Wednesday, March 25, 2015

கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது..?

அமெரிக்க கறுப்பினத்தின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டவர் மாயா ஏஞ்சலோ
அமெரிக்கர்களுக்கு இணையாக சம உரிமை கேட்டு, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார் மாயா.
 மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் எக்ஸ் ஆகியோரிடம் நட்பு கொண்டிருந்தார்

1969ம் ஆண்டு, ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்’
 என்ற பெயரில் சுயசரிதையை வெளியிட்டார். இது அவருடைய 17 வயது
வரையி லான வாழ்க்கையை ஆவணமாக்கியது. . .7 சுயசரிதைகள்,
 கட்டுரை, கவிதைத் தொகுப்புகள் உள்பட ஏராளமான படைப்புகள் வெளிவந்துள்ளன.
மேலும், திரைப்படங்களுக்கும் கதை எழுதினார். திரைப்படங்கள் மற்றும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்தார். இயக்குனராகவும் செயல்பட்டார். நடித்தார்.

இசைத்துறையில் சாதிப்பவர்களுக்கான மிக உயரிய ‘கிராமி’ விருது பெற்றார்.
 ‘பிரசிடென்டல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ என்கிற உயர் விருது
அமெரிக்க அதிபர் ஒபாமாவால் 2011ம் ஆண்டு  மாயாவுக்கு வழங்கப்பட்டது
. எந்த அளவு துன்பத்தை அனுபவித்தாரோ அதே அளவுக்கு தன் திறமை
மூலம் உச்சம் தொட்டார் மாயா ஏஞ்சலோ. அமெரிக்க  அதிபர்கள் தொடங்கி,
 எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைத்துறையினர், இசைத்துறையினர்,
 உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கொண்டாடும் மிகச்
 சிறந்த ஆளுமையாக வலம் வந்த மாயா ஏஞ்சலோ, 2014 மே 28 அன்று, 86 வயதில் மறைந்தார்.

அண்மையில் கவிஞர் அவைநாயகன் அவர்கள் மாயா ஏஞ்சலோவின்
வாழ்க்கை சரிதத்தின் முதல் புத்தகமான I KNOW WHY THE CAGED BIRD SINGS
புத்தகத்தின் மொழியாக்கத்தை அனுப்பி வைத்திருந்தார்.
மாயா ஏஞ்சலோ 2014ல் மறைந்தப் போது அவர் குறித்த
பல பதிவுகள் வாசிக்க கிடைத்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக
அவருடைய வாழ்க்கை சரிதமான ஒரு புத்தகம் தமிழாக்கம்
பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவைநாயகன் கூண்டுப்பறவைக்கும்
அப்பறவையின் பாடலுக்கும் சரியான இடத்தை இம்மொழியாக்கத்தின்
மூலம் உருவாக்கி இருக்கிறார்.


மாயா ஏஞ்சலோ குறித்து அவர் வாழ்ந்தக் காலத்திலேயெ பல்வேறு
விமர்சனங்கள் வந்துவிட்டன. அவர் அந்த விமர்சனங்களைச் சந்திக்க
மறுத்தவர் இல்லை.

சிலருடைய சுயசரிதை என்பது அக்குறிப்பிட்ட நபரின் தனி வாழ்க்கை
குறித்த ஒரு கதையாக மட்டுமே இருக்கும். அல்லது அக்குறிப்பிட்ட
நபருக்கும் சமூகத்தில் அவருக்கான இடம் குறித்த பதிவுகளாக விரியும்.
ஆனால் மாயா ஏஞ்சலோவின் வாழ்க்கை சரித்திரம் என்பது
மாயா ஏஞ்சலோ என்ற ஒரு தனிப்பெண்ணின் கதையல்ல.
அல்லது அவர் சார்ந்த கறுப்பினப் பெண்ணின் தனிக்கதை மட்டும்
அல்ல. நிறவேறியின் பக்கங்களையும் அப்பக்கத்தில் ஒரு பெண்ணாக
அவள் கடந்து வந்தப் பாதையும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட
ஜீவனின் குரலாக ஒலிக்கிறது. ஒடுக்கப்பட்டவரின் குரல் என்றவுடன்
நமக்கு அழுகைக்காட்சிகளும் சோகங்களும் தோல்விகளும்
மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் தரையில் வீசப்படும்
ஒவ்வொரு பந்தும் அதே வேகத்துடன் மேலே எழும்புவது போல
மாயா ஏஞ்சலோவின் சுயசரிதையும் கறுப்பினத்தின் வீரத்தின்
அடையாளமாகவும் மனித நேயத்தின் அடையாளமாகவும்
பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

உலக ஹெவி வெயிட் சாம்பியனாக ஜோ லூயிஸ் அறிவிக்கப்படும்
அப்போட்டியை விவரிக்கும் பக்கத்தில்..(பக் 155)
"உலக சாம்பியன் ஒரு கறுப்பன், ஏதொ ஒரு கறுப்பு பெண்ணின்
மகன், உலகிலேயே உறுதியான மனிதன்.." என்று விவரித்திருப்பார்.

அவ்வாறே வாய்மொழியாக வழங்கும் கதைகளில்
வெள்ளையர் பார்வையும் அதே கதையை கறுப்பினத்தவர்
சொல்லும் விதத்தையும் போகிற போக்கில் சொல்லிச்செல்வார்.
(பக் 245)
ஒவ்வொரு ஒடுக்கப்பட சமூகத்திலும் வாய்மொழிக்கதையின்
இன்னொரு வடிவமும் உள்ளடக்கமும் இருக்கின்றன.பெற்றோரின் பிரிவினால பாதிக்கப்பட்ட மாயா சிறுவய்தில்
தன் சகோதரனுடன் பாட்டியிடம் வருகிறார். அதுவும் அக்குழந்தைகள்
இருவரும் தனியாக. ஏன் தன் தாய் மட்டும் தங்களை இப்படி
அனுப்பி வைத்தாள்?  என்ற மன உளைச்சலுக்குப் பதில்
தெரியாமல் பயணம் தொடங்குகிறது. பாட்டியும் பாட்டிக்கு
இருக்கும் கடவுள் நம்பிக்கையும் மாறாமல் தொடர்கின்றன.
மீண்டும் தாயிடமே வரும்போது தாயின் கணவன் 8 வயது
மாயா என்ற குழந்தையை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி
மிரட்டுகிறான். தன் உடலை என்ன செய்கிறான என்பதைக்கூட
புரிந்துக் கொள்ள முடியாத குழந்தை.. அதன் பின் நீதிமன்றம்
தண்டிக்கிறது அவனை. ஆனால் அதற்கு முன்னரே
அவன் பிணமாக கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான்.
கொலையை யார் செய்திருப்பார்கள் என்பதை மிக எளிதாக
ஊகிக்க முடிகிறது. அம்மாவின் இன்னொரு கணவனோ அவனுடைய
இன்னொரு மனைவியுடன் வாழ்ப்வன், தன்னுடன் விடுமுறையைக்
கழிக்க வரும் மாயாவை நல்ல விலைக்கு விற்றுவிட முயற்சி
செய்கிறான். தன் செயலுக்கான எவ்வித குற்ற உணர்வும் இன்றி.
வளர வளர ஒரு பெண்ணாக மாயா சந்திக்கும் சமூகச்சிக்கல்களுடன்
பெண்ணுடல் சந்திக்கும் பிரச்சனையின் உச்சமாக விவரிக்கபப்டுகிறது
மாயாவுக்கு ஏற்படும் பால்பேத குழப்பம்.
தான் ஒரு பெண் தானா அல்லது திருநங்கையா?
தன் உடலின் பாலியல் உறுப்புகளின் மாற்றமும்
வளர்ச்சியும் பெண்ணுடலுக்கானது தானா? இக்குழப்பம்
அவளை விரட்டுகிறது. அந்தப் பதின்ம வயதில் தன் பெண்ணுடலை
பெண்ணுடல்தான் என்று சோதிக்க நினைத்து ஓர் ஆணுடன் உடலுறவு
கொள்கிறாள். ஓர் ஆண் குழந்தைக்கும் தாயாகிறாள். இத்துடன்
கூண்டுப்பறவை முதல் பாகம் முடிகிறது.

மாயாவுக்கு ஏற்படும் பெண்ணுடல் குறித்த சந்தேகங்களும்
அதைப் பற்றிய தாய் மகள் உரையாடலும் இப்புத்தகத்தை
விமர்சனத்திற்குள்ளாக்கின.

சர்ச்சைக்குள்ளான நூறு புத்தகங்களின் பட்டியலில் மாயா ஏஞ்சலோவின்
இப்புத்தகம் 3 வது இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்க
நூலக கூட்டமைப்பு. கறுப்பின மக்களின் தேசிய கீதமாக இவர்
கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரே நேரத்தில் 4 இலட்சம்
பிரதிகள் விற்று விற்பனையில் மாயா ஏஞ்சலோவின் புத்தகங்கள்
முதல் வரிசையில் இருநதன. தான் வாழும் காலத்திலேயெ
அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு நிகழ்வில் கவிதை வாசித்தது
முதல் பல்வேறு பல்கலை கழகங்களில் அவர் பெற்ற விருதுகளும்
டாக்டர் பட்டங்களும் பெற்ற சிறப்புக்குரியவர் மாயா ஏஞ்சலோ.
A bird doesn't sing because it has an answer, it sings because it has a song.

மாயா ஏஞ்சலோ கூண்டுப்பறவையை மொழ்யாக்கம் செய்திருப்பதன்
மூலம் சமூக தளத்தில் மட்டுமல்ல, பெண்ணியத்திற்கும்
நியாயம் செய்திருக்கிறார் அவைநாயகன். அவருக்கு என் வாழ்த்துகளும்
நன்றியும்.

புத்தகம் வெளியீடு: எதிர் வெளியீடு
பக் 336 விலை ரூ 300.


1 comment:

  1. நன்றி சகோதரியாரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    ReplyDelete