Saturday, March 7, 2015

சரித்திரம் மறந்த(மறைத்த) சாதனைப்பெண்மணி

இதுவரை நானறிந்து எந்தப் பத்திரிகையும் பேசாத
எந்த பேராசிரியரும் எழுதாத
எந்த சரித்திரமும் குறிப்பிடாத ஒரு சாதனைப் பெணணை
இந்த நாளில் நான் நினைவு கூர்ந்து என் நன்றியை
சொல்லியாக வேண்டும்.
இந்த மராத்திய மண்ணில் இருந்துக் கொண்டு
இதைக்கூட நான் செய்யவில்லை என்றால்
4 தலைமுறை இந்த மண்ணில்வாழ்ந்ததற்கும்
இந்த மண் எங்களை வாழ்வைத்ததற்கும் அர்த்தமிருக்காது.

அப்பெண்மணி -

இந்திய பெண்ணியதின் தாய்.
நவயுக புதுமைப்பெண்ணின் தொட்டில்
9 வயதில் அவளுக்குத் திருமணம் ஆனது.
எழுதப்படிக்கத்தெரியாத அவள் தன் 13 வயது கணவனிடன்
தன் ஆசையைச் சொல்கிறாள்.
அந்தக்கணவனும் அவளுக்கு எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுக்கிறான்.
அவளை பள்ளிக்கூடம் அனுப்புகிறான்.
டீச்சர் வேலைக்குப் படிக்கிறாள்.
1848 ல் பிடேவாடா, நாராயம்பெத் புனே பகுதியில் பெண்களுக்கான
முதல் இந்தியப்பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது அவள் முயற்சியால்.
அவள் தான் இந்தியாவில் பெண்களுக்காக முதல்
பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தப் பெண்.
ஒரு பெண் கல்விக்கூடம் ஆரம்பிப்பதா?
அவள் பாடசாலையில் கல்வி மறுக்கப்பட்ட
பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களும் இசுலாமியர்க்ளும்
கல்வி கற்பதா? இது தகுமா? நம் தர்மம் ஏற்குமா? என்று
கொதித்து எழுந்த தர்மவான்கள் அவள் மீது சாணி அடித்தார்கள்,
கல்லால் எறிந்தார்கள். காயப்படுத்தினார்கள்.
இருந்தாலும் அவள் ஓயவில்லை. 3 ஆண்டுகளில்
மேலும் 3 பாடசாலைகளை அவள் ஆரம்பித்து நடத்தினாள்.

மதிய உணவு, சத்துணவு, பெண்கள் கல்வித்திட்ட்டம் என்று
இன்று சுதந்திர இந்தியா பேசும் அனைத்துக் கல்வித்திட்டங்களுக்கும்
அவள் தான் முன்னோடி.
பெண்களின் படிப்பு தடைப்படாமல் தொடர வேண்டும் என்பதற்காக
கல்வி உதவித்தொகை வழங்கிய முதல் கல்வியாளர் அவள் தான்.

பால்யவிவாகமும் விதவைக்கொடுமையும் நிலவிய அக்காலக்கட்டத்தில்
அவள் தான் "திருமண உறவுக்கு அப்பால் பிறக்கும் உங்கள் குழந்தையை
எங்கள் தொட்டில் காப்பாற்றும், உங்கள் ரகசியமும் காப்பாற்றப்படும்,"
என்று அறிவித்தாள். அக்காலத்தில் இளம்விதவைகள் வீட்டுக்குள் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும் இளம்விதவைகள், அவர்களின் உறவினர்களாலேயே
பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாகி கர்ப்பம் தரித்த்து அந்த அவமானம் தாங்காமல்
சிசுக்கொலை செய்வதும் தற்கொலை செய்வதும் நடந்துக்கொண்டிருந்தது.
இப்பெண் தங்கள் வீட்டு வாசலில் ஒரு பாதாகையைத் தொங்கவிட்டிருந்தாள்.
A POSTER 1863 ; WOMEN WHO CONCEIVE OUT OF WEDLOCK SHOULD GO TO THE HOME
OF JOTIRAO GOVINDRAO PHULE FOR THEIR CONFINEMENT, THEIR NAMES WILL BE
KEPT CONFIDENTIAL"

தான் எழுதியப்படியே அவள் வாழ்ந்தும் காட்டினாள்.
தன் மகனாக ஒரு அனாதை சிறுவனை தத்தெடுத்துக்கொண்டாள்.
1855 அவள் எழுதுகிறாள்..
மாங்க் மக்களையும் மகர் இன மக்களையும் படைத்த அதே
இறைவன் பிராமணர்களையும் படைத்தான். அவன் தான்
இதை எலலாம் எழுதும் அறிவையும் எனக்குள் படைத்தான்!"
என்று எழுதினாள்.

எல்லோரும் அரசியல் விடுதலையைப் பேசிக்கொண்டிருந்தக் காலத்தில்
சமூக விடுதலை இல்லாத அரசியல் விடுதலை அர்த்தமில்லாதது
என்று விடுதலையின் அர்த்தத்தை விளக்கினாள்.
"ஆங்கிலத்தாயின் கதவோரத்தில் செத்துக்கிடக்கிறான் மனு"
என்ற அவள் கவிதையின் வரிகள் இன்று தோற்றுப்போயிருக்கலாம்.
ஆனால் அவள் தான் சமூகவிடுதலையைப் பேசிய போராளி

புராணகாலத்து சீதை, காந்தாரி, காப்பியக்காலத்து கண்ணகி, மணிமேகலை,
பக்தி காலத்து காரைக்கால் அம்மையார் ஆண்டாள் மீராபாய்,
பிரிட்டிஷ் காலத்து ஜான்சி ராணி, இசையில் சுப்புலட்சுமி
ஓட்டத்தில் பி டி உஷா, எவரெஸ்ட் சிகரம் தொட்ட பஜேந்திரபால்,
முதல் பைலட் துர்கா பானர்ஜி முதல் விண்வெளி பயணம் செய்த
கல்பனா சாவ்லா வரை.. நம் சரித்திரத்தில் இடம் பெற்ற
சாதனைப் பெண்மணிகளின் வரிசையில் நம் சரித்திரத்தின்
பக்கங்களில் அவளுக்கான பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது.

அவளைப் பற்றி அறிவுஜீவிகளோ
தொலைக்காட்சிகளோ பேராசிரியர்களோ
ஏன் பெண்ணியவாதிகளோ கூட
பெண்கள் தினத்திலும் நினைவூட்டுவதில்லை. நினைவூட்டப்போவதுமில்லை.
எனக்குத் தெரியும்..
அவளைப் பற்றிய சரித்திரம இந்திய சரித்திரத்தில்
வெற்றிடமாக இருப்பதன் நோக்கம்...

அவள் பெயர் சாவித்திரிபாய் புலே.

2 comments:

  1. போற்றுதலுக்கு உரியவர்
    ஜோதிராவ் புலே பற்றிதான் அடுத்த பதிவினை எழுத எண்ணியிருந்தேன், எனவே இன்று தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே
    மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மகத்தான ஒரு பெண்மணியைப் பற்றி அறிந்துகொண்டேன், நன்றி.

    ReplyDelete