Wednesday, June 25, 2008

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதைஇலண்டன் அக்கா ராஜேஸ்வரியின் தசாவதாரம் திரை விமர்சனம் வாசித்தேன்.
(பார்க்க : www.pathivukal.com)
http://www.geotamil.com/pathivukal/cinema_thasavathaaram_rajes_bala.htm

அதனால் தான் இதை எழுதும்படி ஆகிவிட்டது.!
முதல் வாரம் மும்பையிலும் மேற்கண்ட திரைப்படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்தை தோலுரித்துக் காட்டியதற்காக அக்காவுடன்
சேர்ந்து நாமும் கமலுக்கு ஜே போடலாம்தான்! ஆனா திரையில் எதற்காக தமிழக இன்றைய
முதல்வர் கலைஞர் அவர்களையும் சுனாமி பேரழிவைப் பார்வையிடும் காட்சியில்
அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களையும் காட்டி தமிழக அரசியல் வாதிகளிடம்
ரொம்பவும் முன்னெச்சரிக்கையாக இரண்டு பக்கமும் கைகுலுக்கிக் கொண்டிருக்கும்
காட்சியை எதில் சேர்ப்பது?

இதை அவருடைய வியாபாரதந்திரம், பிழைக்கும் வழித் தெரிந்தவர் என்று ஒரு சராசரி
நிலையில் வைத்துப் பார்க்காமல் எப்படி பார்ப்பது?

இதுதவிர, அது என்ன சுனாமியின் பேரழிவுக்கும் பெருமாளுக்கும் அவர் போட்டிருக்கும்
முடிச்சு? சுனாமி வந்து வைரஸ் கிருமியை அடிச்சிட்டு போனதாலே சுனாமியைவிட
ஆபத்தான பேரழிவிலிருந்து பெருமாள் நம்மை எல்லாம் காப்பாத்தினாராம்! 12ஆம் நூற்றாண்டில்
கடலுக்குள் மூழ்கிய பெருமாள் சிலை சுனாமி அடித்து வந்து கரையில் சேர்த்திருப்பது மாதிரி
காட்டுவதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார்?
அது எப்படி முடிகிறது இந்தக் கமலுக்கு.. சுற்றிலும் சுனாமியின் கோர அழிவும்
சகமனிதனின் பிணங்களும். அந்தப் பின்புலத்தில் தான் கதாநாயகி தன் காதலை
கமலிடம் சொல்வதும் கமல் அசடு வழிய ஏற்பதுமான காட்சி!

புத்தி சுவாதினமில்லாத வயதான பாட்டி சாதியை பார்க்காமல் பூவாரகனின் உயிரில்லாத
உடலை எடுத்துவைத்துக் கொண்டு தன் மகன் என்று அழுகிறாளாம்.

>கிருஷ்னவேணிப்பாட்டியார், மனநிலை தடுமாறினாலும் மனிதநேயத்தைக் காட்டிவிடுகிறார். அன்புக்குச் சாதி

கிடையாது, நிறம் கிடையாது என்பதை இறந்து விட்ட கீழ்சாதி பூவராகனைத்தன் மேல்சாதி மகனாக நினைத்துத்

தூக்கிவைத்தழும் காட்சி பிரமாதம்.>
என்று அக்கா ரொம்பவே கமலைத் தூக்கி வைத்திருக்கிறார்.!!
அது ஏன் மனநிலைத் தடுமாறினாதான் மனிதநேயமும் கீழ்ச்சாதி பூவராகனைத் தன் மகனாக நினைக்கும்
மனித நேயமும் சாத்தியமா? ஏனேனில் மனநிலைத் தடுமாறாத கதாநாயகியும் அவாள்களும் அப்படி இல்லை
என்றும் அதே கமல் காட்டியிருப்பது எதற்காக?

பெருமாள் சிலைக்குள் வைக்கப்பட்டிருக்கும் வைரஸ் டப்பாவை கையில் சிலை வந்தவுடன் டாண் என்று
எடுத்தோமா என்றில்லாமல் சிலையை வைத்துக் கொண்டு கதாநாயகியுடன் ஓடிப்பிடித்து
விளையாடுவது ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த
எங்க ஊரு இளசுகள் விமர்சனம் செய்ததை அலட்சியப்படுத்த முடியாதுதான்.

நாத்திகம், சாதியம், அரசியலில் எவரையும் அடையாளம் காட்டாத மணல் லாரிக்கொள்ளை,
கொஞ்சமாக சரித்திரம், சுனாமியைத் தத்ரூபமாகக் காட்டும் கிராபிக்ஸ் வித்தை என்று
அளவாக கலந்து
தமிழ்ப் படத்தை ஆங்கிலப் படம் சாயலில் எடுத்திருக்கிறார் கமல்.
10 வேடங்களில் கமல் நடித்துவிட்டார் என்று தலையில் வைத்து ஆடுவதை விட
அந்தப் பத்து வேடங்களை மிகவும் தத்ரூபமாக்கிய அழகியல் நிபுணர்களைப் பாராட்ட வேண்டும்.
என்ன மேக்கப் போட்டுக்கொண்ட கமலின் பொறுமையைப் பாராட்டலாம்.!

எயிட்ஸ் கிருமி இராசயண ஆய்வு கூடத்தில் வல்லரசு உருவாக்கியது என்றெல்லாம்
சொல்லத் தெரிந்திருந்தாலும் பெருமாளின் சிலையுடன் கதையை ஓடவிட்டு
தமிழ்ப்பட பார்மூலாவை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் கமல்.

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை என்பது எங்க ஊரு சொலவடை.
இதைப் புரிய வைத்த கமலுக்கு நன்றி.

No comments:

Post a Comment