழ் மண்ணில் இல்லை.
கவிப்பேரரசு வகையாறாக்களை உருவாக்கி 24 x 7  அதீத சுயமோக
மனநோய்ப்பிடித்து சீழ்ப்பிடித்து வடிகிறது இந்த ராஜாங்கம்
உருவாக்கி இருக்கும் நம் சமூகம்.
இதை எல்லாம் கேள்வி கேட்பதாக தன்னைக் காட்டிக்கொள்ளும்
அதி நவீன இலக்கியத்தோட்டத்தின் ஒட்டு மொத்தக் குத்தகைக் காரர்கள்
கண்ணுக்குத் தெரியாத இன்னொரு சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறார்கள்.
அவர்கள் நடத்தும் இலக்கிய இதழ்களில் கவிதை கதை வெளிவந்தால் மட்டுமே கவிஞர் அந்தஸ்த்து உலக அரங்கில் கிடைக்கும் என்ற
மோனோபோலி. அதிலும் குறிப்பாக சமூக பிரக்ஞையற்ற, ஹார்மோன்
பிரச்சனைகளில் அவஸ்தைக்குள்ளாகும் முலை யோனிகள் மட்டுமே
அந்த ராஜாங்கத்தின் பெண்ணிய முத்திரைகள். எதிரணியில் இருக்கும்
பைங்கிளிகள் கூட அத்தோட்டத்தில் பறந்த வந்தப்பிறகுதான்
தனக்கான பச்சை நிறச்சிறக்குகளை பெற்றன என்பது இந்த ராஜாங்கத்தின் பெருமையும் தனிச்சிறப்பும்! இவர்களின் பதிப்பகத்தின் மூலம் புத்தகம் வெளீவந்தால் தான் இலக்கிய அந்தஸ்த்து கிடைக்கும் என்ற பம்மாத்து
இந்த கண்ணுக்குத் தெரியாத ராஜாங்கத்தின் கதவுகள் இரும்பை விட
வலிமையானவை. இதன் காவலர்கள்  ஆயுதம் ஏந்துவதில்லை என்றாலும்
எந்தப் புரட்சிக்காரனையும் மடக்கிப்போட்டும் மடக்க முடியாதவனை
கள்ள மவுனத்தில் கடந்து சென்று இல்லாமல் ஆக்கிவிடும் புதிய போர்முறைக்கு சொந்தக்காரர்கள். 
இந்த இரு ராஜாங்கமும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல தோற்றமளிக்கலாம். ஆனால் இவர்களுக்குள் ஓர் புரிந்துணர்வு
இருக்கிறது. கப்பம் கட்டாத புரிந்துணர்வு. வியாபார உத்திக்காக
தேவைப்பட்டால் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து ரத்தம் வரும்
காட்சிகள் கூட அரங்கேறும்.  ஆனால் இந்த இரு இராஜாங்கத்தின்
காவலர்கள் தான் பொது ஜனங்களின் பொதுப்புத்தியில் அபிப்பிராயங்களை
கருத்துகளை உருவாக்குகிறார்கள் என்பது மட்டுமல்ல, இவர்கள் தான்
அறிவுஜீவிகளின் மண்டை ஓட்டிலிருந்து ஒளிவட்டமாக சுழன்று
கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த எதேச்சத்கார ராஜாங்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில்
தீவிரமாக செயல்பட்ட  'கவிதாசரண்' போன்றவர்கள் இன்று காணாமல்
போய்விட்டார்கள். இன்னும் சிலர், அதள பாதாளம் வரைக்கும்
பாய்ந்திருக்கும் இவர்களின் அதிகாரத்தின் முன்னால் துவண்டு போய்
ஒதுங்கிவிட்டார்கள்.
இதோ... இன்னும் மிச்சமிருக்கிறது
எங்கள் இரவுகளும்
இரவுகளுக்குத் துணையாக சன்னல் ஆகாயத்தில் 
துணைநிற்கும் நட்சத்திரவெளியும்.


1 comment:

 1. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete