Friday, May 10, 2013

அணுவுலையும் கருவாடும்




நான் கருவாடு
என்னைக் கொஞ்சம் பேசவிடுங்கள்
எனக்கு அறிவியல் தெரியாது.
அதனால் உங்கள் 
அணுவுலைகள் பற்றியும்
தெரியாது.

நீர்தான் உயிருப்பின் ஆதாரம்
என்று நீங்கள் படித்து தெரிந்து
கொண்டதெல்லாம்
பலகோடி ஆண்டுகள்
சமுத்திரத்தில் சுற்றித்திரிந்த 
என் கூட்டம்
கடற்கரையில் ஒதுங்கியபோது
பட்டுத்தெறித்த 
தாம்பூல மகிமையால் தான்.



நேற்று வலையில் மீனாக
உங்கள் கடற்கரை வந்தேன்.
உங்கள் கூடைகளில் நிரப்பி
தலையில் சுமந்து திரிந்தீர்கள
முற்றத்தில் உலர்த்திக் கருவாடாக்கி
எப்போதும் பசிதீர்க்கும்
அமுதசுரபியாக
என்னை வாழவைத்தவர்கள்
நீங்கள்.--
-
-


அணுவுலகைகள் வேண்டாம் என்கிறீர்கள்
உங்களுக்கு  ஆபத்தானது என்பதால் மட்டுமல்ல
காலம் காலமாய் உங்கள்  கைகளில் இருக்கும்
அமுதசுரபிக்கும் ஆபத்து வரும் என்பதால்

-அணுவுலகைகள் ஆபத்தானவை அல்லவாம்
நீதிதேவதையே எழுதிவிட்டாளாம்
இனி அச்சமில்லை அச்சமில்லையாம்
டில்லியிலிருந்து கேட்கிறது குரல்.

ஆபத்தானது அல்ல என்றால்
டில்லியிலேயே அணுவுலகைகளைத் திறக்கலாமே
நாட்டுக்கும் பெருமை
நாட்டின் தலைநகருக்கும் பெருமை
மின்சாரத்தைச் சரியாக எடுத்துச் செல்லும் வசதி
இல்லை என்கிறது உங்கள் மின்சாரவாரியம்..
அப்படி இருந்திருந்தால் குஜராத்திலிருந்தும்
கோலிவாடாவிலிருந்தும்
மின்சாரத்தை எடுத்து வந்து
தமிழகத்தை தகதகவென
ஒளிர வைத்திருப்பார்களாம்
அப்படித்தான் சொன்னார்கள் .

ஆமாம்.. நிறைய மின்சாரம் கிடைக்குமாமே
கூடங்குளம் திறந்துவிட்டால்.
அதிலும் முதல் கட்டம் தொடங்கி
இரண்டாம் கட்டம் --முடிந்து
மூன்றாவது கட்டம் வரும்போது
மின்சார மழைப் பொழியுமாமே
இவ்வளவு அபரிதமாக மின்சாரம் கொட்டினால்
அம்மாடியோவ்... 
அதை எடு-த்துச் செல்லும் வசதிகூட இல்லாமல்
 தமிழகம் எங்கும்-
 மின்சாரம் பாய்ந்து
மின்சாரம் கசிந்து
ஒரே ஷாட் சர்க்க்யூட் ஆகி
...
வேண்டாமய்யா டில்லியாரே
ஆளைவிடுங்கள்
மின்சாரம் இல்லாமல்
சிக்கிமுக்கி கல்லை உரசி 
தீ உண்டாக்கி
வலையில் பிடித்த மீனைச் சுட்டுத் தின்று
நிலாப் பொழியும் நெய்தல் கரையில்
படகுகள் ஓட்டிச் சென்றவன்
--வரும் வரைக் காத்திருந்து
கடற்கரை மணலில்
கானல்வரிப் பாடி
ஊடலும் காதலுமாய்---
வாழவிடுங்கள் அய்யா..
உங்கள் அணு ஆயுதங்களின்
சோதனை எலிகளாய்
அவர்கள்  தொட்டில்களை
எடுத்துச் செல்லாதீர்கள்.
அவர்களை  விட்டுவிடுங்கள்


மல்லிகைப்பூ மணக்கும்
கருவாடு நாறும் என்று
மக்கள்  பொதுபுத்தியில் ஏற்றிய
புண்ணியவான்களே,,.
அணுக்கழிவுகளைப் போல
அழிக்க முடியாத'
அரசியல் வாதிகளே..
உங்கள் செங்கோட்டைக்குப் பக்கத்தில்
அணு உலைகள் வளரட்டும்
அப்துல்கலாம் இருக்கிறார்
பார்த்துக் கொள்ள.

இப்படிக்கு
அணுவுலைகளுக்கு எதிரான
கருவாடுகள்..

2 comments: