Monday, May 7, 2012

பாரதிதாசனின் குடும்பவிளக்கு.. யார்?
கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான்.
பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு
    மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே

(சஞ்..சா. தொ.1)

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
    காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)

என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன்.
ஆனால் அது என்னவொ தெரியவில்லை,
. பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை
வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட ஓர் உணர்வு இதோ இதை எழுதும் இந்த நிமிடம் வரை நேற்றைய என் மறுவாசிப்பு வரை அப்படியே மாறாமல் இருப்பது மட்டுமல்ல, சில நெருடல்களையும் ஏற்படுத்தவே செய்கிறது.

பாரதிதாசனின் இலட்சியப் பெண், குடும்பவிளக்கு எப்படி சித்தரிக்கப்படுகிறாள்
என்பதைக் காண்போம்.

> அதிகாலையில் எழுந்திருக்கிறாள்.
> கோலமிடுகிறாள்
>யாழெடுத்து இசை மீட்டுகிறாள், வாழிய வையம் வாழிய என.
> தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைகளைத் துயில் எழுப்புகிறாள்.
அதன் பின்,

பால்கறந்தாள்,
பாத்திரம் தேய்த்தாள்
அடுப்பறையில் அப்பம் சுட்டாள்
கொத்தமல்லி காபி போட்டாள்
அதன்பின் கணவனை " அத்தான்" என்றழைத்து துயில் எழுப்புகிறாள்.

சரி, இதுவரை சரி, கணவன் குளிக்க உதவுகிறாளாம். அதன் பின் வெள்ளுடை விரித்து அவன் மேனி துடைத்துவிடுகிறாளாம்.

 பிள்ளைகளைக் குளிப்பாட்டுகிறாள்.

காலையில் 6 மணிக்கு பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்திச்சி.
கணவன் சட்டையில் பொத்தலாம், அதை உடனே தைத்துக் கொடுக்கிறாளாம்.
வெற்றிலை மடக்கி வாயில் கொடுக்கிறாளாம்.


இவ்வளவும் முடித்து அதன் பின் அவள் சாப்பிடுகிறாள்.

சாப்பிட்ட பின் தையல் வேலை, தச்ச வேலை, கொத்தனார் வேலை எல்லாம்
வீட்டில் செய்கிறாள். ஆமாம் அப்படித்தான் காட்டுகிறார் பாரதிதாசன்.
மரச்சாமான்களை சரிப்படுத்தும் தச்ச வேலையும் சுவர் மீது சுண்ணாம்பு பூசிய
கொத்தனார் வேலையும் செய்வதாக.

மாமன் மாமியார் வருகை.

அவள் தான் கறிவாங்க கடைக்குப் போகிறாள்.
அந்தச் செலவுக்கு கணக்கு எழுதி வைத்துக் கொள்கிறாள்.
ஒவ்வொருவருக்கும் விருப்பமானதைப் பார்த்து பார்த்து சமைக்கிறாள்.
வயதான மாமன் மாமியாருக்கு தைலம் தடவி விடும் மருத்துவச்சியாக இருக்கிறாள்.

குழந்தைகள் பள்ளிகூடத்திலிருந்து வந்தவுடன் உடைமாற்ற உதவுகிறாள்..

கணவன் வீட்டுக்குப் பகலுணவு சாப்பிட வருகிறான்.
அவனுக்கு ரொம்ப வேலை செய்து அசதியாகிவிட்டதாம். சோம்பலால் இவளை
கடைக்குப் போய் கணக்கர் சாப்பிட்டுவிட்டு வரும் வரை கடையைப் பார்த்துக்
கொள்ளும் படி சொல்கிறான். இவளும் கடைக்குப் போகிறாள், இவள் கடையில்
இருக்கும் போது நடந்த வியாபாரத்துக்கு கடைக் கணக்கு வேறு துல்லியமாக
வைக்கிறாள்.

காட்சிகள் இப்படி வாசிப்பவர் கண்முன்னே விரிகிறது. ஆஹா இவள் அல்லவா
குடும்பவிளக்கு என்று வாசகன் ( வாசகன் ----இவ்விடத்து ஆண்பால் என்றே
பொருள் கொள்கமெய்மறந்து நிற்கிறான்.
மொத்தத்தில் குடும்பவிளக்கு என்றால் இப்படி எல்லோருக்குமாக தன் சுயமிழக்க வேண்டும் , அதிகாலையில் எழுந்து அத்தனை வேலைகளையும்
செய்யும் பெண்ணுக்கு ஓய்வு என்பது தேவை என்றோ அவள் சற்று நேரம்
ஓய்வாக இருந்தாள் என்றோ ஏன் யோசிக்க முடியவில்லை?
அதே நேரத்தில் கடைக்குப்போய் கல்லாவில் உட்கார்ந்து எழுந்து வரும்
கணவனுக்கு ஓய்வு ரொம்பவும் தேவையானதாக இருக்கிறது.
அவன் ஓய்வெடுக்க இவள் அவன் வேலையை அப்போது செய்தாக வேண்டும்!
வேறு எம்மாதிரியாகவும் யோசிக்கவே முடியவில்லையே ஏன்?

ஆனால் குடும்பவிளக்கு காவியத்தைக் கொண்டாடும் பலரும்
பாவேந்தரின் குடும்பவிளக்கு தலைவி தங்கம்,

அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
    அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்
    இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?
    என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.

    இன்றைக்கு கறிஎன்ன? செலவு யாது?
    ஏகாலி வந்தானா? வேலைக் காரி
    சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
    செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
    ஒன்றுக்கு மூன்றாக விற்பது எந்நாள்?
    உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
    குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா?
    கொடுக்கலென்ன வாங்கலென்ன இவைதாம் கண்டோம்.

(குடும்பவிளக்கு 1)


(ஏகாலி = சலவைத் தொழிலாளி)


வாழ்க்கையில் உயர் குறிக்கோள்கள் வேண்டும் என்பதை இந்தப்பகுதி எடுத்துரைக்கின்றது என்றும்  குடும்பவிளக்கில் வரும் தங்கம் அறிவு நிறைந்த பெண்ணாக மட்டுமன்றிச் செயல்திறன் வாய்ந்தவளாகவும் அமைகிறாள். வானூர்தியைப் பெண் செலுத்த வேண்டும்; மாக்கடலிடையே கலம் (கப்பல்ஓட்ட வேண்டும்; ஒருகையால் தனக்கென்று அமைந்த பணி இயற்றும்போதே மறுகையில் பெண் உலகு விடுதலை எய்துதற்குரியன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள் என்று போற்றுவார்கள்.
ஆனால் தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்து
சோர்விலாதவளாக பெண் காட்டுப்படுவதையே பாரதிதாசனும்
தன் இலட்சிய குடும்ப பெண்ணின் அடையாளமாகக் கொண்டிருந்ததாகவே
தெரிகிறது.
பெண் எல்லாம் தெரிந்தவளாக இருக்கிறாள் என்று காட்டுவதில் பெண்ணை
ஆணுக்கு நிகரானவளாகக் காட்டி அதே நேரத்தில் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்யும் சூப்பர் வுமனாக அந்தப் பெண்ணைக் காட்டுகிறார்.

தமிழ்மொழியில் கற்க வேண்டும். தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழ்ச் சமூகம் வாழும் என்றெல்லாம் அவள் பேசுவதாகக் காட்டிவிட்டு, அவளுக்கான
வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் பட்டியலிடும் போது இயல்பாகவே
வாசகன் " தங்கம் போல ஒரு பெண் இருந்தால் தான் குடும்பவிளக்கு' என்று
எண்ணத் தொடங்கிவிடுகிறான். இந்த எண்ணத்தின் வளர்ச்சி தான் இன்று
பெண் எந்த நிலைக்கு கல்வி பொருளாதரத்தில் உயர்ந்தாலும் வீட்டுப் பொறுப்புகள் எதையும் அவள் விலக்கி வைக்க இயலாத அவல நிலையைப்
பார்க்கிறோம். வீட்டுப் பொறுப்பு என்பது எப்போதுமே பெண்ணுக்கு மட்டுமே
உரியதாக இருக்கிறது. ஆணுக்கு நிகராகவோ பல வீடுகளில் அதிகமாகவோ
பெண் சம்பாதித்தாலும் கூட வீட்டுப் பொறுப்புகளையும் அவளே முழுமையாகச்
சுமந்தாக வேண்டி இருக்கிறது. வீௐட்டு பொறுப்புகளைச் சரியாக கவனிக்க முடியாத நிலை ஏற்படும் போது அதுவே ஒரு குற்ற உணர்வாகி பெண்களை
அலைக்கழிக்கிறது.

அடுப்பறை விறகுக்கு ஒரு பக்கம் தீ
அலுவலக விறகுக்கோ இரண்டு பக்கமும் தீ

என்பது போல அவள் நிலை.

குடும்பவிளக்கு ஓர் ஆணின் பார்வையில் பெண்ணைக் குடும்பவிளக்காக சித்தரிக்கும் ஆழ்மனதின் எண்ண ஓட்டங்கள்.


2 comments:

 1. nice and puthiya paarvaiyil vimarsanam.. Thanks to share.. -rishvan

  ReplyDelete
 2. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete