Tuesday, April 23, 2013

காதல் என்பது...


மதுரை  காமராசர் பல்கலைக் கழகத்தில் 1976, 77, 78களில் நானும் ஒரு முதுகலை மாணவியாய் உலா வந்திருக்கிறேன். அந்த நூலகமும் வியாழ வட்ட கருத்தரங்குகளும் என் வாழ்வில் மிகவும் முக்கியமான களங்கள்.
பாப்லு நெருடாவையும் அகிலனையும் நீலபத்மநாபனையும் ஜெயகாந்தனையும்
பற்றிப் பேசாத நாட்களில்லை.
அப்போது பல காதலர்களைப் பார்த்திருக்கின்றேன். காதலித்த எல்லோரும்\
திருமண உறவில் இணைய முடியவில்லை என்கிற யதார்த்தநிலை ஒரு பக்கம், இன்னொரு பக்கமோ தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சிலர் சந்தோஷமாக வாழவில்லையே என்ற வருத்தமும்
எனக்குண்டு.  காதலைப் பற்றி அதிகமாக கவிதைகளில் கூட எழுதவில்லை நான். அதனாலோ என்னவோ 'அன்புள்ள நிலாவுக்கு ' புத்தகத்தைக் கொஞ்சம் தாமதமாகவே வாசிக்க ஆரம்பித்தேன்.!

  .

அமரர் கந்தசாமி அறக்கட்டளை சார்பாக சொற்பொழிவாற்ற மும்பை வந்திருந்தார்கள் பேராசிரியர் மோகன் அவர்களும் அவர் துணைவியார்
பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களும். பேராசிரியர் . இரா. மோகன் அவர்களை ஒரு ஆய்வு மாணவராக மட்டுமே நானறிவேன். ஒரு கால்நூற்றாண்டு கடந்து  அவரையும் அவர் துணைவியாரையும்
சந்தித்த அனுபவம் இனிமையாக இருந்தது. அக்காலக்கட்டத்தில்
அவர்கள் இருவரும் காதலர்களாக இருந்தார்கள் என்பதும் அவர்கள்
அப்போது எழுதிக்கொண்ட காதல் கடிதங்களை தொகுத்து
'அன்புள்ள நிலாவுக்கு' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருப்பது கண்டு ஆச்சரியமாக இருந்தது.

'அடடே.. நம்ம மோகன் சார் வியாழவட்டத்திற்கு தவறாமல் வந்ததற்குப் பின்னால் இப்படி ஒரு காதல் காவியம் இருப்பது நமக்குத் தெரியாமல்
இருந்திருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டேன்.

காதல் கடிதத்தில் மேடம் க்யூரியும் குறுந்தொகையும் கபிலரும் திருக்குறளும்
சர்வ சாதாரணமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. பேராசிரியர் மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை என்று அன்றைக்கு பல்கலை கழக வட்டாரத்தில் பேசப்பட்ட இரா. மோகன் அவர்கள் மு.வ. பற்றிய கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார்.
மலர்விழி நாவலில் கலெக்டர் செல்வநாயகம் மலர்விழிக்கு எழுதிய கடிதத்தை அந்த நாவலைப் பிரிக்க நேரும்போதெல்லாம் படிக்காமல் இருக்க மாட்டேன்  என்று சொல்லும் மோகன் அவர்கள்

 " சொல்லப்போனால் அதையே என் கடிதங்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கொண்டேன்" என்று வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறார்.


காஸ்டில்லிஜோ எழுதிய knowing woman வாசித்துவிட்டு அதில் தனக்குப் பிடித்த
கருத்துகளை எழுதுவதிலாகட்டும், கீட்ஸ், ரஸ்ஸல், கிப்பன் ஆகியோரின்
காதல் கதைகளை தன் காதல் கடிதங்களில் எழுதுவதிலும் பேராசிரியர் மோகன் அவர்களின் காதல் கடிதங்கள் வெறும் உடல் சார்ந்த பாலியல்
வேட்கை, ஈடுபாடு என்பதை எல்லாம் தாண்டி காதல் என்பது கருத்தொருமித்தல், ஒருவரை ஒருவர் மதித்தல் என்ற புரிதலை
ஏற்படுத்தி  இருக்கிறது.
இன்று வாழ்க்கையில் இந்த இணையரின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது
இந்தப் புரிதல் தான்.

இந்த இணையர் காதலுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட இவர்களால் காதல் பெருமை அடைந்திருக்கிறது,
வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். 

2 comments:

 1. "அன்புள்ள நிலாவுக்கு" புத்தகத்தை வாசிக்க ஆவலை ஏற்படுத்தியதற்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உயர் பண்பாளர் பேராசிரியர் திரு.இரா.மோகன் அவர்களைப்பற்றிய கட்டுரை கண்டு மகிழ்ந்தேன்.
  அவர் தேனீ போல எங்கெங்கு நல்லவை இருக்கிறதோ அங்கங்கு செல்வார்.
  நான் எழுதி திரு மீரா அவர்கள் தனது “அன்னம்“ வெளியீட்டகம் சார்பாக வெளியிட்டிருந்த “புதிய மரபுகள்” நூலைப் படித்துவிட்டு, - நமக்கு வேண்டியவரா, நம் சாதிக்காரரா என்றெல்லாம் தேடித்திரியும் ஆய்வுலகத்தில் ஓர் அபூர்வ மனிதராக- நான் யாரென்றே தெரியாத காலத்தில் (1993) எனது நூலைப் பல்கலைக்கழக எம்ஏ தமிழ் வகுப்புக்குப் பாடநூலாக்கி விட்டு பிறகு எப்படியோ எனது முகவரி தேடி எனக்குக் கடிதம் எழுதி எம்ஏ மாணவரோடு உரையாட அழைத்த போதுதான் நான் அவரை முதல்முதலாகப் பார்த்தேன்...
  மறக்க முடியாத நல்ல மனசுக்காரர்
  அவரைப்பற்றிய உங்கள் பகிர்தல் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்.
  அதற்காக எனது நன்றியும் வாழ்த்துகளும்.
  -அன்புடன் நா.முத்துநிலவன்,
  http://valarumkavithai.blogspot.in/

  ReplyDelete