"இதையும் எழுதி புத்தகம் போடு"
எழுத்துப் பயணத்தில்
மறுபிறவி.
ஃ உனக்கு கவிதை எழுதறது தவிர வேறு என்ன தெரியும்?
ஃ நீ ஒரு வேஸ்ட்.
ஃ நீ எழுதி கிழிச்சி என்னத்தைக் கண்ட?
இதெல்லாம் பழகிப் போச்சு!
நேற்று நீ வாசலில் நின்று
என்னைக் கேட்ட கேள்வி..
"இதையும் எழுதி புத்தகம் போடு "
இதைச் சொன்ன நீயும் ஒரு பெண். ஒரு தாய்.
நான் எழுதியதும் போராடியதும் உனக்காகவும் சேர்த்துதான்!
எனக்கு பூஜைகள் தெரியாது.
எவன் காலடியிலும் ஆன்மீகத்தின் பெயராலும் விழத்தெரியாது.
யார்க்குடியும்
கெடுத்ததில்லை.
இதெல்லாமே எளிதாகிப் போன உன் கூட்டத்திலிருந்து
வீசப்படும் கற்களை
சேமித்து வைக்கிறேன்.
என் அன்னை
சாவித்திரிபாய்
என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.
பிறவியின் கருப்பை சுமந்த அக்னிக்குஞ்சு.
வலியோடும்
நிர்வாணத்தின் அலறலோடும்
பனிக்குடம் உடையும் தருணம்.
எழுத்தின் உயிர்த்துளி
ஜனனம்.
தேவி..
ஆதிபராசக்தி
கடைக்கண் திறக்கட்டும்.
உன்னை மறப்பதும் மன்னிப்பதும்
என் வசமில்லை.
மனிதர்கள் எழுதிய சட்டங்களை விட வலுவானது
இப்பிரபஞ்சத்தின் சூத்திரக்கயிறு.
#புதியமாதவி_03052025
#puthiyamaadhavipoem
No comments:
Post a Comment