Thursday, April 4, 2013

காமன்வெல்த் காப்பாற்றப்படுமா?

காமன்வெல்த்தில் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் தகுதியை இலங்கை அரசு இழந்துவிட்டது. அந்நாட்டில் 2009ல் நடந்த மனித உரிமை மீறல்களை
உலக நாடுகள் அனைத்தும் அறிந்துள்ளன. அத்துடன்
தன் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டாக்டர் ஷிரானி பண்டாரநாயகாவை அவர் தன்
நாட்டு சட்டப்படி நடந்து கொண்டதற்காக கடுமையாகத் தண்டித்ததுடன் அவருடைய இடத்தில் தன் முன்னாள்
அட்டர்னி ஜெனரலைக் கொண்டு வந்து உட்கார வைத்து
நீதியைக் கேலிக்குரியதாக்கி இருக்கிறது. இதனால்
காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கான குறைந்த பட்ட தகுதியையும் இலங்கை அரசு இழந்துவிட்டது. எனவே வரும் நவம்பர் (2013) மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் சந்திப்பில் இங்கிலாந்தின் அரசியோ அரசு பிரதிநிதியோ கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள் இங்கிலாந்தின் வக்கீல்களும் மனித உரிமை ஆர்வலர்களும்.

காமன்வெல்த் கூட்டமைப்பின் முக்கியமான நோக்கங்கள்: சமத்துவம், அடுத்தவர் பாதுகாப்பை மதிப்பது, அரசியல் பொருளாதர சமூக வளர்ச்சிக்கும்
கலாச்சார உரிமைக்கும் பாடுபடுவது, எக்காரணம் கொண்டும் எதை முன்னிட்டும் எவருடைய மனித உரிமைகளுக்கும் கேடு வராமல் அமைதியை நிலைநாட்டுவது..

காமன்வெல்த் கூட்டமைப்பின் நோக்கங்கள் அனைத்தையும் கைவிட்டதுடன் தன் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் முற்றிலும் நேர்மாறாக இலங்கை அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பது உறுதி
செய்யப்பட்டிருக்கும் நிலையில் காமன்வெல்த கூட்டமைப்பு இலங்கை அரசை காமன்வெல்த்திலிருந்து விலக்கி (சஸ்பெண்ட்) வைக்க வேண்டும்.

ஓர் அரசை இம்மாதிரியான காரணங்களுக்காக விலக்கி வைப்பது காமன்வெல்த் கூட்டமைப்புக்கு புதிதல்ல.
இன்றும் கூட 54 நாடுகள் கொண்ட இக்கூட்டமைப்பில் 53 நாடுகள் தான் இருக்கின்றன. பீஜி இராணுவ அரசு
விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

1977ல் உகாண்டாவில் இடிஅமீனின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து அந்நாட்டை விலக்கி வைத்தது.
ஜிம்பாவேயில் (white minority govt of Ian Smith) , தெற்கு ஆப்பிரிக்காவில், ஏன் பாகிஸ்தானைக் கூட விலக்கி வைத்த நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன.
பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்தப்போது பிரிக்கப்பட்டதாக கோபித்துக்கொண்டு பாகிஸ்தான்
காமன்வெல்த்திலிருந்து விலகிக்கொண்டதும் உண்டு.
அதுமட்டுமல்ல, 1977 (Gleneagles Agreement that banned sporting contact with Apartheid South Africa.) உடன்படிக்கைப்படி விலக்கி வைக்கப்பட்டிருந்த தெற்கு ஆப்பிரிக்காவின் விளையாட்டு வீரர்களை 1981ல் நியூசிலாந்தின் பிரதமர்
ராபர்ட் முல்டன் வரவேற்று கொண்டாடியதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தது.

இன்று?

அதே அந்த காமன்வெல்த் நாடுகளின் சந்திப்பு இலங்கையில் நடப்பதன் மூலம் அந்நாட்டின் அதிபரான
ராஜபக்சே காமன்வெல்த அமைப்பின் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுவார். அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவரே காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு தலைவராக இருப்பார்!!
காமன்வெல்த்தின் உறுப்பினராக கூட இருக்கும் தகுதியை இழந்துவிட்ட ஓர் அரசு நவம்பரில் இலங்கையில் நடக்கவிருக்கும் இச்சந்திப்பின் மூலம்
அந்த அமைப்பிற்கே தலைவராகும் அவலம் நடந்துவிடும்!
காமன்வெல்த் சந்திப்புகள் வெறும் கிட்டிபார்ட்டிகளாகிவிடும். காமன்வெல்த்தின் மீது இருக்கும் ஓரளவு மரியாதையும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும்.

இக்காரணங்களுக்காகவே கனடா அரசு இலன்கையில் நடக்கவிருக்கும் சந்திப்பை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இங்கிலாந்தில் எதிர்ப்புகள் வலுக்கின்றன. இங்கிலாந்து அரசிக்கு வேண்டுகோள்
வைப்பதும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும் நடந்துவருகிறது. தமிழக அரசும் இந்தியப்பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனாலேயே என்னவோ, இது என்னவோ தமிழ்நாட்டு பிரச்சனை போல நினைத்துக் கொண்டு
வழக்கம்போல கள்ளமவுனம் சாதிக்கிறது இந்திய அரசு!

காமன்வெல்த் காப்பாற்றப்படுமா?

No comments:

Post a Comment