Thursday, May 22, 2014

ஸ்டாலினைத் தோற்கடித்தது எதிர்க்கட்சி அல்ல..





நடந்து முடிந்த தேர்தல் களத்தில் திமுக வின் படுதோல்வி திமுக என்ற அரசியல் கட்சியின் தோல்வி என்பதைவிட  ஸ்டாலினின் தோல்வியாகவே முன்வைக்கப்படுகிறது. இப்படியான ஒரு கருத்தைப் பரப்புவதன் மூலம் திமுக வுக்கும் அதன் வாரிசு அரசியலுக்கும்   கூட ஏதாவது சுயலாபங்கள் இருக்கலாம்! ஆனால் உண்மை அதுவல்ல.

அண்மைக்காலங்களில் திமுக வின் வாரிசு அரசியலை ஊழலை ஈழப்போராட்டத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியதும் எழுதியதும் நான். (கோவையின் டிசம்பர் 2013 பேசியது, திண்ணையில் வெளிவந்துக்கொண்டிருக்கும் என் கட்டுரை மற்றும் பல கட்டுரைகள்)  ஆனாலும் தனிப்பட்ட முறையில் இன்று ஸ்டாலின் மீது வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பதை எழுதுவதிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏனேனில் இந்தியாவின் வாரிசு அரசியலில் ஸ்டாலின் மட்டுமே திமுக வின் தலைவர் கருணாநிதியின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக அரசியலில் அங்கீகாரம் பெற்றவரில்லை. கட்சியில் அதற்காக உழைத்தவர். படிப்படியாக முன்னுக்கு வந்தவர். 

வாரிசு அரசியலில் இந்தியாவில் ஸ்டாலின் மட்டுமே இந்த வகையில் விதிவிலக்கானவர் என்பதை என்றும் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
ஆனால் அதே வாரிசு அரசியல் வேறு ஏதோ ஒரு வகையில் திமுகவை கரையானைப் போல அரித்து
தின்றுவிட்ட நிலையில் பொறுப்புக்கு வந்தவர்
ஸ்டாலின். கலைஞரின் குடும்ப அரசியல் திமுகவில்  நுழையாமல் இருந்திருந்தால் ஸ்டாலின் உழைப்பும் காத்திருப்பும் இன்றைக்கு இப்படி வீணாகி இருக்காது!

ஸ்டாலின் தன் பள்ளிப்படிப்பு காலத்தில் (1960களில் என்று நினைக்கிறேன்) அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பேசும் கூட்டங்களில் மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருப்பாராம். தலைவர்களின்
பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்துக்கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மறுநாள் அவர் பதிவு செய்திருப்பது அப்படியே முரசொலியில் வெளிவந்துக் கொண்டிருந்தது.

அறிஞர் அண்ணாவின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை எம்ஜிஆரின் திரைப்படம் போட்டு  நிதி வசூலித்து ஸ்டாலின்  கொண்டாடிய காலம் முதல்  அவரை உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

வாரிசு அரசியலில் எமர்ஜென்சி கொடுமையில் மிசா கைதியாக சிறைப்பட்ட ஒரே அரசியல் வாரிசும் ஸ்டாலின் மட்டும் தான். அப்போது அவருக்கு வயது 23, திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகி இருந்தது. சிறையில் அவர் அனுபவித்தக் கொடுமைகளை இன்றைய முகநூல் இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் போன்றவர்களுக்கு அந்தச் சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது.
சிறையில் ஸ்டாலினைச் சந்திக்க பெற்றோரும் மனைவியும் வருகிறார்கள். சிறைக்காவலர்கள் ஸ்டாலினுக்கு முழுக்கைச்சட்டை கொடுத்து அணிந்துக் கொள்ள செய்கிறார்கள். சிறையில் அடிபட்ட காயங்கள் வெளியில் தெரியாமல் இருக்க மட்டுமல்ல, வெளியில் சொல்லவும் கூடாது என்று அவருக்கு சிறை அதிகாரி
ஆணை இடுகிறார். ஸ்டாலினும் அப்படியே நடந்து கொண்டார். 

ஸ்டாலினின் நிர்வாகத் திறமைகளை திமுக பயன்படுத்திக் கொண்டு எங்கேயோ போயிருக்க முடியும்! பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரைத் தேக்கிவைத்து பாசனம் செய்ய தவறியது திமுகவின் தலைமை. ஸ்டாலினின் உழைப்பையும் தியாகத்தையும்
முன்னிலைப் படுத்தாமல் அவரை வாரிசு அரசியலின் அடையாளமாக  மட்டுமே முன்னிறுத்தியவர்கள் திமுகவின் அரசியல் எதிரிகளோ அல்லது ஊடகமோ அல்ல. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அரசியல் விமர்சகர் சோ ராமசாமி கூட ஸ்டாலின் 20 வருடங்கள் தன்னை திமுக வில் இணைத்துக் கொண்டு படிப்படியாக முன்னுக்கு வந்தவர் என்பதை ஒத்துக் கொள்கிறார். எனவே வாரிசு அரசியல் என்ற தோள்களில் தொற்றிக்கொண்டு வந்தவர் அல்ல ஸ்டாலின். எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்ட இந்த உண்மையை கருணாநிதியின் குடும்பமும்  குடும்ப அரசியலும் ஏற்றுக் கொள்ள தவறியது. குடும்பத்தலைவர் என்ற முறையில் கருணாநிதியின்
நெஞ்சுக்கு நீதி செய்த அநீதி இது
ஸ்டாலின் என்ற தொண்டனுக்குச் செய்த துரோகம் இது!

ஸ்டாலின் மேயராகப் பதவி ஏற்ற போது நடந்தப் பாராட்டு விழாவில் அன்றைய காங்கிரஸ் தலைவர் மூப்பனார் "ஸ்டாலினை நான் இப்போது பாராட்ட மாட்டேன், மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்த பின்னர் தான் பாராட்டுவேன்" என்றார். அதுபோலவே 1996க்குப் பிறகுதான் மாநகராட்சி பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதி தேறியவர்களின் எண்ணிக்கை 55 % லிருந்து 78 % உயர்ந்தது என்பதும்
உண்மை. ஸ்டாலின் மேயராக இருந்தப் போது சரியாக காலை 9 மணிக்கு மாநகராட்சிக்கு வருவார், மாலை 6 மணிக்கும் வருவார், இரவு 9 மணி வரை இருந்து பணிகளைக் கவனிப்பார் " என்று மாநகராட்சி ஊழியர்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.

2ஜி யில் சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் 2ஜி பற்றி யாருக்குத் தெரியும்? என்று மமதையுடன்! ஆனால் தேர்தல் களத்தில் அவர்கள் நிற்கும் போதும் பிரச்சாரம் செய்யும் போதும்
2ஜி குறித்து மறந்துப் போனவர்கள் கூட அதை மறக்கவோ மன்னிக்கவோ முடியாமல் செய்ததில் 
எதிர்க்கட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வது என்பது இதுதானோ! 

மிசா  சிறைக்கைதியின் தியாகத்தை
2ஜியின்  சிறைவாசம் காவு வாங்கிவிட்டது.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத வரை 
வெளிப்படையாக தெரியும் இந்தக் கட்டியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாத வரை திமுக வை எவராலும் காப்பாற்ற முடியாது.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஸ்டாலினும்
ஸ்டாலின் எதிர்காலமும்.

---

5 comments:

  1. சரியான விமர்சனம்

    ReplyDelete
  2. கட்சி என்ற வகையில் தன்னுடைய பொறுப்பை ஸ்டாலின் எப்படி உபயோகப்படுத்தினார் என்றுதான் பார்க்க முடியுமே தவிர, தி.மு.க வின் எதிர்காலமும் ஸ்டாலினின் எதிர்காலமும் தொடர்புடையதல்ல.

    "Majority / அதிகபட்சம்" என்கிற வார்த்தை இப்படியான பெரும் உழைப்புகளைக்கூட வெற்றாக்கிவிடும்.

    ReplyDelete
  3. 2ஞீயை விட கருணாவின் பேராசை தி.மு.கவை அழித்திருக்கிறது என்றுதான் நான் கருதுவேன். தி.மு.கவிற்குக் கருணாவின் குடும்ப வாரிசுதான் தலைவர் என்று தி.மு.கவை நம்பவைத்த பிறகாயினும், மு.க.சாலினை மட்டும் முன்வைத்திருக்கலாமே! ஏன், அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று அவரின் குடும்பத்தின் கொடிவழி உறவுகள் அனைவரும் முன்னிறுத்தப்பட்டனர்? அங்குதான் கருணாவின் கிறுக்குப் புத்தி வேலை செய்தது. எல்லாப் பிள்ளைகளையும் களத்தில் இறக்கிவிட்டால் - ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்ளும் - அதுவரையில் நாமே தலைவராக, முதல்வராக இருக்கலாம் என்ற பேராசையும், குடும்பத்திற்குள்ளேயே அரசியல் செய்த தன்னலமும்தான் இதற்கெல்லாம் காரணம்.

    மிக இளவயதுடைய மகன் அகிலேசை தனது வாரிசாக, முலாயம்சிங் யாதவ் சடுதியில் முடிவெடுக்கவில்லையா? இவருக்கு ஏன் 30 வருடங்கள் எடுக்கிறது?

    நெஞ்சில் எந்த இடத்திலும் நீதி இல்லாமல் எதைச் செய்யமுடியும்?

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  4. karunanidhi left alagiri not because he dont have political experience... but it is because he married a devendra girl without asking karuna's opinion..????

    ReplyDelete
  5. I agree. The defeat of DMK has many factors and I agree that definitely Opposition Parties are not the one which defeated DMK. I would like to call out the 2G is just one of a factor which might have contributed about 10-15%. I strongly believe that the root cause is lack of Leadership. I was totally confused during the election campaign of DMK on who is the leader of DMK, who is the commander and who takes the decision. In my opinion Stalin has missed the opportunity to prove himself as the True Leader as his every action was routed through Thiru Mu. Ka or Thiru. Anbazhagan....though every one knows that those messages are from Stalin...But this definitely has failed him to bring the leadership quality in him. He did not brought out the long term vision and the goal and objective of DMK as part of the Lokshabha election... He just treated this as a State Election, which showed his lack of vision at national level... I believe now it is too late for DMK to regain the popularity and gain that leadership position at State and National Level. Its going to be the future of youngsters and I do not see that young blood in DMK any more....

    ReplyDelete