Sunday, April 15, 2012

என் சுற்றுப்பயணங்கள்




மரத்தின் இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
நிறம்மாறிக் காத்திருக்கின்றன
இலையுதிர்க்காலத்திற்காய்
என்னைப் போலவே.

வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங்காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு சங்கீதமாய்.

எவரும் துணையில்லாத
பயணத்தில்
செக்குமாடுகளாய்
பூமியைச் சுற்றியே
வலம் வருகின்றன
என் பால்வீதிகள்.

எப்போதாவது
என் வட்டத்தைத் தாண்டி
எட்டிப்பார்க்கும் கண்களை
எரித்துவிடுகின்றன
எரிநட்சத்திரங்கள்.

கழுத்தில் கட்டியிருக்கும்
கயிற்றின் நீள அகலத்தைஒட்டியே
தீர்மானிக்கப்படுகின்றன
எனக்கான
என் சுற்றுப்பயணங்கள்.


2 comments:

  1. வட்டத்துக்குள் சுழலும் பெண்களின் உலகத்தை எவ்வளவு இயல்பாக காட்ட முடிகிறது உங்களால்....

    ReplyDelete